அன்புள்ள ஜெயமோகன்
நீலகண்டன் அரவிந்தன் என்பவர் திண்ணை இணையதளத்தில் எழுதியிருந்த கட்டுரை ஒன்றின் சுட்டியை அனுப்பியிருக்கிறேன். அதில் காந்தியின் பிழைகள் என சிலவற்றைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். அவற்றை பிரபல இந்திய அரசியல் ஆய்வாளரான கெய்ன்ரட் எல்ஸ்ட் தன் நூலில் வகுத்துச் சொல்லியிருக்கிறார். அவற்றைப்பற்றிய உங்கள் கருத்து என்ன?
பீஷ்மா
சென்னை
http://hikari1965.blogspot.com/2008/02/blog-post_1431.html
http://www.thinnai.com/?module=displaystory&story_id=80801312&format=html
**
//The interest of the nation or that of the Hindus have never figured in the lust for power and self-promotion of the Hindu leadership either before independence or afterwards. All through the 20th century, ever since Gandhi came on the scene, Hindu leaders have treated India as their personal fiefdom and Hindus as slaves. Gandhi did not mind even the slaughter of the Hindus provided it kept the Muslims happy.//
ஜெயமோகன்,
செம்மணி அருணாசலத்திற்கு உங்கள் பதிலைப் படித்தேன். என்னால் அதை முழுமையாக ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. தாங்கள் இதற்கு என்ன சொல்லுகிறீர்கள்? இன்றைய நாட்களில் இந்துக்கள் படும் கஷ்டத்திற்கு தங்கள் பதில் என்ன? அதிகம் விளக்கவேண்டாம் என நினைக்கிறேன். இரண்டாந்தரக் குடிமகன் கூட இல்லை, மூன்றாந்தரமாய்க் கூட நடத்துவதில்லை. முக்கியக் காரணம் இந்துக்களின் ஒற்றுமையின்மை. அது புரிகின்றது. ஒற்றுமையைக் கொண்டுவரக் கூடிய தலைவன் இல்லை. அத்தகையதொரு தலைவராக நேதாஜி வந்திருக்கலாம். வல்லபபாய் படேல் வந்திருக்கலாம், ,மொரார்ஜி தேசாய் வந்திருக்கலாம். எல்லாம் கெட்டுக் குட்டிசுவராய்ப் போனதற்கு யார் காரணம் என நீங்கள் நினைக்கிறீர்கள்??????
//Nowhere else in the world except India would one find that a minority has been given a separate homeland and yet allowed to stay on in the same country. India is the sole example where a majority has been reduced to the status of a second-class citizenary. lt is testified by the fact that the most sacred places of the Hindus are still under occupation of the Muslims even after six decades of independence. Is it not the same minority, which plundered the Hindu civilisation for six hundred years?//
முக்கியமாய் நேருவின் பிடிவாதத்தைச் சமாளிக்க முடிந்திருந்தால் காந்தியால் நாட்டுப் பிரிவினையைத் தடுத்திருக்க முடியாதா?? காஷ்மீர் பிரச்னையை உலகநாடுகளின் பாராட்டை வேண்டி ஐநா வரை எடுத்துச் சென்றது யார் செய்த குற்றம்? எப்போவோ தீர்ந்திருக்கவேண்டிய ஒன்று சுதந்திரம் கிடைத்து அறுபது ஆண்டுகளாகியும் தீராத தலைவலியாய் நீடித்திருப்பது யாரால்? அண்டைநாடான நேபாளம் ஹிந்துநாடாக இருந்தவரையில் எவ்வாறு இருந்தது? இப்போது மதச் சார்பற்ற நாடாக இருக்கும்போது எவ்வாறு இருக்கின்றது?நேபாள மக்களுக்கு அதில் முழுச்சம்மதம் இல்லை என்பதை நாங்கள் நன்கு அறிவோம். இந்தப் போலி மதச் சார்பின்மை தேவையா நம் நாட்டுக்கு?
//வெள்ளையரைக் கொல்லுதல் அவர்
.நோக்கில் மாபெரும் பாவம். அவரைப்பொறுத்தவரை வெள்ளையர் ஓர் அரசியல் ஆட்டத்தில் மறுதரப்பில் இருப்பவர்கள்தான். அவர்களையும் அவர் நேசித்தார். அவர்களில் உள்ள ஏழை மக்களையும் தன்னவராகவே கண்டார். ஆகவே அவர்களுக்கும் அவர் தங்களவராக இருந்தார்.//
இதை முற்றிலும் ஆமோதிக்கின்றேன். இன்னும் சொல்லப் போனால் பிரிட்டிஷ் அரசின் கொள்கைகளை மறைமுகமாய் ஆதரிக்கும் ஒரு மிதவாதக் கட்சியாகவே ஆரம்பித்த காங்கிரஸ் அவ்வாறே செயல்பட்டது. செயல் படுகின்றது.
//தலித்துக்களை பிறருக்கு எதிராக நிறுத்தும் ஒரு போராட்டம் இந்திய சமூகத்தைப் பிளவுபடுத்தும் என்றும் ஒட்டுமொத்தமாக தலித்துக்களுக்கு எதிரான உணர்வுகளையே உருவாக்கும் என்றும் காந்தி உறுதியாக நினைத்தார்.//
இன்றைய நிலைமை பற்றி நான் சொல்லவேண்டியதில்லை. பிரித்தாளும் வேலையைக் காங்கிரஸும், மாநிலக் கட்சிகளுமே செய்து வருகின்றன.
