இலங்கைத் தமிழர்களைப்பற்றி…

அன்புள்ள ஜெ,

உங்களது சமீபத்திய பதிவான ‘கற்பழித்ததா இந்திய ராணுவம்?’ (16 05 2012 ) கட்டுரையைத் தொடர்ந்து இணையங்களில் விவாதங்கள் வந்தவண்ணம் உள்ளன.

இந்திய உளவுத்துறையும் இன்னும் பெருமுதலாளிகளும் உங்கள் பின்னால் இருந்து உங்களை இயக்குவதாகக் கூட சொல்கிறார்களே !? தேசப்பற்றைத் தாண்டி மனிதமும், அதன் உரிமையும் கூட அறம்தானே? உங்கள் வாசகனாக நான் உங்களிடம் கேட்க எத்தனிப்பது: எல்லோருக்குமான ஒரு மறுமொழியை நீங்கள் பிரசுரித்தால் என்ன?

– ஹாரூன்

சிங்கப்பூர்

அன்புள்ள ஹாரூன்,

வசைபாடல்களைப்பற்றி நான் கவலைப்படவில்லை. எழுத்தாளனாக வந்த நாள் முதல் எதைப்பற்றியும் கவலைப்படாமல், ‘யோசிக்காமல்’ எழுதவேண்டும் என்பதையே நான் நெறியாகக் கொண்டிருக்கிறேன். ஆகவே அவை எனக்குப் புதியவை அல்ல.

மிகமிகக் கவனமாக, எல்லா பின்விளைவுகளையும் யோசித்து, கருத்துச் சொல்லும் எழுத்தாளர்கள் பெற்றுள்ள வசைகளும் அவதூறுகளும் என்னைவிட குறைவு அல்ல என்பதைக் காண்கிறேன். எழுத்தாளர்களை கண்டபடி வசைபாடுவதும் அவதூறுசெய்வதும் தமிழின் பொதுமனநிலை. அதில் பெரும்பங்கு வகிப்பவர்கள் ஏதேனும் அரசியல்தரப்பை ஆவேசமாக பாவனைசெய்பவர்கள்.

நீங்கள் இணையத்தை எடுத்துப்பாருங்கள். க.நா.சு., அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் உட்பட அத்தனை எழுத்தாளர்களைப்பற்றியும் வசைகள்தான் அதிகம் சிக்கும். அவர்கள் நூல்களை வாசிப்பவர்களைவிட வசைபாடுபவர்கள் அதிகம். அந்நிலையில் நினைத்தது போல எழுதுவதனூடாக எழுத்தாளன் இழப்பது ஒன்றும் அதிகமில்லை.

நான் எழுத்தின் விதியாக வைத்திருப்பது, மற்றவர்களுக்குச் சொல்வது, ஒன்றுதான். எதிலும் பொதுவாகச் சொல்லப்படும் எதன்மீதும் முழுநம்பிக்கை இல்லாமலிருப்பதுதான் அது. என் எழுத்துக்களை வாசிப்பவர்களுக்கு அது தெரியும். பொதுவாகச் சொல்லப்பட்ட எல்லாவற்றையும் உடைத்து ஆராயவே முயன்றிருப்பேன்.

நமக்குப் பொதுவாக சொல்லப்படும் ஒவ்வொன்றும் எவராலோ எதன்பொருட்டோ உருவாக்கப்படுபவை. எழுத்தாளன் தேடும் உண்மை என்பது அவற்றுக்கு அப்பால் அனைத்துக்கும் நடுவே எங்கோ உள்ளது. அந்த எண்ணம்தான் எழுதச்செய்கிறது. எல்லாரும் சொல்லும் ஒன்றை, அனைவரும் நம்பும் ஒன்றைச் சொல்ல எழுத்தாளன் எதற்கு?

அப்படி மறுபக்கங்களை தேடிச்செல்லும்போது பொதுவான தரப்புகளை உருவாக்கி நிலைநாட்டுபவர்கள் அனைவரும் அவனை எதிர்ப்பார்கள். வசைபாடுவார்கள். தங்கள் எதிரிகளின் பக்கம் சேர்த்து முத்திரையிடுவார்கள்.

அப்படி மறுபக்கங்களை நாடிச்செல்லும்போது கண்டிப்பாக பிழைகள் நிகழும். முன்பின் முரண்பாடுகள் உருவாகும். குளறுபடிகள் உருவாகும். முட்டாள்தனமான விஷயங்கள் கூட நிகழலாம். ஆனாலும் எழுத்தாளன் செய்யவேண்டியது அதையே. அந்தப் பிழைகளுக்கும் முரண்பாடுகளுக்கும் குளறுபடிகளுக்கும் மன்னிப்புக் கோரியபடி மீண்டும் மீண்டும் ‘இங்கே சொல்லப்பட்டவற்றுக்கு மறுபக்கம் என சில இருக்கக்கூடுமா?’ என்று பார்ப்பதையே அவன் செய்யவேண்டும்.

ஓர் எழுத்தாளனாக அவன் எழுத்துக்கள் மூலம் அவனை அறிந்தவர்கள் அவனை புரிந்துகொள்வார்கள். மற்றவர்கள் தெருவில் ஊர்வலமாகச் செல்லும் உண்மைகளை மட்டுமே அறிந்தவர்கள். அவர்கள் எந்த எழுத்தாளனையும் எப்போதும் அறியப்போவதில்லை. தங்களுடன் சேர்ந்து கோஷமிடாவிட்டால் வசைபாடுவார்கள்.

