கலாச்சார இந்து

இக்கட்டுரையின் ஆங்கில மொழியாக்கம்

அன்புக்குரிய ஜெயமோகன் அண்ணாவிற்கு,

வணக்கம். எனது குடும்பத்தில் அனைவருமே கடவுள் பக்தி உடையவர்கள். நான் மட்டும் எனது பதின்பருவத்தில் இருந்து ஒரு பின்பற்றும் இந்துவாக (Practicing Hindu) இல்லாமல் இருந்துவருகிறேன். சிறுவயதிலேயே படிக்கக்கிடைத்த ஈவேரா பெரியாரின் கருத்துக்கள் இதில் கணிசமாக தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும் என்ற போதிலும் இதற்கு முக்கியகாரணம் எனது  தர்க்க புத்திதான்.

ஆயினும் மூர்க்கத்தனமாக இறைவழிபாட்டை ஒதுக்கியவனும் கிடையாது. எவராவது திருநீற்றை தந்தால் பூசிக்கொள்வதும் உண்டு. உறவினர்கள் நண்பர்கள் கோயிலுக்கு அழைத்தால் சென்று கும்பிடுவதும் உண்டு. கும்பிடும் வேளை ஒரு மன அமைதி கிடைத்தாலும், நீ பெறுவது ஒரு போலிப் பாதுகாப்பு உணர்வுதான் என்று எனது தர்க்க மனது விழித்துக்கொள்ளும்.எனது உறவினர்களின், தெரிந்தவர்களின் வாழ்க்கையை உன்னிப்பாக அவதானித்த வரை அவர்கள் மலைபோல் சந்தித்த துன்பங்களை எல்லாம் கடவுள் நம்பிக்கை கொண்டு இலகுவாக கடந்துவந்திருப்பதனை அறிவதனால் கடவுள் இருக்கிறார் அல்லது இல்லை என்ற இரு முனைவுகளுக்கு அப்பால் இறை நம்பிக்கை தனிமனிதனைப் பொறுத்தவரை பயனுடையது என்றே எண்ணுகின்றேன்.

இக்காரணத்தால் நான் கடவுள் நம்பிக்கையாளர்களிடம் எனது நிலைப்பாடுகளை வெளிப்படையாக பிரச்சாரம் செய்வது கிடையாது. யாராவது என்னை நீங்கள் நாத்திகனா என்று வினவும்போது அவர்களுக்குத் தக்கபடி “நான் அப்படிச் சொன்னேனா?” என்றோ அல்லது “அது நீங்கள் எவ்வாறு கடவுளை வரையறுக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது” என்றோ கூறி நழுவிவிடுவேன்.

நான் என்னை ஒரு இறைமறுப்பாளன் என்று அடையாளப்படுத்த விரும்பாமைக்கு அது என்னை எனது மரபில் இருந்து துண்டித்து விடுகின்றதோ என்ற எச்சரிக்கை உணர்வும் இன்னுமொரு முக்கியகாரணம்.

சைவ சித்தாந்தம் போன்ற தத்துவச்சாதனைகளையும் தேவாரம், திருவாசகம், பெரியபுராணம், கந்தபுராணம் போன்ற பக்தி இலக்கியங்களையும், பண்ணிசையில் இருந்து வளர்ந்த கர்நாடக சங்கீத்தையும், இன்றும் ஆயிரம் ஆண்டுகளையும் தாண்டிநிற்கும் கோயில் ஒவியங்களையும், அற்புதமான சிற்பங்களையும், கட்டிடப் பொறியியலின் சாதனைகளாக நின்றுகொண்டிருக்கும் தஞ்சை பெரிய கோயில் போன்ற கோயில்களையும் மேலை நாட்டவர்களுக்கு சில நூறாண்டுகளுக்கு முன்பே ஆயிரம்,ஆயிரம் மைல்களைக் கடந்து கடற்படை அனுப்பி வெற்றிபெற்ற ராஜராஜன்,ராஜேந்திரன் போன்ற பெருமன்னர்களில் இருந்து இறை நம்பிக்கையாளர்களான எனது எளிய உறவினர்கள் வரையிலானவர்களையும் கொண்ட எனது மரபை மறுத்து ஒரு பண்பாட்டு சுடுகாட்டிலும் நான்தான் புத்திசாலி என்ற ஆங்காரத்தின் உச்சியிலும் நாத்திகவாதி என்ற அடையாளம் என்னை கொண்டுபோய் சேர்த்துவிடுமோ என்ற அச்சம் எனக்குண்டு.

ஆயினும் எனது அடிப்படையான இயல்பின்படி நான் மதநம்பிக்கையை ஏற்றுக்கொண்டவனும் கிடையாது. சமூகத்தில் எமக்கு இனம் சார்ந்து, மதம் சார்ந்து, சாதி சார்ந்து நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அடையாளங்கள் அமைந்துவிடுகின்றன.ஆனால் நாம் எம்மை எப்படி அடையாளப்படுத்திக்கொள்கிறோம் என்பதுதான் முக்கியமானது என்று நினைக்கிறேன். என்னை எப்போதும் தமிழன் என்று மட்டுமே அடையாளப்படுத்தி வந்துள்ளேன்.

ஆனால் எவராலோ குறிப்பாக எனது மத அடையாளம் கேட்கப்படும்போது பதில் அளிப்பது சிக்கலாகிவிடுகின்றது.இறைமறுப்பாளன் என்று அடையாளப்படுத்தவும் விரும்பவில்லை. அதேவேளை நெறி சார்ந்து இந்து என்றோ துறை சார்ந்து சைவம் என்றோ அடையாளப்படுத்துவது மேலதிக விளக்கங்கள் அளிக்கப்படாதவிடத்து பின்பற்றும் ஒருவர் என்ற போலி அடையாளத்தை தோற்றுவிப்பதாகிவிடுகின்றது.

அண்மையில் ஒரான் பாமுக்கைப் (Orhan Pamuk) பற்றி வாசிக்கும்போது அவர் தன்னை ஒரு பண்பாட்டு முஸ்லிம் (Cultural Muslim) என்று விபரிப்பதை அறிந்தேன். பண்பாட்டு முஸ்லிம் என்பது ஒருவர் இஸ்லாத்தைப் பின்பற்றாவிட்டாலும் அம்மதத்துடன் வரலாற்று மற்றும் கலாச்சாரரீதியான தொடர்பை கொண்டிருகின்றார் என்பதை வெளிப்படுத்துகின்றதென்று தெரிந்தது.இதற்கு இணையாக பண்பாட்டுக் கிறிஸ்தவர் என்ற சொல்லாடலும் இருக்கின்றது. ஆனால் பண்பாட்டு இந்து என்ற சொல்லாடல் இல்லை.

