புதுமைப்பித்தனின் மரணங்கள் – ராஜகோபாலன்

நண்பர்களே! 1900க்குப் பின்னர் உருவாகி வந்த தமிழ் இலக்கிய ஆளுமைகளில் அதிகமும் பேசப்பட்ட இருவராக பாரதியையும், புதுமைப்பித்தனையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். குறிப்பாக தமிழின் சிறுபத்திரிகைக் குழுக்களின் சொல்லாடல்கள் மூலமாக மீண்டும் பிறந்து வந்தவர் புதுமைப்பித்தன். தமிழிலக்கியத்தின் புதுயுக எழுத்தாளர்களின் முன்னனோடிகளில் ஒருவரான அவரது எழுத்துக்கள் மீது விமர்சனங்களும், வாசிப்புகளும் உள்ளன. இந்தக் கலந்துரையாடல் புதுமைப்பித்தனின் படைப்புகளை திறனாய்வு நோக்கிலோ, விமரிசகனின் பார்வையிலோ முன்வைக்க முற்படவில்லை. ஒரு வாசகனாக புதுமைப்பித்தனின் படைப்புகள் ஏற்படுத்தும் தாக்கங்களைப் பற்றி மட்டுமே பேச முயல்கிறது.

புதுமைப்பித்தன்

தமிழ் இலக்கியத்திற்கு தனது பெரும்பங்களிப்பாகப் புதுமைப்பித்தன் செய்திருப்பது அவரது சிறுகதைகளே. சற்றேறக்குறைய 1920களின் பிற்பகுதியில் தொடங்கும் அவரது படைப்புக் காலம் 1940களில் அவரது மரணத்தோடு முடிவடைகிறது. பதினைந்து ஆண்டு காலம் நேரடியாக எழுத்தை நம்பி வாழ்ந்த புதுமைப்பித்தன் மொழி வளர்ப்புப் பணிகளில் பெரும் கவனம் செலுத்தியவர்.

அவரது சமகால எழுத்தாளர்களிலிருந்தும் புதுமைப்பித்தன் தனித்து நிற்பது இன்று வாசிக்கும் போதும் உணர முடிகின்ற ஒன்று. எதனால் அந்தத் தனியிடம் புதுமைப்பித்தனுக்கு உருவாகியது? அதிலுள்ள தனித்துவம் என்ன? என்கிற கேள்விகள் நம் கலந்துரையாடலில் மையமாக இருப்பது, கலந்துரையாடலை செறிவூட்டும்.

அவரது ஆளுமை பெரிதும் வெளிப்படும் கதைகளில் புதுமைப்பித்தன் பல பரிமாணங்களை வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரு வாசகனாக நான் அவதானிப்பது அவரது மரபு சார் தத்துவ அறிவின் சாராம்சங்களை தனது படைப்புகளில் அவர் கையாளும் விதத்தையே.

ஒரு தத்துவமாக அல்லது மதமாக அறியப்படும் எதுவும் மரணத்தைப் பற்றிப் பேசாமல் இருந்ததில்லை. மரணத்தைப் பற்றிய விளக்கங்கள், விவாதங்கள் மூலமாகவே மதங்களும், தத்துவங்களும் முன்னகர்ந்து வருகின்றன.

மரணம் குறித்து பேசுகின்ற மதங்கள், ஏறக்குறைய அனைத்துமே, மரணத்தை ஒரு கதவாக உருவகித்துத் தாண்டுகின்றன. மரணத்திற்குப் முன், பின் என்ற அளவில்தான் மரணம் பெருமளவு கையாளப்படுகிறது. சொர்க்கம், நரகம் என்ற உருவாக்கங்கள் இல்லாத மதங்கள் வெகு அரிது.

