மலையாளத்தின் பழமை

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

கேரளாவில் உள்ள எடக்கல் குகையில் கி பி நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த பிராமி மலையாளக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மலையாளத்தின் தொன்மை ஐநூறு ஆண்டுகள் பின்னோக்கிச் செல்கின்றது. இது மலையாள மொழி வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பு ஆகும்.

இது குறித்து இந்து நாளிதழில் இன்று வந்த செய்தி: http://www.thehindu.com/arts/history-and-culture/article3501408.ece?homepage=true

நன்றி,
தங்கள் அன்புள்ள,
சரவணக்குமார்

அன்புள்ள சரவணக்குமார்,

நீங்கள் கொடுத்த சுட்டியில் உள்ள செய்தியை ஏற்கனவே வாசித்திருக்கிறேன். பொதுவாக சமீபகாலமாக அதிகம் பேசப்படும் ஒன்றாக இது உள்ளது.

மொழியின் வளர்ச்சியைப்பற்றிய பழையகால கொள்கைகள் பலவற்றை மறுபரிசீலனை செய்யவேண்டிய கட்டாயம் சமீபகாலமாக உருவாகி வருகிறது. இவ்வாறு சொல்லலாம். முன்பெல்லாம் மொழியை நதிகளைப்போல உருவகித்தார்கள். பல சிற்றாறுகள் நதிகளில் கலக்கின்றன. ஒரு நதியில் இருந்து கிளைகள் பிரிகின்றன. பல மொழிகள் கலந்து தமிழ் உருவானது, தமிழில் இருந்து பலமொழிகள் உருவாயின. நம் மன உருவகம் இதுவே.

ஆனால் இந்த மன உருவகத்தை நாம் மாற்றியாகவேண்டும். இது மொழிகளைப் புரிந்துகொள்ள உதவாது. மொழிப்பரப்பு என்பது காடு போல ஒரு பிராந்தியம். ஒரு வெளி. அதற்குள் பல உள் மொழிகள் இருக்கலாம். காட்டில் பல்வேறு தாவரங்கள் இருப்பது போல. மொழிகளில் பெரிய மொழிகளை நாம் அறிவோம். நூற்றுக்கணக்கான சிறிய மொழிகள், குலமொழிகள் அந்தப் பெருமொழிக்கு நிகராகவே வாழ்ந்துகொண்டிருக்கும். காட்டில் தேக்கும் உண்டு, அருகம்புல்லும் உண்டு.

காட்டில் உருவாகும் தட்பவெப்ப மாறுதல்களுக்கு ஏற்ப ஒரு சில தாவரங்கள் மேலெழுந்து வளர்கின்றன. அவை மற்ற மொழிகளை உண்டும் உள்ளிழுத்தும் பெரிதாகின்றன. இதுவே இயல்பான சித்திரமாக இருக்கக்கூடும். மலையாளம் ஒரு சிறிய இனக்குழு மொழியாக, குறுமொழியாக, பெருந்தமிழ் பேசப்பட்ட நிலப்பரப்பில் இருந்திருக்கலாம். சங்க காலம் முதல், அல்லது அதற்கும் முன்பாக. வரலாற்றில் அந்த மொழி பேசுபவர்கள் வென்றெழுந்தபோது அது ஒரு தனித்த மொழிக்கான அடையாளத்துடன் வளர்ந்திருக்கலாம். இலக்கணங்களை சம்ஸ்கிருதம் சார்ந்து உருவாக்கிக் கொண்டிருக்கலாம். ஏதோ ஒரு வரலாற்று திசைதிரும்பலில் ஒரு பகுதியில் நம்மூர் நரிக்குறவர் மொழி தமிழை இடமாற்றம் செய்துவிட்டால் என்ன ஆகும், அதுபோல.

பிராமி கல்வெட்டு மலையாளத்தின் தொன்மையைப்பற்றிய இதுவரையிலான எல்லா ஊகங்களையும் மாற்றிக்கொள்ளும்படி கட்டாயப்படுத்துகிறது.

ஜெ

முந்தைய கட்டுரைஆட்டிசம் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைகடிதங்கள்