நடைமுறைத் தளத்தில் பண்பாட்டு இந்து என்பது பயனுடையதாக இருக்ககூடும் எனினும், ஆழ்ந்த நோக்கில், இந்துமதம் என்பதே இவ்வாறான பலவகையான போக்குகளையும் உள்ளடக்கியதாக அமைந்திருப்பதால் தனியான பண்பாட்டு இந்து என்ற சொல்லாடல் பொருத்தமற்றதாகவும் உள்ளது. அச்சொல் காணப்படாமைக்கு இது ஒரு காரணமாக இருக்கக்கூடும். எனினும் தெளிவான வரையறை கொண்ட சைவம் போன்ற உட்பிரிவுகளைப் பொறுத்தவரை பண்பாட்டுச் சைவர் போன்ற சொற்பதங்கள் குழப்பமளிக்கக் கூடியவையல்ல.

எனக்கிருந்த அடையாளப்பிரச்சனையை ஒரான் பாமுக் தீர்த்துவிட்டார் என்று மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் தீரவில்லை போன்றுள்ளது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ந.சிவேந்திரன்

அன்புள்ள தம்பி சிவேந்திரன்,

ஒரு விஷயத்தை முதலில் சொல்லிவிடுகிறேன். சென்ற பல வருடங்களில் உங்களைப்போல இத்தனை ஆழமான அடிப்படையான வினாக்களைக்கொண்ட கடிதங்களை மிகக் குறைவாகவே பெற்றிருக்கிறேன். ஆகவே உங்களுடைய கடிதங்கள் ஒவ்வொன்றுமே மிக முக்கியமானவை என நான் ஆர்வத்துடன் வாசிக்கிறேன்.

ஆகவே நான் உங்கள் வினாக்களுக்கு ஒரு விவாதத் தரப்பு என்ற நிலையில் என் பதில்களைச் சொல்கிறேன். என்னுடைய எல்லா பதில்களையும் அப்படித்தான் சொல்கிறேன் என்றாலும் உங்களிடம் இன்னும் அழுத்தமாக இதைச் சொல்ல நான் விரும்புகிறேன். உங்கள் சொந்தத் தேடல், சொந்த சிந்தனையில் நீங்கள் முன்னகரும்போது என்னுடைய வாதங்களையும் கருத்தில் கொள்ளுங்கள். அது மட்டும் போதும்.

‘கலாச்சார இந்து’ என்ற சொல்லாட்சிக்கு நாம் ஓரான் பாமுக் வரை செல்லவேண்டிய தேவை இல்லை. இந்து மறுமலர்ச்சிக்காலம் என்று சொல்லப்படும் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே அதற்கிணையான எண்ணங்கள் இந்தியாவில் உருவாகிவிட்டன.

முதலில் அதற்கான வரலாற்றுப் பின்னணியையும் அந்த மனநிலைகளையும் பார்ப்போம். வெள்ளையர்களுடன் இணைந்து வாழ்ந்த மேல்தட்டு, படித்த இந்துக்கள் ஒரு தர்மசங்கடத்தை அடைந்தார்கள். இந்துமதத்தை உதறவும் முடியாமல் தக்கவைக்கவும் முடியாமல் ஒரு பெரும் சிக்கலில் இருந்தார்கள்.

இந்துமதத்தின் ஆசாரங்களும், வழிபாட்டுமுறைகளும் அன்று வெள்ளையர்களால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டன. கிறித்தவ மதமாற்ற அமைப்புகளின் பிரசாரம் உச்சகட்டவேகத்தில் இருந்தது அன்று. கல்விக்கூடங்களிலேயே அந்த விமர்சனங்களை கேட்டு வளர்ந்தவர்களாகவே அன்றைய படித்த இந்துக்கள் இருந்தார்கள்.

அந்த விமர்சனங்களை மதப்பிரசாரம் என்று எடுத்துக்கொள்ள படித்த இந்துக்கள் பழகினார்கள். அதைப்பற்றிய பல குறிப்புகளை நாம் அக்காலகட்டத்தைச் சித்தரிக்கும் வாழ்க்கைவரலாறுகளில் காணலாம். தென்னமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் கிறித்தவம் நிகழ்த்திய மாபெரும் மானுட இன அழித்தொழிப்புகளைச் சுட்டிக்காட்டி அவர்களை எதிர்கொள்ள முடிந்தது. ஆனால் ஐரோப்பிய நவீன தாராளவாத சிந்தனைகள், நவீன பகுத்தறிவுச் சிந்தனைகளின் வினாக்களை எதிர்கொள்ள முடியவில்லை.

ஏனென்றால் அவர்களுக்கு நவீன ஐரோப்பா மீது பெரும் ஈடுபாடும் பக்தியும் இருந்தது. அவர்களின் ஆதர்ச புருஷர்களெல்லாமே அங்குதான் இருந்தார்கள். நவீன ஐரோப்பியச்சிந்தனைகளை அவர்கள் முறையாகக் கற்கவும் செய்தார்கள். மறுபக்கம் இந்து மரபின் சிந்தனைகளோ அவர்களுக்கு சரியாக அறிமுகமாகியிருக்கவில்லை. அவை வெறும் ஆசாரங்கள், நம்பிக்கைகள், புராணங்களாகவே அவர்களுக்கு வந்து சேர்ந்திருந்தன. இந்துமதத்தில் அன்றிருந்த மானுடவிரோதமான ஆசாரங்களும் மூடத்தனமான சடங்குகளும் அவர்களுக்கு பெரும் சங்கடத்தை அளித்தன.

ராஜா ராம்மோகன் ராய்

அன்றிருந்த படித்த வெள்ளையர்கூட இந்தியர்களை பழமையில் தேங்கிய மூட வழிபாடுகள் கொண்ட மக்களாகவே சித்தரித்தார்கள். குலக்குறி வழிபாடு [Totemism], மிருகவழிபாடு [Animism], பிரபஞ்சவழிபாடு [Pantheism], பலதெய்வ வழிபாடு [Polytheism], மாந்த்ரீகவழிபாடு [Shamanism] உருவ வழிபாடு [Idolatry] போன்று தங்களுக்கு முன்னரே தெரிந்த அபத்தமான அரைகுறையான சொல்லாட்சிகளால் இந்துமதத்தை அடையாளப்படுத்தினர். [இன்றும் கூட அந்தப் போக்கு அப்படியே தொடர்கிறது. இங்குள்ள பல ‘அறிவுஜீவிகள்’ அங்குள்ளவர்கள் எழுதிய நூல்களில் இருந்து பெற்ற இச்சொற்கள் வழியாகவே தங்கள் தந்தையரின் மதத்தை புரிந்துகொள்ள முயல்கிறார்கள்.]