கீதா சாம்பசிவம்
****
அன்புள்ள பீஷ்மா,கீதா,
இந்துத்துவத்தின் இரு குரல்கள். முதல்குரல் ஆதார நூல்களையும் உதவும் நூல்களையும் முறையாகப் படித்திருக்கிறது. இன்னொரு குரல் பொதுவாக எழும் வெறிக்கூச்சல்களை மட்டுமே அறிந்திருக்கிறது. எப்போதுமே இந்துத்துவ அரசியலில் முதல்குரலுக்கு பெரிய இடம் இருந்தது இல்லை. ஆனால் இரண்டாவது குரல் சமீப காலமாக மேலும் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. கட்சிக்குள் மோடி அலை அதை மேலும் முன்னெடுக்கக் கூடும்.
முதலில் இரண்டாவது குரல். அதில் உள்ள எல்லா கருத்துக்களுமே வெறும் வெறுப்புப் பிரச்சாரங்கள் மட்டுமே. இந்தியாவில் இந்துக்கள் இரண்டாம்குடிகளாக இருக்கிறார்கள் என்று நான் நினைக்கவில்லை. நான் இரண்டாம் குடியாக எப்போதுமே உணர்ந்ததில்லை. இந்தியா காந்தியால்தான் இந்துநாடாக இல்லாமல் போய்விட்டது என்பது உண்மையென்றால் காந்தி இந்தியாவுக்குச் செய்த மிகப்பெரிய நன்மை அதுவே. இந்தக் கடிதம் எழுதியவரைப் போன்றவர்களின் குரல்களால் ஆளப்படும் இந்தியா ஒரு மாபெரும் வன்முறைக்கூடமாகவே இருக்கும். இந்தியாவில் தலித்துக்களை காங்கிரஸ் மைய ஓட்டத்தில் இருந்து பிரிக்கிறது என்பது நேர் தலைகீழ் வாதம். காங்கிரஸே அவர்களை மையத்துடன் பிணைக்கும் மாபெரும் அரசியல் சக்தி, இன்றுவரை.
ஜனநாயக இந்தியாவின் அடிபப்டைப் பண்புகளில் ஒன்று அது இன்னும் எல்லா குடிமக்களுக்கும் சமமான வாய்ப்புகளை வழங்கக்கூடியதாக இருக்கிறது என்பது. நலிந்தவர்களுக்கும் சிறுபான்மையினருக்கும் சலுகைகள் வழங்கப்படுவது அடிப்படையில் பெரும்பான்மைச்சமூக அனுமதியை பெற முடிகிறது என்பது இன்னொன்று. பன்மைச்சமூகமாக, சமூகங்களுக்குள் உரையாடலும் வளர்ச்சியும் நிகழும் களமாக இந்நாடு இன்னமும் நீடிக்கிறது என்பது மூன்று. அப்பண்புகளை எல்லாமே தீய இயல்புகளாகவும் அவற்றை உருவாக்கிய கொடியவராக காந்தியையும் காணும் இக்கடிதம் காந்திக்கு அளிக்கப்பட்ட மிகச்சிறந்த பாராட்டுப் பத்திரங்களில் ஒன்று. நன்றி.
*
அரவிந்தன் நீலகண்டன் முன்வைக்கும் கான்ராட் எல்ட்ஸின் கருத்துக்களைப் பற்றிய என்னுடைய எண்ணங்களைச் சொல்ல விரும்புகிறேன். நான் ஆய்வாளன் அல்ல. ஆகவே ஆய்வாளரான எல்ட்ஸின் கட்டுரையுடன் ஒரு ஆய்வுவிவாதத்துக்கு நான் சித்தமல்ல. நெடுநாட்களாக இந்தத் தளத்தில் வாசித்தும் சிந்தித்தும் வருபவன், முக்கியமானவர்களிடம் விவாதிக்கும் வாய்ப்பு பெற்றவன் என்ற முறையில் இவை என் கருத்துக்கள்
முதலில் ஒன்றைச் சொல்ல வேண்டும். நான் காந்தி தவறே செய்யாத உத்தமர் என்று சொல்லவில்லை. வரலாறு குறித்த பிழைகள் செய்யாத அரசியல்சிந்தனையாளர்களே இல்லை. வரலாற்றைப் புரிந்துகொண்டவர் என எவரையுமே சொல்லமுடியாது. வரலாறு சார்ந்து பிழைசெய்யாமல் எவராலும் அதில் ஈடுபட முடியாது என்னும் அளவுக்கு வரலாறு மிகச்சிக்கலான உள்ளோட்டங்கள் கொண்டது. நூற்றுக்கணக்கான சக்திகளின் சிக்கலான முரணியக்கம் அது. நான் சொல்லிக்கொண்டிருப்பதே அதுதான்.
ஆகவே வரலாற்றை முழுமையாகத் தெரிந்துகொள்ள தன்னால் முடிந்து விட்டது என்ற அகங்காரம் கொண்டு இறுதித்தீர்வுகளுக்காக முயல்பவர்கள் ஒட்டுமொத்த அழிவையே உருவாக்குவார்கள். வரலாற்றில் ஈடுபடுவதென்பது வரலாறென்னும் மாபெரும் முரணியக்க வெளியில் ஒரு தரப்பாக ஆவது மட்டுமே. எனவே வரலாற்றை எச்சரிக்கையுடன், பிழைகளைக் கண்டு பின்வாங்குவதற்கான மனநிலையுடன், பெரிய இழப்புகள் ஏதுமில்லாமல் அணுகுவதே உகந்தது. காந்திய வழி அத்தகையது. இதுவே நான் சொல்ல வருவது.
