ஆட்டிசம் – கடிதங்கள்

அன்பின் ஜெமோ,

வணக்கம்.

பிரகாஷ் எழுதிய கடிதத்தை தங்களின் தளத்தில் வெளியிடவில்லை எனில் சுகேஷ் குட்டனைப் பற்றி, இன்னும் தாமதமாகவே அறிந்திருப்பேன். பகிர்தலுக்கு நன்றி! இங்கே தமிழகத்தில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கூட ஆட்டிசத்தின் ஒரு வகையான பிடிடி (PDD)யினால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையைக் காட்டினார்கள். அந்தக் குழந்தையின் தாய் குறிப்பிட்ட அறிகுறிகளை வைத்து அது பிடிடியாக இருக்கலாம் என்று நான் கணிக்கிறேனே தவிர அவர்கள் இப்பெயரை உபயோகிக்கவில்லை. ஒருவேளை அவர்களே அதை சரியாக அறிந்திருக்கவில்லையோ என்னவோ தெரியவில்லை. இங்கே நிறைய பெற்றோர்களின் நிலை இப்படித்தான் உள்ளது.

தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டிசம் என்னும் தன்முனைப்பு குறைபாடு பற்றி ஆய்வு செய்துகொண்டிருக்கிறேன். அவ்வப்போது அது பற்றியும் எழுதியும் வருகிறேன். பல பெற்றோர் இக்குழந்தைகளை அனாதை ஆசிரமங்களிலும், ஹோம்களிலும் விட்டுவிட்டுச் செல்கின்றனர். இது குறித்த போதிய விழிப்புணர்வு இங்கே இல்லை என்பது சோகம்.

மேலை நாடுகளைப்போல, இந்தியாவில் இக்குறைபாடு குறித்த விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது.இந்தியாவிலும் மேற்கில், மத்தியில் ஏன் தெற்கில் கர்நாடகா, கேரளம் போன்ற பகுதிகளில் இருக்கும் விழிப்புணர்வு கூட தமிழகத்தில் காணமுடிவதில்லை என்பது வேதனையான உண்மை.

செயல்வழிபாட்டின் மூலம் இக்குழந்தைகளை ஒரளவுக்கு நல்வழிப்படுத்த முடியும் என்றாலும், உடனடி ரிசல்ட் மக்கள் எதிர்பார்ப்பதும், அப்படி ஏதும் மாற்றம் தெரியாததால், குழந்தைகளுக்குக் கொடுக்கப்பட்டு வரும் தெரப்பிகளை பாதியிலேயே நிறுத்தி விடுவதும் பல இடங்களில் நடந்து வருகிறது.

செயல்வழிபாட்டின் மூலம் பயிற்சி கொடுப்பதும் இங்கே அதிக செலவு பிடிப்பதாக இருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் இதற்கான வசதிகள் செய்யப்படவில்லை. அரசு தரப்பில் ஆட்டிசக்குழந்தைகளை மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் என்றே குறிப்பிடுகிறார்கள்.

ஆட்டிசம் குறித்து சில கட்டுரைகளையும் எழுதி வருகிறேன்.

ஆட்டிசம் – விரைவாக அறிந்துகொள்ள சில எளிய வழிகள்


ஆட்டிசம் வரலாறு


ஆட்டிசம் – உட் பிரிவுகள்

ஆட்டிசம் – சரியும் தவறும்

இதனைத் தொடர்ந்து, ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு படம் ஒன்று எடுக்கும் முயற்சிக்கான தொடக்கப்பணிகளில் இருக்கிறேன். கூடுதல் தகவல்கள் ஏதேனும் தெரிந்தாலும் தெரியப்படுத்துங்கள்.

நன்றி

தோழன்
பாலா

அன்புள்ள பாலபாரதி,

உங்கள் சுட்டிகளை பார்த்தேன். மிக முக்கியமான எளிய மொழியிலான கட்டுரைகள். நன்றி.

நான் தமிழில் ஆட்டிசம் பற்றி ஒரு நல்ல திரைக்கதையை எழுதினேன். இன்றும் என் மனதை நிறையவைக்கும் கதை. அதை இயக்குநர் தன் பரிவாரங்களுடன் அமர்ந்து காதல், அடிதடி, குடி என பலவற்றையும் சேர்த்து மறுசமையல் செய்ய முயன்றதனால் விலகிக்கொன்டேன். நான் எழுதியதன் குதறப்பட்ட ஒரு வடிவம் திரையில் வரலாம்.