இந்த படித்த இந்துக்கள் அவற்றிலிருந்து தங்களை விலக்கிக் காட்ட விரும்பினர். வெள்ளையர்களின் கண்ணில் தங்களை நவீன மனிதாபிமான, ஜனநாயக, விழுமியங்கள் கொண்ட புதிய மக்களாக காட்டிக்கொள்ள்வேண்டிய தேவை அவர்களுக்கிருந்தது. ஆகவே அவர்கள் இந்து மதத்தை தங்கள் கோணத்தில் இரண்டாகப் பகுத்துக்கொள்ள முனைந்தார்கள். வெள்ளையர்களின் கடும் விமர்சனத்துக்கு உள்ளான இந்து ஆசாரங்கள், வழிபாட்டுமுறைகள், சடங்குகள் மற்றும் நம்பிக்கைகளை அவர்களும் நிராகரித்தார்கள். இவை அல்லாத ஓர் இந்துமதத்தை இந்து மரபுக்குள் இருந்து உருவாக்கிக்கொள்ள முயன்றார்கள்.

அக்காலகட்டத்தில் இந்துஞானநூல்கள் ஐரோப்பிய மொழிகளுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டன. உண்மையிலேயே இந்துமதத்தைப் புரிந்துகொள்ள முயன்ற ஒருசில ஐரோப்பியரின் கடும் முயற்சி அவற்றுக்குப் பின்னாலிருந்தது. அம்மொழியாக்கங்கள் ஐரோப்பாவின் அறிவார்ந்த சிறு வட்டத்தில் புகழ்பெற்றன. அவற்றை ஆங்கிலம் வழியாகப் படித்த இந்துக்களுக்கு தங்கள் மரபின் வீச்சும் ஆழமும் புரிந்தது. ஆகவே அவற்றை மையமாகக் கொண்டு பிறவற்றை நிராகரித்து ஓர் இந்துமதத்தை உருவாக்க முற்பட்டார்கள்.

இந்த மனநிலையில் இருந்தே இந்து சீர்திருத்த இயக்கங்கள் ஆரம்பித்தன. மிகச்சிறந்த உதாரணமாக நாம் பிரம்ம சமாஜத்தைச் சொல்லலாம். பிரம்ம சமாஜம் உருவாக்க முயன்றது நவீன ஐரோப்பிய நோக்குக்கு உகந்த ஒரு இந்துமதத்தைத்தான். இந்து மதத்தின் அடிப்படையான தத்துவ விவாதங்களை மட்டும் வைத்துக்கொண்டு முழுக்கமுழுக்க கிறித்தவ பாணியில் உருவாக்கப்பட்ட ஒரு மதம்தான் பிரம்ம சமாஜம்.

பிரம்மசமாஜம் அன்று கல்கத்தா உயர்குடிகள் நடுவே பிரபலமாக இருந்திருக்கிறது. வெள்ளையர்களுடன் பழகுவதற்கு பிரம்ம சமாஜம் சிறந்த உபாயம் என்ற எண்ணம் இருந்தது. பிரம்மசமாஜிகள் ஆலயவழிபாடு, துறவு, பண்டிகைகள் போன்ற இந்துமத வழக்கங்களை எல்லாம் கடுமையாக நிராகரித்தார்கள். ஆங்கிலம் கற்ற இளைஞர்கள் பிரம்ம சமாஜத்தில் சேர்வதற்கு ஆர்வம் காட்டினர்.

ஆகவே பிரம்மசமாஜத்தில் தங்கள் பிள்ளைகள் சேர்ந்துவிடுவார்களோ என்ற கிலி வங்காளப் பெற்றோர்களை ஆட்டிவைத்தது. பாரதியின் ஆறில் ஒருபங்கு போன்ற கதைகளில் இந்த அச்சத்தை அவர் பதிவு செய்திருக்கிறார்.

பிரம்மசமாஜம் போன்ற அமைப்புகள் இந்து மதத்தின் பகுதிகள் என்று சொல்லப்பட்ட பல மூடநம்பிக்கைகள் களையப்படுவதற்கும் தவறான ஆசாரங்கள் தடைசெய்யப்படவும் காரணமாக அமைந்தன என்பது உண்மை. ஆனால் ஒரு கட்டத்தில் இந்துமதத்தின் தனித்தன்மைகள் அனைத்தையுமே பிரம்மசமாஜம் அழிக்கிறதா என்ற எண்ணம் பரவலாக எழுந்தது. ஆகவே அதற்கு எதிரான சிந்தனைகள் உருவாயின. பிரம்மசமாஜம் அதன் எதிர்விளைவாக தீவிரமான மரபுவழிபாட்டு நோக்கை உருவாக்கியது. இதை நாம் தாகூரின் கோரா நாவலில் காணலாம்.

பின்னர் ஒரே ஒருநபர் தன் தனித்த ஆன்மீக வல்லமையால், மேதைமையால் பிரம்மசமாஜம் எழுப்பிய எல்லா வினாக்களுக்கும் பதில் சொன்னார். பிரம்மசமாஜம் என்ற அமைப்பு முழுமையாகவே மறையக் காரணமானார்– ராமகிருஷ்ண பரமஹம்சர்!

ராமகிருஷ்ண பரமஹம்சர்

ராமகிருஷ்ணர் பிரம்மசமாஜம் உருவாக்கிய அந்தத் துடிப்பான படித்த இளைஞர்களையே தனக்கு சீடர்களாக ஆக்கினார். அவர்களில் மாணிக்கம் விவேகானந்தர்தான். அவர் பிரம்மசமாஜத்தின் மொழியில் பேசிய வேதாந்தி. பிரம்மசமாஜம் விவேகானந்தரை உக்கிரமாக எதிர்த்தது. அதன்பிரதிநிதியான மஜும்தார் என்பவர் அமெரிக்காவில்கூட விவேகானந்தரைப்பற்றி அவதூறுகளைப்பரப்ப அரும்பாடுபட்டார் என்பது வரலாறு. அதைமீறி இந்து மரபின் ஞானமும் பண்பாடும் அதன் ஆசாரங்களிலும் நம்பிக்கைகளிலும் இல்லை என்பதை விவேகானந்தர் நிறுவினார். இந்து மதம் அதன் அடிப்படைகள் ஏதும் சிதையாமலேயே நவீன உலகுக்குரியதாக முன்னால் வந்து நிற்க முடியும் என்று காட்டினார்.

ராஜா ராம்மோகன் ராயின் காலகட்டத்தில் இந்துப் பண்பாட்டை இந்து மதத்தில் இருந்து பிரித்துக் காண்பதற்கான முயற்சிகள், அது சம்பந்தமான விவாதங்கள் பல நிகழ்ந்துள்ளன. ஒருவன் இந்து மதத்தின் எந்த ஆசாரங்களையும் பின்பற்றாத இந்துவாக இருக்க முடியுமா என்ற வினா அன்று முக்கியமாக இருந்துள்ளது. கோரா நாவலை இது சமபந்தமான விவாதத்திற்கான தொடக்கமாக வாசித்துப்பார்க்கலாம்.

