பி.ஏ.கிருஷ்ணன் லண்டனில்- கிரிதரன் ராஜகோபாலன்

பி.ஏ.கிருஷ்ணன்

எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணனுடன் வார இறுதி (25-05-2012) இனிமையாகக் கழிந்தது. கேஷவ், பிரபு, சிவா என நாங்கள் ஒரு குழுவாக பி.ஏ.கிருஷ்ணனை ஞாயிறு காலை அவர் தங்கியிருந்த Indian YMCA ஹோட்டலில் சந்தித்தோம். அவரது துணைவியார் ரேவதி கிருஷ்ணனும் வந்திருந்தார்கள்.

ஞாயிறு மாலை லண்டன் தமிழ்ச் சங்கம் பத்மனாப ஐயர், நா.கண்ணன் தலைமையில் பி.ஏ.கிருஷ்ணனுக்குப் பாராட்டு விழா ஏற்பாடு செய்திருந்தார்கள். அதுவரை எங்களுடன் லண்டன் சுற்றிப்பார்ப்பதாகத் திட்டம். பல முறை லண்டன் வந்திருப்பதாகவும் தனக்கு லண்டன் ஓரளவு தெரியும் என்றும் போனில் அவர் சொன்னதை மிகவும் லேசாக எடுத்துக்கொண்டேன். டிராஃபால்கர் சதுக்கத்தில் இருந்த ஒவ்வொரு கற்சிலையைப் பற்றியும், குதிரை மேல் உட்கார்ந்திருந்த ராணுவ தளபதி முதல் சோல்ஜர் வரை அனைவரது வரலாறும் அவருக்கு அத்துப்படியாக இருந்தது. எங்களுக்கு அங்கிருந்த ஒவ்வொன்றையும் மிக உற்சாகமாக அறிமுகப்படுத்தினார்.

நேஷனல் கேலரிக்குச் சென்ற போது அங்கிருந்த ஓவியங்களைப் பற்றியும் விரிவாகப் பேசினார். அவர் ஒவ்வொரு அறையாகக் குழந்தையின் குதூகலத்தோடு சென்றதோடு மட்டுமல்லாது, தூரத்திலிருந்து ஓவியத்தைப் பார்த்ததும் யார் வரைந்தது என்ன பின்னணி என்ன தனித்துவம் என விளக்கத்தொடங்கிவிட்டார். பிறகு இதுவே எங்களுக்கு ஒரு விளையாட்டாக மாறியது. இப்படியாக மாறி மாறி அலைந்து கொஞ்சம் உடல் தளர்ந்தபின் நாங்கள் நால்வரும் மெல்லப் பின் தொடர்ந்து அவர் ஒவ்வொரு அறையாகக் குடுகுடுவெனச் சென்றுவருவதைப் பார்க்கத்தொடங்கினோம் :)

இந்தியக் கலைகள், இந்திய ஓவியத்தின் தேக்கம், அரசியல், கிரிக்கெட் வர்ணனையாளர்கள், ஐரோப்பிய சமூகம், மார்க்ஸிசம், கம்பன் என அவரது பேச்சு விஸ்தாரமாக விரிந்துகொண்டே சென்றது. கிரிக்கெட் வர்ணனையாளர்கள் பற்றியும் அவர்களது பாணியையும் மிக ஹாஸ்யமாகப் பேசினார் என பிரபு தெரிவித்தார். காந்தியம், தமிழ் இலக்கியம், தில்லியில் அவரது இலக்கிய நண்பர்கள், ரகுமான் -ராஜா (எங்கு போனாலும் இது விடாது போலிருக்கு. தகவலுக்காக, இந்திய இசையில் பதினாறு அடி பாய்ந்து இசையின் எல்லையை விரிவாக்கியவர் என ரகுமானைக் குறிப்பிட்டார்) என பலதும் பேசினார்.

பி. ஏ. கிருஷ்ணன், பத்மநாப அய்யர்

அவரது நாவல்கள் பற்றிய பார்வையை நாங்கள் அவருடன் பகிர்ந்து கொண்டோம். புலிநகக் கொன்றை, கலங்கிய நதி நாவல்களில் எங்களை பாதித்த சில பகுதிகளை அவருக்குச் சொன்னோம். கலங்கிய நதியில் வரும் ‘nut protocol’உண்மையில்லையென்றாலும் அது மாதிரி beauro-crazy தான் எனக் குறிப்பிட்டார்.

