நாஞ்சில் பாஸ்டனில் 1- அர்விந்த்

நான் படித்த நாஞ்சிலின் முதல் கதை தன்ராம் சிங். விகடனில் 2007ஆம் வருடம் வந்தது என்று நினைக்கிறேன். நவீனத் தமிழ் இலக்கியம் எனக்கு அறிமுகமாகிக் கொண்டிருந்த காலம் அது. சுஜாதா, ஜெயகாந்தன், கொஞ்சம் சுந்தர ராமசாமி படித்திருந்தேன். தன்ராம் சிங் ஒரு புது மாதிரி கதையாக எனக்கு இருந்தது. கட்டுரை போன்ற அந்த கதை அன்று என்னை மிகவும் உலுக்கியது. இப்போதெல்லாம் இப்படி சொல்வது தேய்வழக்காக ஆகியிருக்கலாம். இருந்தும் அது தான் நிஜம். அந்த கதையில் வரும் நுண்சித்தரிப்புகள், அது கண்முன்னே நிறுத்தும் ஒரு வாழ்க்கை எல்லாம் எனக்கு புத்தம் புதிதான ஒன்றாக இருந்தது.

சிறுவயதில் எங்கள் ஃபிளாட்டிலும் திபெத்திய கூர்க்கா ஒருவன் சிறிது காலம் வேலை பார்த்து வந்தான். பெயர் மறந்து விட்டது. அல்லது பெயர் சொல்லி அவனை யாரும் அழைத்தாக எனக்கு நினைவில்லை. எப்போதும் “கூர்க்கா இங்க வா..…கூர்க்கா ஏன் இன்னும் கேட்ட சாத்தலை?” தான். இரவு மொட்டை மாடி சுவரில் பந்தை போட்டு நான் தனியாக கிரிக்கெட் ஆடிக் கொண்டிருப்பேன். அப்போது அவன் வாட்டர் டேங்க்கிற்கு அடியில் ஸ்டவ்வை பற்ற வைத்து ரோட்டி சுட்டுக் கொண்டிருப்பான். எனக்கும் சிலமுறை சாப்பிட தந்திருக்கிறான். ரோட்டி சுடும் போது தனக்குள் மெல்லிதாக பாட்டு பாடுவான். பாட்டு எப்போதுமே இரண்டு மூன்று மெட்டுக்களுக்குள் இருக்கும். அவ்வளவு தான் அவனைப் பற்றி எனக்கு தெரியும். ஆனால் தன்ராம் சிங் கதையில் கூர்க்கா ஒருவனின் வாழ்கையின் குறுக்குவெட்டு சித்திரத்தை அத்தனை நுணுக்கங்களுடன் நாஞ்சில் விவரித்திருப்பார். “ஷாப், கர் நை ஜாத்தா?.….. தோ ரொட்டி காவ் ஷாப்…” என்று சொல்லும் தன்ராம் சிங் என் மனதில் ஆழமாக பதிந்து விட்ட புனைவுப் பாத்திரங்களில் ஒன்று.

அரவிந்த்

அதன் பிறகு நாஞ்சிலின் சிறுகதை தொகுப்பு, நாவல்கள், கட்டுரைகள் ஆகியவற்றை படித்திருக்கிறேன். பல சிறுகதைகள் மற்றும் சதுரங்கக் குதிரை நாவல் ஆகியவை பிடித்திருந்தது. மேலும் ஜெயமோகன் தனது வலைதளத்தில் எழுதிய நாஞ்சிலின் ஆளுமைச் சித்திரம் (”தாடகைமலையடிவாரத்தில் ஒருவர்”) அவரை இன்னும் என் மனதுக்கு நெருக்கமான ஒருவராக ஆக்கியது. மிகவும் ஹாஸ்யத்துடன் எழுதப்பட்ட ஜாலியான ஒரு கட்டுரை அது. இருந்தும் அது எனக்கு ஒரு பெரிய மனநெகிழ்ச்சியை தந்தது. பெருளியல் நெருக்கடிகளால் தன் சொந்த ஊர் விட்டு ஒரு பெரு நகரத்தில் வேலை நிமித்தம் அகப்பட்டுக் கொண்டு வெளிவர முடியாமல் தவிக்கும் பலரை நான் அறிவேன். ஆனால் அத்தகைய நெருக்கடியான சூழல்களிலும் தொலைந்து போகாமல் இலக்கியத்திலும், இசையிலும், கிளாஸிக்குகளிலும் ஈடுபாடு கொண்டு மீண்டவர்களை வெகு சொற்பமாகவே கண்டிருக்கிறேன். அது எப்படி அவர்களால் முடிந்தது என்ற ஒரு கேள்வியே என்னை நாஞ்சிலின் ஆளுமையை நோக்கி, அவரது படைப்புகளை நோக்கி செலுத்தியது எனத் தோன்றுகிறது.

