குழந்தைமேதைகள் – கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

குழந்தை மேதைகள் கட்டுரை படித்தேன். நிச்சயமாக குழந்தைகளின் அபாரமான நினைவாற்றல் பாராட்டத்தக்கதுதான். எனினும், அது மட்டுமே புத்திசாலித்தனமா என்பதில் எனக்கும் நெடுநாட்களாக ஐயம் உண்டு. பின்வரும் உங்களது வரி அதை சட்டென்று தீர்த்தது.

“ஆனால் இன்றைய உலகில் இந்த நினைவாற்றலுக்கு என்ன மதிப்பு? இந்தக் குழந்தைமேதைகள் வளரவளர என்னவாகிறார்கள்? எந்தத்துறையிலும் உண்மையான படைப்பாற்றலுக்கே மதிப்பு. ‘திறமைக்கு’ அல்ல.”

நம்மிடத்திலேயே 1330 குறள்களையும் ஒப்புவிப்பது, குறள் சொன்னால் அது எத்தனையாவது குறள், எந்த அதிகாரம், அதன் பொருள் என்று துல்லியமாக சொல்வது, குறளின் எண்ணை சொன்னால் அந்தக் குறளை சொல்வது, தேதி சொன்னால் அதன் கிழமை மற்றும் அது வருடத்தில் எத்தனையாவது நாள் போன்றவற்றை சொல்வது போன்ற திறமைகள் கொண்டிருந்த குழந்தைகள் பற்றி படித்தும் கேள்விப்பட்டும் இருக்கிறேன்.

சென்றவாரம் இங்கே அமெரிக்காவில் நடந்த தேசிய புவியியல் வினாடி வினா போட்டியில் (Geography bee) 14 வயது இந்திய அமெரிக்க சிறுவன் வென்றதை இணையத்தில் படித்தேன். நிறைய அமெரிக்கர்கள் இந்தியக் குழந்தைகளின் திறமையை மெச்சியும் இந்தியப் பெற்றோர் அவர்களது வளர்ச்சியில் செலுத்தும் கவனத்தையும் (நிச்சயம் இது பெரும் உண்மை) ஏன் அதுபோல நம் குழந்தைகள் இல்லை என்றும் விசனப்பட்டு பின்னூட்டமிட்டு இருந்தனர். அதற்கு பதில் சொல்லும் விதமாக கிட்டத்தட்ட நீங்கள் சொல்லிய தொனியிலேயே பதில் சொல்லியிருந்தேன். “நினைவாற்றல் மட்டுமே புத்திசாலித்தனமல்ல, இந்தியப் பெற்றோர் தங்கள் குழந்தைகளது கல்விமேல் கொள்ளும் அபரிமிதமான அக்கறைக்கு வரலாற்று ரீதியான காரணம் இருப்பதோடு, தாங்கள் அமெரிக்க தேசத்துக்கு வந்ததற்கு தங்களது கல்வியே காரணம் என்ற புரிதல் அவர்களுக்கு உள்ளது” என்று சொல்லியிருந்தேன். மேலும் முக்கியமாக நான் சொல்லியிருந்தது இது :

“என்னதான் இது போன்ற போட்டிகளில் நாங்கள் வெற்றி பெற்றாலும் எங்களில் மிகப் பெரும்பான்மையினரால் சம்பந்தப்பட்ட துறையில் ஒரு படைப்பாளியாகவோ முத்திரை பதிக்கும் அளவுக்கு பெரும் ஆளுமையாகவோ உருவாதல் மிகக்கடினம். காரணம் நாங்கள் இட்ட வேலையை திறம்பட செய்து முடிக்கும் “doers” மட்டுமே, “creators”-களோ, “planners”-களோ “leaders”-களோ அல்ல”

அதேபோல ஓரிருநாட்கள் முன் நடந்த தேசிய எழுத்துக்கோர்வை (Spelling bee) போட்டியில் ஒரு இந்திய அமெரிக்கச் சிறுமி வென்றதைப் பார்த்தபோதும் இதுவே தோன்றியது.

அன்புடன்,
பொன்.முத்துக்குமார்

அன்புள்ள முத்துக்குமார்,

உண்மைதான். நம்முடைய பெற்றோருக்கு குழந்தைகளின் படைப்பாற்றலை புரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லை. ஏன் நம் ஆசிரியர்களில் அனேகமாக எவருக்குமே இருந்ததில்லை. ஆகவே நினைவாற்றலையே அறிவுத்திறன் எனச் சொல்வார்கள்.

இன்றுகூட ஒரு மேடையில் திருக்குறளை தொடர்ச்சியாக ஒப்பிப்பவர் அறிஞராகக் கருதப்படுவார். திருக்குறள் பற்றி ஒரு முக்கியமான அவதானிப்பை நிகழ்த்தியவர் கண்டுகொள்ளப்படமாட்டார் இல்லையா?

ஜெ


//…நாம் இளமையில் அறியும் குழந்தைமேதைகள் மெல்லமெல்ல வெறும் திறமையாளர்களாக நம் முன் கூசி நிற்பதையே காண்கிறோம். நான் பள்ளியில் படிக்கையில் சகுந்தலாதேவி என்ற கணிதமேதையைப்பற்றி பிரமிப்பூட்டும் செய்திகள் வந்தன. அன்று உலகையே உலுக்கிய குழந்தை. பின்னர் அவர் எண் சோதிடக்காரராக வாழ்ந்து மறைந்தார். ..”/
/

சிறு திருத்தம் ஜெமோ சார்… சகுந்தலா தேவி இன்னும் உயிரோடு தான் இருக்கிறார்…..

Regards,
Satheesh
“Die Menschen stärken, die Sachen klären”.

அன்புள்ள சதீஷ்,

நன்றி.

பலர் சொன்னார்கள். திருத்திவிடுகிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரைஊமைச்செந்நாய் (சிறுகதைத்தொகுப்பு)
அடுத்த கட்டுரைஊட்டி – சுழன்றும் கதைப் பின்னது அண்டம்