ஊட்டிமுகாம்-பதிவுகள்

ஊட்டி முகாம் பற்றிய நண்பர்களின் கருத்துக்கள் வந்துகொண்டிருக்கின்றன. முகாமைப்பற்றி சொல்லப்பட்ட முக்கியமான கருத்தே அங்கே எப்படி இயல்பாகவும் சுதந்திரமாகவும் உணர்ந்தோம் என்பதே. பெரும்பாலான முகாம்கள் டாஸ்மாக் கடையில் சிலமணிநேரங்களைச் செலவிட்டுவிட்டு வந்ததுபோலத்தான் இருக்கும் என்றார் ஒரு நண்பர். ஆர்வத்துடன் கிளம்பிச்சென்றபின் ஏனடா வந்தோம் என நொந்துகொண்டே திரும்பும்படியாக இருக்கும் என்றார்.

சாம்ராஜ்

எங்கள் அரங்கைப்போல பெண்கள் சகஜமாக உணர்ந்ததன் இன்னொரு அரங்கைப் பார்த்ததில்லை என்று ஒரு நண்பர் கூறினார். பெரும்பாலான தமிழிலக்கியக் கூடல்களில் பெண்களுக்கு ஒரு பதற்றம் இருந்துகொண்டே இருக்கும் என்று அவர் சொன்னது ஆச்சரியமாக இருந்தது.

சு.யுவராஜன்,மலேசியா

கிட்டத்தட்ட இருபதுமணி நேரம் இலக்கியவிவாதம் நிகழ்ந்திருக்கிறது. ஆனாலும் உரையாடல்கள் திசைமாறாமல் மேலும் மேலும் ஆழமாகக் குவிந்துசெல்வனவாக இருந்ததை பலரும் குறிப்பிட்டார்கள். இலக்கியத்துக்கு வெளியே செல்லும் வெட்டி அரட்டைகள் எங்குமே நிகழவில்லை. அரங்க விவாதம் ஏராளமான வினாக்களுடன் முடிந்தமையால் அரங்குக்கு வெளியிலும் விவாதங்கள் தீவிரமாகவே தொடர்ந்தன.

ஒத்திசைவு ராமசாமி

இந்த அம்சங்களுக்கான காரணம் நாங்கள் விதித்திருந்த நிபந்தனைகள்தான் என்பதை நண்பர்கள் சுட்டிக்காட்டினார்கள். தமிழில் இலக்கியச்சந்திப்புகள் பெரும்பாலும் தோற்றுப்போனமைக்குக் காரணம் சுதந்திரமான கருத்துப்பரிமாற்றம் என்ற பேரில் அவர்கள் நிபந்தனைகள் அற்ற ஒரு வெளியை உருவாக்கியதுதான். நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகள் இல்லாத வெளி என்பது வெகுசிலர் தங்களுக்குத் தகுதியற்ற சுதந்திரத்தை எடுத்துக்கொள்வதாகவே இருக்கும். பெரும்பாலானவர்களின் சுதந்திரம் அவர்களால் பறிக்கப்படும். அதன் பெயர் கருத்துச் சுதந்திரம் அல்ல.

திருச்சி விஜயகிருஷ்ணன், எம்.கோபாலகிருஷ்ணன்

நிபந்தனைகள் எவரது கருத்தையும் கட்டுப்படுத்துவதற்காக அல்ல. அனைவருக்கும் இடம் ஏற்படுத்தித் தருவதற்காகவே. அதைப்புரிந்துகொண்டால் மிக இயல்பான ஒரு விவாதச்சூழலை எங்கும் உருவாக்கிக் கொள்ளமுடியும். உலகில் எங்குமே எந்த நிபந்தனையும் இல்லாத சந்திப்புகள் நிகழ்வதில்லை. இங்கே நாங்கள் விதிக்கும் நிபந்தனைகள் அங்கெல்லாம் இயல்பாகவே கடைப்பிடிக்கப்படும், அவ்வளவுதான்