அதன்பின் அந்த வினாவை நாம் ஜவகர்லால் நேருவின் எழுத்துக்களில் காண்கிறோம். என் நினைவு சரியென்றால் கலாச்சார இந்து என்ற சொல்லாட்சியையே நான் நேருவின் எழுத்துக்களில் வாசித்திருக்கிறேன்.

நேரு தன்னை நாத்திகர் என்று உணர்ந்தவர். அவரது நாத்திகமென்பது ஐரோப்பிய தாராளவாதச் சிந்தனைகளில் பின்புலம் கொண்டது. அவர் அன்று ஐரோப்பாவில் பிரபலமாக இருந்த கிறித்தவ மதமறுப்புவாதத்தை தனக்கு மிக நெருக்கமானதாக உணர்ந்தார். குறிப்பாக அவரிடம் பெர்ட்ரன்ட் ரஸ்ஸலின் பாதிப்பு அதிகம். கூடவே நேருவுக்கு ஐரோப்பிய இயற்கைவழிபாட்டு [Naturalism] மரபுகளிலும் ஈடுபாடு இருந்தது.

ஆனால் இந்தியப் பண்பாட்டின் துளியாகவே நேரு எப்போதும் தன்னை உணர்ந்தார். இந்தியப்பண்பாட்டின் தத்துவச்சிந்தனைகள், அழகியல், உணர்வுநிலைகள் ஆகியவற்றுடன் அவர் பின்னிப்பிணைந்திருந்தார். அவை அடிப்படையில் இந்துப்பாரம்பரியம் சார்ந்தவை என்றும் அவர் அறிந்திருந்தார். அவற்றை நிராகரிக்க தன்னால் முடியாது என அவர் உணர்ந்தார்.

அதன்பொருட்டு அவர் கண்டடைந்த அடையாளமே கலாச்சார இந்து என்பது. அதாவது இந்துமதம் பல்லாயிரமாண்டு காலமாக உருவாக்கிய எல்லா சாதகமான பண்பாட்டுக்கூறுகளுக்கும் தன்னை வாரிசாக வைத்துக்கொள்ளுதல். அதே சமயம் கடவுள், ஆலயவழிபாடு, ஆசாரநம்பிக்கைகள் போன்றவற்றில் இருந்து முழுமையாகவே விலகியிருத்தல் என அதை வரையறுக்கலாம்.

நேரு யுகத்தின் பல முக்கியமான சிந்தனையாளர்களும் கலைஞர்களும் தங்களை அப்படித்தான் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். க.நா.சு. தன்னை கலாச்சார ரீதியாக மட்டும் இந்து என்று சொல்வதுண்டு. நான் முதன்முதலில் க.நா.சு.வை சந்தித்த கூட்டம் விஜில் என்ற இந்து அமைப்பால் நடத்தப்பட்டது. அதில் க.நா.சு. தன்னை கலாச்சார இந்து என சொல்லிக்கொண்டதைக் கேட்டுதான் அச்சொல்லையே நான் அறிந்துகொண்டேன்.

க.நா.சு.வைப்போலவே சுந்தர ராமசாமியும் தன்னை பண்பாட்டு அடிப்படையில் மட்டுமே இந்து என முன்வைத்தவர். நானறிந்து சுந்தர ராமசாமிக்கு இறைநம்பிக்கையோ மதப்பிடிப்போ இருந்ததில்லை. பி.கெ.பாலகிருஷ்ணன் அவரது கட்டுரைநூலில் தன்னை கலாச்சார இந்து என்கிறார். இந்தியச்சூழலில் டாக்டர் சிவராம காரந்த், யு.ஆர்.அனந்தமூர்த்தி போன்ற பலரை சுட்டிக்காட்ட முடியும். இன்றும் கூட இந்த அடையாளத்தை தனக்கெனக் கொண்ட பல சிந்தனையாளர்களைக் காணலாம்.

தமிழில் இந்து என்ற சொல்லை கலாச்சாரம் சார்ந்த பொருளில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என திட்டவட்டமாக முன்வைத்து வாதிட்டவர் என ஜெயகாந்தனைச் சொல்லலாம். ‘நான் நாத்திகன், ஆனால் இந்து’ என்று அவர் மேடைகளில் முழங்கியிருக்கிறார். கலாச்சார இந்து என்ற கருத்தை ஜெயகாந்தன் வெவ்வேறு கோணங்களில் விளக்கியிருக்கிறார்.

ஜெயகாந்தன்

ஆகவே பண்பாட்டு இந்து என்ற கருத்துநிலை புதியதல்ல. குறைந்தது ஒரு நூற்றாண்டுக்கால வரலாறு கொண்டது அது. இந்திய மறுமலர்ச்சிக் காலகட்டத்தில் உருவாகி தொடர்ச்சியாக வளர்ந்து இன்றும் புழக்கத்தில் இருக்கும் ஒரு கருத்து நிலைப்பாடு அது. அதை நாம் பாவிக்கையில் எதற்காக, எந்தச் சூழலில் அதற்கான தேவை வருகிறது என்ற புரிதல் நமக்குத்தேவை.

பிரம்மசமாஜம் இந்துமதத்தை இரண்டாகப்பிரித்துக் காண்பதற்கான கட்டாயம் எப்படி ஏற்பட்டது? அன்றைய ஐரோப்பா தன் பார்வையில் இந்துமதம் என்ற ஓர் அமைப்பை உருவகித்துக்கொண்டது. அவர்கள் நோக்கில் அது பலதெய்வ வழிபாடு, உருவ வழிபாடு, சாதி தீண்டாமை உயிர்ப்பலி முதலிய சமூக ஆசாரங்கள், பண்டிகைகள் மற்றும் திருவிழாக்கள், பல்வேறு மூடநம்பிக்கைகள், பலவகையான மடங்கள், தீவிரமான பக்தி ஆகியவற்றாலான ஒரு ஒற்றை மதம்.

ஐரோப்பியர் அறிந்திருந்த மதங்கள் எல்லாமே ஒற்றைப்படையான ஒழுக்குள்ளவை, திட்டவட்டமான கட்டமைப்புள்ளவை. இந்துமதத்தையும் அவர்கள் அப்படி உருவகித்துக்கொண்டார்கள். அவர்கள் இந்துமதத்தை ஆராய ஆரம்பித்த பதினெட்டாம் நூற்றாண்டில் இந்துமதம் அதன் இயல்பான பன்மைத்தன்மை கொண்டதாக, நெகிழ்வானதாகவே இருந்தது. ஐரோப்பியர் உருவகித்துக்கொண்ட அந்த ஒற்றைப்படையான இந்துமத உருவகத்தை அவர்களிடமிருந்தே நவீனக்கல்விபெற ஆரம்பித்த இந்துக்களும் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தபோதுதான் நாம் இன்று அறியக்கூடிய இந்துமதம் உருவானது.

