ஆட்டிசம், இசை

அன்புள்ள ஜெ,

ஊட்டி இலக்கிய முகாமில் இருந்து திரும்பியிருப்பீர்கள். வழக்கம் போல நண்பர்களின் சுற்றமும், இலக்கிய உரைகளும், விவாதங்களும், காலை நடைகளும், இரவுகளில் ராமச்சந்திர சர்மாவின் இசையுமாக நல்ல பொழுதுகள் அமைந்திருக்கும் என நம்புகிறேன்.

ஜெ, இத்துடன் ஒரு வீடியோ இணைப்பு தந்திருக்கிறேன் http://www.youtube.com/watch?feature=player_embedded&v=BOUR5B9TRz4#! . ஆடிஸம் என்னும் மூளை வளர்ச்சிக் குறைபாடுள்ள சுகேஷ் குட்டன் என்னும் பையனின் அபாரமான பாடும் திறன். ஆடிஸம் என்பது சமூகத்தில் பிறருடன் பழகுதல், செயல்படுதல், மொழித்திறன் போன்றவற்றில் உள்ள குறைபாடு. இந்தப்பையன் தன்னைச் சுற்றி நடக்கும் எதையும், யாரையும் அறிவதில்லை. அவன் பேசுவது அவனது தாயைத் தவிர ஒருவருக்கும் புரியாது. ஆனால் பாட்டு என்று வந்து விட்டால் அட்சர சுத்தமாக, தாளம், ஸ்ருதி தப்பாமல் மழையாகக் பொழிந்து தீர்க்கிறான். தாமிரக் கம்பி வழியாக மின்சாரம் பாய்வது போல சங்கீதம் இவனில் தடையில்லாமல் வழிந்தோடுகிறது. அப்போது இவனுக்கு இப்படி ஒரு குறைஉள்ளது என்று நம்புவதற்கே கடினமாக இருக்கும். இசை, இசையல்லாத வேறு எதுவும் இல்லாதவன். அருமையான குரலையும் தந்து, பேச்சையும், தன்னைப் பற்றிய பிரக்ஞையையும் கூட குழப்பிவிட்ட ஆண்டவன் இசையையும், பாடல் வரிகளை மட்டும் புரிந்துகொள்ள வைத்தது எதற்கோ? ஏதோ ஜன்மத்தின் சங்கீதக் கடனை அடைக்க இந்த ஒரு ஜன்மம் முழுவதும் பாடியே தீர்க்கட்டும் என்று திட்டமோ?

பிள்ளைக்கு எந்தக் குறை இருந்தாலும் அம்மாவுக்கு அதெல்லாம் தெரிவதே இல்லை. அவன் அம்மாவை வணங்காமல் இருக்க முடியவில்லை.

நேரமிருப்பின் இந்தப் பாடலை சுகேஷ் குட்டன் பாடுவதைக் கேளுங்கள். http://www.youtube.com/watch?v=5JdMeGFxZcA&feature=results_video&playnext=1&list=PLCB1AFD99C4D814A5 ஹரிமுரளீரவம் பாட்டு எவ்வளவு கடினமானது என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். நான் என்னமோ சாஸ்திரீய சங்கீதத்தின் கணக்கு வழக்குகள் மிகுந்த புத்தி பூர்வமாகச் செய்யப்படுபவை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். சுய போதமே இல்லாத குட்டன் பாடுவதைக் கேட்டால் இசை மூளைக்கு அப்பாற்பட்டு, ஆத்மாவுடன் இசைந்தது என்று சொல்லத் தோன்றுகிறது.

நன்றி,
பிரகாஷ்.

www.jyeshtan.blogspot.com

முந்தைய கட்டுரைதெலுகுமண்ணிலிருந்து..
அடுத்த கட்டுரைகுழந்தைமேதைகள்