மாலையில் ஜடாயு லா.ச.ராமாமிருதம் பற்றிப் பேசினார். லா.ச.ரா.வின் சிறப்பியல்பு என்பது அவர் உருவாக்கும் அகவயமான நடை. அது பலகாலமாக தமிழ்வாசகர்களை போதையாக கட்டிப்போட்டிருக்கிறது. அந்த நடை நனவோடைமுறை என்று திறனாய்வாளர்கள் சிலரால் சொல்லப்பட்டிருந்தாலும் அதை லா.ச.ரா.வுக்கே உரிய அந்தரங்கமான ஒரு மொழி என்று சொல்வதே சரியாக இருக்கும் என்றார் ஜடாயு. அவரது மந்திர உச்சாடனம் போன்றது என்றார்.
லா.ச.ரா.வின் சிறப்பியல்பாக ஜடாயு சுட்டிக்காட்டியது அவரது எழுத்துக்களில் உள்ள தீவிரமான ஆன்மீகத்தேடலை. பெண்ணை அழகாகவும் அழகை அம்பாளாகவும் உருவகித்துக்கொண்டு தீவிரமான ஆன்மீக அனுபவம் ஒன்றை அடையும் லா.ச.ரா. அவ்வனுபவத்தை மொழியை உச்சாடனமாக ஆக்குவதன்மூலம் வெளிப்படுத்த முயல்கிறார். வாசகனுக்கு அந்த மொழி தேர்ந்த இசைகேட்கும் அனுபவமாக அமைகிறது. அவனையும் அந்த மனஎழுச்சியை அடையச்செய்கிறது.
லா.ச.ரா.வின் குறைபாடாகச் சொல்லவேண்டுமென்றால் அவரது புனைவுலகில் புறக்காட்சியே இல்லை என்பதைத்தான் சுட்டிக்காட்டவேண்டும். மொத்தக்கதையுலகும் குடும்பம் என்ற எல்லைக்குள்ளேயே நிகழ்ந்து முடிகிறது. சமகால அரசியலையோ சமூகச்சூழலையோ காணமுடியவில்லை. அதற்குக் காரணம் லா.ச.ரா.வின் எழுத்து அவரது ஆன்மீகமான உச்சநிலையை தொடுவதற்காக மட்டுமே எழுதப்பட்டிருக்கிறது என்பதுதான். லா.ச.ரா.வின் எழுத்து ஒருவகை தொழில்நுட்பம் மட்டுமே என்றும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது என்றார் ஜடாயு.
தொடர்ந்து விவாதம் நிகழ்ந்தது. மொத்த விவாதத்திற்கும் மையமாக அமைந்த வினா என்பது லா.ச.ரா.வின் உன்னதமாக்கல் [sublimation] பற்றியதே. என் கருத்துக்களை நான் தொகுத்துச் சொன்னேன். பெண் என்பதை ஒரு சக உயிராக லா.ச.ரா. அணுகவில்லை. அழகு என்ற கோணம் மட்டுமே அவரிடம் உள்ளது. அந்த அழகனுபவத்தை உன்னதப்படுத்தி ஒரு உச்சகட்ட பிரபஞ்ச அனுபவமாக ஆக்க அவர் முனைகிறார். அவரது தலைப்புகளே கூட அத்தகையவை. தரிசனி, ஜனனி போன்ற தலைப்புகளே அவர் உத்தேசிப்பதென்ன என்று காட்டிவிடும்.
இந்த உன்னதமாக்கலை அதன் சரியான பொருளில் புரிந்துகொள்ளாமல் லா.ச.ரா.வை அணுகவே முடியாது. லா.ச.ரா. கதைகளின் சாரமாக உள்ளது காமம். அந்தக்காமத்தை மரபு அவருக்கு அளித்த படிமங்களைக்கொண்டு அவர் நுண்மையாக்குகிறார், மேலும் மேலும் விரிவாக்குகிறார். ஒரு பெண்ணுடலை கோடுகளாக ஆக்கி கோடுகளை ஜியோமிதிவடிவமாக ஆக்கி அந்த ஜியோமிதி வடிவங்களைக்கொண்டே அழகனுபவத்தை அடைய முயல்வது போன்றது இது. அந்நிலையில் பிரபஞ்சப்பேரழகையே ஜியோமிதிவடிவங்களாக அறியும் ஓர் மேல்நிலை வாய்க்கிறது. உன்னதமாக்கல் என்பது இதுவே.