சில மாதங்களுக்கு முன் நண்பர் ஒருவர் என்னிடம் நாஞ்சில் சொல்வனத்தில் எழுதும் கட்டுரைகள் குறித்து பேசிக் கொண்டிருந்தார். “பிரபந்தங்கள் குறித்து, ஆவுடை அக்கா குறித்து, குணங்குடி மஸ்தான் சாகிபு குறித்து, சங்க இலக்கியம் குறித்து, கம்பராமாயணம் குறித்து எத்தனையோ விஷயங்களை பற்றி நாஞ்சில் எழுதுகிறார். இருந்தும் நாஞ்சில் நாடன் என்றாலே சமையல், சாப்பாடு, கீரை துவரன், எள்ளுத் துவையல், அவியல், புளிமுளம், புளிசேரி, சக்கைபிரதமன் போன்றதொரு இமேஜை உன்னை மாதிரி தின்னுருட்டிகள் சிலர் உருவாக்கியிருக்கிறீர்கள்…” என்று ஒரே போடாக போட்டார்.

“இருக்கலாம்” என்றேன். “ஆனாலும் நாஞ்சிலின் படைப்புகளில் உணவு குறித்த, சமையல் குறித்த வர்ணனைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன தானே? அது ஏன் என்று நாம் யோசித்து பார்க்க வேண்டும்” என்று சொன்னேன்.

தான் பிறந்து வளர்ந்த ஊரை விட்டு வெளியூரில் கடுமையான சூழலில் நெடுநாட்கள் தனியாக தங்கி வேலை பார்த்து வருபவர்களை கவனித்தால் சில விஷயங்கள் புலப்படும். ஊர் மீதான ஏக்கம் என்பதே அவர்களுக்கு சில மாதங்களில் உணவின் மீதான ஏக்கமாக மாறிவிடும். அந்த ஏக்கமே ஒரு கட்டத்தில் பெரும் பாரமாக மாறி அவர்களை அழுத்தும். உணவை, சமையலை கண்டுகொள்ளாமல் போகும் பலர் இந்த அழுத்தத்தில் சிக்கிக் கொள்வதை கவனித்திருக்கிறேன். இதில் ஒரு சாரர் – குறிப்பாக அகமுக நோக்குடையவர்கள் – ஒரு சுரத்தே இல்லாமல் “பே.…” என்று ஆகிவிடுவார்கள். ஒவ்வொரு நிமிடமும் ஊருக்கு திரும்பி போவதை பற்றிய கனவுகளிலேயே இருப்பார்கள். ஆனால் சட்டுபுட்டென்று ஒரு முடிவை எடுத்து அப்படி திரும்பி போகவும் மாட்டார்கள். இருண்ட ஒரு மனக்குகைக்குள் பெருமூச்சு விட்டபடி சுழன்று கொண்டே இருப்பார்கள். மற்றொரு சாரர் பெரிய அராஜகவாதிகளாக, எதிர்மறை ஆளுமைகளாக மாறிவிடுகிறார்கள். ஒருவித அலட்சியம் சார்ந்த குரோதம், வன்முறை, குற்றவிருப்பம் ஆகியவை அவர்களில் எப்படியோ குடிகொள்கிறது.