ஐரோப்பியர்களில் பெருவாரியானவர்களின் நோக்கில் இந்துமரபின் எல்லா கூறுகளும் ஒரே பேரமைப்பின் பகுதிகள். ஒன்றுடனொன்று இணைந்து இயங்கக்கூடியவை. அதாவது வேதாந்த தத்துவமும் உடன்கட்டை ஆசாரமும் ஒரே மதத்தின் இரு அம்சங்கள். ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை. உடன்கட்டை ஆசாரம் காட்டுமிராண்டித்தனமானது. ஆகையால் வேதாந்தமும் காட்டுமிராண்டித்தனமானதே. உடன்கட்டை போன்ற ஆசாரங்களை உருவாக்கி நிலைநாட்டுவது வேதாந்தத்தின் தத்துவமையமே. ஆகவே இந்துமதம் நிராகரிக்கப்படவேண்டும்.

இந்த ஒற்றைப்படையாக்கலை இந்து ஆசாரவாதிகள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதில் ஆச்சரியமில்லை. ஏனென்றால் அவர்களின் ஆசாரத்துக்கு இது மத அங்கீகாரத்தை அளிக்கிறது. ஆனால் இந்த உருவகத்தை இந்துமதத்தை எதிர்க்கும் நாத்திகர்களும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் புதிரானது. ஆசாரம் பேசும் இந்து பழமைவாதிகளும் நாத்திகம் பேசும் இந்துமத எதிர்ப்பாளர்களும் இந்து மதம் பற்றியும் இந்து மரபு பற்றியும் கொண்டிருக்கும் உருவகம் ஒன்றே. அது ஐரோப்பியர்களால் அவர்களுக்கு அளிக்கப்பட்டது.

இந்து பழமைவாதிகள் இந்துஞான மரபு என்பது வைதீக மரபே என வாதிடுவார்கள். அந்த வைதீகமே வேதாந்தம் என்பார்கள். வைதீக மரபின் எல்லா ஆசாரங்களுக்கும் வேதாந்தமே அடிப்படை என்பார்கள். தீண்டாமை உட்பட அனைத்து ஆசாரங்களையும் இந்துமததின் பிரிக்கமுடியாத பகுதிகள் என்பார்கள். வேதாந்தமும் அதில் அடக்கம் என்பார்கள். அதாவது இந்துமதம் என்ற அமைப்பின் உள்ளியக்கங்களை நிராகரித்து அதை தங்களுக்குச் சாதகமான ஒற்றைஅமைப்பாக முன்வைப்பார்கள். முன்னோர் சொன்ன ஒரு நெறி என இந்துமதத்தை வரையறை செய்வார்கள்.

அச்சு அசலாக அதையே இந்துமத விரோதிகளும் சொல்வார்கள். அவர்களுக்கும் வைதீக மரபே இந்துமதம். அதன் எல்லா ஆசாரங்களும் இந்துமதத்தில் இருந்து பிரிக்கமுடியாதவை. அதன் ஒருபகுதியே வேதாந்தம். அதன் ஆசாரங்களுக்கும் தத்துவங்களுக்கும் ஆன்மீகத்துக்கும் இடையே முரண்பாடுகளே இல்லை. அவை ஒன்றே! இவ்வாறு எளிமையான ஒரு எதிர்தரப்பு கிடைத்ததால்தான் நம்மூர் நாத்திகர்களால் விவாதிக்கமுடிகிறது.

ஆனால் உண்மையில் இந்து மரபு என்பது ஐரோப்பியர்களால் கட்டமைக்கப்பட்டதுபோல ஒற்றைப்படையானது அல்ல. அது ஒன்றுடன் ஒன்று மறுத்து வாதிட்டு வளர்ந்த பல்வேறு ஞானத்தரப்புகளின் பெருந்தொகை. பன்மைத்தன்மையே அதன் அடையாளம். அதில் எந்த தத்துவத்தரப்புக்கும் மைய இடம் கிடையாது. அதன் அடிப்படை ஆசாரங்களோ, நம்பிக்கைகளோ, சடங்குகளோ அல்ல. அது மறுத்தும் ஏற்றும் பிளந்தும் இணைந்தும் தன் முரணியக்கம் மூலம் முன்னகரும் ஒரு ஞானவெளி.

மார்க்ஸிய ஆய்வுமுறையை முறையாகக் கடைப்பிடித்த வெகுசிலர் இந்த இயக்கத்தைச் சரியாகவே புரிந்துகொண்டிருக்கிறார்கள். முக்கியமானவர் கெ.தாமோதரன். இ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாட் ஓர் எல்லைவரை. முரணியக்கம் என்ற கருதுகோள் அதற்கு அவர்களுக்கு உதவியிருக்கிறது. நம்மூரில் மார்க்ஸியதத்துவம் அறிந்த எவரும் இல்லை. அது இங்கே ஒரு கட்சிநம்பிக்கை மட்டுமே. இங்குள்ள மார்க்ஸியர் திராவிட இயக்கத்திடமிருந்து சித்தாந்தத்தை கற்றுக்கொள்பவர்கள் — தீப்பொறி ஆறுமுகத்திடமிருந்து குறிப்பாக.

இந்துஞானமரபு என்பது ஒட்டுமொத்தமாக அந்த விவாதக்களத்தையே சுட்டுகிறது.அதன் மிகப்பெரிய தரப்பாக இருப்பது வேதாந்தம். வேதாந்தத்தின் வளர்ச்சியடைந்த வடிவங்களே பிற்கால வேதாந்தங்களான அத்வைதம் முதலியன. அவையே இந்து தத்துவமரபின் சிகரங்கள். அவை ஆசாரங்களையோ வழிபாட்டுமுறைகளையோ அல்லது நம்பிக்கைகளையோ சார்ந்தவை அல்ல. இந்து மதத்தைச் சேர்ந்ததாக அறியப்படும் எந்த வழிபாட்டு மரபின் துணையும் இல்லாமல் நிற்க வேதாந்தத்தால் முடியும்.