அவரது புனைவு ஒருபோதும் ஒரு தொழில்நுட்பம் அல்ல. அது தொழில்நுட்பம் என்றால் அதை அவர் எழுத எழுத தேர்ச்சி பெற்று ஒவ்வொருமுறையும் சாதித்திருக்கவேண்டும். ஆனால் அது நிகழவில்லை. அவர் எழுபதுகளில் எழுதிய உச்சகட்ட எழுச்சி கொண்ட கதைகளை பின்னால் எழுதமுடிந்ததில்லை. தொழில்நுட்பம் என்றால் சுஜாதாவின் எழுத்தே. அதை அவர் ஒரு தேர்ச்சியாக அடைந்து ஒவ்வொருமுறையும் நிகழ்த்திக்காட்டுகிறார். மாறாக லா.ச.ரா. அகஇருளில் மொழி என்னும் கையால் துழாவுகிறார். அபூர்வமாகவே அவருக்கும் ஏதாவது தட்டுப்படுகிறது, அவை அற்புதமான ஆக்கங்கள். சிக்காதபோது மொழியின் துழாவலாகவே கதை நின்றுவிடுகிறது. இவ்வகை கதைகளுக்கு தற்செயல்வெற்றியே உள்ளது. வெற்றியின் விகிதமும் குறைவு. ஆகவே லா.ச.ரா.வுக்கு வேறு வழி இல்லை.
நாஞ்சில்நாடன் ஒவ்வொருபுனைவையும் அன்றாட வாழ்க்கையின் யதார்த்தத்தில் வைத்தே பார்க்கக்கூடியவராக இருந்தார். லா.ச.ரா.வின் கலைக்குள் இருப்பது அவரது காமம் மட்டுமே என்று அவர் சொன்னார். அதை மறைக்கவே அவர் மொழியைக்கொண்டு ஒரு மாயத்தை உருவாக்குகிறார். அந்த மாயை உருவாக்கும் அழகுதான் அவரது சிறப்பு. அவரை அற்புதமான மொழியை உருவாக்கியவர் என்ற அளவிலேயே தான் மதிப்பதாக நாஞ்சில் சொன்னார்.
சுரேஷ், க.மோகனரங்கன் போன்றவர்கள் தொடர்ந்து கருத்துச் சொன்னார்கள். லா.ச.ரா.வின் ஆக்கங்களுக்கும் பிறபடைப்பாளிகளின் படைப்புகளுக்குமான உறவு விரிவாகப்பேசப்பட்டது. லா.ச.ரா.வின் அபிதாவுக்கும் விளாடிமிர் நபக்கோவின் லோலிதாவுக்குமான ஒப்புமை, அவரது மொழிக்கு ஜாய்ஸின் நனவோடை மொழியுடன் உள்ள உறவு ஆகியவை விரிவாக விவாதிக்கப்பட்டன.
லோலிதாவுடன் அபிதாவை ஒப்பிட்டு எழுதியவர் பிரமிள் என்றார் மோகனரங்கன். உலக இலக்கியத்தில் லோலிதாவின் கரு – முதியவனுக்கு இளம்பெண்ணில் எழும் காதல் – மீளமீள பேசப்பட்ட ஒன்றே. அந்தக் கருவைத்தவிர லோலிதாவுக்கும் அபிதாவுக்கும் பெரிதாக ஒப்புமை இல்லை என்றேன். லோலிதா காமத்தின் தீவிரத்தைச் சொல்ல முயலும் ஆக்கம். மிகக்கச்சிதமாகச் சொல்லமுயலும் மொழி கொண்டது. நேர்மாறாக காமத்தை இன்னொன்றாக ஆக்கிக்கொள்ள முயல்வது அபிதா. மொழி இதில் சொல்வதற்கல்ல மறைக்கவே முயல்கிறது.