காந்தியின் பிழைகள் என ஏராளமான விஷயங்களைச் சொல்லிக்கொண்டே போகமுடியும். அவை இரண்டு வகையானவை. ஒன்று, அவர் வரலாற்றை தவறாகப் புரிந்துகொண்டதனால் உருவானவை. இரண்டு அவர் முற்றிலும் எதிர்பாராத விஷயங்கள் உருவாகி வரலாற்றின் திசைமாற்றம் நிகழ்ந்ததன் விளைவுகள். இவ்விரு தளத்திலும் மிகக்குறைவான இழப்புகள் நிகழும்படியாக, மிகுந்த எச்சரிக்கையுடன், வரலாற்றின் முன் கொள்ள வேண்டிய தன்னடக்கத்துடன் மட்டுமே காந்தி செயல்பட்டிருக்கிறார் என்றே நான் நினைக்கிறேன்.
காந்தியின் பிழைகள் பெரும்பாலும் இலட்சியவாதம் சார்ந்தவை. அவர் ஒரு விசித்திரமான கலவை. அடிப்படையில் அவர் ஒரு நடைமுறைவாதி. எந்த ஒரு விஷயத்தையும் காந்தி நடைமுறை சார்ந்தே யோசித்தார். சிறிய அளவில் ஒன்றை செய்துபார்த்து விளைவுகளை ஆராய்ந்து அதை மேலும் மேலும் விரிவுபடுத்துவதும் எப்போதும் விளைவுகள் சார்ந்து கவனமாக இருப்பதும் அவரது வழிமுறை. அவரது வெற்றிக்கு அவரது தெளிவான நடைமுறைவாதம் ஒரு பெரிய காரணம்.
ஆனால் காந்தியே நம் யுகத்தின் மாபெரும் லட்சியவாதி. அந்த இலட்சியக்கனவே அவரை செயல்படச்செய்தது. அவரது இலட்சியம் இரு புள்ளிகளைச் சார்ந்தது. ஒன்று வரலாறு மனிதனை மேலும் மேலும் மேம்படுத்தியபடி முன்னோக்கித்தான் செல்கிறது என்ற எண்ணம். இந்த வரலாற்றுவாதத்தை காந்தி அவர் கல்விகற்கச் சென்ற லண்டனில் இருந்து பெற்றுக்கொண்டிருக்க வேண்டும். அக்கால ஐரோப்பா மானுடமுன்னேற்றம் என்னும் வரலாற்றுவாதத்தின் விளைநிலமாக இருந்தது. தனிப்பட்ட முறையில் அந்நம்பிக்கையை முழுமையாகவே நானும் கொண்டிருக்கிறேன்.
இரண்டாவதாக ஒரு தனிமனித அகம் என்பது நல்லியல்புகளினால் ஆனது என்றும் அன்பும் கருணையும் மானுட மனத்தில் இயல்பாகவே உள்ளன என்றும் எண்ணுவது. மனிதன் பாவத்தால் ஆனவன் என்று காந்தி எண்ணவில்லை, மனிதன் மானுட உடலில் குடிகொண்ட இறைவனே என்று எண்ணினார். இந்த நம்பிக்கை அவருக்கு புஷ்டிமார்க்க வைணவத்தில் இருந்து கிடைத்தது. வைணவத்தில் அந்த தரிசனத்தை ஒரு தத்துவ நிலைபாடாகவே நிறுவியவர் ராமானுஜர்.
காந்திய இலட்சியவாதத்தில் ராமானுஜருக்கு உள்ள பங்களிப்பைப்பற்றி இன்றுவரை பெரிய அளவில் ஆய்வுகள் வந்ததில்லை. இந்தியாவில் நாம் செய்யும் ஆய்வுகள் எல்லாமே மேலைநாட்டு ஆய்வாளர்களின் ஆய்வுகளை அடியொற்றியவை என்பதே காரணம். கைங்கரியம் என்பதை மதவழிபாட்டின் மையச்செயல்பாடாகக் கொண்டுவந்தவர் ராமானுஜர். மனிதன் என்பவன் தன் அமைப்பிலேயே இறைவனை அடையும்பொருட்டு உருவாக்கப்பட்டவன் என்று அவர் சொன்னார்.
காந்தியின் அடிப்படைக் கலைச்சொற்கள் பல வைணவ மரபில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்டவை. திருக்குலத்தார் என்று தலித்துக்களை ராமானுஜர் சொன்னார். அச்சொல்லின் நீட்சியே ஹரிஜன் என்பது. நரநாராயணன் என்னும் கருத்து [மனிதனே தெய்வம்] ராமானுஜ தரிசனத்தில் இருந்து அவர் பெற்றுக்கொண்டதே.
வைணவ மரபுக்கு இந்த நோக்கில் முன்னோடியாக சமணம் அமைந்திருந்தது. மக்கள் சேவையை ஒரு வழிபாடாக எண்ணிய முன்னோடி மதம் அதுவே. வைணவம் சமணப்பண்புகளை உள் வாங்கிக்கொண்டு வளர்ந்து வடக்கே சென்றபோது சமணர்களை பெருவாரியாக உள்ளிழுத்துக்கொண்டது. புஷ்டி மார்க்கம் போன்ற வட இந்திய வைணவ மரபுகள் சமணத்தின் வைணவ மறுவடிவங்களே. காந்தியில் உள்ள சமணக் கூறுகள் இவ்வாறு உருவானவை
இவ்வாறாக காந்தி இரு இலட்சியவாத அடிப்படைகளால் உருவாக்கபப்ட்டவராக இருந்தார். இலட்சியக்கனவுகள் சார்ந்த திட்டங்களுக்கு நடைமுறைசார்ந்த வழிமுறைகளை உருவாக்குபவர் அவர். பெரும்பாலும் இந்த இரு அம்சங்களும் சிக்கலான முறையில் அவரது அரசியலில் பின்னிப்பிணைந்து வருகின்றன. சில சந்தர்ப்பங்களில் அவரது இலட்சியங்களுக்கும் நடைமுறைகளுக்கும் இடையே பெரிய முரன்பாடுகள் காணபப்டுகின்றன. அதேபோல முற்றிலும் நடைமுறை சார்ந்த கணிப்புகள் தேவையாகும் இடங்களில் மிகையான இலட்சியவாதக் கணிப்புகளை அவர் செய்திருக்கிறார். அவரது பிழைகள் அனைத்துமே இவ்வகையில் உருவானவை என்பது என் எண்ணம்.
