சாருவுக்கு ஒரு கடிதம்

 

சாரு நிவேதிதா – தமிழ் விக்கி 

அன்புள்ள சாரு

கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் எப்போதும் உங்கள் எழுத்துக்களை கவனித்து வருபவன் நான் என நீங்கள் அறிவீர்கள். உங்கள் இணையதளத்தில் எழுதப்பட்ட வன்முறையின் தோல்விஎன்ற கட்டுரை முக்கியமானது. பொதுவான மனநிலைகளில் இருந்து விலகி எது மனதுக்குச் சரி என படுகிறதோ அதைச் சொல்லும் துணிவு உங்கள் பலம். அதை இக்கட்டுரையிலும் கண்டேன். இக்கட்டுரையின் உணர்வும் கருத்தும் என்னுடையதாகவே இருந்தது என்பதனால் இதை எழுதுகிறேன்.

மானுட வாழ்க்கையின் அருமையை உணர்ந்தவன், அதனாலேயே மக்கள் மேல் தீராத பரிவுள்ளவனே எழுத்தாளனாக இருக்க முடியும். அதிகார அரசியல், கோட்பாடுகள், கட்சி கட்டுதல் ஆகிய அனைத்துக்கும் அப்பால் மனிதர்கள்பால் இருக்கும் பற்றில் இருந்து அவனுடைய நிலைபாடுகள் உருவாக வேண்டும். வரலாற்றில் இருந்து அதனடிப்படையில் அவன் பாடம் கற்றுக்கொள்ளவேண்டும். உங்கள் வரிகளில் தெரியும் சாராம்சமான பார்வை அத்தகையது. நன்றி.

ஜவகர்லால் நேருவின் சுயசரிதையில் ஓர் இடம் வருகிறது. நேரு   1931 பிப்ரவரி இருபதாம்தேதி அலஹாபாதில் தங்கியிருந்தபோது அவரை ரகசியமாகச் சந்திக்க ஒருவர் விரும்புவதாகத் தகவல் வந்தது. அன்றிரவு சந்திக்க வந்தவர் அப்போது தலைமறைவாகவும் தேடப்படும் குற்றவாளியாகவும் இருந்த சந்திரசேகர் ஆசாத். அத உரையாடலை நேரு பதிவுசெய்திருக்கிறார்.

”சுதந்திரம் இன்னும் ஒரு மாதத்தில் கிடைத்துவிடுமா?” என்பதுதான் ஆசாத் கேட்ட முதல் கேள்வி. அப்போது லண்டன் வட்டமேஜை மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. சுதந்திரம் குறித்த ஆவல் நாடெங்கும் உருவாகியிருந்தது. ஆனால் ஆசாத்தின் கேள்வி குழந்தைத்தனமானது.

நேரு பொறுமையாக விளக்கினார். அத்தனை எளிதாகச் சுதந்திரம் கிடைத்துவிடாது. இது பேச்சுவார்த்தைதான். இப்போராட்டத்தில் முதலில் இந்தியாவில் ஓரளவு அதிகாரம் கொண்ட சுயாட்சிமுறையை அடைந்தோம். அது முதல் வெற்றி. அந்த அதிகாரத்தை பெருக்கிக் கொண்டு ஜனநாயகப் பயிற்சி அடைந்தோம். இப்போது அதிகபட்சம் எதிர்பார்க்கக் கூடியது டொமினிகன் அந்தஸ்துதான். அதை அடைந்தபின் மேலும் முன்னகர்ந்துதான் முழுமையான சுதந்திரத்துக்காக போக முடியும். இன்னும் இருபது வருடங்களாவது ஆகும்.

ஆசாத் மனம் சோர்ந்துபோகிறார். பின்னர் தன் நிலைமையை நேர்வுக்கு விளக்குகிறார். 1922ல் சௌரிசௌரா நிகழ்ச்சிக்குப் பின் காந்திஒத்துழையாமை இயக்கத்தை  பின்னிழுத்துக்கொண்டதை கோழைத்தனம் என்று சொல்லிக் குற்றம்சாட்டி போராட்டத்திலிருந்து விலகிஆயுதப்போராட்டம் நோக்கிச்சென்றவர் அவர். பகத் சிங்கும் அப்படித்தான். அவர்கள் பல தாக்குதல்களை நடத்தினார்கள்.  வன்முறைப்போராட்ட அமைப்பு ஒன்றை உருவாக்கினார்கள்

ஆனால் தலைமறைவு வாழ்க்கையின் அனைத்து இன்னல்களையும் அனுபவித்து சோர்ந்திருந்தார் ஆசாத். அதைவிட இரண்டு விஷயங்கள் அவரை நெருக்கடிக்குத் தள்ளின. முதல் விஷயம் ஓர் ஆயுதப்போராட்டத்துக்கு தேவைப்படும் அளவில்லாத பணம். ஓர் எல்லைக்குமேல் கொள்ளையடித்தால் அல்லது பிற குற்றச்செயல்களில் ஈடுபட்டால்தான் பணம் கிடைக்கும் என்ற நிலை. குற்றங்களில் ஈடுபடும் போது மெல்லமெல்ல அமைப்பே ஒரு குற்றவாளித்தன்மையை அடைய ஆரம்பித்தது.