மாறாக தத்துவத் தளத்தில் மரணம் பேசப்படும் பொழுது வேறொரு பரிமாணத்தை அடைகிறது. அத்தளத்தை சேர்ந்தவர்களால் மரணம் என்பது அகமுகமாக ஆராயப்படுகிறது. மரணத்தை புரிந்து கொள்ள முயல்வதும், அதற்கு ஒரு கருத்து வடிவம் உருவாக்குவதிலுமாக தத்துவங்கள்; மரணத்தை விவாதிக்கின்றன.

எந்த வரையறையின் சட்டகத்திற்கும் உட்படாத ஒரு மாயக் கவர்ச்சியோடுதான் மரணம் எப்போதும் சிரித்து நிற்கிறது. நம்புவதன் மூலம் மரணத்தை ஏற்க வேண்டிய நிலையில் மதவாதிகளும், பின்பற்றுவதால் ஏற்றுச் செல்ல வேண்டிய நிலையில் தத்துவவாதிகளும் இருக்கும் நிலையில் ஒரு எழுத்தாளனாக மரணத்தை எப்படி எதிர் நோக்குவது?

புதுமைப்பித்தனின் படைப்புகள் பலவற்றிலும் மரணம் கிட்டத்தட்ட ஒரு கதாபாத்திரமாகவே மாறி வருகிறது. வாழ்விற்கும் மரணத்திற்குமான, இடைவெளிகள் தொடர்ச்சியாகக் குறுக்கப்படும் சூழல்களும், அதைக் கண்டு பதைப்போர், நகைப்போர், தவிர்த்துத் தாண்ட முயல்வோர் எனப் பலரும் அவரது கதையின் நாயகர்கள்.

இந்த இடத்தில் ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். புதுமைப்பித்தனின் சமகால எழுத்தாளர்களில் அவரை வேறுபடுத்தும் அம்சம் இதுவென சொல்லலாம். ஓன்று புதுமைப்பித்தனின் மரபுசார் அறிதல்களின் நீட்சி படைப்புகளில் செயல்படும் விதம். மரணத்தைக் குறித்த தத்துவங்கள் தனியாக ஒரு புராண, பௌராணிக விளக்கங்களாக வெளிவந்த காலத்தில், சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் எழுத்துகளில் மையமாக வெளிவந்த காலத்தில் புதுமைப்பித்தன் இரண்டையும் ஒரு சேரக் கையாளுகிறார். ஒரு தத்துவவாதியின் பின்பற்றலையும், ஒரு மதவாதியின் நம்பிக்கையையும் ஒரே நேரத்தில் கேள்விகளைக் கேட்டு அதிர்ச்சி அடையச் செய்யும் எழுத்தாளனின் சுதந்திரத்தை புதுமைப்பித்தனே முதலில் கையாண்டவர் எனச் சொல்லலாம். இதனை அங்கதச் சுவை மீதுறச் சொன்னது அவரது பாணி.

இரண்டாவது, புதுமைப்பித்தனின் கதை கூறு முறை. அவரது சமகாலக் கதைகளில் பெருமளவு காணப்படும் “ஆகிவந்த” கூறுமுறைகளில் இருந்து புதுமைப்பித்தனின் பாணி முற்றிலும் மாறுபடுகிறது. இன்று வாசிக்கும் ஒரு வாசகனுக்கும், அக்கூறுமுறை பழையபாணி எனத் தோன்றுவதில்லை. பெருமளவு ஆங்கில எழுத்தாளர்களை வாசித்தவர் என்பதாலும், மொழிபெயர்ப்புகளில் பெரும் ஆர்வம் கொண்டவர் எனும் முறையிலும் இக்கதை கூறுமுறையினை அவர் மேலை நாட்டுச் சிறுகதையிலிருந்து , குறிப்பாக மாப்பாஸனின் பாணியினால் கவரப்பட்டு எடுத்தாண்டிருக்கலாம். ஆனால், இக்கூறுமுறையினை தமிழ் சூழலுக்குத் தக்கவாறு பயன்படுத்தியதில் புதுமைப்பித்தனே முன்னோடி.