ஒரு முக்கியமான கேள்வி என ரொம்ப யோசித்துப் பல நாட்கள் சிந்தித்து கேட்டது – கவிதை, கதை, கட்டுரை, வசவு கட்டுரை, நாவல் எனும் தமிழ் எழுத்தாளர்களின் பரிணாமப் பாதையைத் தவிர்த்து ஒரு நாவலாசிரியராக நேரடியாகக் களம் இறங்கியது எப்படி? அவரது நாவல்களில் தெரியும் நுண்ணிய மற்றும் விரிவான கோணங்களைப் பார்க்கும்போது சிறுகதைக்கான சிறு அசைவுகளும் வந்திருப்பதாகத் தோன்றியதில் எழுந்த கேள்வி.அது வந்து என ஒரு பீடிகையோடு ஆரம்பித்தவர், நாவல் தான் 360 டிகிரி பார்வையைத் தரும் எனவும் அதுவே அவருக்கு சவுகரியமான களம் என்றும் குறிப்பிட்டதோடு, அவரது சிறுகதைகளை அனுப்புவதாகவும் சொல்லி சுருக்கமாக முடித்துக் கொண்டார் :)

ஜெமோவின் புனைவு தனக்கு மிகவும் பிடித்த ஒன்று என பி.ஏ.கிருஷ்ணனின் மனைவி கூறினார். பின்னர் தில்லி இலக்கிய நண்பர்களான வெங்கட சாமினாதன், இ.பா பற்றியும் சுந்தர ராமசாமியுடன் தனக்கிருந்த நட்பு பற்றியும் தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். படைப்புகளைப் படிப்பதுடன் வேலை முடிந்தது என்றும் எழுத்தாளர்களைச் சந்திப்பது தனக்கு அத்தனை உவப்பானது அல்ல எனச் சொன்ன அவர், தான் சந்திக்க ஆசைப்பட்டுப் போய்ப் பார்த்தது தி.ஜாவை என்று குறிப்பிட்டார்.

மாலை நடந்த லண்டன் தமிழ்ச் சங்க விழா அவரைப் போல எங்களுக்கும் புதிய அனுபவம். முதல் முறையாக லண்டன் தமிழ்ச் சங்கத்துக்குச் செல்கிறோம். கேஷவ் வசிக்கும் கோவண்ட்ரியில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருப்பதாகவும், முதல்,இடை,கடை என அடித்துக்கொள்ளாமல் செவ்வனே நடப்பதாகவும் தெரிவித்தார். லண்டன் தமிழ்ச் சங்கத்தில் தீவிரமாக ஈடுபடும் பத்மனாப ஐயர், நா.கண்ணன் அவர்களை முதல் முறை சந்தித்தது மிக இனிமையான அனுபவமாக இருந்தது. மென்மையாகக் கையைப் பிடித்துக்கொண்டே பேசிய பத்மனாப ஐயர், நா.கண்ணன் போன்றோர் நாங்கள் புதியவர்கள் எனப்பாராமல் நெருங்கிய நண்பர்கள் போல மிக இயல்பாகப் பேசினர்.

பத்மனாப ஐயர், ‘பி.ஏ.கிருஷ்ணன் – வாழ்வும் எழுத்தும்’ என சிறு நூலை வெளியிட்டார். அதில் ஜெமோ எழுதிய கலங்கிய நதி விமர்சனம் கலங்கலின் விதிகள், சொல்வனம் இதழில் நண்பர் சேதுபதி அருணாசலம் எழுதிய விமர்சனம் மற்றும் பி.ஏ.கிருஷ்ணனின் நேர்காணல், இரா.முருகன் எழுதிய கலங்கிய நதியின் விமர்சனம், எனது வலைத்தளத்தில் எழுதியிருந்த புலிநகக்கொன்றை விமர்சனம் (இன்ப அதிர்ச்சி) பதிவு பெற்றிருந்தது.

நிகழ்ச்சியில் நா.கண்ணன் அவர்கள் புலிநகக் கொன்றை பற்றிய சிறப்பான பார்வையை முன்வைத்தார். மஹாபாரதத்தை நினைவுபடுத்தியதாகவும், மீண்டும் மீண்டும் இறப்பும் அங்கதமும் நாவலில் வெளிப்பட்டதாகவும் தெரிவித்தார்.

பின்னர் பேசிய, மு.நித்தியானந்தம் கலங்கிய நதி இந்திய அரசியலமைப்பு பற்றிய துல்லியமான கணிப்பாக இருந்ததாகத் தனது சொந்த அனுபவங்கள் சேர்த்து சொன்னார். ஒட்டுமொத்தமாக இந்திய அரசாங்க அதிகாரிகளின் மெத்தனமும் முட்டாள்தனமும் எப்படித் தன்னை அலைக்கழிய வைத்தது என நொந்துகொண்டார். இது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும், பி.ஏ.கிருஷ்ணன் பேசும்போது, இந்திய அதிகாரிகள் மிக புத்திசாலிகள் என்றும், உங்களை ட்விஸ்ட் செய்ய அப்படி சம்பந்தமில்லாமல் விளையாடியிருப்பார்கள் எனவும் பதில் தந்தார்.

