தமிழ்ப்பெண்ணியம் – சுருக்கமான வரலாறு

பெண்ணியம் இந்தியாவில் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே உதயமாயிற்று என வரலாற்றாய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். அப்போது தாதுவருஷப் பஞ்சம் என்ற ஒன்று
நிகழ்ந்தது. இதற்கு அக்காலத்தில் இந்தியாவை அடிமைப்படுத்திவைத்திருந்த
பிரிட்டிஷ் அரசின் சுரண்டல்முறையே காரணம் என்று தெரியவருகிறது. கடுமையான
பஞ்சத்தில் தண்ணீர் தேடி வீட்டுக்குள் இருந்த உயிர்களெல்லாம் வெளியே
கிளம்பியபோதுதான் இங்கே பெண் என்ற ஓர் உயிரினம் வாழ்ந்து வரும் செய்தி பரவலாக
தெரியவந்தது. இதுவே பெண்ணியத்தின் முதல்புள்ளி என்பது ஆய்வாளர் துணிபு. தமிழ்ப்
பெண்ணியத்தின் தொடக்கமும் இதுவே என ஜெ.எச்.நெல்சன் [மதுரா கண்ட்ரி மேனுவல்]
போன்ற ஆய்வாளர்களால் தெரியவருகிறது.

அதற்கு முந்தைய காலத்திலிருந்தே மானுடர் தங்கள் வீட்டு இருளுக்குள் மெல்லிய
காலடியோசையுடன் கண்கள் மினுமினுக்கும் ஓர் உயிரின் நடமாட்டம் இருக்கும் தகவலை
அறிந்திருந்தார்கள். சில நாட்டுப்பாடல்களிலும் பழஞ்சுவடிகளிலும் ஆதாரங்கள்
இருந்திருக்கின்றன. மேலும் நள்ளிரவில் இருளுக்குள் காலடியோசை கேளாமல் சென்று
அவ்வுயிரிடம் தானாகவே உடல் செய்யும் சிலவற்றை செய்து திரும்பினால் குழந்தைகள்
பிறக்குமென்ற அறிதலும் ஓரளவுக்கு இருந்திருக்கிறது. அதன் குரலைக்கூட சிலர்
கேட்டிருக்கிறார்கள். கோயில்சிற்பங்களில் பலவகை நகைகள் அணிந்து சுளுக்குக்கு
முந்தைய கணத்தில் நெளிந்து உறைந்துநிற்கும் மாறுபட்ட மானுட உருவங்கள் உண்மையில்
பெண்களே என்ற தகவல் அக்காலகட்டத்தில் கிளர்ச்சியுடன் பேசப்பட்டிருக்கிறது என்று
அக்கால ஏசுசபை பாதிரிகள் பதிவுசெய்கிறார்கள்.

இதன்பின்னால் பெண்களைவைத்துக் கொண்டு எனன் செய்வது என்ற கேள்வி எழுந்து
சிந்தனையாளர்களை துன்புறுத்த ஆரம்பித்தது. என்னசெய்வதென்று தெரியாத நிலையில்
ஒரு முடிவு எடுக்கப்படும்வரை அவளுக்கு அறிவுரைகள் மட்டும் சொல்லலாம் என்ற
எண்ணம் சான்றோருக்கு எழுந்தது இயல்பே. ஆகவே மூதுரை, நன்னெறி, குடும்பநெறி
முதலிய பல்வேறு நூல்கள் உருவாகின. பழமொழிகளும் புதுமொழிகளும் உருவாக்கப்பட்டன.
‘அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு’ ஆகிய குணங்களும் தனிமையிலிருக்கையில்
அவ்வப்போது ‘உயுர்ப்பு’ம் பெண்களும் தேவை என்று சொல்லப்பாடது. நல்லுரைவழங்கும்
இச்செயல் தொடர்ந்து பலகாலம் நடந்தபோது முதலில் இது ஏன் தொடங்கப்பட்டது என்பதை
அறிந்த தலைமுறையினர் இல்லாமலானார்கள்.