வெகு சிலரே இவற்றில் எல்லாம் சிக்கிக் கொள்ளாமல் தப்பிக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் சமையல் மீது, உணவு மீது, அதன் பலவண்ண சுவைகளின் மீது ஒரு பற்று இருப்பதையே நான் கண்டு வந்திருக்கிறேன்.

இப்படி சொல்லலாம் என நினைக்கிறேன். முப்பந்தைந்து-நாற்பது வயதை கடக்க ஒன்று சரஸ்வதி கடாச்சம் வேண்டும்; அதுவரை நாம் பெற்றிருக்கும் கீறல்கள், காயங்கள், வலிகள் அனைத்தையும் எப்படியோ அவள் கை பற்றி தாண்டி விடலாம். அல்லது அன்னலட்சுமியின் அருள் வேண்டும். அவள் நம் மனதை குளிரச் செய்தால் அன்றி நமக்கு வேறு கதியில்லை. குறைந்தபட்சம் அவள் நம் நாவில் உள்ள சுவையை குன்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நாஞ்சிலின் கதாப்பாத்திரங்களுக்கு அன்னலட்சுமியின் பேரருள் உண்டு என்றே நினைக்கத் தோன்றுகிறது.

நாஞ்சில் தமிழில் நவீனத்துவ காலகட்டத்தில் எழுத வந்தவர். அவரது நாவல்களின் கதைச்சூழல், பேசுபொருள் எல்லாமே பெரும்பாலும் நவீனத்துவம் சார்ந்தவை (பெருநகர இரைச்சல், நெருக்கடி, அதில் மாட்டிக் கொண்டு சுழலும் கதை மாந்தர்கள் இத்யாதி). இருந்தும், அவற்றில் நவீனத்துவத்தின், இருத்தலியலின் நேரடி தாக்கம் மிக மிக குறைவு என்றே சொல்லவேண்டும். இன்று அவரது படைப்புகளை படிக்கும் ஒருவர் அதை நவீனத்துவ, இருத்தலிய நாவலாக பார்க்க மறுப்பார் என்று கூட சொல்லலாம்.

நவீனத்துவ படைப்புகள் முன்வைத்த இரு உதாரணங்களை எடுத்துக் கொள்வோம். ஒன்று, விற்பனை பிரதிநிதி என்ற தொழில்கூறு. மைய கதாபாத்திரத்தின் முழு நேர வேலையாக இது பல நவீனத்துவ நாவல்களில், திரைப்படங்களில், நாடகங்களில் முன்வைக்கப்பட்டது. ஆர்தர் மில்லரின் “ஒரு விற்பனை பிரதிநிதியின் மரணம்” என்ற நாடகத்தில் வரும் வில்லி லோமன் கதாபாத்திரமும், காஃப்காவின் “உருமாற்றம்” நாவலில் வரும் கிரிகர் சம்சாவும் சிறந்த உதாரணங்கள். இரண்டு, மிதவை (Drift / Driftwood) என்ற ஒரு உருவகம். அல்பர் காம்யூவின் பல நாவல்கள், அண்டோனியோனி மற்றும் பெர்னாண்டோ பெர்டலூகி ஆகியோரின் திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்கள் வாழ்கையில் ஒரு பிடிப்போ, இலக்கோ இல்லாமல் மிதவையைப் போல் அத்து அலைந்து அழிவதாக காட்டப்படும்.