ராஜகோபாலன்

மேற்சொன்ன வகைகளில் புதுமைப்பித்தனின் சிறுகதைகளில் எனது தேர்வாக இக்கலந்துரையாடலில் முன்வைப்பது ஐந்து சிறுகதைகளை.

1. மகாமசானம்

அதிக அளவில் முற்போக்குத் தளத்தில் வைத்து பேசப்பட்ட கதை. பெரு நகரம் ஒன்றின் சாலை ஓரத்தில் இறந்து கொண்டிருக்கும் பிச்சைக்காரக் கிழவனின் கடைசி நிமிடங்களையும், அதை வேடிக்கைப் பார்க்கும் சிறு பெண் குழந்தையையும் சித்தரிக்கும் கதை இது.

இக்கதையில் புதுமைப்பித்தன் மீ;ண்டும் மீண்டும் “பிச்சைக்கார கிழவன் இறந்து கொண்டிருந்தான்” என்பதை வேறு வேறு விதமாகச் சொல்லிக் கொண்டே இருக்கிறார். ஓவ்வொரு முறையும், வேறொரு காட்சியை விவரித்த பின்னர் இந்த வரியைக் கொண்டு வருகிறார்.

சாலையோரத்தில் நிகழும் மரணமும், அதனை வேடிக்கையாகப் பார்க்கும் குழந்தையும்; ஒரே புள்ளியில் நிற்பது ஒரு குறியீடு. கிழவனின் மரணாவஸ்தையை அக்குழந்தை விளையாட்டாகவே பார்க்கிறது. எத்தனையோ தத்துவவாதிகளைத் திகைக்க வைத்த மரணம், அக்குழந்தையின் முன் தன்னை புரியவைக்க முடியாமல் திகைத்து நிற்கிறது.

கூட இருக்கும் இளம் பிச்சைக்காரன் “இவுரு சாவுறாரும்மா” என்கிறான். அதற்கு குழந்தை கேட்கிறது – “அப்படீன்னா?”

இதனை விளக்க இளம் பிச்சைக்காரன் தலையை தொளக்கெனத் தொங்கப்போட்டுக் காட்ட, குழந்தை அதை வேடிக்கையென நினைத்து மகிழ்கிறது. “மறுபடி செய்து காட்டேன்” என்று கேட்கிறது.

ஒரு கட்டத்தில் இளம் பிச்சைக்காரனும் போய்விட கிழவனின் மரணமும், அக்குழந்தையும் மட்டும் தனித்து விடப்படுகிறார்கள். குழந்தைக்கு அவன் தோற்றமும், இறுதி மூச்சுக்காய் வாயைத் திறந்து மூடுவதும் புதுமையாய் இருக்கிறது. இப்போது கிழவன் இறந்து விட்டான். குழந்தை அவனை மெல்ல அசைத்துப் பார்க்கிறது. இந்நிலையில் அதன் அப்பா வந்து குழந்தையை அழைக்கிறார். அது அப்பா வாங்கி வந்த மாம்பழத்தை முகர்ந்து பார்த்து, “வாசனையா இருக்கே” என்று சொல்கிறது.

மரணம் அக்குழந்தையிடம் எந்த பாதிப்பையும்; ஏற்படுத்தவில்லை. அலகிலா விளையாட்டின் அங்கமாக ஒரு பழுத்த இலையும், தளிர் இலையும் ஒரே கிளையில் நிற்கும் விருட்சத்தைக் காட்டிச் செல்கிறார் புதுமைப்பித்தன்.

2. செல்லம்மாள்

ஒரு கீழ்நடுத்தரக் குடும்பம். கணவனும், மனைவியுமான வயதான தம்பதியினர். கைக்கும், வாய்க்குமான வேலையிலிருக்கும் கணவருக்கு, நோயாளியான மனைவி. கதையின் பெயருடைய அவள் மரணத்தின் கடைசி இருநாட்களைப் பேசுகிறது இக்கதை.