விவேகானந்தர் வழியாக இந்திய நவீனச் சிந்தனைக் களத்தில் ஆணித்தரமாக இந்தக் கருத்து பதிவானதுமே ஒற்றைப்படையான இந்துமரபை உருவகித்திருந்த தரப்புகள் பின்வாங்க ஆரம்பித்தன. இந்துமதத்தை ‘சீர்திருத்தி’ மறுதொகுப்பு செய்து அதற்கு வெளியே இருந்து ஓர் ‘அறிவார்ந்த அமைப்பை’ உருவாக்க வேண்டியதில்லை என்ற கருத்து வலுப்பட்டது. அந்த அமைப்பு என்றுமே இந்துமரபுக்கு உள்ளேயே இருந்துவந்துள்ளது. இந்துமரபுக்குள் மேலும் அத்தகைய அமைப்புகளை உருவாக்குவதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன என்பது உறுதிப்பட்டது. பிரம்மசமாஜம் உதிர்ந்தழிந்தது.

விவேகானந்தரின் குரலில் உள்ள பன்மைத்தன்மைக்கு இன்னும் அழுத்ததை அளித்தது நாராயணகுருவின் இயக்கம். அதுவும் வேதாந்தத்தையே முன்வைத்தது. ஆனால் இந்து மதத்தின் தீண்டாமை உள்ளிட்ட எல்லா பழமையான ஆசாரங்களுக்கு எதிரான பெரும் சக்தியாகவே அது வேதாந்தத்தை உபயோகித்தது.

இத்தகைய பன்மைநோக்குள்ள இந்துமதத் தரப்பை எதிர்கொள்ள நம்முடைய சம்பிரதாயமான இந்து எதிர்ப்பாளர்களால் முடிவதில்லை என்பதைக் காணலாம். அவர்கள் இந்தத் தரப்பையும் ஆசாரவாதத் தரப்பாக சித்தரித்துக்கொள்ளத்தான் முழுமூச்சாக முயல்வார்கள். அதன்பின் ஆசாரவாதத்திற்கு எதிரான எல்லா தாக்குதல்களையும் அவன் மேல் சுமத்துவார்கள்.

உதாரணமாக ஒருவர் தன்னை வேதாந்தி என்றும் இந்து என்றும் சொல்கிறார். வேதாந்த நோக்கில் நின்று அவர் இந்துமதத்தின் ஒட்டுமொத்த ஆசாரவாதத்தையும், அதன் நம்பிக்கைகளையும் முழுமையாக நிராகரிக்கிறார். நம் இந்து எதிர்ப்பாளர்கள் என்ன சொல்வார்கள்? அவரை எதிர்கொள்ள அவர்களால் முடியாது. இந்து மதம் மீது அவர்கள் சொல்லும் எந்த விமர்சனமும் அவருக்குப் பொருந்தாது.

ஆகவே அவர்கள் அவரை பொய்வேடம் போடும் ஆசார இந்து என்று அவதூறு செய்வார்கள். அவர் சாதிப்பிரிவினையை, மூடநம்பிக்கைகளை, மனிதாபிமானமற்ற அனைத்தையும் முற்றாக எதிர்த்து அதற்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டிருந்தால்கூட அவரை சாதிவெறியர், மூடநம்பிக்கைகளைப் பரப்புபவர், மனிதாபிமானத்துக்கு எதிரான பழமைவாதி என்று முத்திரையிட்ட பின்பே அவரை விமர்சிப்பார்கள். அதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். நாராயணகுரு உட்பட.

இப்போது உங்கள் வினாவுக்கு வருகிறேன். நீங்கள் ஏன் பண்பாட்டு இந்து என ஓர் அடையாளத்தைத் தேடுகிறீர்கள்? விடை இதுதான். இந்து ஆசாரவாதிகளாலும் இந்து எதிர்ப்பாளர்களாலும் ஒருங்கே ஏற்கப்பட்டுள்ள ஒற்றைப்படையான இந்துமதம் என்ற உருவகத்தை நீங்களும் ஏற்றுக்கொள்கிறீர்கள். அந்த இந்துமதத்துக்குள் இருக்க வேண்டுமென்றால்  இந்துமதத்தின் எல்லா நம்பிக்கைகளையும் ஆசாரங்களையும் ஏற்றாகவேண்டும் என நீங்களும் நம்புகிறீர்கள்.

அது உங்களால் முடியாத காரியம். காரணம் உங்கள் தர்க்கபுத்தி, உங்கள் மனிதாபிமானம். ஆகவே இந்துமரபின் பண்பாட்டு அம்சங்களை மட்டும் வெளியே எடுத்து அவற்றை மட்டும் உங்களுடையதாகக் கொள்ள நினைக்கிறீர்கள். அவற்றை மட்டுமே கொண்டு உங்களுக்கான ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்ள முயல்கிறீர்கள்.

ஐரோப்பியர்களால் நம் மீது சுமத்தப்பட்ட அந்த ஒற்றைப்படையான இந்துமத அடையாளத்தை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் இந்தச் சிக்கலே எழாது. இந்துமரபு என்பது ஒரு மாபெரும் விவாதக்களம். ஒரு பண்பாட்டுவெளி. அதில் நீங்கள் எந்தத் தரப்பையும் எடுத்துக்கொள்ளலாம். எதை எடுத்தாலும் நீங்கள் இந்துவாகவே இருக்கிறீர்கள்.

முழுமுற்றான ஆசார மறுப்புக்கு, முழுமையான நாத்திகவாதத்துக்கு இந்து மரபுக்குள் இடமிருக்கிறது. அதாவது நீங்கள் இந்து மதத்துக்கு ‘வெளியே’ போய் உருவாக்கிக்கொள்ளும் அந்தப் பண்பாட்டு அடையாளம் இருக்கிறதே அதற்கும் இந்து மதத்துக்குள் இடமிருக்கிறது. அந்தப் ‘பண்பாட்டு இந்து’வாக நீங்கள் உள்ளேயே இருக்க முடியும்.

அதாவது இந்துமதத்தின் இன்றுள்ள எந்த நூல்களையும் ஏற்காமல், எந்த அமைப்புக்குள்ளும் செல்லாமல், எந்த வழிபாட்டுமுறையையும் கடைப்பிடிக்காமல், எந்தக் கடவுளையும் நம்பாமல், எந்த ஆசாரங்களையும் ஒப்புக்கொள்ளாமல்கூட நீங்கள் இந்துவாக நீடிக்கமுடியும். இந்த மாபெரும் விவாதக்களத்தில் உங்களுக்கான ஒரு தரப்பை உருவாக்கிக்கொண்டால் போதும். அதற்கு பலநூறு உதாரணங்கள் உள்ளன. மிகச்சிறந்த உதாரணம் ராமலிங்க வள்ளலார். அவர் இந்துதானே? அவர் உருவாக்கிய சோதிவழிபாடு இந்துமதத்தின் அதுவரையிலான எல்லா தரப்பையும் முழுமையாக நிராகரித்து உருவானது அல்லவா?