அக்காலகட்டத்தில் ஒருநூலை ஒரு புலவர் எழுதிவிட்டாரென்றால் அதேநூலை அத்தனை
புலவர்களும் எழுதினால்மட்டுமே அவர்களை புலவரென அங்கீகரிக்க முடியுமென்ற நிலை
நிலவியதனால் எந்த தடையுமின்றி நூல்கள் பெருகின. பத்தொன்பதாம் நூற்றாண்டின்
தொடக்கத்தில் திகிலூட்டும் ஓர் உண்மை கண்டடையபப்ட்டது. எந்த உயிரினத்துக்காக
அத்தனை நீதி நூல்களும் எழுதப்பட்டனவோ அவ்வுயிரினத்துக்கு எழுதவோ, படிக்கவோ,
படித்துச்சொன்னால் புரிந்துகொள்ளவோ தெரியாது!

ஆகவே முன்னோடிச் சிந்தனையாளர்களான சில சான்றோர் பெண்களுக்கு கல்வி கொடுப்பது
அவசியமெனச் சொல்லத்தலைபபட்டார்கள். அ.மாதவையா என்ற பிராமணர் கிறித்தவர்களின்
துர்போதனையால் இப்படி சொல்ல முயன்றாரென்று சில நூல்கள் சொல்கின்றன. அ.மாதவையா
அவர்கள் கல்விபயின்ற பெண்களின் சோக வாழ்க்கையைப்பற்றி ‘பத்மாவதி சரித்திரம்’
என்ற நாவலை எழுதியிருக்கிறார். ஒரு பெண் உண்மையில் தான் சோகமாக இருக்கிறோமென
அறிந்து கொள்வதற்கு கல்வி அவசியமென்பது அன்னார் கருத்து

பெண்களை கோமாதா போல பேணவேண்டுமென கருத்துள்ள சனாதனிகள் இதை எதிர்த்தமை நியாயமே.
கோமாதாக்களுக்கு மூக்குக் கயிறு போடுவதே வழக்கம். எள்ளுப்புண்ணாக்கு,
பருத்திக்கொட்டை முதலியவை நல்ல ஊட்டச்சத்துக்கள். கல்வி கற்பித்தால் படிக்கவும்
எழுதவும் பெண்கள் வெளிச்சத்துக்கு வரவேண்டியிருக்கும், அது அவர்களின்
கண்களுக்கு தீங்கு விளைவித்து பார்வையை மாற்றியமைக்கும் என்று அவர்கள்
கருதினார்கள். மேலும் கண்கள் இருந்தால்மட்டுமே அவர்கள் மங்கல்யத்தை அவற்றில்
ஒத்திக் கொள்ள முடியுமென்பதனால் இது குடும்ப அமைப்புக்கே ஊறுவிளைவிப்பதாகவும்
கருதப்பட்டது

இதற்குப் பதிலாக பெண்கள் இருளிலேயே நெடுங்காலம் வாழ்ந்து பழகியவர்களாதலால்
இருளிலேயே அவர்கள் கற்கவும்செய்யலாமென பதில் சொல்லபப்ட்டது. மேலும் கல்விகற்று
அரசுவேலைகளுக்குப்போன உயர்சாதியினரில் ஒரு சிறு தரப்பு கல்வி கற்ற பெண்களை
விரும்பியது. ஒவ்வொருநாளும் துரைத்தனத்தாரால் மட்டம்தட்டப்பட்ட அவர்களின்
ஆங்கிலப் புலமையை அங்கீகரித்து பாராட்டியாகவேண்டிய கட்டாய நிலையில் சொந்தமாக
கைக்கடக்கமாக வீட்டிலேயே எழுத்தறிவுள்ள ஒருவர் இருப்பதன் வசதியை அவர்கள்
நாடினர். இவ்வாறாக பெண்களுக்கு முதலில் வீட்டிலேயே கணவர்களால் கல்வி
கற்பிக்கப்பட்டது. இதன் விளைவாக மக்கள்பேறும் அதிகரித்தது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென்னாட்டில் ஒரு அக்ரஹாரத்தில் ஒரு
பெண் மிகுந்த தயக்கத்துடனும் கிலியுடனும் ‘அ’ என்ற எழுத்தை வாசித்தபோது தமிழக
வரலாறு ஸ்தம்பித்து நின்று கவனித்தது என அலங்காரமாகச் சொல்லலாம். அப்பெண்
விடாமுயற்சியுடன் மேலும் முன்னகர்ந்து ‘ட்டிகை’ என்று படித்து முடித்தபோது
வரலாறு உருவாகிவிட்டிருந்தது. சின்னாட்களிலேயே அங்குள்ள மொத்தப் பெண்களும்
அச்சொல்லைப் படித்து பரபரப்புடன் பேசிக்கொள்ள தலைபப்ட்டனர். இதன்பின்
பெண்கல்வி தீயெனப் பரவியது. பெண்கள் பள்ளிக்கூடங்களுக்குச் சென்று கல்விபயில
ஆரம்பித்தனர். பெண்கள் உள்ளே வளையம் செலுத்தி கொண்டைபோட்டுக் கொள்ளும் பழக்கம்
இக்காலத்தின் உருவாகியது.