இந்த படைப்புகளில் வரும் கதாபாத்திரங்களுக்கும் நாஞ்சில் நாடனின் நாவல்களில் வரும் கதாபாத்திரங்களும் மேற்தளத்தில் பல ஒற்றுமைகள் உண்டு. நாராயணனும் (சதுரங்கக் குதிரை), சண்முகமும் (மிதவை) புழங்கும் சூழல், சந்திக்கும் அக-புற நெருக்கடிகள் எல்லாம் மேற்சொன்ன கதாபாத்திரங்கள் சந்திக்கும் நெருக்கடிகளில் இருந்து பெரிதும் வேறுபட்டது அல்ல. இருந்தும் இந்த கதாபாத்திரங்களுக்கு இடையே உள்ள அடிப்படை வித்தியாசம் என்பது எந்த ஒரு வாசகராலும் உணரக்கூடியதே. நவீனத்துவ நாவல்கள் முன்வைத்த அடையாளமின்மை, அர்த்தமிழப்பு போன்றவை நாஞ்சிலின் நாவல்களில் வந்தாலும், அவை ஒரு தனிமனிதனுள் உருவாக்கும் பிறழ்வு, வன்முறை போன்றவற்றை நம்மால் பார்க்க முடிவதில்லை. எவ்வித நெருக்கடியிலும் நாஞ்சிலின் கதாப்பாத்திரங்கள் பெரும் அராஜகவாதிகளாக, எதிர்மறை ஆளுமைகளாக மாறுவதில்லை. ஒரு வித ஏக்கத்தோடும், துயரம் கப்பிய நினைவுகளோடும் இருந்தாலும் அவர்களது அகம் என்றுமே மரத்துப் போவதில்லை.

இது எதனால்? ஒரே வரியில் இப்படி சொல்லலாம் என்று நினைக்கிறேன். நாஞ்சிலின் கதாபாத்திரங்களுக்கு நன்றாக சமைக்கத் தெரிவதால்! சமையல் என்பதும் ஒரு வித படைப்பாற்றல் தான். படைப்பூக்கம் என்பதில் மீட்பின் ஒரு மர்மமான அம்சம் ஒளிந்துள்ளது என்றே நான் நினைக்கிறேன்.

பலவிதமான அக நெருக்கடிகளை பேசும் நாஞ்சிலின் நாவல்கள் சிறுகதைகளில் கூட சமையல் குறித்த, உணவு குறித்த எத்தனை வர்ணனைகள்! உணவின் மீது, அது தரும் சுவையின் மீது இருக்கும் ஒரு பிடிப்பே நாஞ்சிலின் கதாபாத்திரங்களை இப்பூமியில் கால் ஊன்றி நடக்கச் செய்கிறது. ‘சதுரங்கக் குதிரை’ நாவலை படித்து முடிக்கும் போது மிகுந்த மனவருத்தம் ஏற்பட்டது என்னவோ உண்மை தான். நாராயணனை போல குட்டினோவை போல நிஜவாழ்வில் பார்த்த மனிதர்களின் நினைவுகள் வயிற்றை ஒரு பிரட்டு பிரட்டி போட்டது. இருந்தும் ஒரு விஷயம் மட்டும் தெளிவாக தோன்றியது. ”ஒண்ணும் ஆகாது இவங்களுக்கு…ஏதோ ஒண்ணு இவங்க்கிட்ட இருக்கு… அது அவங்கள இருட்டுக்குள்ள தள்ளாம இழுத்துபிடிச்சி வெச்சிட்டு இருக்கு…” என்ற எண்ணம். அது என்ன என்பதை என்னால் சரிவர வகுத்து சொல்லி விட முடியுமா என்று தெரியவில்லை. ஒரு பேச்சுக்காக அதை “சுவை” என்று வேண்டுமானால் சொல்லலாம். சுவை என்பது வெறும் நாவின் சுவை மட்டும் அல்ல. மன ஆழத்தில் இருந்து ஊற்றெடுக்கும் சுவை அது. அந்த சுவையே அவர்களை கசப்பும், குரோதமும், குதர்க்கமும் கலந்த எதிர்மறை ஆளுமைகளாக ஆக்காமல் மீட்டது என்று தோன்றுகிறது.