இறுக்கமான தீர்க்கதரிசன மதங்களுக்குள் இந்த இடம் இல்லை. பாமுக் தன்னை ஒரு பண்பாட்டு முஸ்லீம் என ஏன் சொல்ல நேர்கிறது? இஸ்லாம் என்பது திட்டவட்டமான எல்லைகள் கொண்ட ஒரு மதம். அதனுள் இருப்பவர் அல்லாவை, முகமதுவை, குரானை ஏற்றாகவேண்டும். இல்லையேல் அவர் இஸ்லாமியர் அல்ல. இல்லை என்னால் அந்த முழு விசுவாசத்தை அளிக்கமுடியாது, அதேசமயம் இஸ்லாம் கடந்த பதினைந்து நூற்றாண்டுகளில் உருவாக்கிய பண்பாட்டுமரபை என்னால் துறக்கவும் முடியாது என அவர் உணரும் நிலையில் தன்னை பண்பாட்டு முஸ்லீம் என்கிறார். அப்படி ஒரு கட்டாயம் ஓர் இந்துவுக்கு எங்கே இருக்கிறது?

இந்து என்ற அடையாளத்தை விடுங்கள். சைவத்தை மட்டுமே எடுத்துக்கொள்வோம். அதுவே ஒரு ஞானப்பரப்புதானே ஒழிய ஒருங்கிணைக்கப்பட்ட மதம் அல்ல. சைவ வழிபாட்டாளர்களிலேயே இன்று எத்தனை வகையானவர்கள் இருக்கிறார்கள்! தினம் திருவிளையாடல்புராணம் வாசித்து லிங்கபூசை செய்யும் சைவரும் உண்டு, சிவோஹம் [சிவம்அஹம் – நானே சிவன்] என உணர்ந்து தியானத்தில் அமரும் சைவரும் உண்டு இல்லையா? இருவேறு எல்லைகள்! சைவத்துக்கு ஆறு அகச்சமயங்கள் – சைவம், பாசுபதம், மாவிரதம், காளாமுகம், வாமம், வைரவம் என அறிந்திருப்பீர்கள். ஆறு சிவன்கள்!

வரலாற்று நோக்கில் சைவத்தை பொதுவாக மூன்றாக பிரிக்கலாம். ஒன்று, சைவ வழிபாட்டுமுறை. அதில் சிவலிங்கபூசை, உள்ளிட்ட பல சடங்குகள் உள்ளன. மிகத்தொன்மையானது அது. இரண்டு, சைவப்பெருமதம். கிபி நான்காம் நூற்றாண்டுவாக்கில் உருவாக ஆரம்பித்த மதம் இது. பல்வேறு தெய்வங்களை உள்ளிழுத்துக்கொண்டு சிவனின் எல்லா வடிவங்களையும் ஒன்றாகத் தொகுத்துக்கொண்டு இது வளர்ந்து வந்தது. பக்தி வழிபாட்டுமுறை இதன் மையப்போக்கு. நாம் இன்று சைவமென அறியும் பேரிலக்கியங்களும், கலைகளும், ஆலயங்களும் எல்லாம் இதன் ஆக்கங்கள்.

சைவசித்தாந்தம் காலத்தால் பிந்தியது. பத்தாம் நூற்றாண்டுவாக்கில்தான் அதன் தெளிவான வடிவங்கள் உருவாக ஆரம்பித்தன என்று சொல்லலாம். சைவசித்தாந்தத்தின் உயர்தத்துவதளம் என்பது மேலும் சில நூற்றாண்டுகள் கழித்தே உருவானது.

சைவர்களில் சைவச்சடங்குகளில் வாழ்பவர்கள் ஓர் எல்லை என்றால் தூய சித்தாந்திகள் இன்னொரு எல்லை. சைவசித்தாந்தத்தின் தூயநிலையில் ஒரு சம்பிரதாயச் சைவனின் எந்த சடங்கையும், எந்த ஆசாரத்தையும், எந்த நம்பிக்கையையும் மேற்கொள்ளாமல் நீங்கள் இருக்கமுடியும். ஆம், ‘கடவுள்’ என்ற நம்பிக்கை இல்லாமலேயே கூட நீங்கள் இருக்கமுடியும்.

ஒரு சிவபக்தருக்கு சிவன் என்றால் என்ன? பிரபஞ்சநாயகனாகிய இறைவன். உலகை ஆக்கி நடத்தி அழிப்பவன். அவனைப்பணிந்து அவனை இறைஞ்சி நல்வாழ்க்கையும் வாழ்க்கைநிறைவும் அடையலாம். ஆனால் ஒரு தூய் சைவசித்தாந்திக்கு சிவம் என்றால் என்ன? அவன் நோக்கில் பிரபஞ்சம் என்ற பேரில் அறியக்கிடைப்பது ஆற்றலின் முடிவற்ற வெளி. அதை அவன் சக்தி என்கிறான். அந்த சக்தியை செயல்தன்மை கொண்டதாக, படைப்புத்தன்மை கொண்டதாக, ஆக்கக்கூடிய பிரபஞ்ச சாரமான கருத்துநிலை ஒன்றுள்ளது. அதுவே சிவம்.

அந்த சிவத்தை அவன் வழிபட வேண்டியதில்லை. அதனிடம் அவன் இறைஞ்சவேண்டியதில்லை. அதற்கு உருவம் ஏதும் கற்பிக்கவேண்டியதில்லை. அந்த சிவத்தின் அலகிலா பெருநடனத்தை பிரபஞ்சத்திலும், பிரபஞ்சத்தின் ஒவ்வொரு துளியிலும் அவன் அறிந்துணர்ந்தால் போதும். அதுவே அவனுடைய நிறைநிலை. அவனுடைய விடுதலை. இங்கே மதநம்பிக்கை எங்கே வந்தது? இது ஒரு உயர்தத்துவ விவாதம் மட்டுமே. ஒட்டுமொத்த தரிசனம் நோக்கிச் செல்வதனால் இது ஆன்மீகம். இந்த தளத்தில் இருப்பவனும் சைவனே.

சைவனாக இருந்தால் திருநீறு பூசவேண்டும், தேவாரம் பாடவேண்டும், சிவபூசை செய்யவேண்டும் என நினைக்கிறீர்கள். அவற்றை முழுநம்பிக்கையுடன் செய்யமுடியாதென்பதனால் சைவத்தின் பண்பாட்டுக்கூறுகளை மட்டும் தக்கவைக்க நினைக்கிறீர்கள். அது சைவம் அளிக்கும் வெளியை அறியாததனால் தோன்றுவது என்பதையே சொல்லவந்தேன். அவை எதையுமே செய்யாமல் தூய தத்துவநிலையிலேயே நீங்கள் சைவனாக இருக்கமுடியும்.