மரணம் நெருங்கும் சமயம் காலம் குறித்த பிரக்ஞை தவறிப் போவதைக் குறிக்கும் புதுமைப்பித்தன், அப்புலம்பல்கள் மூலம் செல்லம்மாளின் ஆழ்மன வேதனைகளை ஒரு மின்னல்வெட்டாய்க் காட்டிச் செல்கிறார். மலைஉச்சியில், இருளில் நிற்கையில் நொடி ஒன்றில் வெட்டிச் செல்லும் மின்னல் காட்டும் பெரும் காட்சி பரப்பை இப்புலம்பல்கள் காட்டி மறைகின்றன.

மரணம் வெகு சாவகாசமாய் அடி மேல் அடி வைத்து வீழ்த்தப்பட்ட இரையை நெருங்கும் மிருகமாய் செல்லம்மாளை சூழ்கிறது. இயலாமை, இல்லாமை இரண்டாலும் செயலற்று நிற்கும் பிரமநாயகம் பிள்ளை வெறுமே சாட்சியாய் நிற்பதைப் போலவே நாமும் நிற்கிறோம்.

இக்கதை உருவாக்கும் ஒரு அதிர்ச்சியாக இருப்பது மனைவியின் மரணம் குறித்த உண்மை பிள்ளைவாளுக்கு மரத்துப் போனதாக இருப்பதே. இற்ற மட்டை தென்னையிலிருந்து வீழ்வதைப் பார்ப்பது போலவே இந்த மரணத்தையும் பிள்ளை பார்க்கிறார்.

இந்த நிதானம் ‘அடைந்த ஞானத்தால்’ அல்ல, வாழ்வின் தோல்விகளில் மரத்துப் போன மனதால் வந்தது என்பதை புதுமைப்பித்தன் தொடக்கத்திலேயே உணர்த்தி விடுகிறார். பிள்ளைவாளும் மனைவியின் மரணத்தை உணர்ந்த வினாடியில் பெரும் மனப்பளு நீங்கியவராகத்தான் தன்னை உணர்கிறார்.

நல்ல இரவுத்தூக்கத்தின் இடையே கண்விழிக்கும்போது சுற்றிலும் மையிருட்டு இருந்தால் எப்படி மனம் துணுக்குறுமோ அப்படித் துணுக்குறுகிறது வாசக மனம்.ஆனால் வாழ்க்கையின் வெகு யதார்த்தத்திற்கு முன்பு மரணமும், “பத்தோடு பதினொன்றாக” இணைந்து நி;ற்பது தெரிகிறது. தேவைக்கும், அளிப்புக்குமான இடைவெளியை நிரப்புவதிலேயே கழியும் வாழ்க்கையின் வெகு யதார்த்தத்தில் மனம் மரத்துப் போய்விடும் போது , மரணம் மற்றுமொரு சம்பவமாகவே கடந்து செல்லும் நிஜம் முகத்தில் அறைகிறது.

3. மனக்குகை ஓவியங்கள்

சம்பவங்களின் தொடர்ச்சியே கதை எனும் வரம்பிற்கு உட்படாத ஒரு தொடர் சங்கிலி எண்ணங்களின் கோர்ப்பாய் உருவான படைப்பு இது. புதுமைப்பித்தனின் புராண, இதிகாச வாசிப்பினைக் காட்டும் இப்படைப்பில் ஒரு எழுத்தாளனின் உத்வேகம் பலமடங்காகப் பெருகி வருகிறது.

மதம், புராணம், இதிகாசம் போன்ற எவற்றின் வழியாகவும் உருவாக்கிக் காட்டப்படும் மரணம் குறித்த, காலம் குறித்த ஒவ்வொன்றையும் புதுமைப்பித்தனின் எழுத்தாளுமை கேள்வி கேட்கிறது. மீண்டும், மீண்டும் மரணத்தையும் சிறு குழந்தையையும் முடிச்சிட்டே காட்சி அமைக்கிறார் புதுமைப்பித்தன்.