இக்காலகட்டத்தின் எழுத்தாளர் என்று வை.மு.கோதைநாயகியம்மாளை சொல்லலாம். இவரது
நாவல்களில் இலட்சியவாதியான பெண் அனைத்துக் கொடுமைகளுக்கும் உள்ளாகி, கடுமையான
சொற்பொழிவுகள் ஆற்றி பழிக்குப்பழிவாங்கி, கணவனையும் புகுந்தவீட்டையும்
திருத்தி ,நாட்டு விடுதலைக்கும் பாடுபடுவதுடன் துப்பறியவும் செய்கிறாளென்பதனால்
அவை நீண்டுநீண்டு செல்வது இயல்பே. இது பெண்கல்வியின் தொடக்க காலம்.
‘தீவிள்¢க்கு இவாள் கைக்கெடியாரம் கோக்கிறா’ என்று கணவன் சார்பில் அப்பாவுக்கு
கார்டு எழுதுமளவுக்கு தேறியதுமே இவர்களின் கல்வி முழுமை செய்யப்பட்டது.
அதன்பின் முதுமைவரை ஸ்ரீராமஜெயம் எழுத இது உதவியது

இக்காலகட்டத்தில் இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்தது. எங்கும் கிராமக்
கல்விச்சாலைகள் தொடக்கப்பட்டு பெண்களுக்குக் கல்விகொடுக்கப்படவேண்டும் என்ற
கருத்து வலியுறுத்தப்பட்டது. உயர்குடிப்பெண்கள் கல்விகற்கப்போனமையால் பிற
பெண்களும் போயாகவேண்டியிருந்தது. இக்காலகட்டத்தில் பெண்கல்விக்காக கு.காமராஜ்
கடுமையாக முயற்சி எடுத்திருக்கிறார். விளைவாக பெண்கல்வி வளர்ந்தது. தமிழகத்தில் ரெட்டைச்சடை கண்டுபிடிக்கப்பட்டது
இக்காலகட்டத்திலேயே.

பெண்கல்வியில் பல காலகட்டங்களை அறிஞர்கள் அடையாளப்படுத்தியிருக்கிறார்கள்.
பின்சடைக்காலம் கிபி 1950 முதல் 1965 வரையிலானது. ரெட்டைச்சடை ரிப்பனுடன்
பின்னால் தொங்கிய இக்காலகட்டத்தில் பெண்கள் கல்விமூலம் வயதுக்குவருவதாக
நம்பப்பட்டது. அந்த விளைவை அடைந்ததுமே பெண்ணை படிப்பு நிறுத்தி கண்ணேறு கழித்து
கட்டிக்கொடுக்கும் வழக்கம் நிலவியது. இப்பெண்கள் வீடு பள்ளி என இருமு¨னைகளில்
மட்டுமே கண்களை தூக்க பழக்கப்பட்டிருந்தார்கள். பிறவற்றை ஓரகக்கண்ணாலேயே
பார்க்கும் பழக்கம் கொண்டிருந்தமையால் இவர்களில் சிலர் ராணி வாராந்தரி போன்ற
இதழ்களைக்கூட ஓரக்கண்ணாலேயே படித்தார்கள்.