*
காந்தியின் தவறுகள் என்று கெய்ன்ரட் எல்ஸ்ட் சொல்லும் பிழைகள்.
1. முதல் உலகப்போரில் காந்தி பிரிட்டிஷ் படைகளுக்கு ஆள்சேர்த்துக்கொடுத்தார். அதன் விளைவாக பிரிட்டிஷார் மகிழ்ந்து இந்தியாவுக்கு டொமினிகன் அந்தஸ்து போன்றவற்றை அளிப்பார்கள் என அவர் நினைத்தார். இது அவரது அகிம்சைக்கொள்கைக்கு எதிரானது
2. கிலா·பத் இயக்கத்தை அவர் ஆதரித்தார். விடுதலைஇயக்கத்தையே கிலா·பத் இயக்கத்துக்கு அவர் தாரைவார்த்தார்.
3. 1931 ல் மேலெழுந்துவந்த விடுதலைப்போராட்டத்தை வாபஸ் வாங்கிக்கொண்டு பிரிட்டிஷாருடன் பேச்சுவார்த்தைக்கு அமர்ந்து காந்தி-இர்வின் ஒப்பந்தத்தை உருவாக்கினார். விடுதலைப்போரை இதன் மூலம் அவர் பின்னுக்கு இழுத்தார்.
4 இரண்டாம் உலகப்போருக்கு ஆதரவளிக்க தயக்கம் காட்டினார். அப்போரில் பிரிட்டிஷரை உடனைடியாக ஆதரித்த முஸ்லீம்லீக் மேலாதிக்கம் பெற்றது.
5 பிரிவினைக்கு அனுமதி அளித்தார். ஜின்னாவுக்கு எதிராக தன் உண்ணாவிரதப்போராடத்தை கையில் எடுக்கவில்லை
6 பாகிஸ்தான் எதிரிநாடாக உருவாகிவிட்டது என்பது உண்மையான பின்னரும் உண்ணாவிரதம் இருந்து கருவூலத்தில் பாகிஸ்தானின் பங்கை கொடுக்கவைத்தார்
முதல் உலகப்போரில் இந்தியர்களைப் பங்கெடுக்க வைத்தது காந்தியின் அப்போதைய வரலாற்றுப்புரிதலின்படி இயல்பானதே. காந்தி பிரிட்டிஷ் அரசை வரலாற்றின் ஒரு முற்போக்கு சக்தி என்று நம்பிய காலகட்டம் அது. அன்று உலகமெங்குமிருந்த நிலப்பிரபுத்துவகால ஆட்சியாளர்கள், சர்வாதிகார ஆட்சியாளர்கள் ஆகியவர்களிடமிருந்து மிகமிக முன்னிலையில் நிற்கும் ஒன்றாக அவர் பிரிட்டிஷ் அரசைக் கண்டார் சிதறுண்டு சீரழிந்து கிடந்த இந்தியாவுக்கு பிரிட்டிஷ் ஆட்சி நிலையான அரசை அளித்து வரலாற்றில் அதை முன்னால் கொண்டுசெல்கிறது என்றே காந்தி எண்ணினார். அவரது அன்றைய வரலாற்றுப் பார்வை அது. நான் அதை ஏற்கக்கூடிய ஒரு பார்வை என்றே எண்ணுகிறேன்.
பிரிட்டிஷாரின் சிவில் நிர்வாகம், நீதியமைப்பு ஆகியவற்றின்மேல் காந்திக்கு அழுத்தமான நம்பிக்கை இருந்தது. கடைசிவரை காந்தி பிரிட்டிஷ் நீதி மன்றங்களில் குடிமகனின் பொறுப்புணர்வுடன் மட்டுமே இருந்திருக்கிறார். சட்டமறுப்பை முன்வைக்கும்போதுகூட ஓர் உலகக்குடிமகனின் நிமிர்வுடன் மட்டுமே பிரிட்டிஷ் சட்டம் முன்பு நின்றிருக்கிறார். ஒருபோதும் நீதிமன்றத்தைப் அவர் அவமதித்ததில்லை.பிரிட்டிஷ் ஆட்சிக்குள் இன்னும் அதிக உரிமைகள், அதிகமான பொறுப்புகள் ஆகியவற்றுக்காக அவர் குரல்கொடுத்தார். ஆகவே ‘தனது’ அரசாக அவர் கண்ட பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஆதரவாக அவர் இருந்ததில் பிழை ஏதும் இருப்பதாக தெரியவில்லை. ஒரு பிரிட்டிஷ் குடிமகனாக தன் கடமையைச் செய்துவிட்டு தன் உரிமைக்காக இந்தியன் குரலெழுப்பவேண்டும் என்று அவர் எண்ணினார்.
உரிமைப்போராட்டங்கள் சீரான சிவில்சமூக எழுச்சியாக இருக்க வேண்டும் என்று சொன்ன காந்தி நாடுகள் ராணுவங்களை கலைத்துவிட வேண்டும் என்றும், மக்கள் தங்கள் அரசுகளுடனும் ராணுவத்துடனும் ஒத்துழைக்கக் கூடாது என்றும் சொல்லவில்லை. எல்லைகளும் ரானுவமும் இல்லாத ஒரு உலக அரசுக்கான கனவு அவருக்கும் இருந்தது. ஆனால் அதற்கான காலம் கனியவில்லை என்று உணரும் அளவுக்கு அவர் யதார்த்தவாதிதான்.