சரி, சைவத்தின் இந்த தரிசனத்தை நிராகரித்து முழுமுற்றான நாத்திகக்கொள்கை நோக்கிச் சென்றால்? சைவமரபு புறச்சமயம் என வகுக்கும் லோகாதய மதத்துக்குச் சென்று சேர்கிறீர்கள். அதற்குள்ளும் பல தரப்புகள் உள்ளன.

இப்படிச் சொல்லலாம். ஒரு கோட்டை இருந்தால் நீங்கள் அதற்கு வெளியே வீடு கட்டிக்கொள்ளலாம். இது இயல்பாக உருவான ஓர் ஊர். ஊருக்கு வெளியே நீங்கள் ஒரு வீட்டைக் கட்டினால் ஊர் உங்கள் வீட்டையும் சேர்த்து பெரிதாகிறது அவ்வளவுதான்.

அதாவது இன்று நீங்களிருக்கும் நிலையில் உங்களுக்கு கலாச்சார இந்து போன்ற அடையாளங்கள் தேவை இல்லை. அப்படி உங்களை வகுத்துக்கொள்ளவேண்டிய தேவை இல்லை. உங்களுக்குச் சைவமதம் மரபாக வந்திருக்கிறது. அதன் அன்றாடவழிபாட்டுத் தலத்துடன், கடவுள் உருவகத்துடன் நீங்கள் முழுமையாக இயைய முடியவில்லை என்பதற்காக அதை விட்டு வெளிவந்து கலாச்சார இந்து என்றெல்லாம் சொல்லிக்கொள்ளவேண்டியதில்லை. அதற்குள்ளேயே அந்த அன்றாட மத-ஆசார-வழிபாட்டுத் தளங்களை மீறி நீங்கள் மேலும் மேலும் முன்னகர இடமிருக்கிறது. ஒரு சிவபக்தர் சைவசித்தாந்தி ஆவது என்பது மண்ணிலிருந்து விண்வரைக்குமான தூரத்தை கடப்பதற்குச் சமம்.

அந்த உச்ச எல்லைக்குச் சென்றும் நீங்கள் நிறைவடையவில்லை என்றால், நீங்கள் சைவமோ இந்துமதமோ அளிக்கும் எல்லா ஆன்மீக-தத்துவ விளக்கங்களையும் முழுமையாகக் கற்று நிராகரித்துவிட்டீர்கள் என்றால், நீங்கள் உங்களை நாத்திகர் என்று முழுமையாகவே உணர்கிறீர்கள் என்றால், அதேசமயம் இந்துஞானமரபுக்குள் உள்ள சார்வாகம் முதலிய நாத்திகத் தரப்புகளையும் முழுக்க நிராகரிக்கிறீர்கள் என்றால் மட்டும் நீங்கள் வெளியே செல்லலாம். கலாச்சார இந்து என்று சொல்லிக்கொள்ளலாம்.

ஆனால் ‘கலாச்சார இந்து’ என்ற சொல்லாட்சிக்கு ஒரு முக்கியமான இடமுண்டு என்றே நான் நினைக்கிறேன். இரு காரணங்கள்.

இந்தியாவில் இருந்து உருவான சமணம், பௌத்தம், சீக்கியம் போன்ற எல்லா மதங்களையும் ஒரே பண்பாட்டு வெளியைச் சேர்ந்தவையாக அணுகமுடியும். இம்மதங்களின் தொன்மங்கள், அடிப்படை நம்பிக்கைகள், குறியீடுகள் போன்றவை இந்துப்பண்பாடு என நாம் அடையாளப்படுத்தக்கூடிய ஒரு பொதுத் தொகுப்பில் இருந்து வந்தவை.

அவர்களை பௌத்தர்கள் சமணர்கள் சீக்கியர்களாக இருந்தாலும் பண்பாட்டு ரீதியாக இந்துக்கள் என்று சொல்லமுடியும். சூபி வழிபாட்டுமுறைகளையும் அப்படிச் சொல்லலாம். குணங்குடி மஸ்தான் சாகிபு அல்லது பீர்முகமது அப்பா அல்லது உமறுப்புலவரின் பாடல்களின் குறியீடுகள், தொன்மங்கள் போன்றவை மேலே சொன்ன இந்துப்பண்பாட்டுத்தொகுப்பில் இருந்து வந்தவையே.

நாராயண குரு

இங்கே இந்துப்பண்பாடு என்ற சொல்லை, பேதங்களை உருவாக்குவதாக அல்ல, பேதங்களைக் களைவதாகவே பயன்படுத்தவேண்டும். அது எவருக்கும் சொந்தமானதல்ல. எவர் கட்டுப்பாட்டிலும் உள்ளதும் அல்ல. இந்த மண்ணில் உள்ள நதிகளைப்போல மலைகளைப்போல காடுகளைப்போல இங்கே பிறந்த அனைவருக்கும் சொந்தமானது. ஜெயகாந்தன் ஒரு மேடையில் சொன்னது இது.

இரண்டாவதாக, ஒருவர் இந்துமரபின் எல்லா சிந்தனைகளுக்கும் அப்பால் முழுமையாகவே மேலைநாட்டுச் சிந்தனைகளைச் சார்ந்து தன்னை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என்றால், அதேசமயம் இந்துப் பண்பாட்டுக்கூறுகளை இழக்கவும் விரும்பவில்லை என்றால் அவர் தன்னை கலாச்சார இந்து என அடையாளம் காட்டிக்கொள்ள முடியும்.

எப்படியானாலும் அது வசதியான சொல்லே. அதிலுள்ள முக்கியமான வசதி என்னவென்றால் இந்து என்ற சொல்லுக்கு எதிராக இங்கே மதமாற்ற அமைப்புகளாலும் அவர்களின் கூலிப்படையாலும் உருவாக்கப்பட்டிருக்கும் கடுமையான வெறுப்புக்கு அது ஒரு பதிலாக அமையும். ஓரான் பாமுக் தன்னை பண்பாட்டு முஸ்லீம் என்று சொன்னால் அதை முற்போக்கானதுதான் என்பவர்கள், சிவேந்திரன் தன்னை பண்பாட்டு இந்து என்று சொல்லும்போது கொஞ்சம் யோசித்தாக வேண்டுமல்லவா? அந்த வாய்ப்பை ஏன் தவறவிடவேண்டும்! :)))

ஜெ

முந்தைய கட்டுரைகள்


உருவரு


ஆன்மீகம் கடவுள் மதம்


இந்துமதம் நாத்திகம் ஆத்திகம்


மதங்களின் தொகுப்புத்தன்மை


கடவுள்நம்பிக்கை உண்டா?

 

உருவம்

உலகெலாம்

மலரில் இருந்து மணத்துக்கு

ஒக்கலை ஏறிய உலகளந்தோன்

இருபுரிசாலை

மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் ஜூன் 20102

முந்தைய கட்டுரைநான் இந்துவா?
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 36