ஜாய்ஸின் மொழி அடிப்படையில் விளையாட்டுத்தன்மையும் பித்துத்தன்மையும் கொண்டது. மனம் மொழியில் திளைப்பதை சொல்லிவிடமுயலும் நடை அது. லா.ச.ரா.வின் நடை மனதின் ஓட்டத்தைச் சொல்ல முயல்வதில்லை. சமத்காரமான உரையாடல்கள் மற்றும் உரையாடல்தன்மை கொண்ட கதைசொல்லலுக்கு நடுவே ஒரு குறிப்பிட்ட மன எழுச்சியை மட்டும் உரைநடையின் இலக்கணத்தை உடைத்துக்கொண்டு சொல்லமுயல்கிறார் லா.ச.ரா. என்றேன்.
பொதுவாக விவாதங்களில் நான்கு தரப்புகள் ஒலித்தன எனலாம். கட்டுரையாசிரியரின் தரப்பு ஒன்று. நாஞ்சில்நாடன் எப்போதுமே மிக உலகியல்சார்ந்த நடைமுறைசார்ந்த ஓர் அணுகுமுறையை முன்வைத்து பேசினார். சுரேஷ் நூல்களின் வழியாகவே நகரும் ஒரு பார்வையை முன்வைத்தார். ஜடாயு இந்தியமரபார்ந்த நீட்சியை அளவுகோலாகக் கொண்டு படைப்புகளை அணுகினார். இந்த முரண்பாடு ஒவ்வொரு கருத்தையும் நான்கு வெவ்வேறு கோணங்களில் பார்க்கச்செய்து ஒரு விவாதச்சூழலை உருவாக்கியது.
அன்றிரவும் இரவு பன்னிரண்டு மணிவரை இசையும் சிரிப்புமாகச் சென்றது. காலையில் ஒரு நீண்ட நடைப்பயணம். கடைசி அமர்வில் க.மோகனரங்கன் தி.ஜானகிராமனின் மோகமுள் பற்றிப் பேசினார். மோகமுள் தன்னுடைய இளமைப்பருவத்தில் தன்னை மிகவும் கவர்ந்த நாவலாக இருந்தது என்ற மோகனரங்கன் சமீபத்தில் அந்நாவலை மீண்டும் வாசித்தபோது அந்த இளமைப்பருவ வேகங்கள் இல்லாதபோதும் அந்நாவல் வேறு ஒரு கோணத்தில் தன்னை கவர்ந்ததாகச் சொன்னார்.
மோகமுள்ளை ஒரு கிளாஸிக் என்று சொல்லலாம். ஒரு படைப்பு கிளாஸிக் என்றால் அது மறுவாசிப்பில் பிடித்திருக்க வேண்டும். தலைமுறைகளைக் கவரவேண்டும். அவ்விரு அம்சங்களும் மோகமுள் நாவலுக்கு உள்ளன என்றார் மோகனரங்கன். மோகமுள் நாவலின் நடையும் சித்தரிப்பும் தளர்வானது. ஆனால் மிக சகஜமான ஓர் ஓட்டம் அதற்கு உள்ளது. அந்நாவலின் தொடக்கம் மிக முக்கியமானது. கும்பகோணத்தின் பௌராணிகச் சிறப்பைச் சொன்ன அதே வேகத்தில் கும்பகோணத்தின் புழுதியையும் சாக்கடையையும் சொல்கிறது. அந்தப்புழுதி ஒரு அடையாளம். ஜானகிராமன் சொல்வது கும்பகோணத்தின் புழுதியைத்தான்.
ஜானகிராமனின் நாவல் பாபு கொண்ட மோகத்தைப்பற்றிப் பேசுகிறது. அந்த மோகம் பாபுவின் கண்வழியாக மட்டுமே சொல்லப்படுகிறது. பாபுவுக்கு யமுனா புரிந்துகொள்ளமுடியாதவளாக இருக்கிறாள். ஆகவே நாவல்முழுக்க அவளுடைய மனம் என்ன என்பது மர்மமாகவே ஓடுகிறது. உரையாடல்கள் மூலம் ஊகிக்கக்கூடியதாக இருக்கிறது அவளுடைய ஆளுமை. இந்த மர்மமே யமுனாவை வசீகரம் மிக்க கதாபாத்திரமாக ஆக்குகிறது என்றார்.