முதல் உலகப்போரில் ஈடுபட்ட நாடுகளில் பிரிட்டனே ஆகச்சிறந்த ஜனநாயக நாடு என்றே காந்தி எண்ணினார். உலக அரசியல் தெரியாதவரல்ல அவர். அன்றைய லண்டனின் மையவிவாதங்களில் அவர் இருந்திருக்கிறார். கெய்ஸர் வில்லியமின் பேரரசுக்கனவுக்கு எதிராக பிரிட்டிஷாரின் சர்வதேச முதலாளித்துவத்தை காந்தி ஆதரித்தது திட்டவட்டமான உலகப்புரிதலுடன் மட்டுமே.
கிலாபத் இயக்கத்தை காந்தி ஆதரித்தமைக்கு அவருக்கான காரணங்கள் திட்டவட்டமாக இருந்தன. காந்தி சுதந்திரப்போராட்டத்தை ஒரு ‘கிளர்ச்சியாக’ பார்க்கவில்லை. அதாவது ஏற்கனவே உருவாகி வலுப்பெற்றுவிட்ட ஒரு சமூகத்தின் எதிர்ப்பாக அவர் அதை எண்ணவில்லை. இந்திய சிவில் சமூகத்தை படிப்படியாக உருவாக்குவதையே அவர் சுதந்திரப்போராக எண்ணினார். காங்கிரஸ் மகாநாட்டில் காந்தியின் முதல் பேருரையே அந்த கருத்தைத்தான் சொல்லியிருக்கிறார் என்பதைக் காணலாம்.
ஆகவே காந்தி இந்தியாவின் கோடானுகோடி மக்களை அரசியல்செயல்பாடுகளுக்குள் கொண்டுவர முயன்றார். மன்னராட்சியிலும் ஜமீந்தார் ஆட்சியிலும் ஒடுங்கி கிடந்த இந்திய சமூகத்தில் அரசியல்செயல்பாடு என்பதே முற்றிலும் இல்லாமல் இருந்தது. மக்கள் அரசியலில் ஈடுபடுவதே இந்தியாவில் அதற்கு முன் இருக்கவில்லை. தன்னை அரசின் குடிமகன் என்றே மக்கள் எண்ணவில்லை. உரிமைக்காகவும் நீதிக்காகவும் குரல்கொடுக்கும் குணமே இருக்கவில்லை.
காந்தியின் போராட்டங்கள் அம்மகக்ளை அரசியலுக்குக் கொண்டுவருதல், அரசியல்வெளியில் வைத்து பல்வேறு சமூகங்கள் உரையாடிக்கொள்ள வழியமைத்தல், அதிகாரச் சமரசங்கள் மூலம் மெல்ல மெல்ல குடிமைசமூகம் [சிவில்சமூகம்] உருவாக வழியமைத்தல் என்னும் நோக்கம் கொண்டவை. அதில் பெரும் வெற்றியைப் பெற்றவை.
கிலாபத் இயக்கத்தை இந்திய முஸ்லீம்களை அரசியலுக்குக் கொண்டுவரும் ஒரு செயல்பாடாகவே காந்தி எண்ணினார். அவ்வாறு அரசியலுக்கு வரும் இஸ்லாமியர்களுடன் இந்துக்களுக்கு ஒரு ஆக்கபூர்வமான உரையாடல் நிகழக்கூடும் என்ற எண்ண்த்திலேயே அதில் காங்கிரசை பங்கெடுக்கச் செய்தார். அது பெருமளவுக்கு வெற்றியும் பெற்றது என்பதே உண்மை. தேசப்பிரிவினை என்னும் பின்விளைவுக்கு பலநூறு காரணங்கள். அதை மட்டும் வைத்து கிலாபத் இயக்கத்தை ஒரு எதிர்மறைஇயக்கம் என்று எண்ணுவது வரலாற்றுப்பிழை.
கிலாபத் இயக்கம் உருவானதனால்தான் தேசிய நோக்குள்ள முஸ்லீம்களின் ஒரு பெரும் தொகுதியே இந்தியாவில் உருவாயிற்று என நான் எண்ணுகிறேன். அதுவரையில் இஸ்லாமிய ஆட்சியாளர்களுடன் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு ஒதுங்கிய சமூகமாக இருந்த இஸ்லாமியர் தேசிய அரசியலுக்கு அதன் வழியாக வந்தார்கள். பிற சமூகத்தினரிடம் அவர்களுக்கு ஓர் ஆக்கபூர்வமான உறவு உருவானதே அப்போதுதான். சி.எச்.அகமது மௌலவி, வைக்கம் மௌலவி,வைக்கம் முகமது பஷீர் போன்ற மாபெரும் தேசியவாதிகளை கிலாபத் இயக்கம் உருவாக்கியது என்பதை கேரளவரலாற்றில் நான் கண்டிருக்கிறேன்.
சொல்லப்போனால் கிலாபத் இயக்கம் உருவாக்கிய அந்த உரையாடலின் வட்டத்துக்குள் வராமல், தங்கள் இடுங்கிய உலகுக்குள் பிறருடன் தொடர்பே நிகழாமல், தங்கிவிட்ட கோடானுகோடி இஸ்லாமியர்களின் சாம்ராஜ்யக்கனவு மீதுதான் பிரிவினை இயக்கம் பின்னாளில் உருவாக்கப்பட்டது. கிலாபத் இயக்கமே பிரிவினையை உருவாக்க்கியது என்பதெல்லாம் வலிந்த ஊகங்கள். கிலாபத் இயக்கம் உருவாகாமல் இருந்திருந்தால் பிறசமூக உறவே இல்லாமல் இருந்த இஸ்லாமியர்களை ஒட்டுமொத்தமாகவே இஸ்லாமிய தேசியவாதம் நோக்கி இட்டுச்சென்றிருப்பார்கள் .