இவர்கள் கல்யாணத்துக்குப் பிறகு சமையல்செய்து கணவனை அனுப்பியபின் குழந்தையை
தூங்கவைத்துவிட்டு அலங்காரத்தையல், ஒயர் கூடைமுடைதல் முதலிய கலாச்சாரச்
செயல்பாடுகளில் ஈடுபட்டார்கள். வார இதழ்களில் வரும் தொடர்கதைகளை சேர்த்து
தைத்து எடுத்துக்கொண்டு பின்னலைதூக்கி போட்டு மல்லாந்து படுத்துக் கொண்டு
தாலிச்செயினில் இருந்துஎடுத்த ஊக்குப்பின்னால் பல்லக்குத்தியபடி வாசிப்பது
இக்காலத்தில் பரவலான வழக்கமாக இருந்திருக்கிறது. பானுமதி என்ற நடிகை
முன்னுதாரணமாக இருந்த இக்காலகட்டத்தில் பெண்கள் அந்தப் பெண்மணியைப்போலவே
குண்டாகி கழுத்து தெரியாமல் ஆவதே அழகென நம்பப்பட்டது. முழங்கை வரை வரும்
கோடுபோட்ட ஜாக்கெட் இக்கால வழக்கம்.

1965 முதல் 1975 வரையிலான காலகட்டம் மாறுசடைக்காலம் என்று அறிஞர்கள்
சொல்கிறார்கள். ரெட்டைச்சடைகளில் ஒன்றை முன்னால் தூக்கிப்போட்டுக்கொண்டு அதை
லேசாக பின்னியபடி படபடவென கண்களை அடித்தபடி பேசுவது இக்காலத்து புதுமை. இதற்கு
சரோஜாதேவி என்ற நடிகை முன்னுதாரணமாக இருந்திருக்கிறார். பெண்கள் டைப்
ரைட்டிங்,டீச்சர் டிரெயிங் கற்றால் வரதட்சிணைக்கு காசு சேர்ப்பது எளிது என்று
கண்டுகொள்ளப்பட்ட காலம் இது. ‘சம்பாதிக்கிறேங்கிற திமிர்’ கொண்டு பிற்பாடு
அடிவாங்கக்கூடிய பெண்களை ஆண்கள் விரும்பி மணந்திருக்கிறார்கள். பெண்கள் அதிகாலை
எழுந்து சமையல்செய்து மாமியார் மாமனாருக்கு எடுத்துவைத்துவிட்டு அன்றைக்கு
தேவையான சில்லறையை வாங்கிக் கொண்டு அலுவலகம்சென்று சம்பளத்தை அபப்டியே கணவனிடம்
கொடுத்தார்கள்.

இக்காலகட்டத்தில் பெண்ணியத்தின் முக்கியக் குறியீடான வேனிடி பேக்
அறிமுகமாகியது. இது கண்டக்டர் பைபோல் இருக்கிறதென ஆரம்பகாலத்தில்
சொல்லப்பட்டாலும் டீச்சர்களின் பாலியல் ஈர்ப்புக்கு இது ஒரு முக்கியக் காரணம்
என விரைவிலேயே அங்கீகரிக்கபப்ட்டது. இதற்குள் கசங்கிய ரூபாய், மூக்கு சிந்தி
மடிக்கபப்ட்ட கர்சீப், பவுடர் பொட்டலம், பஸ்ஸ¤க்கான சில்லறை முப்பாத்தம்மன்
பிரசாதம் ,தயிர்சாத டப்பா , குட்டிக் கண்னாடி, சீப்பு, வார இதழ் என பலவும்
வைக்கப்பட்டது. ‘பெண்மனம்’ என்று தொடர்கதைகளால் சொல்லப்பட்ட விஷயத்தின்
குறியீடாக இது பார்க்கப்பட்டமையால் தாய் மற்றும் கணவர்களால் ரகசியமாக திறந்து
பார்க்கப்பட்டு ஆழ்ந்து பரிசோதிக்கப்பட்டது. இது பின்னால் பித்தான்வைத்த
குட்டைக்கை ஜாக்கெட் இருந்த காலகட்டமும்கூட.