‘சதுரங்கக் குதிரை’ நாவல் ஆரம்பித்த சில பக்கங்களிலேயே சாப்பாட்டுச் சித்தரிப்புகள் வந்து விடுகின்றன. நாராயணனும் குட்டினோவும் சாப்பிட கிளம்பி போய்க்கொண்டே இருக்கிறார்கள். சுரண்டலும், சுயநலமும், எகத்தாளமுமான இந்த உலகத்தில் இருந்து அவர்களை பன்பாவும், பட்டாடா வடாவும், ஈரானியன் சாயும், டால் பிரையும், நண்டுபொரியலும், பொரித்த கோவா மீனும், முந்திரிப்பழ ஃபென்னியும் தான் காப்பாற்றியது என்று கூடத் எனக்கு சில சமயங்களில் தோன்றுவதுண்டு. குட்டினோவை போன்ற நாராயணனை போன்ற கதாபாத்திரம் ஒன்று ஜெர்மனிய அல்லது பிரெஞ்சு அல்ஜீரிய எழுத்தாளரின் நாவலில் வந்திருக்கும் என்றால் ஒன்று அது மனம் பிறழ்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கும். அல்லது நாலைந்து பேரை போட்டுத் தள்ளி விட்டு ஜெயிலுக்கு சென்றிருக்கும்.

கண்ணாடியில் முகம் பார்த்து தலை சீவுவது கூட நேர விரயம் என்று எண்ணுகிறான் ஜே.ஜே. அப்படிப்பட்ட ஒரு தீவிரமும், அதில் இருந்து உருவாகும் சமரசமற்ற தன்மையுமே அவனது ஆளுமை. ஆனால் அத்தகைய சமரசமற்ற தீவிரமே ஜேஜே.வை அலைக்கழித்து பொசுக்கி தனிமைப்படுத்தி வெறுமையில் ஆழ்த்தியதாக கூறும் ஒரு வாசிப்பு உண்டு. ஆனால் அது அல்ல அவனது பிரச்சனை என்றே எனக்கு தோன்றுகிறது. அவனது தீவரமும், சமரசமற்ற தன்மையும் அல்ல அவன் அடைந்த வெறுமைக்கான காரணங்கள். ஜே.ஜேவிற்கு சமைக்கத் தெரியுமா, ஜே.ஜே. விற்கு என்ன உணவு பிடிக்கும், ஜே.ஜே. பயணம் போவானா போன்ற கேள்விகளே என் மனதில் இன்று இருக்கின்றன. அப்படி சமைக்கத் தெரியாத, உணவின் மீது ஈடுபாடு இல்லாத, பயணம் போகாத ஒருவன் இயல்பாக சென்று அடையக்கூடிய இருளை, வெறுமையை தான் அவனும் சென்றடைந்தானோ? மிகவும் எளிமைப்படுத்தவதாக, கொச்சைப்படுத்துவதாக் கூட இது தோன்றலாம். இருந்தும் எனக்கு வேறு எப்படி சொல்வது என்று தெரியவில்லை. இருத்தலியலாளர்களுக்கு இன்னும் கொஞ்சம் நன்றாக சமைக்கத் தெரிந்திருந்தால் தற்கொலைகள் குறைந்திருக்குமோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.

சமீபத்தில் நான் படித்த மணல் கடிகை நாவலிலும் உணவு ஒரு முக்கிய இடத்தை பெற்றிருக்கும். கொத்து பரோட்டாவும், ஆப்பாயிலும், முட்டை தோசையுமாக கதாபாத்திரங்கள் சாப்பிடுவது பற்றிய வர்ணனைகள் தொடர்ந்து நாவலில் வந்து கொண்டே இருக்கும். ஒட்டு மொத்த திருப்பூரே அந்த பெரும் பசியின் தீராத் துவாலையில், ரத்தம் ஏறிய கண்களுடன் அசுரத்தனமாக உழைத்துக் கொட்டிக் கொண்டிருப்பது போன்ற ஒரு சித்திரம் நம் மனதில் படியும். நாவலில் வரும் சிவா என்ற தொழிலதிபர் கதாபாத்திரம் கூட “…இது வேறு ஒரு பசி” என்று தனக்குள்ளே சொல்லிக்கொள்வான்.