எம்.ஏ.சுசீலா,அருணா வெங்கடாச்சலம்

எங்கள் நிபந்தனைகளில் அனைத்து அரங்குகளிலும் பங்கேற்றாகவேண்டும், மது அருந்தக்கூடாது என்பவை முக்கியமானவை. இவையிரண்டும் பிற அரங்குகளில் நிகழ்வனவற்றைக் கண்டு உருவாக்கிக் கொண்டவை. தமிழில் இலக்கியம் சார்ந்து விவாதிக்கவேமுடியாதென்ற நிலையைக் குடிகாரர்கள் உருவாக்கிவிட்டார்கள் என்பதுதான் உண்மை. இலக்கியஅரங்குகள் குடிப்பதற்கு மட்டுமே உரியவை என்ற எண்ணம் தொண்ணூறுகளில்தான் உருவாகிறது. அத்துடன் எண்பதுகள் முதல் நடந்துவந்த இலக்கியச் சந்திப்புகள் எல்லாம் சண்டையும் பூசலுமாக மாறி நின்றுவிட்டன.

சுவாமி பிரம்மானந்தா, மலேசியா

இந்த உரையாடலில் பல நுட்பமான கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன. லா.ச.ராவின் தீவிரமான வாசகரான ஒரு நண்பர் சென்ற ஐம்பது வருடங்களில் லா.ச.ராபற்றி ஒட்டுமொத்தமாக விமர்சனங்களில் பேசப்பட்டதைவிட இந்த அரங்கில் பேசப்பட்டவை மிக அதிகம் என்று சொன்னார். அழகிரிசாமியைப்பற்றிய விவாதம் ஒப்புநோக்க குறைவாக இருந்ததாகச் சொன்னார்கள் சிலர். அழகிரிசாமியை எதிர்பார்த்த அளவுக்குப் பலரும் வாசித்திருக்கவில்லை என்பதே அதற்குக் காரணம்

காந்தி டுடே சுனீல்கிருஷ்ணன், அருகே அரங்கசாமி

இத்தனை தரப்புகள் வந்தபோதும் கூட வழக்கமாக எல்லா இலக்கியக்கூடுதல்களிலும் முன்வைக்கப்படும் தேய்ந்துபோன வாதகதிகளோ, சில்லறை அரசியல் தரப்புகளோ சொல்லப்படவில்லை என்பதையும் அனைவருமே சொந்த வாசிப்பில் உதித்த ஒரு கருத்தையே சொன்னார்கள் என்பதையும் ஒரு நண்பர் சுட்டிக்காட்டினார்.

ராஜமாணிக்கம்,திருப்பூர்

விவாதங்களுக்கு எவரை அழைக்கிறோம் என்பதில்தான் அந்த நுட்பம் உள்ளது. பொதுவெளியைக் கொஞ்சம் கவனிப்பவர்களுக்கு எவர் வாசகர்கள் எவர் வெறுமே ‘சவுண்டு’ விடுபவர்கள் என்பது தெரியும். இந்தவகையான சந்திப்புகளுக்கு வந்து அலம்பு செய்வதன்மூலமே அறியப்பட முடியும் எனப் பலர் நினைத்திருந்தார்கள். அது நடைமுறையில் வெற்றியும் பெற்றது.

வெயிலான்

ஆனால் அவர்கள் மெல்ல மெல்லத் தங்கள் அராஜகம் மூலம் இலக்கியக்கூடுதல்கள் நிகழாதபடிச் செய்தார்கள். விளைவாக அவர்களுக்கான விளம்பரமும் இல்லாமலாகி அவர்களும் மறைந்தார்கள். வைரஸ், தானிருக்கும் உடலைத் தானே அழிப்பதுபோல. அத்தகைய சவுண்டப்பன்களை தவிர்ப்பதற்காகவே அழைக்கப்படாதவர்களுக்கு இடமில்லை என்ற எண்ணம் கொண்டிருக்கிறோம்

அரங்குகளில் நான் எந்தக்கட்டுரையையும் முன்வைக்கவில்லை என்பதைப்பற்றி நண்பர்கள் கேட்டார்கள். பொதுவாக நான் ஏற்கனவே எழுதியவற்றை இந்த அரங்கிலே பேசவிரும்பவில்லை. அவற்றை நண்பர்கள் வாசித்திருக்கவேண்டும் என்பதே என் எண்ணம். அரங்கில் முன்வைக்கப்பட்ட கட்டுரைகளை ஒட்டி விவாதங்களை முன்னெடுக்கும்பொருட்டு நான் என்னுடைய கருத்துக்களைச் சொன்னேன்.