சிறுகுழுந்தை ஒன்று பரமனைப் பார்த்துக் கேட்கிறது – “உமக்கு எல்லாவற்றையும் அழிக்க முடியுமா? உம்மை அழித்துக் கொள்ள முடியுமா? நீர் மட்டும் மிஞ்சுவது தான் சூன்யம் என்று அர்த்தமா? உம்மையும் அழித்துக் கொள்ளும்படி நீர் தொழிலை நன்றாகக் கற்று வந்த பின்பு, நெஞ்சைத் தட்டிப் பார்த்துக் கொள்ளும.;”

கதையில் மற்றுமொரு இடத்தில் யமன், நசிகேதனுக்குப் பதில் தரவியலாச் சங்கடத்தை படைப்பு பேசுகிறது.“எத்தனையோ தத்துவங்களைச் சொல்லிப் பார்த்தான் (யமன்). குழந்தையை (நசிகேதன்) ஏமாற்ற முடியவில்லை. தன்; ஒற்றைக் கேள்வியை வைத்துக் கொண்டு அவனை யுகம், யுகமாக மிரட்டி வருகிறது அக்குழந்தை”

யமன் தன்னைக் கண்டு மனிதர் அஞ்சுவதைப் புரிந்து கொள்ள இயலாத மன உளைச்சலில் இருக்கிறான். அவன் முன் வரும் மனித உயிர் ஒன்று சொல்கிறது. “அதோ கிடக்கிறது நான் உதிர்த்த உடல். அதில் நீ போய்ச் சேர். உன் கிங்கரர்களை விட்டு அழைத்து வரும்படி உத்தரவிடு. அப்போது தெரியும் ஏனென்று?”மரணத்தின் அதிகாரியான கடவுளை நோக்கி, மரணத்தால் வரையறுக்கப்பட்ட மானிடன் கொள்ளும் மனக் கொந்தளிப்பை இப்படைப்பில் உணர முடிகிறது.

படைப்பில் ஓரிடத்தில் மகாவிஷ்ணு வரம் தர துருவன் முன்பு தோன்றுகிறான். ஆனால், குழந்தையோ முந்தைய ஏமாற்ற அனுபவங்கள் காரணமாக ஏற்பட்ட சந்தேகத்தோடு கடவுளை நம்ப மறுக்கிறது. விஷ்ணுவை செப்பிடு வித்தைக்காரன் என்று குறிப்பிட்டு தகப்பனிடம் சென்று பரிசு பெற்றுக் கொள்ளுமாறு பரிந்துரை செய்கிறது. தபஸ் செய்ய நேரமாவதாகக் கூறி காட்டுக்குள் ஓடி விடுகிறது.செய்வதறியாது திகைத்து நிற்கும் விஷ்ணுவைப் போலவே நாமும் திகைத்து நிற்கிறோம். கடவுளின் ஒட்டு மொத்த ஆகிருதியும் வஞ்சிக்கப்பட்ட ஒரு மானுடக் குழந்தை முன்பு சிறுத்து நிற்கிறது. கொடுக்க வந்த வரத்தை நட்சத்திரத்தின் மீது வீசியெறிந்து போகிறார் விஷ்ணு.

நமது புரிதல்களை, மத அடிப்படையிலான நம்பிக்கைகளை வாழ்வின் நிதர்சனம் முன்பு நிறுத்தி வைக்கும் இப்படைப்பு வாசகனை அனைத்தையும் மறு பரிசீலனை செய்யக் கோருகிறது.

4. பிரம்ம ராக்ஷஸ்

புதுமைப்பித்தனின் மரபார்ந்த அறிவின் வீச்சு வெளிப்படும் படைப்புகளில் இது முக்கியமானது. மரணத்தை வெல்லும், காலத்தைத் தாண்டி விட முயலும், அமரத்துவத்தை வசப்படுத்தும் மாளாத மானுட முயற்சியை இக்கதை பேசுகிறது.