இக்காலகட்டத்தில் லக்ஷ்மி [எ] திரிபுரசுந்தரி புகழ்பெற்ற எழுத்தாளராக
இருந்தார். மனைவியைக் கொடுமைப்படுத்தி விட்டுவிட்டுச்செல்லும் கணவன் கடைசியில்
அவளிடமே வந்து நிற்கும் தண்டனைக்கு ஆளாகும் கதைகளை இவர் நிறைய எழுதியிருப்பதாக
தெரிகிறது. அதேசமயம் திரைப்படங்களில் ‘என்னைக் கைவிட்டுவிடாதீர்கள் அத்தான்
கைவிட்டு விடாதீர்கள்’ என்று கதறி அழுது காலில் விழும் பெண்களின் கதைகள்
புகழ்பெறிருந்தன. இக்காலகட்டப் பெண்ணியத்துக்கு உதாரணமான பெரும்படைப்பு
‘சித்திரப்பாவை’ என்ற நாவல். ஆசிரியர் அகிலன் இதற்காக ஞானபீட பரிசு பெற்றார்.
இதில் ஒருபெண் ஓவியன் ஒருவனை காதலிக்கிறாள். அவனுக்காக வீட்டைதுறந்து வரும்
வழியில் வில்லனால் வலுக்கட்டாயமாக முத்தமிடப்படுகிறாள். ஆகவே அவ்வில்லனையே
திருமணம் செய்துகொண்டு அவன் செய்யும் கொடுமைகளுக்கு முறைப்படி ஆளாகிறாள். அதன்
பின் அவனைதுறந்து ஓவியனிடம் வந்துசேர்கிறாள். இனிமேல் யாரும் முத்தமிடாமல்
இருக்கட்டும் என அவன் கடவுளை வேண்டிக் கொள்வதுடன் நாவல் முடிவடைகிறது.

1975 முதல் 1985 வரையிலான காலகட்டம் முன்சடைக்காலம். இருசடைகளையும் எடுத்து
முன்னால்போட்டுக் கொள்வதும், இரண்டையும் கைகளால் பற்றியபடி தலையை ஆட்டி ஆட்டிப்
பேசுவதும், நாக்கை கடித்துச் சிரிப்பதும், துள்ளி ஓடுவதும் இக்காலத்தில்
வழக்கமாக இருந்தது. ‘ஒரு டிகிரி இருக்கட்டுமே. களுத வீட்டில கெடந்து திண்ணு
பெருத்து தடிமாடாட்டு ஆறதுக்கு– என்ன?’ என்று பெற்றோர் எண்ணிய
இக்காலகட்டத்தில் கலைக்கல்லூரிகளில் பாதி இடங்கள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டன.
அக்பர், வேர்ட்ஸ்வெர்த், இடுபொருள் துணைமதிப்பு என எதை வருடக்கணக்காக கற்றாலும்
அரைநாளில் அவற்றை மறந்து இல்லறத்துக்கு தயாராகியமை எந்தச் சூழலிலும் தகவமைவு
கொள்ளும் பெண்ணின் திறமையையே காட்டுகிறது

இக்காலகட்டத்து பெண்கள் ஜெயலலிதா என்ற நடிகையால் பெரும் பாதிப்புக்கு
ஆளாகியிருந்தமை இயல்பே. மேலும் சிவசங்கரி, இந்துமதி, வாசந்தி என்ற முப்பெரும்
எழுத்தாளர்கள் தமிழ் வார இதழ்ச் சூழலில் உருவானார்கள். பேருந்தில் நான்காக
மடக்கிய இதழில் தொடர்கதை படித்தபடி பறக்கும் முடியை கோதிக் கொள்ளும் பாவனையில்
திரும்பிப்பார்க்கும் பெண்களை ஆண்களும் விரும்பியிருந்தார்கள். இப்பெண்களுக்கு
‘மனசு ஹோவென்று கிடக்கும் தினுசில்’ அவ்வப்போது இருக்கும். இவர்கள் ‘யூ?
‘நெவர்’ போல ஒருசொல் ஆங்கிலம் கலந்து கண்களை படபடவென அடித்துக் கொண்டு
பேசுவதுடன் ஆண்களிடம் கரிசனமாக ‘…மதூ உனக்கு ஏன் என்னைப்புரியலை?’ என்பது போல
அறிவார்ந்த விவாதங்களிலும் ஈடுபடுவார்கள். ஆண்கள் காலையில் எழுந்து காபி போட்டு
‘அனுக்கண்ணா காபிடா…”என்று தங்களை எழுப்பவேண்டுமென கனவு கண்டு காதலிக்க
முனைவார்கள். உண்மையிலேயே காதலித்து மாட்டிக்கொள்ளும் அசடுகளும் உண்டு.
கணவனிடம் புல்தளிர், சிட்டுக்குருவி, மழைமேகம், வண்ணத்துப்பூச்சி
போன்றவற்றைப்பற்றி பகல் முழுக்க பேசவேண்டுமென்று வற்புறுத்தி கொடுமைசெய்தார்கள்
இவர்கள் என்று சொல்லப்படுகிறது.