கம்பராமாயண அரங்கு,அன்றுவரை மரபிலக்கியம் மீதிருந்த தடையை தகர்த்தது என்றும், அதனுள் நுழைவதற்கான வாசலைத் திறந்தது என்றும் பெரும்பாலானவர்கள் கருத்துச் சொன்னார்கள். அதேசமயம் கம்பராமாயணம் போன்றவற்றைக் கூட்டாக சேர்ந்துதான் வாசிக்கமுடியும் என்றும் எண்ணச்செய்தது என்றார்கள்.

நவீன இலக்கிய அரங்கு படைப்புகளை வாசிப்பதற்கான ஒரு பொதுவான அணுகுமுறையை வகுத்தளித்தது என்றும் படைப்புகளை வாசிக்கையில் எவற்றையெல்லாம் கவனிக்கவேண்டும் என்றும் எவற்றை படிமங்களாகக் கொள்ளலாம் என்றும் ஒரு ஆசிரியர் எழுதிய ஒரு கதையை எப்படி இன்னொரு ஆசிரியரின் இன்னொரு கதையுடன் ஒப்பிடுவது என்றும் அரங்கு சுட்டிக்காட்டியது என்றும் சொன்னார்கள்.

அதேசமயம் சிலர் அரங்கில் நடந்த விவாதங்கள் பலசமயம் தங்கள் எல்லைக்கு மேலே செல்வதாக இருந்தன என்று சொன்னார்கள். அதைத் தவிர்க்க முடியாது. இந்த அரங்கு அனைவருக்கும் புரியும்படியாக நிகழவேண்டுமென நினைத்தால் இதைத் தரமாக நடத்தமுடியாது. இதன் தரம் என்பது சரியாகப் புரியவில்லை என்று நினைப்பவர்களுக்கு ஒரு சவாலாகவே அமையவேண்டும். அவர்கள் தங்களை முன்னெடுக்க அது உதவவேண்டும்.

இருவகையான கல்விமுறைகள் இங்குள்ளன. ஒன்று நாம் பள்ளியில் அறிந்தது. இதற்கு நாம் பழகிவிட்டிருக்கிறோம். இங்கே மாணவனே முக்கியம். அவனுக்குப்புரியும் வகையில் அவனுக்குத் தேவையான வகையில் ஆசிரியர் கற்பித்தாகவேண்டும். அவனுக்காக கல்வியை மாற்றி அமைக்கவேண்டும். ஆசிரியர் அவனுடைய சம்பளம் வாங்கும் ஊழியர்.

ஆகவே அவன் தன்னுடைய தேவையை ஆசிரியர் மேல் சுமத்துவான். தனக்கு ஒரு விஷயம் புரியவில்லை என்றால், சலிப்பூட்டுகிறது என்றால் ஆசிரியர் மேல் குற்றம் சாட்டுவான்.

இந்தியக் கல்விமுறை ஒன்று உண்டு. அது குருகுலக் கல்விமுறை அதில் ஆசிரியரே முக்கியம். ஆசிரியர் முன் கல்விக்காக தாகம் கொண்டு நிற்பவன்தான் மாணவன். ஆசிரியர் அங்கே மாணவனுக்கு ஊழியம் செய்பவர் அல்ல. மாணவனை வழிகாட்டி இட்டுச்செல்பவர். மாணவனுக்கு வழங்குபவர்

அங்கே ஆசிரியர் மாணவனுக்காக எந்தச் சமரசமும் செய்தாகவேண்டியதில்லை. அவர் தன்னுடைய தேடலைத் தொடரலாம். தன் பாதையில் தன்னுடன் வர அவர் மாணவர்களை அனுமதிக்கிறார், அவ்வளவுதான்.

அது மாணவனுக்கு விடப்படும் ஒரு சவால். அவனுக்குச் சிரமமாக இருக்கும். அவன் தன்னைத் தகுதிப்படுத்திக்கொண்டு, தன்னுடைய முழு ஆற்றலையும் திரட்டிக்கொண்டு ஆசிரியனுடன் ஓடவேண்டும். அவரை அடையவேண்டும். முடிந்தால் தாண்டிச்செல்லவேண்டும்.