படைப்பினைப் புதுமைபித்தன் பேசியிருக்கும்; முறை, காட்சிகளின் சித்தரிப்பு, சூழல்களின் வர்ணனை ஆகியவை பெருமளவு டாக்டர் ஜேக்கல், ஃப்ரான்கன்ஸ்டைன், ட்ராகுலா போன்ற கதாபாத்திரங்களின் படைப்புகளை நினைவூட்டுகின்றன.

படைப்பு முழுவதும் மின்னல் தெறிப்புகளாய் தொடர்ந்து வரும் வரிகள் புராணங்கள், யோகம் ஆகியற்றில் அவருக்கு இருந்த வாசிப்பினைக் காட்டுகின்றன. குறிப்பாக படைப்பின் தொடக்கமாக இருக்கும் “பிரம்ம ராக்ஷஸ்” என்பதன் விளக்கம்.

மரணத்தின் மீதான மானுட அச்சத்தை படைப்பு முழுவதும் பேசும் புதுமைப்பித்தன், மரணத்தை ஏற்கவும் முடியாமல், தவிர்க்கவும் முடியாமல் இரண்டுக்கும் நடுவே ஊடாடி நிற்கும் மானுட மனத்தின் அவஸ்தையை சித்தரிக்கிறார்.

நமது ஆழ்மனதில் நம்மால் அறியப்படாத ஒரு மூலை துணுக்குறுவதை படைப்பின் பல இடங்களில் உணர முடிகிறது. குகையின் வாசலை அடையும் நன்னயப்பட்டனின் குழந்தை அழுவது நமது காதையும், ஆழ்மனத்தையும் அறைகிறது.

அறிதலின் ஆர்வத்தால் உந்தித்தள்ளப்படும் மாறாத மானுட மனம் நன்னயப்பட்டனை மாத்திரம் விட்டு விடுவதில்லை. அவன் மீண்டும் குகைக்குள் நுழைவதை தடுக்கும் வேகத்தோடு, அதற்கு இணையான அடுத்து என்ன எனும் ஆவலோடு நாமும் பார்க்கிறோம். அந்த வாசலிலே நிற்பது நன்னயப்பட்டன் மட்டுமல்ல நாமும் தான் என்பதை உணரச் செய்யும் சித்தரிப்பு புதுமைப்பித்தனின் சிறப்பு.

எலும்புக் கூட்டிற்கு உயிர் தரும் விதமாக நன்னயப்பட்டன் செய்யும் செயல்களின் சித்தரிப்பு, குகையின் சுவர்களில் காணப்படும் செதுக்கல்கள், அதனை ஆராயும் பட்டனின் மனநிலை ஆகிய சித்தரிப்புகள் அறிதலின் ஆர்வம் என்பது மானுடத்தின் மீதான இயற்கையின் பெருவிதி என உணரச் செய்கிறது.

பன்முறை இன்று வரை பயன்பட்டு வரும், நாட்டார் மரபில் அறிமுகமான குறியீடான அழகிய இளம்பெண் பேயுரு கொள்வது இங்கும் வருகிறது. குழந்தை அப்பெண்ணிடம் செல்ல முயல்வதும், இயலா வண்ணம் வேறொன்றில் பிணைக்கப்பட்டிருப்பதையும் வாசிக்கும் நாம் நிம்மதி இழக்கிறோம்.

ஆவலால் உந்தப்படும் பட்டன் பிரேதத்தின் முகத்தில் தனது குழந்தையைப் படுக்க வைக்கும் செயலைச் செய்யும் Nபுhது ஆழ்மனதின் இருளில் நிற்கும், நம்மால் காணவியலா ஆதி இச்சைகள் நம்மையும் மீறி நம்மை இயங்க வைக்கும் அவலத்தை கையறு நிலையாகத்தான் உணர முடிகிறது.