ஜானகிராமனின் மொழியில் உரையாடல்கள் மிகச்சுவாரசியமாக வந்துள்ளன. கும்பகோணத்தில் முந்தைய ஐம்பதாண்டில் வாழ்ந்த மனிதர்களின் குரல்கள் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. சிறு சிறு கதாபாத்திரங்கள் மிகத்துல்லியமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளமையே இந்நாவலின் அழகை உருவாக்குகிறது என்ற மோகனரங்கன், ஆனால் பாபுவின் அம்மா மட்டும் முற்றிலும் சமையலறை இருட்டுக்குள்ளேயே நின்றுவிடுகிறாள் என்றார்.
ஜானகிராமன் மோகமுள்ளில் பாபுவின் மோகத்தை மட்டுமே நுட்பமாகப் பின் தொடர்கிறார். அந்த அலைபாய்தலைச் சொல்வதற்கான ஊடகமாக இசையைக் கையாள்கிறார். மற்றபடி அவரது பார்வை புறவாழ்க்கையை நோக்கி விரியவேயில்லை. இந்த அம்சம் அவரது நாவல்களில் எல்லாம் இருக்கிறது. அவை காமம் சார்ந்த பிரச்சினைகளையே மையப்படுத்துகின்றன. ஆனால் இந்த ஜானகிராமனை நாம் அவரது சிறுகதைகளில் காணமுடிவதில்லை. அவற்றில் உள்ள ஜானகிராமன் வாழ்க்கையின் வேறுபட்ட பலதளங்களை நுட்பமாகத் தொட்டுக்காட்டக்கூடியவராக இருக்கிறார் என்றார் மோகனரங்கன்.
நான் ஜானகிராமனையும் லா.ச.ராமாமிருதத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் லா.ச.ரா. பெண்ணை வெறும் அழகுப்பதுமையாக மட்டுமே பார்க்கிறார் என்றும் ஜானகிராமன் அவளுடைய ஆளுமையை எப்போதுமே சித்தரிக்கிறார் என்றும் சொன்னேன். லா.ச.ரா. அவரது காமத்தை உன்னதமாக்க மொழியை ஆள்கிறார். தி.ஜானகிராமன் மோகத்தின் உணர்ச்சிகரத்தை இசையால் சித்தரிக்க மட்டுமே முயல்கிறார். அவரது ஆக்கங்களின் உன்னத தளம் என்பது அந்த இசைச்சித்தரிப்பு மட்டுமே என்றேன்.
ராமசந்திர ஷர்மா அவருக்குப் பிடித்தமான நாவல் என்று மோகமுள்ளைச் சொன்னார். அதிலுள்ள இசை பற்றிய சித்தரிப்புகள் ஓர் இசை ரசிகனாக அவருக்கு மிகவும் பிடித்திருந்ததாகச் சொன்னார். அவை இசையனுபவத்தை மொழிவழியாக அளிக்க முயல்கின்றன, இசையின் நுட்பங்களை நோக்கிச் செல்லாமல் அதை சாதிக்கின்றன என்றார்.
மோகமுள் பற்றிய தங்கள் மனப்பதிவுகளை பலரும் பகிர்ந்துகொண்டார்கள். ராமசாமி தன்னுடைய இளமைக்காலத்தில் மோகமுள் எப்படி தன்னைப்போன்றவர்களை அலைக்கழித்தது என்று சொன்னார். தமிழிலக்கியத்தில் நுழைபவர்கள் ஒரு கட்டத்தில் மோகமுள்ளின் யமுனாவை ஒரு தீவிரமான அனுபவமாக அகத்தில் உணர்ந்திருப்பார்கள். காரணம் ஒரு பெண்ணை மிக அதிகமான மோகத்துடன் பார்க்கும் இளைஞனின் பார்வை வழியாக அவள் காட்டப்பட்டிருக்கிறாள் என்றார்.