மேலும் காந்தி கிலாபத் இயக்கத்தை தொடங்கவில்லை. அலி சகோதரர்களால் அது ஆரம்பிக்கப்பட்டு மேலெடுத்துச் செல்லப்பட்டது. அந்த மக்களியக்கம் ஒரு மத இயக்கம் மட்டுமாக ஆகாமல் தடுத்து அது அரசியலியக்கமாக ஆவதற்கும் அதில் இந்து முஸ்லீம் உரையாடல் ஒன்று நிகழ்வதற்கும் காந்தி வழியமைத்தார். அதை காந்தி விட்டிருந்தால் அது ஷியா முஸ்லீம்களின் மத இயக்கமாக மாறி வேறு வடிவங்களை அடைந்திருக்கக் கூடும்.
கிலாபத் இயக்கம் எதிர்விளைவுகளை உருவாக்கியதா என்றால் இருக்கலாம் என்றே நான் எண்ணுகிறேன். னால் எந்த வரலாற்றியக்கமும் நாடகம் போல திட்டமிட்டு இயக்கி முடித்துவிடக்கூடிய ஒன்றல்ல. அது ஒரு நதியை திசைமாற்றுவது போல. திசைதிரும்பிய பின்னர்தான் அதன் ஓட்டமும் விளைவுகளும் தெரியவரும். இஸ்லாமிய சமூகத்தை அரசியல் வெளிக்கும், இந்துக்களுடனான ஒரு உரையாடலுக்கும் காந்தி கொண்டுவந்தார். அவ்வாய்ப்பு முறையாக பயன்படுத்தப்படவில்லை என்றால் அது காந்தியின் பிழை அல்ல.
காந்தி ஒத்துழையாமைப் போராட்டத்தை ஏன் வாபஸ் வாங்கினார் என்பதை மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருக்கிறோம். இந்தியாபோன்ற உள்முரண்பாடுகள் நிறைந்த ஒரு மாபெரும் தேசத்தை கட்டற்ற போராட்டத்துக்குக் கொண்டுசெல்ல அவர் அஞ்சினார். வன்முறையை ஆரம்பிப்பது எளிது நிறுத்துவது கஷ்டம் என அவரை விட அறிந்தவர் குறைவு. அப்போராட்டத்தை அவர் அன்று நிறுத்தாமல் இருந்திருந்தால் அது எங்கெங்கோ பரவி சாதி மதப்போராட்டமாக மாறியிருக்குமே ஒழிய ஒருபோதும் இந்திய சுதந்திரத்தை விரைவுபடுத்தியிருக்காது என்றே நான் நினைகக்கிறேன்.
காந்தியின் போராட்டம் கிளர்ச்சியின் மூலம் அரசைப் பணியவைக்கும் நோக்கம் கொண்டதல்ல, கிளர்ச்சியின் மூலம் தங்களை தாங்களே கட்டமைத்துக்கொள்ளும் நோக்கம் கொண்டது என்று புரிந்துகொண்டால் இதை எளிதில் விளக்க முடியும். கிளர்ச்சிகளின் மூலம் இந்தியமினக்குழுச் சமூகம் தன்னை ஒரு நவீன சிவில்சமூகமாக மாற்றிக்கொள்ள வேண்டுமென்றே அவர் விரும்பினார். அக்கிளர்ச்சியை வாபஸ் பெற்றதுமே அவர் அறிவித்த எல்லா திட்டங்களும் அடித்தள மக்களை அதிகம் உள்ளே கொண்டுவருவது, இன்னும் விரிவான சிவில்சமூகத்தை அமைப்பது ஆகிய இலக்குகள் கொண்டவை. கிராமநிர்மாணம், ஹரிஜனசேவை, குடி ஒழிப்பு , கிராமக்கல்வி போன்ற திட்டங்கள் அவை.
இரண்டாம் உலகப்போரில் காந்தியின் அணுகுமுறை முற்றிலும் மாறிவிட்ட ஒரு சூழலில் நிகழ்கிறது. இப்போது காந்தி தன்னை பிரிட்டிஷ் ஆட்சிக்குள் உரிமை கோரும் ஒரு பிரிட்டிஷ் இந்தியக் குடிமகனாக எண்ணவில்லை. படிப்படியான கிளர்ச்சிகள் மூலம் இங்கே ஒரு வலுவான சிவில்சமூகம் உருவாகி விட்டிருப்பதை அவர் அறிந்தார். மாகாண அரசுகளை அமைக்கும் உரிமையை வென்றெடுத்து,தேர்தல்களைச் சந்தித்து, ஆட்சி செய்து, வலுவான அரசியல் சமூகமும் உருவாகிவிட்டிருந்தது. அதாவது தேசம் உருவாகிவிட்டது. அந்த இந்திய தேசத்தின் அன்னிய ஆட்சியாளர்களாக இருந்தார்கள் பிரிட்டிஷார்.