ஆனால் அதற்காக நான் ஆட்டிசம் பற்றி கொஞ்சம் படித்தேன். அது நானறியாத ஒரு உலகை அறிமுகம்செய்ய எனக்கு உதவியது. தமிழில் ஆட்டிசம் டௌன் சின்ட்ரோம் மூளைக்குறைபாடுகள் ஆகியவற்றைப் பற்றி நுண்ணிய வேறுபாடுகளுடன் ஒரு சித்திரத்தை உருவாக்கிக்கொள்ளவேண்டிய தேவை உள்ளது.

ஒருவேளை ‘கற்றது தமிழ்’ ராம் இயக்கும் தங்கமீன்கள் இந்த உலகுக்குள் ஒரு வெளிச்சத்தை வீசக்கூடும்.

ஜெ

அன்புள்ள ஜெ ,

இந்த சுட்டியில் உள்ள காணொளியில் உள்ளவர் பெயர் ஸ்டீபென் வில்ட்ஷைர். பிறந்து ஐந்தாண்டுகள் வரை அவரால் பேச முடியவில்லை. இவரை human camera -என்றே அழைக்கின்றனர். எந்த ஒன்றையும் சில வினாடிகள் பார்த்தால் கூட போதும் அதை அதன் நுணுக்கங்களோடு அப்படியே வரைந்து விடுவார். இந்தக் காணொளியில் ஹெலிகாப்டரில் ரோமை பார்த்துவிட்டு வந்து அதை அப்படியே வரைகிறார். வியப்பாக இருக்கும். ஆட்டிசத்தில் உயர் நிலை, கீழ் நிலை என இரு வகைகள் உண்டு. பொதுவாக இந்த உயர்நிலை ஆட்டிசக் குழந்தைகள் அபார மேதைமையும், ஏதோ ஒன்றில் அபாரத் திறனும் கொண்டிருப்பார்கள். அதற்குக் காரணம் மூளையுடைய ஆற்றல் ஓரிடத்தில் குவிவதால் என மருத்துவர்கள் கருதுகின்றனர். ஆனால் பெரும்பாலான ஆட்டிசக் குழந்தைகள் கீழ்நிலையைச் சேர்ந்தவர்கள்தான். பெரும்பாலும் இவர்கள் கவனக் குறை செயல் தீவிர நிலையில் தான் இருப்பார்கள் (attention deficit hyper active). காரைக்குடியிலேயே இப்படி பத்து பதினைந்து குழந்தைகளை நான் பார்த்துள்ளேன். இன்று இந்த நோயின் எண்ணிக்கை பெருகி வருவதை கண்கூடாகப் பார்த்து வருகிறேன்.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=a8YXZTlwTAU

சுனீல் கிருஷ்ணன்

அன்புள்ள சுனீல்,

ஒரு மருத்துவராக உங்கள் எண்ணங்களை நீங்கள் விரிவாக எழுதலாம்.

நான் ஆட்டிசம் பற்றிய வாழ்க்கைச்சித்திரங்களில் ஒரு விஷயத்தை கவனிக்கிறேன். ஆட்டிசம் கொண்ட குழந்தையின் பெற்றோரிடம் மருத்துவர்கள், அவர்களை உற்சாகம் கொள்ளச் செய்யும்பொருட்டு, ஆட்டிசம் இருந்து மேலே வந்து மேதைகளானவர்களைப்பற்றிச் சொல்கிறார்கள். அது தேவை. அந்த நம்பிக்கை இருந்தால்தான் ஆட்டிசம் கொண்ட குழந்தையின் திறன்களை கண்டுகொள்ள முடியும். ஆனால் எல்லா ஆட்டிசம் கொண்ட குழந்தைகளும் மேதைகளாக இருந்தாக வேண்டியதில்லை. இதை பெரும்பாலும் பெற்றோர் புரிந்துகொள்வதில்லை, நம்பிக்கையை மிகையாக்கிக் கொள்கிறார்கள். இதையும் கண்டிருக்கிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரைபி.ஏ.கிருஷ்ணன் – ஒரு வானொலி நேர்காணல்
அடுத்த கட்டுரைமலையாளத்தின் பழமை