அருணா மோகமுள்ளில் ஆசிரியரின் முதிராத, ஆண்மைய நோக்கு மட்டுமே தனக்குத்தெரிவதாகச் சொன்னார். யமுனாவை தி.ஜானகிராமன் ஓர் அழகியாக மட்டுமே காட்டுகிறார். அவளது மனம் காட்டப்படவே இல்லை. தங்கம்மாவும் அப்படித்தான். செம்பருத்தி போன்ற நாவல்களில்கூட ‘நான் பெண்ணை புரிந்துகொள்பவன். பெண்ணை மதிப்பவன்’ என்ற பாவனையை மேற்கொள்ளக்கூடிய ஆனால் பெண்ணுடன் நேர்மையான அக உறவுக்குத் தயாராகாத கதாபாத்திரங்களையே தி.ஜானகிராமன் உருவாக்குகிறார் என்றார். தி.ஜா.வின் நாவலின் உணர்ச்சிகரத்தை குறைத்துச்சொல்லவில்லை, ஆனால் முதிர்ச்சியுள்ள நோக்கு அவரது நாவல்களில் இல்லை என்பதே தன்னுடைய மனப்பதிவு என்றார்.
மோகமுள் பற்றி பல கோணங்களில் விவாதம் நடந்தது. அதிர்ச்சி மதிப்பு உள்ள கதைகள் கால ஓட்டத்தில் என்னவாகின்றன என்பதைப்பற்றி அம்மாவந்தாளை முன்வைத்து விரிவாக விவாதிக்கப்பட்டது. கருணையும் குரூரமும் கலந்த அம்பாள் என்ற தொன்மம் எப்படி லா.ச.ரா., தி.ஜானகிராமன் போன்றவர்களின் கதைகளில் உள்ளோட்டமாக உள்ளது என்பதைப்பற்றி, ஜானகிராமன் அவரது கதைகளை நேரடிச்சித்தரிப்பாக நீட்டிக்கொண்டே செல்வதைப்பற்றி, ஜானகிராமனின் கதைகளில் தஞ்சையின் நிலமும் கோயில்களும் மிகமிகக் குறைவாகவே சித்தரிக்கப்பட்டிருப்பதைப்பற்றி…
மதியம் ஒருமணிக்கு விவாதம் முடிவடைந்தது. அதிகாரபூர்வமாக சந்திப்பை முடித்துவைத்தார் விஜயராகவன். அரங்கசாமி நன்றி சொன்னார். இம்முறையும் சந்திப்பை நிர்மால்யாதான் முழுப்பொறுப்பெடுத்து நடத்திவைத்தார். ஸ்ரீனிவாசன், விஜயராகவன் ஆகியோர் முக்கியப்பொறுப்பேற்று ஒருங்கிணைப்பு வேலைகளைச் செய்தார்கள். அவர்களுக்கெல்லாம் பங்கெடுத்தவர்களும் நானும் கடமைப்பட்டிருக்கிறோம். இதுவரை நடந்த சந்திப்புகளிலேயே இம்முறைதான் உணவு சிறப்பாக அமைந்தது. சமையற்காரருக்கும் நன்றி சொல்லியாகவேண்டும்.
ஒவ்வொருவராகக் கிளம்பிச்சென்றார்கள். நான் மாலையே கிளம்புவதாக இருந்தேன். ஆனால் எனக்குப் பேருந்து அமையவில்லை. சரி என்று தங்கிவிட்டேன். நான் தங்கியதனால் கிருஷ்ணனும் கடலூர் சீனுவும் தங்கினார்கள். பெங்களூர்காரர்கள் இரவுதான் பேருந்தில் கிளம்பவேண்டும். அவர்களுடன் மகாபாரதம் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். மறுநாள் காலையில் ஒரு நீண்ட காலைநடை. மதியம் பன்னிரண்டு மணிக்குக் கிளம்பினோம்.
சுவாமி தன்மயாவிடம் விடைபெற்றுக் கிளம்பும்போது குருகுலத்திற்கு அடுத்தவருடம் இந்நிகழ்ச்சிக்கு வருவதற்குள் ஒருமுறை வந்தாகவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.