இரண்டாவது, ஆரம்பகட்ட லட்சியவாதவேகம் கரைந்தபின் ஏற்கனவே இந்திய சமூகத்தில் உள்ள எல்லாவகையான சாதி சமயப்பிணக்குகளும் அமைப்புக்குள்ளும் வர ஆரம்பித்தன. தனிப்பட்ட காழ்ப்புகளும் அவநம்பிக்கைகளும் பெருகின. அவை இயக்கத்தை பிளவுக்கும் பரஸ்பர போராட்டத்துக்கும் கொண்டுசெல்லக்கூடும். தன் இயக்கத்தில் முக்கியமான எவராவது தன்னை காட்டிக்கொடுக்கக்கூடும் என ஆசாத் அஞ்சினார்.

நேரு அவரிடம் சரண் அடையுமாறு சொன்னார். அவருக்காக கடைசிவரை போராடுவதாகவும் உறுதி அளித்தார். ஆங்கில நீதியமைப்பை நம்பலாம் என்றார். ஆனால் அந்த நம்பிக்கையை ஆசாத் பகிர்ந்துகொள்ளவில்லை. எவரையுமே நம்பாத நிலையில் அவர் இருப்பதாக நேருவுக்குப் பட்டது. அவர் எந்த தகவலையும் சொல்லவில்லை. அவரைத் தொடர்புகொள்ளும் முறையைக்கூடச் சொல்லவில்லை. ”நானே வந்து பார்க்கிறேன்” என்று சொல்லிக் கிளம்பிச் சென்றார்.

ஒருவாரம் கழித்து அலகாபாத்தில் தன் இரு இயக்கத்தோழர்களால் காட்டிக்கொடுக்கப்பட்டு சுற்றிவளைக்கப்பட்டு ஆசாத் சுட்டுக் கொல்லப்பட்டார். அச்செய்தி நேருவை அடைந்தபோது நேரு அதிர்ச்சி அடைந்தார். அதே சௌரிசௌரா வாபஸ் பிரச்சினையால் காந்தியிடம் தான் கொண்ட கடுமையான மனஸ்தாபத்தையும் தனக்கே வன்முறை அரசியல்மேல் உள்ளூர இருந்த ஈர்ப்பையும் குறித்து எண்ணிக்கோண்டார். வன்முறை அரசியல் மனிதர்களை உச்சகட்ட நெருக்கடியிலேயே எப்போதும் வைத்திருக்கிறது. அந்த நெருக்கடி நிலையில் இயல்பான மானுட உணர்ச்சிகள் மறைந்து விடுகின்றன. அங்கே எல்லா உணர்ச்சிகளுமே தீவிரநிலையில் உள்ளன. சந்தேகம், துரோகம், கொலை எல்லாமே சாதாரணமாக ஆகிவிடுகின்றன என்று ஒரு கடிதத்தில் பின்னர் நேரு எழுதினார்.

உங்கள் கட்டுரை சரியான சமயத்தில் சரியான புள்ளியைத் தொட்டுக்காட்டியிருக்கிறது. இம்மாதிரி சந்தர்ப்பத்தில் தங்களை மிகையான உணர்ச்சியுடன் வெளிக்காட்டிகொண்டு உடனடியாகக் கிடைக்கும் எதிர்வினைகளில் தோய்வதையே பெரும்பாலான இதழாளர்கள் தமிழ்நாட்டில்செய்து வருகிறார்கள். சிலருடைய குரலாவது அறிவார்ந்த நிதானத்துடனும் வரலாற்றுணர்வுடனும் இருப்பது நம்முடைய நல்லூழ்

வாழ்த்துக்கள் சாரு

ஜெயமோகன்

http://www.charuonline.com/May2009/Vanmurai.html

வெறுப்புடன் உரையாடுதல்

காந்தியும் அம்பேத்காரும்

அரசியல்சரிநிலைகள்

இரு காந்திகள்.

படிப்பறைப் படங்கள்

எனது இந்தியா

காந்தியின் எளிமையின் செலவு

ஃபுகோகா :இருகடிதங்கள்

மலேசியா, மார்ச் 8, 2001

 

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைகாந்தியின் துரோகம்