புகழை இழக்க, வெறுக்கப்பட எப்போதுமே எழுத்தாளன் தயாராக இருக்கவேண்டும் என நினைத்துக்கொள்கிறேன். தன் மீதான எந்த எதிர்பார்ப்பையும் தக்கவைத்துக்கொள்ளும் சுமையை அவன் ஏற்றுக்கொள்ளலாகாது.

திரு ஜாஸ் டயஸ் அவர்கள் என் நண்பர். அவரது நேர்மை மீது இன்றும் எனக்கு அபாரமான நம்பிக்கை உண்டு. ஆகவே அந்தத் தரப்பின் உண்மையை நான் கருத்தில்கொண்டேன். அதைப்பற்றி யோசித்தேன்.

உலகில் உள்ள எந்த ராணுவமும் ஒன்றே என்பதே என் எண்ணம். அதிலும் இந்தியர்களின் ஆணாதிக்க மனநிலை, கும்பல்மனநிலை நாம் அறிந்ததே. ஐம்பது கல்லூரி மாணவர்கள் கும்பலாக குற்றாலத்திற்குக் குளிக்கவந்தால் எப்படி நடந்துகொள்வார்கள் என நாம் அறிவோம். ராணுவம் ஆயுதமேந்திய கும்பல்.

ஆனால் ஜாஸ் டயஸ் அவர் தரப்பைச் சொன்னபோது உண்மைகள் போர்ச்சூழலுக்காக மிகையாக்கப்பட்டிருக்கும் என்னும் எண்ணமும் எனக்கு ஏற்பட்டது. அக்காலத்தில் அப்படி மிகையாக்கி பலவற்றை நானும் எழுதியிருக்கிறேன் என்பதனால் அதையும் கருத்தில்கொண்டு யோசிக்கவேண்டும் என எண்ணினேன்.

இந்திய அமைதிப்படை ஒளிந்திருந்து தாக்கப்பட்டது. அவர்கள் நம்பிய தரப்பினரின் தாக்குதல் அது. எந்த முன்னேற்பாடுகளும் இல்லாமல் புதிய நாட்டுக்குச் சென்று அரசியல் சதுரங்கத்தில் சிக்கி அழிந்தவர்கள் அவர்கள். அவர்களிலும் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இன்று பேசும் எவரும் அந்தத் தரப்பை கருத்தில்கொள்வதே இல்லை. கொல்லப்பட்ட இந்திய வீரர்களின் எண்ணிக்கையைச் சொல்வதுகூட பிழை என்றாகிவிட்டிருக்கிறது.

ஆனால் இலங்கையில் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் சொல்லும்போது, அந்த நேரடியான உணர்ச்சிகளின் முன்னால் ஒன்றும் சொல்வதற்கில்லை. அங்கே அவர்களுக்கிழைக்கப்பட்ட தீங்கின் அளவு அல்லது விகிதாசாரம் பற்றிய பேச்சுக்கே இடமில்லை. தீங்கு தீங்குதான். அது எப்போதும் எதனாலும் சமப்படுத்திவிட முடியாததுதான். இரு தரப்பையும் கவனித்தபின் அந்நிலைபாட்டை நான் வந்தடைந்தேன்.

இதில் எப்போதும் எவ்விஷயத்திலும் எனக்கிருக்கும் போக்கையே கைக்கொண்டிருக்கிறேன். எதையும், எந்தத் தரப்பையும் ஐயப்படுவதும் மாற்றுத்தரப்பையும் செவிகொடுத்து யோசிப்பதும்தான் அது. எனக்கு எதிரான குரல்கள் எப்படிப்பட்டவை என உங்கள் கடிதமே காட்டுகிறது. அந்த வகையான மூர்க்கமான நம்பிக்கையும் ஆவேசமும் கொண்டவர்களிடம் எதுவும் பேசமுடியாது.

எழுத்தாளனின் குரல் எங்கும் அறத்தின் குரலாகவே இருக்கும். ஆகவே அது எப்போதும் எந்தத் தரப்பும் விட்டுவிடப்படலாகாது என்றே கவனம் கொள்ளும். எந்த தேசம் இனம் மொழி மதம் சார்பிலும் ஒலிக்காது.

ஆகவேதான் நான் சிங்களர்களின் தரப்பைப்பற்றியும் எழுதினேன். அவர்களின் தரப்பே பேசப்படாமல் இங்கே ஒலிக்கும் ஆவேசங்கள் நியாயமானவைதானா என்ற ஐயம் உண்மையிலேயே எனக்குள்ளது. இந்த மிகையாவேசக் குரல்களை போர்ச்சூழல் உருவாக்குகிறது. அதற்கான தேவையும் இருந்தது.

இனிமேலாவது இக்குரல்களைத் தாண்டி சமநிலையான உண்மையைத் தேட இலங்கைத்தமிழர்களால் முடியவேண்டும் என்றே எண்ணுகிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரைஎழுத்து வாசிப்பு எழுத்தாளன்
அடுத்த கட்டுரைமுழுமை, சமூகம், ஐரோப்பா