அப்படி பசி “இன்னொன்றாக” சுழித்து பெருகி புயலெடுத்து கரைஒடித்து ஒதுங்கி வழியும் சித்திரத்தை நாஞ்சிலின் கதைகளில் நாம் பெரும்பாலும் பார்க்க முடிவதில்லை. இதுவரை நாஞ்சில் பெரு நாவல் ஒன்றை எழுதாத்தற்கான காரணமும் இது தானோ என்று தோன்றுகிறது.

இருந்தும் நாஞ்சில் வாழ்வின் அப்படமான குரூரத்தை, அழிவை, சுயநலத்தை இருளை சித்தரிக்க தயங்கியவர் அல்ல. தன்னம்பிக்கையை கூவிக் கூவி விற்கும் சுய-உதவி நூல் எழுதுபவரோ அப்பட்டமான நிதர்சனத்தை கண்டு அஞ்சி ஒளிபவரோ அல்ல. “புஞ்சைக்காடுகள் எல்லாம் சுக்காம் பாறை போலக் கெட்டுப்பட்டி வறண்டு வெடித்து வாய் பிளந்து கிடந்தன. சீமைக் கருவை, எருக்கலை, பீநாறி தவிர வேறெதுவும் உயிர் வாழ்வதற்கான தோது இல்லை…. வயதான தாசியொருத்தி இரண்டு ரூபாய்க்குக்கூட விலைபோகாத தனது வறண்ட மயிரடர்ந்த யோனி காட்டு மயங்கிக் கிடந்தாள். மயங்கிக் கிடந்தாளோ, மரித்துத் தான் கிடந்தாளோ?” என்பது போன்ற ஒரு வர்ணனையை போகிற போக்கில் சொல்லி விட்டு போகிறார். அகங்காரமும், கயமையும், பித்தலாட்டமும் எல்லாம் அவரது கதைகளில் தொடர்ந்து நிழலாடி பேருருருவம் கொண்டு வந்து கொண்டே இருக்கின்றன. கண்னை நிரந்தரமாக குருடாக்கக்கூடிய இத்தகைய இருளை நாஞ்சிலின் கதாபாத்திரங்கள் பயணத்தின் மூலம் கடக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

ஆமாம், சமையல் சலித்தால் பயணம். பயணம் அவர்களுக்கு கற்றுத் தருகிறது. எதிர்பாரா திறப்புகள் பலவற்றை உருவாக்குகிறது. ஒரு வித நமச்சலுடனும், அலுப்புடனும் தான் அவர்கள் தங்களது பயணத்தை தொடங்குகிறார்கள். உதாரணமாக “வனம்” கதையில் “இரண்டு தோசை சுட்டுத் தின்பதோ, நான்கு பாண் துண்டுகளை பொசுக்கிக்கொள்வதோ, குக்கர் வைத்து ஒரு தம்ளர் அரிசி பொங்கிக் கொள்வதோ, பையா டால் அல்லது எலுமிச்சை ரசம், குட்டி உருளைக் கிழங்கு பொரியல் செய்துகொள்வதோ பெரும் பிரயத்தனம் அல்லதான். என்றாலும் உயிர்ச் சலனக்கள் அற்று உட்புறம் தாளிட்ட வீடு காற்றுப் புகாக் குகைபோல் திகைப்பூட்டியது. வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே இறங்கினான்.” போன்றதொரு சிறு சலிப்புக்கு பிறகே கதைச்சொல்லியின் பயணம் ஆரம்பிக்கிறது.