நாம் முதல்வகைக் கல்விக்கே பழகிவிட்டிருக்கிறோம். ஆகவேதான் நமக்கு சரியாகப் புரியாத ஒன்றை ’புரியவில்லை’ என்று விமர்சிக்கிறோம். அது ‘எனக்குப்புரியவில்லை’ என்ற சுய அறிதலாகவே நம்மிடம் இருக்கவேண்டும். ‘ஆம் இதை நான் புரிந்துகொள்வேன்’ என்ற அறைகூவலாக ஆகவேண்டும்

இந்த அமர்வில் பல்வேறு கோணங்களில் சிந்திக்கக்கூடிய பல்வேறு வழிகளில் பயணிக்கக்கூடிய பல முன்னோடிகள், அறிஞர்கள் இருந்தனர். மரபிலக்கியத்தைப்பொறுத்தவரை நாஞ்சில்நாடனின் வழி ஒன்று என்றால் ஜடாயுவின் வழி இன்னொன்று.

நாஞ்சில்நாடனின் வழி நவீன இலக்கியத்தின் வழி. கவிதையை வாழ்க்கையுடன் நேரடியாக தொடர்புறுத்தி வாசிப்பது, உணர்ச்சிகரமாக அணுகுவது அது.

ஜடாயுவின் வழி நம் சூழலில் இன்று மிக அருகி வரக்கூடிய மரபான வழி. அது நுண்ணிய தருணங்களை மட்டுமே கருத்தில் கொள்கிறது. வலைபோல நூல்களை ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்படுத்திக்கொள்கிறது. உ.வே.சா, அனந்தராமய்யர் போன்றவர்களின் உரைகளைக் கண்டால் ஒன்று தெரியும். அவர்கள் ஒரு வரியில் இருந்து நூறு வரிகளைத் தொட்டு ஒரு பெரிய வலையாக உரையைப் பின்னிச்செல்கிறார்கள்.சொல்லாராய்ச்சியும் நூலாராய்ச்சியும்தான் அதன் வழி. வாழ்க்கை அனுபவங்களை அதனுடன் கலப்பதே இல்லை. உணர்ச்சிகரம் அதில் இருப்பதில்லை. உலகமெங்கும் இருக்கும் நோக்கு இது. நம் முன்னோடிகள் எல்லாம் இதன் வழி வந்தவர்களே.

ரீங்கா ஆனந்த் உன்னத்

அறிவு நம்மை நோக்கி வராது, நாம் அதைநோக்கிச் செல்லவேண்டும். அதற்கான வாய்ப்புகளை அளிப்பதற்கே இந்த சபை. இந்தசபையில் நான்குநாட்களில் பேசப்பட்டவற்றை ஒரு நல்ல வாச்கான் கூட எந்த நூலிலும் கேட்டிருக்கமுடியாது. பலதளங்களில் பல கோணங்களில் விவாதம் விரிந்திருக்கிறது. அவற்றில் பாதியைத்தான் மிகச்சிறந்த முறையில் கவனித்தவர்கூட பெற்றிருப்பார். மிச்சத்தையும் புரிந்துகொள்ளமுயல்வதே வழி.

நவீன இலக்கியத்தை, கலைகளை அணுகும்போது முதலில் புரியவில்லை என்ற திகைப்பு உருவாகும். ராமச்சந்திர ஷர்மா பாடக்கேட்டபோதும் அதே திகைப்பு வந்ததாக சிலர் சொன்னார்கள். அதைவெல்ல ஒரே வழி தொடர்ச்சியாகத் தொடர்பில் இருத்தல்தான். கவனித்தல்தான். இந்த அரங்கின் நோக்கம் அத்தகைய தீவிரமான கவனத்தை உருவாக்குவதே.

[புகைப்படங்கள் சிவாத்மா]

முந்தைய கட்டுரைநாஞ்சில் அமெரிக்காவில்
அடுத்த கட்டுரைபி.ஏ.கிருஷ்ணன் லண்டனில்- கிரிதரன் ராஜகோபாலன்