இப்போது ஒரு தேசத்தின் தலைவர் இன்னொரு தேசத்தின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நிகழ்த்தும் மனநிலை காந்தியில் இருந்தது. உலகப்போரை ஆதரிக்க அவர் நிபந்தனைகள் போட்டார். தெளிவாக விவாதிக்க விரும்பினார். அந்நிபந்தனைகளை வென்றும் எடுத்தார்.முஸ்லீம் லீகும் ஜஸ்டிஸ் கட்சியும் பிரிட்டிஷாரை நிபந்தனை இல்லாமல் ஆதரித்தன என்பதற்காக காந்தியும் அதைச் செய்திருக்க வேண்டும் என்பதெல்லாம் சரியான வாதங்களே அல்ல
தேசப்பிரிவினையை காந்தி தடுத்திருக்க முடியுமா என்பதெல்லாம் வரலாற்றை ஆராயும் வழிமுறைகள் அல்ல. காந்தி வரலாற்றின் சமையற்காரர் அல்ல. சத்தியாக்ரகம் என்பது மெனுக் குறிப்பும் அல்ல. பிரிவினை என்பது ஒரு வரலாற்று நிகழ்வு. அதை உருவாக்கிய விசைகள் எண்ணற்றவை. ஒரு வரலாற்றுப்பெருக்கை சத்யாக்ரகம்செய்து நிறுத்தவோ விரும்புவதுபோல மாற்றவோ முடியுமென நான் நினைக்கவில்லை. அதில் நம் தார்மீக விசையைச் செலுத்த மட்டுமே சத்யாக்ரகத்தைப் பயன்படுத்தலாம்.
காந்தி பிரிவினைக்கு எதிராக மீண்டும் மீண்டும் முயன்றிருக்கிறார். மீண்டும் மீண்டும் அனைவருடனும் பேசியிருக்கிறார். ஒரு கட்டத்தில் அவருக்குத் தெளிவாகவே அது ஒரு வரலாற்றுப்பெருக்கு என புரிந்தது. மனவேதனையுடன் அதற்கு அவர் வழிவிட்டார். எனென்றால் அவர் யதார்த்தவாதி.
காந்தி பாகிஸ்தானுக்கு அவர்களின் கருவூலபங்கைக் கொடுத்துவிடும்படிச் சொல்லி உண்ணாவிரதம் இருந்தது மிக நியாயமான ஒரு நடவடிக்கை என்பதே என் எண்ணம். அதன் ராணுவ சாத்தியங்கள் மட்டுமே எல்ட்சின் கண்களுக்கு தெரிகின்றன. நான் அதன் தார்மீகச் சாத்தியங்களை மட்டுமே காண்கிறேன். ஒரு தேசம் பிறக்கும்போதே நம்பிக்கைத்துரோகம் மற்றும் போர்த்தந்திரங்களைச் செய்வதென்பது மிக மோசமான ஒரு குறியீடு. அது தொடங்கிவைக்கும் மனநிலையே ஆரோக்கியமானது அல்ல. இந்தியா தார்மீக அடிபப்டை கொண்ட ஒரு நாடாகவே நீடிக்க வேண்டும் என்பதே காந்தியின் கனவு. எல்ட்ஸ் அது ஒரு இஸ்ரேலாக இருக்கவேண்டுமென எண்ணுகிறார் போல
காந்தி தன் கடைசிக்காலத்தில் ஆன்மீகமாகச் சோர்ந்து போனார். லௌகீகத்தில் மிதமிஞ்சி இறங்கும் ஞானி அடையும் அனைத்து அவநம்பிக்கைகளையும், தனிமையையும், கசப்பையும் அடைந்தார். கடைசிக்காலத்தில் முழுமையாக கைவிடப்பட்டார். ‘என்னை ஏன் கைவிட்டீர்/’ என்ற காந்தியின் குரலை மீண்டும் மீண்டும் கடைசிக் காலத்து எழுத்துக்களில் பேச்சுகளில் காண்கிறோம். அவர் கடைசியில் தேடியது ஒரு சிலுவையை. அதை கோட்ஸே கொடுத்து அவரை விடுதலை செய்தார்.
காந்தியின் தோல்விகள் அந்தக் காலகட்டத்திலேயே அதிகம் நிகழ்ந்தன. நேரு தன்னுடைய தரிசனங்களை கொஞ்சம் கூட ஏற்காதவர் என்று காந்தி நன்கறிவார். காந்தியின் கிராம நிர்மாணத்திட்டங்கள், அதிகார பரவலாக்கம் போன்ற எவற்றிலும் நேரு ஈடுபடவில்லை. அவரது கனவுகளே வேறு. காந்தியை உலகமறியா பாமரர் என்றும் ஸ்டாலினை நவீன உலகின் சிற்பி என்றும் நேரு உள்ளூர நம்பியிருந்தார். ஆனாலும் காந்தி நேருவை தன் வாரிசாக நிறுத்தினார்.
காரணம் பட்டேல் மீது காந்தி கொண்ட அவநம்பிக்கை. பட்டேல் திறன்மிக்கவர் என்று காந்தி அறிவார். காந்தியக் கோட்பாடுகளில் நம்பிக்கை மிக்கவர் பட்டேல். அதை பின்னர் ‘அமுல்’ மூலம் அவர் நிரூபித்தும் காட்டினார். காந்திய அடித்தளம் கொண்ட ஒரு பெருநிறுவனம் காந்திய நிர்வாகத்தின் சாத்தியங்களுக்கான வாழும் உதாரணம். ஆனால் பட்டேலின் மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகமனப்பாங்கு மேல் காந்திக்கு ஐயம் இருந்தது.
அன்றைய இந்திய்ச்சூழல் காந்தியை அச்சுறுத்தியது. அவர் நாடியது ஒரு மாபெரும் சமரச- ஒருங்கிணைவு சக்தியைத்தான். இரும்புக்கரத்தை அல்ல. ஆகவே சந்தேகத்துக்கு இடமற்ற மதச்சார்பற்ற நோக்கும் ஜனநாயகப்பண்பும் கொண்டவராகிய நேருவை அவர் முன்னிலைப்படுத்தினார். தன் பொருளியல்,சமூகவியல் கொள்கைகளை தானே வேறு வழியின்றி புதைத்தார். அதை அவர் அறிவார். அதுவே அவரது பெருந்தோல்வி. வரலாறு அவரை அங்கே கொண்டுசென்று நிறுத்தியது.