ஓரளவு நன்றாக தான் தொடங்குகிறது அவனது பயணமும். மழை அடித்து ஓய்ந்திருந்த ஒரு மார்கழி மாத காலை. மெல்ல வெயில் ஏறுகிறது. பேருந்தில் கூட்ட நெரிசல். “அனுமன் கை தாங்கிய மருத்துவாழ் மலை போன்று மேல் கியர் உறுமலுடன்” அது பறந்து செல்கிறது. பயணிகள் விழுந்து வாறுகிறார்கள். மூலக்கடுப்புடன் உட்கார்ந்திருக்கும் ஓட்டுனர் அனைவர் மீதும் வசைமாரி பொழிகிறார். கதைச்சொல்லி இதை எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான். அவன் எதிர்பார்க்காத வேளையில் “போ மோளே பெட்டெந்நு” போன்றதொரு திறப்பு! அதே போல் “யாம் உண்போம்” கதையில் வரும் விற்பனை பிரதிநிதி பாபுராக்கு பெரியவர் கன்பத் சக்காராம் நாத்ரே ரூபத்தில் ஏற்படும் ஒரு திறப்பு. உச்சி வெயிலில் கொலைப் பசியுடன் அத்து அலையும் அவனுள் ‘அமி காணார்…அமி காணார்’ என்று குடிகொள்ளும் கனிவு. நாஞ்சில் கதைகளின், அவரது ஆளுமையின் தனித்தன்மை என்று இவற்றையே நான் நினைக்கிறேன்.

போரும் அமைதியும் நாவலில் பியர் பெசுகாவ் பிளாடோன் கராடேவ் என்ற எளிய விவசாயி கதாப்பாத்திரத்தை சந்திக்கிறான். கராடேவ் மிகவும் துக்ககரமான இளமைப் பருவத்தை கடந்து வந்தவன். அந்த நினைவுகள், வலிகள் எல்லாவற்றையும் அவன் மறந்து விடவில்லை. அவற்றை கண்டு அஞ்சி ஓடி முகம் புதைத்துக் கொள்ளவும் இல்லை. மிகத் துல்லியமாக அந்நினைவுகள் அவனுக்கு ஞாபகம் இருக்கிறது. இருந்தும் அந்த துயர நினைவுகளை எல்லாம் வேறொன்றாக மாற்றிவிடும் வல்லமை அவனுள் இருக்கிறது. மிக எளிதாக ஒரு மூர்கமான எதிர்மறை ஆளுமையாக மாறியிருக்கக் கூடியவன், ஒரு இனிய, எளிய, விடுதலை அடைந்த மனிதனாக பியர் பெசுகாவுக்கு தோன்றுகிறான்.

நாஞ்சிலின் கதாநாயகர்கள் பிளாட்டோன் கராடேவ் அளவுக்கு கசப்புகளோ, துயரங்களோ, ஏமாற்றங்களோ இல்லாத விடுதலை அடைந்த மனிதர்களா என்று எனக்கு தெரியவில்லை. நாஞ்சிலே கூட ஒரு இடத்தில் இப்படி சொல்கிறார். “வாசக, எழுத்தாள நண்பர்கள் பலர் சொன்னார்கள்,சமீப கால எனது எழுத்துக்களில் இலேசான கசப்புத் தொனிக்கிறது என. அது இலேசான கசப்பு அல்ல. சமீப காலத்தியதும் அல்ல. மூன்று வயதுப் பிராயத்தில், ரமண மகரிஷி தேன் சொட்டு ஒன்றைத் தொட்டு வைத்தார், கான சரஸ்வதி பட்டம்மாள் நாவில் என்பார்கள். எனில் என் நாவில் கசப்பைத் தொட்டு வைத்த சித்தன் எவனென்று நெடுங்காலம் தேடிக்கொண்டிருக்கிறேன்” என்று.

ஆனால் அந்த கசப்பு அவரது கதைகளில் நமக்கு தெரிவதில்லை. அந்த கசப்பு அவரது எழுத்துக்களின் மூலம் வேறொன்றாக பரிமாணமெடுத்து மாறிவிடுகிறது. கசப்பை நாக்கில் தொட்டு வைத்த அந்த சித்தனே ஆச்சரியப்படுமளவுக்கு!

….மேலும்

புகைப்படங்கள்

முந்தைய கட்டுரைநாஞ்சில் கலிஃபோர்னியா நிகழ்ச்சிகள்
அடுத்த கட்டுரைதகவலறியும் உரிமைச்சட்டம்