ஒரு கணத்தில் மூன்று எலும்புக் கூடுகள் பலிபீடத்தின் மீது கிடப்பதை வாசிக்கும்போது, மாறா பிரபஞ்ச விதிகளின் முன் மனித மனம் தோற்றும், அவற்றைத் தாண்டிச் செல்ல முயற்சிக்கும் மாயத்தை விகசிக்கத்தான் முடிகிறது.

5. காலனும் கிழவியும்

மரணத்தின் மீது தத்துவ விசாரணைகள் பலவற்றையும் ஏற்றிக்காட்டிய புதுமைப்பித்தன் அங்கதச் சுவையுடன் மரணத்தை அணுகும் படைப்பு இது. வெள்ளக்கோவில் கிராமத்தில் வசிக்கும் சரியாகப் பார்வை தெரியாத முதுகிழவியை அழைத்துச் செல்ல யமனே நேரில் வருவதைச் சொல்லும் கதை இது.

கிழவியின் நீண்ட வாழ்வின் நெடிய அனுபவங்கள் அவளுக்கு தந்திருக்கும் மனத்திண்மையைத் தாண்ட முடியாமல் தடுமாறி நிற்கிறான் யமன். பெரும் அனுபவம் வாய்க்கப்பெற்றவர்களை எதுவுமே ஆச்சர்யபடுத்திவிட முடிவதில்லை போலும்! கிழவியை பயப்படுத்தாமல் அழைத்துச் செல்ல முயலும் யமன், ஒரு கட்டத்தில் வழியில்லாமல் தனது சுய உருவினைக் காட்ட, கிழவியோ, அதிலும் தளராது, “வாப்பா! இரி! இப்பம் எதுக்கு இங்கே வந்தே?” என்று சாவகாசம் கொள்கிறாள். பதட்டம் தொற்றுவதென்னவோ யமனுக்கு.

யமனும் ஒவ்வொரு வழியாய் முயன்று பார்க்க, கிழவியோ மீறித் தப்புகிறாள். ஒரு கட்டத்தில் யமனையே அவனது தொழில்திறன் குறித்து சந்தேகம் கொள்ள வைக்கிறாள். தன்னைக் கொண்டு போவதாகச் சொல்லும் யமனிடம் தனது நினைவை, தான் இருந்ததன் நிலையை, தான் புழங்கிய பொருட்களை உடன் எடுத்துச் செல்லமுடியாத யமனின் திறமைக் குறைவை பரிகாசம் செய்கிறாள். உடலின் மரணம் மீறி நினைவின் கதியில் வாழ்வைத் தொடர்பவர்களை யமனால் என்ன செய்து விட முடியும்?

கிழவியின் பேச்சோ ஆப்த வாக்கியங்களாக இருக்கின்றன. ஓன்றை வேறொன்றாக மட்டுமே மாற்ற முடியும். உன்னால் எதையுமே முழுமையாக அழிப்பது இயலாது என்கிறாள். இன்னும் தீவிரமாக, உன்னைப் படைத்த கடவுளாலும் முடியாத காரியம் இது என்கிறாள்.

யமனை விதிர்த்துப் போகச் செய்யும் இவ்விவாதம் முதல் வாசிப்பில் நகைச்சுவையாய் தோன்றினாலும் அதன் உள்ளார்ந்த தத்துவச் சித்தரிப்பு புதுமைப்பித்தனின் வாசிப்பைக் காட்டுகிறது.

வாழ்வின் அனுபவங்களை தேர்வுகளின்றி ஏற்று, அதன் போக்கிலேயே முழுமுற்றாகக் கடந்து வருபவர்களை மரணமும் கூட பயமுறுத்தாது போல. அத்தகையோர் தாமே விரும்பி ஏற்கும் வரை மரணமும் ஒரு ஆணைக்குட்பட்ட பணியாளனாய் வாசலுக்கு வெளிப்புறம் காத்துக் கிடக்க வேண்டுமா என்ன?