இரண்டாவதாக சோர்வுற்றிருந்த மனநிலையில் தேசவிடுதலைத்தருணத்தில் முற்றாக ஒதுங்கிக்கொண்டார். மௌண்ட்பாட்டன் பிரிட்டிஷ் நலன் காக்கும் ஒரு சுதந்திர முன்வரைவை முன் வைத்தபோது அதன் விளைவுகளை பரிசீலனை செய்ய அவர் முனையவில்லை. அதில் தன் நுண்ணுணர்வையும் விவேகத்தையும் அவர் செலுத்தவில்லை
மௌன்ட்பாட்டனின் தேசப்பிரிவினைத்திட்டம் மிக மிக அவசரகதியில் தயாரிக்கபப்ட்டது. கோடானுகோடி மக்களின் வாழ்க்கையை தீர்மானிக்கும் ஒரு வரலாற்று நிகழ்ச்சி சில மாதங்களில் ராணுவநிபுணருக்குரிய ஆணவத்துடன் உருவாக்கப்பட்டது. உண்மையில் என்ன செய்திருக்க வேண்டும் என்றால் பாகிஸ்தானும் இந்தியாவும் இருநாடுகளாகப் பிரிவதை கொள்கை ரீதியாக முடிவெடுத்து அங்கீகரித்தபின் பிரிவினையை படிப்படியாக நிகழ்த்தும்பொருட்டு ஒரு கூட்டு இடைக்கால அரசு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அதில் ஜின்னாவும் நேருவும் சமமான அதிகாரத்துடன் பங்குகொண்டிருக்க வேண்டும்.
அதன்பின்னர் பேச்சுவார்த்தைகள் மூலம் படிப்படியாக பிரிவினை நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும். அப்போது சம்பந்தப்பட்ட எல்லைகள் முழுக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்திருக்க வேண்டும். அல்லது ஒரு மூன்றாம் நாட்டின் பொதுக் கண்காணிப்பை நாடியிருக்கலாம். எல்லைவரைவின் முதல்வடிவம் கொள்கையடிப்படையில் அங்கீகரிக்கப்பட்டபின்பாதை மெல்லமெல்ல நடைமுறைபப்டுத்தியிருக்கலாம். அபப்டிச்செய்திருந்தால் பிரிவினை உருவாக்கிய பேரழிவு நிகழ்ந்திருக்காது. உலகின் ராணுவ நிபுணர்கள் கணிசமானவர்கள் அதை அப்போதே சொன்னார்கள். இந்தியாவில் ஒருவர்தான் அதைச் சொன்னார்– ராஜாஜி. ஆனால் அவரது குரலுக்கு மதிப்பே இருக்கவில்லை.
கத்தியால் வெட்டுவதைப்போல தேசத்தை வெட்டினார்கள். எங்கும் முறைப்படி ராணுவப்பாதுகாப்பு போடப்படவில்லை. ஏன் பல ஊர்களுக்கான வரைபடமே ராணுவத்திடம் இருக்கவில்லை. ராணுவமே திடுமென இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இந்த அபத்தமான திட்டம் முன்வைக்கப்பட்டபோது அதிகாரத்துக்கான பெரும் தாகம் அனைவரிலுமே இருந்தது. எவருமே விட்டுக்கொடுக்க தயாராக இருக்கவில்லை. அங்கே காந்தி தன் தார்மீக வல்லமையை பயன்படுத்தியிருக்க முடியும். அவர்களை உரையாடச்செய்திருக்க முடியும். தேச விடுதலையின் போது நெல்சன் மண்டேலா எப்படி ஜூலு பிரிவினரை எதிர்கொண்டாரோ அதை செய்ய வைத்திருக்க முடியும். அவர் செய்யவில்லை. சோர்ந்து விலகிக் கொண்டார். அவரது மாபெரும் பிழை இதுதான்.
கலவரங்களைக் கண்டு குற்றவுணர்வுடன் மீண்டும் காந்தி அரசியலுக்கு வந்தார். எளிய மனிதராக கூப்பிய கரங்களுடன் அவர் கலவரம் எரிந்த ஊர்களுக்கு நடந்து சென்றார். ராணுவத்தால் அடக்கமுடியாத கலவரம் அந்த அந்த தனிமனிதரின் ஆன்ம பலத்தால் மெல்ல மெல்ல அணைந்தது என்பதை வரலாறு ஆவணப்படுத்துகிரறது. அதன் தீவிரமான சித்திரத்தை டொம்னிக் லாப்பியர் லாரிகாலின்ஸ் எழுதிய நள்ளிரவில் சுதந்திரம் நூலில் படிக்கலாம்.
ஆனால் காந்தி ஒரு தோற்றுப்போன மனிதர் அல்ல. காந்தியம் செல்வாக்கிழந்துபோன ஒரு கோட்பாடும் அல்ல. நியாயமும் ஆன்ம வல்லமையும் உள்ளவர்களின் கையில் அதுவே மகத்தான போராட்ட ஆயுதம் என மீண்டும் மீண்டும் நிரூபிக்கபப்ட்டிருக்கிறது. காந்தியின் தரிசனங்களின் வீச்சு அவர் இறந்து கால் நூற்றாண்டு கழிந்து சூழியலாளர்களால், மேலாண்மைநிபுணர்களால், அரசியல் ஆய்வாளர்களால் மிகமிக விரிவாக மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த இருபதாம் நூற்றாண்டில் பேசப்பட்ட எத்தனையோ தத்துவவாதிகள் நூலக அடுக்குகளுக்குள் ஒடுங்கினார்கள். காந்தி இன்றும் வாழும் தத்துவம் என்பதைக் காண கொஞ்சம் சமகால வரலாற்றைப் பார்த்தாலே போதும்.