1985 முதல் 1995 வரையிலான காலகட்டத்தை சுரிதார் காலம் என்றும் பின்னர் உள்ளதை
ஜீன்ஸ் காலம் என்று ஆய்வாளர் வகுக்கிறார்கள். சுடிதார் காலகட்டத்தில்
பெண்விடுதலை மிதமிஞ்சிப்போய்விட்டதென்ற ஏக்கம் ஆண்கள் மத்தியிலே உருவானதன்
விளைவாக புதுக்கவிதை என்ற இலக்கிய வடிவம் உருவாகி மு.மேத்தா போன்ற கவிஞர்கள்
தாவணிகளைப்பற்றி எழுத ஆரம்பித்தார்கள். பெண்கள் தொடர்கதைகளில் மெல்லமெல்ல
நம்பிக்கை இழந்து ஒரே உணர்ச்சியை ஒவ்வொரு கதாபாத்திரமாக வரிசையாக அடையும்
தொலைக்காட்சித்தொடர்களை நோக்கி திரும்பிய காலகட்டம் இது. இக்காலகட்டத்தில்
பெண்கள் ஒவ்வொரு பேச்சுக்கு முன்னும் மிகமெல்ல திரும்பிப் பார்க்கும் வழக்கம்
ஏற்பட்டிருக்கிறது. தொலைக்காட்சித்தொடர் நாயகிக்கு பிரசவம் என்று பெண்
ஊழியர்கள் விடுப்பு எடுக்கும் விஷயமும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.

பெண்ணியம் ஒரு தனி அழகியல் மற்றும் அறிவுத்துறையாக மலர்ச்சி அடைந்த காலகட்டம்
இது. இக்காலகட்டத்தின் எழுத்தாளர் அம்பை என்னும் சி.எஸ்.லக்ஷ்மி. இவர் எழுதிய
கதைகளில் பெண்கள் நிறைய படித்தமையால் ஒன்றுமே தெரியாமலாகி குழந்தைத்தனத்துடன்
‘தோசை ஏன் வட்டமாக இருக்கிறது” போன்ற கேள்விகளை கிராமத்துப் பெண்களிடம்
கேட்டார்கள். அம்பையின் நாயகி ”வாழ்நாளில் இதுவரை எத்தனை தோசை
சுட்டிருப்பீர்கள்?”என்று கிராமத்து ஆச்சியிடம் கேட்டபோது பக்கத்து டீக்கடை
ராமையாக் கோனார் அவர் அடித்த டீக்களின் கணக்கையும் கேட்பாளோ என்று அஞ்சி
கடைபூட்டி அம்பாசமுத்திரத்திற்கு கம்பிநீட்டியதாக சொல்லப்படுகிறது.

கணவனை டேய் என்று அழைப்பது, நல்வழிப்படுத்தும் பொருட்டு மட்டும் அவ்வப்போது
அவனை அடிப்பது, கணவன் நண்பனின் தோளில் சாய்ந்துகொண்டு ஆங்கிலச் செய்தித்தாள்
படிப்பது போன்றவை இக்காலகட்டத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கின்றன. பேச்சில்
‘ஷிட்’ ‘மென்ஸ்ட்ரூவல் பிளட்’ ‘சிமோங் த பூவா’ போன்ற சொற்கள் கலப்பது அவசியமாக
இருந்திருக்கிறது. பொட்டு வைக்காமை, பிரா போடாமை போன்றவையும் அக்கால வழக்கம்
எனச் சொல்கிறார்கள். சிகரெட் பிடிபப்தும் பீர், ஒயின் அருந்துவதும்
சாலச்சிறப்பே.

பெண்ணிய ஆயுதமாக துப்பட்டா மாறியதை இக்காலகட்ட வரலாறு ஆவணப்படுத்துகிறது.
துப்பட்டாவை தோளில்போட்டுக்கொள்ள இருநூற்று எண்பத்தேழு வழிகள் இருக்கின்றன. அதை
மார்புகளை மறைக்கவும் பயன்படுத்தலாம், கல்யாணத்துக்கு பிறகு. இலக்கிய மேடைகளில்
துப்பட்டா கொடியாகப் பயன்படும்.