யமனைக் கண்ட அதிர்ச்சி இல்லாக் கிழவிக்கு யமனை வென்றதன் மமதையும் கூட இல்லை. அவள் வருத்தம் எல்லாம் நல்ல கெட்டிக் கயிறு தவறிவிட்டது என்பது தான். வாழ்வை அதன் போக்கில் வாழ்ந்து தீர்த்த கிழவி, வாழ்க்கையைத் தவிர வேறெந்த பாடத்தையும் கல்லாததன் புனித அறியாமையைக் கொண்டுதான் யமனைத் தோற்கடித்தாளா என்ன?

வெளியேறும் யமனுக்கு மார்க்கண்டேயனைக் கூட ஏதோ ஒரு விதத்தில் தான் வென்றதாகத் தோன்றுகிறது. மார்க்கண்டேயனும் சிவனின் துணை கொண்டே யமனைத் தோற்கடித்தான். ஆனால், எவர் துணையுமின்றி, அஞ்சி எவரையும் சரணடையாது, வெற்றிலை மெல்லும் கிழவி யமனைப் புறமுதுகிட வைக்கும்போது யமனுக்குத் தோன்றும் எண்ணம் நமக்கும் தவறாமல் தோன்றுகிறது. ஒருக்கால் வாழ்வதன் ஆசை இருப்பவரால் தான் யமனை அஞ்ச இயலுமோ?

இக்கதைகள் அனைத்திலுமே மரணம் என்பதனைப் புதுமைப்பித்தன் கையாண்ட வெவ்வேறு பரிமாணங்களைக் காணமுடிகிறது. அவரது மற்ற பல கதைகளிலும் இககருத்தின் நீட்சியைக் காண முடியும்.

தனது இருப்பிற்கு மட்டுமே மனித உடலுக்குக் கட்டுப்பட்ட மனித மனம், உடலுக்குரிய விதிமீறல்கள் அனைத்தையும் தன்னியல்பாக கொண்டு வளர்கிறது. எப்போதும் புலன்களின் வெளிக்கு அப்பால் தன்னை நிறுத்திக் கொள்ளும் மனம், புலன்களைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதையும் சாதிக்கிறது. மனித மனம் விழைவதுதான் என்ன?

புலன்களின் எல்லையைத் தாவிக் கடக்கும் மனம் தாவ முடியாது, தவிர்க்க முடியாது, மறுபக்கம் காண வேண்டி ஊடுருவ இயலாது நிற்பது மரணத்தின் முன்புதான். மரணம் மனித மனத்தின் எல்லையை வரையறுக்கிறது. அதனால் தானோ என்னவோ, மனித மனதின் அச்சம், அறிதலின் கவர்ச்சி ஆகியவை மரணத்தின் மீது குவிந்து நிற்பது – இந்தச் செயல்பாடுகளின் வெவ்வேறு பரிமாணங்களை புதுமைப்பித்தன் சித்தரிப்பது வாசகனுக்கு ஒரு பெரும் திறப்பினைக் கொடுக்கும்.

மரணத்தை அறியும் ஓயா முயற்சிகளுக்கும், அம்முயற்சிகளின் எல்லையை விரற்கடை தூரத்தில் தாண்டியே நிற்கும் மரணத்திற்கும் இடையேயான ஊசலாட்ட நிலையைப் பேசும் இடத்தில் புதுமைப்பித்தன் ஒரு “பிரம்ம ராக்ஷஸ்” தான்.

[ஊட்டி குரு நித்யா ஆய்வரங்கு 2012 ல் நிகழ்ந்த விவாதத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை]


புகைப்படங்கள் எம் ஏ சுசீலா

முந்தைய கட்டுரைஊட்டி காவிய முகாம் 2012 – பகுதி 3
அடுத்த கட்டுரைநாஞ்சில் அமெரிக்காவில்