‘உண்மையைக் கூறியதற்காக உலகம் என்னைப் பார்த்து சிரிக்கலாம், பரவாயில்லை உண்மை எனது நண்பன்’ எனப் பொருள்வடும்படியாக எழுதிய கலங்கிய நதியின் ஊழல் இன்றும் அரசு வழக்கில் நிலுவையில் உள்ளதாகக் குறிப்பிட்ட பி.ஏ.கிருஷ்ணன், அரசு அதிகாரியாக அஸ்ஸாம் மாநிலத்தில் நடந்த கடத்தல் சம்பவத்தில் டேபிள் பேரம் செய்யப் போன கதையை விவரித்தார். தனது ஆங்கில நாவலான The Muddy River நன்றாக விற்பனையாவதாகவும், அதன் மூலம் இந்த ஊழல் ஊடகங்களால் கவனிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். தமிழ் நாவலை ‘இழந்த தங்கள் அடையாளங்களை தேடும் ஈழத் தமிழர்களுக்காக’ என அர்ப்பணித்தவர், ஆங்கில நாவலை உல்ஃபா தீவிரவாதிகளால் கடத்திக் கொல்லப்பட்ட காந்திய சேவகர் சஞ்சய் கோஷுக்கு சமர்ப்பித்திருக்கிறார்.

மிகவும் தெளிவான அரசியல் உடையவை என அவரது நாவல்களைப் பற்றிக் குறிப்பிட்டபின் கலங்கிய நதியின் முடிவிலிருந்து சில பத்திகளைப் படித்துக் காட்டினார். துல்லியமான அரசியல் பிரக்ஞை உடைய அவரது கதாபாத்திரங்கள் தங்களது எல்லையைத் தாண்டி எப்படிப் புதிய நம்பிக்கைகளைக் கைப் பற்றுகிறார்கள் என்றும், ரெண்டு நாவல்களில் இருந்த முடிவைப் பற்றியும் பேசினார்.

முதலில் வரலாறு அவலமாகப் பார்க்கப்படும், சில காலத்திலேயே அது கேலி செய்யப்படும் என மார்க்ஸின் கூற்றுப்படி நமது சிந்தாந்தங்கள் மாறும் எனவும், இன்றைய காலகட்டத்துக்கு மற்ற எதை விடவும் காந்தியம் மிகவும் தேவையான ஒன்று எனவும் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் அதுவும் தேவையில்லாமல் ஆகலாம் – அதுதான் வரலாற்றின் இயல்பு எனக் கூறினார்.

சாப்பிடும்போது ஒரு புதிய ஜெமோ வாசகியை கேஷவ் சந்தித்தார். காடு நாவலை இரு முறை படித்துவிட்டதாகவும், அவ்வப்போது புரட்டி வாசிப்பதாகவும் தெரிவித்தார். அந்த மேஜையில் இருந்தவர்களிடம் கேஷவ் நிறைய பேசிக்கொண்டிருந்தார். இங்கு எழுதுவார் என நினைக்கிறேன். அவரது எதிரில் இருந்த ஒரு இலங்கைத் தமிழ் இளைஞர் – ‘காடு நாவலா, அது எல்லா இளைஞர்களுக்கும் பிடிக்கும்தானே. ஒரு தடவையில் கீழே வைக்கயியலாது’ எனக் குறிப்பிட்டார்.

பின்னர் நா.கண்ணனுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். மின் தமிழில் அவரது செயல்பாடுகள் குறித்து மிக விரிவாகப் பேசினார். பாரதி கவிதைகள், விஷ்ணுபுரம் எனப் பல விஷயங்களைத் தொட்டுப் பேசினார்.

இந்த வார மத்தியில் அமெரிக்கா கிளம்ப இருக்கும் பி.ஏ.கிருஷ்ணனை மீண்டும் நாளை சந்திக்கத் திட்டம் போட்டுவிட்டு அவரவர் வீடு திரும்பினோம்.

மொத்தத்தில் மிக இனிமையான நிறைவான சந்திப்பாக இது அமைந்தது. அவரது திட்டத்தைக் குழுமத்தில் பகிர்ந்த ஜெமோவுக்கு நன்றிகள் பல.


விழா புகைப்படங்கள்

நன்றி

முந்தைய கட்டுரைஊட்டிமுகாம்-பதிவுகள்
அடுத்த கட்டுரைஊட்டி காவிய முகாம்-எம்.ஏ.சுசீலா