இக்காலகட்டத்தில்தான் பெண்கவிஞர்கள் நிறைய உருவாகி வந்தார்கள். ‘நீ நீதான்,
நான் நான்தான்’ என்பதே இக்காலகட்டத்தில் எழுதப்பட்ட கிட்டத்தட்ட
நாற்பத்தியெட்டாயிரத்தி அறுநூற்று எண்பத்திமூன்று கவிதைகளின் மையக்கரு என்று
தெரிகிறது. ‘நல்லவன் இல்லையோநீ?’ என்று ஒரு பெண்கவிஞர் எழுதிய வரியை சில
விஷமிகள் தவறாகப் படித்து பொருள்கொண்டமையால் ஏற்பட்ட பரபரப்பைத் தொடர்ந்து அதே
சொல்லை பெண்கவிஞர்கள் அனைவருமே பாவிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானதை
வரலாற்றுக் கொடுமை என்றே சொல்லவேண்டும். ஒரு பெண்கவிஞரின் கவிதைத்தொகுதியை
நாயுடுஹால் ஸ்பான்ஸர் செய்து வெளியிட்டது என்ற செய்திக்கும் ஆதாரம் ஏதுமில்லை.

ஜீன்ஸ் காலகட்டத்தில் பெண்கள் இறுக்கமான டாப்ஸ¤ம் அதைவிட இறுக்கமான ஜீன்ஸ¤ம்
அணித்து இரண்டுக்கும் நடுவே அரையடி இடைவெளி விட்டு சிவந்த சாயமிட்ட கூந்தலை
அலைபாய விட்டு குரல்வளை தெரிய சிரித்தார்கள். பைக்குளில் பின்னால் கால்பரப்பி
அமர்ந்து ஒட்டிக்கொண்டு சென்றார்கள். செல்போனில் பதினெட்டுமணிநேரம் பேசும்
வழக்கம் இருந்தது. இப்பேச்சுக்களை இடைவிடாது கேட்கும்பொருட்டு இளைஞர்கள்
தன்னையறியாமலேயே உம் கொட்டும் பழக்கத்தை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்.
இவர்களின் ஊடகமாக இணையமே இருந்தது என்று வரலாறு ஆவணப்படுத்துகிறது. இவர்கள்
அதிகமும் ஆர்குட் என்ற இணைய தளத்தை பயன்படுத்தினார்கள். ‘தினத்தல்’ என்று
தமிழ்க்கொண்டல் மூலம்கிழார் அவர்களால் [பேரன் அவர் பெயரை பைல்ஸ்கிழார் என்று
மாற்றியதாக கூறப்படுவது அவதூறு] தமிழாக்கம் செய்யப்பட்ட டேட்டிங்
இக்காலகட்டத்தில் பரவலாக இருந்திருக்கிறது.

ஆர்க்குட் இணையதளப் பதிவுகளை விரிவாக ஆராய்ந்த மிச்சிகன் பல்கலையின் ஸ்டீ·பன்
ரான் என்ற ஆய்வாளர் இக்காலகட்டத்தில் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு கொண்ட
பெண்கள் நிறையவே இருந்திருக்கிறார்கள் என்றும்; இவர்கள் ஏராளமாக ஆண்களைக்
கவர்ந்திருக்கிறார்கள் என்றும் தன் ஆய்வேட்டில் சொன்னதை உடனே மறுத்து முனைவர்
ஆர். நாராயணசாமி அவர்கள் எல்லாம் பெண்பெயரில் எழுதிய ஆண்கள் என்று
நிறுவுகிறார். அவர்களால் கவரப்பட்ட ஆண்கள் அனைவரும் மாற்றுப்பெயர் சூட்டிக்
கொண்ட பெண்கள் என்றும் அவர் விளக்குகிறார். இதில் எதை பெண்ணியம் என்பது என்று
ஆய்வாளர் நடுவே நீடித்த விவாதம் உள்ளது.

முந்தைய கட்டுரைபுகோகா மீண்டும் இரு கடிதங்கள்
அடுத்த கட்டுரைகாலச்சுவடுக்கு தடை