ஊட்டி காவிய முகாம் 2012 – பகுதி 1

ஊட்டியில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் நடந்த குருநித்யா ஆய்வரங்கத்துக்கு நான் சென்றுசேரும்போது அது ஏற்கனவே கால்வாசி முடிந்திருந்தது என்றுதான் சொல்லவேண்டும். நிகழ்ச்சி 25 ஆம் தேதி காலையில்தான். ஆனால் தேவதேவன் உள்ளிட்ட பல நண்பர்கள் 24 ஆம் தேதியே வந்துவிட்டார்கள். நான் ஊரிலிருந்து கிளம்பும்போது கிருஷ்ணனை அழைத்து என்ன செய்கிறீர்கள் என்று கேட்டேன். ‘தேவதேவன்கிட்ட சீரியஸா டிஸ்கஸ் பண்ணிட்டு வாக்கிங் போறோம்…டிஸ்டர்ப் பண்ணாதீங்க’ என்று சொல்லிவிட்டார்.

நான் உண்மையில் பலவேலைகளில் சிக்கி முன்பதிவு செய்ய மறந்துவிட்டேன். அவசரமாகச் சென்று கோவைக்கு ஒரு டிக்கெட்டை கெஞ்சிக் கூத்தாடி எடுத்துக்கொண்டு கிளம்பி 25 காலையில் கோவை வந்து சேர்ந்தேன். சிங்காநல்லூரில் இறங்கி நாஞ்சில்நாடனின் வீட்டுக்குச் சென்றேன். அங்கே குளித்து உடைமாற்றிக் கொண்டிருந்தபோது அரங்கசாமி வந்தார். அதிர்ச்சியுடன் ‘கெளம்பலியா?’ என்றார்.’ கெளம்பியச்சே? பல்லுதேச்சு குளிச்சு நாலு தோசைய பிச்சு வாயில போட்டுக்க வேண்டியதுதான் பாக்கி’ என்றார் நாஞ்சில்.

தோசையை அவர் சாப்பிடுவதற்கு அனுமதிக்காமல் கிளம்பினோம். வழியில் எம்.ஏ.சுசீலாவையும் ராமசந்திரஷர்மாவையும் ஏற்றிக்கொண்டோம். ஊட்டிக்கு கோத்தகிரி வழியாகச் செல்லும்பாதைதான் அதிக போக்குவரத்து இல்லாதது. நான் கொஞ்சநேரம் கழிந்ததுமே தூங்கிவிட்டேன். ஊட்டிக்கு ஏறும்போதும் இறங்கும்போதும் தூங்கிவிடுவது என் வழக்கம். என் பார்வைப்பிரச்சினை காரணமாகவோ என்னவோ எனக்கு ஊட்டிமலையின் சுழல்பாதை தலைசுற்றவைக்கும்.

ஊட்டிக்குச் சென்றுசேர்ந்தது ஒன்பதரை மணிக்கு. குருகுலம் முழுக்க கூட்டம்கூட்டமாக நண்பர்கள் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். காலையுணவு சாப்பிடும் இடத்திலும் பெரிய கூட்டம். சென்றதுமே ஒவ்வொருவரையாக அறிமுகம் செய்துகொண்டேன். பலநண்பர்களை சென்றகூட்டத்துக்குப்பின் இப்போதுதான் பார்க்கிறேன்.

ஒவ்வொரு கூட்டத்துக்கும் இருபதுபேர்வரை புதியவர்கள் வருவதுண்டு. அவர்களில் பெரும்பாலானவர்கள் கூட்டம் மிக அற்புதமாக நடந்தது என்று சொல்வார்கள். ஆனால் அடுத்த கூட்டத்துக்கு வருவது இல்லை. ஆகவே புதிய வருகையாளர்களைப் பொறுத்தவரை அவர்கள் அடுத்த கூட்டத்துக்கும் வருகிறார்களா என்பதைக்கொண்டே அவர்களை மதிப்பிடவேண்டும் என்பது என் எண்ணம். பலருக்கு முதலில் ஒரு திகைப்பும் ஓர் அன்னியத்தன்மையும்தான் உருவாகின்றன.

அதற்கான காரணம் எங்கள் கூட்டங்களின் இயல்புதான். இந்நிகழ்ச்சிகள் ஆரம்பம் முதலே சில பொதுவான விதிகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. ஒன்று வருகையாளர்களில் மிகச்சிறந்தவர்களின் தரத்திலேயே விவாதங்கள் நிகழும். அந்த தரத்தை எட்ட மற்றவர்கள் முயன்று முன்னால் நகரவேண்டுமே ஒழிய வருகையாளர்களின் சராசரித் தரம் நோக்கி விவாதத்தை இறக்க மாட்டோம். கலையிலக்கிய விஷயங்களில் இதுவே சரியான அணுகுமுறை.

விவாதங்கள் இன்றுவரை தமிழிலக்கியச் சூழலில் நிகழ்ந்த விவாதத்தின் இயல்பான நீட்சியாக இருக்கும். கலைச்சொற்கள், கோட்பாடுகள் எவையுமே புதியதாக விளக்கப்பட மாட்டாது. எப்போதுமே வலுவான நாலைந்து தரப்புகள் இருப்பதனால் எல்லா கருத்துமே மறுக்கப்பட்டுவிடும். ஆகவே புதியதாக வருபவர்களுக்கு ஒரு திகைப்பு உருவாகும். ஆனால் அவர் தன்னை அன்னியப்படுத்திக்கொள்ளாமல் கவனித்தாரென்றால் ஏராளமான புதிய வாசல்கள் திறக்கும், புதிய திறப்புகள் கிடைக்கும். அப்படிப்பட்டவர்களே எங்கள் இலக்கு.

சுவாமி வியாசப்பிரசாத் துவக்கவுரை

குருகுலத்தை கவனித்தபோது ஒன்று கண்ணில்பட்டது, குருகுலம் பழுதடைந்தபடியே செல்கிறது.. ஊட்டி போன்ற கடும்பருவநிலை உள்ள ஊரில் கட்டிடங்களை தொடர்ந்து பழுதுபார்க்கவேண்டும். அதிலும் ஊட்டி குருகுலம் தகரத்தாலும் ஓடாலும் கட்டப்பட்டது. பல இடங்களில் ஓடுகள் சரிந்து, தகரம் உடைந்து காணப்பட்டது. விருந்தினர் அறைகளின் முகப்பிலிருந்த சோபாக்கள் முழுமையாக பழுதடைந்து குப்பைகள் போலிருந்தன. நாற்காலிகள் அனேகமாக இல்லை. ஒப்புநோக்க புதியதான நூலகக் கட்டிடமே பல இடங்களில் பழுதடைந்தே இருந்தது.

அனைவரும் அமர்ந்து உண்ண இடமில்லை என்பதனால் திறந்தவெளியிலேயே உணவுண்ண நேரிட்டது. மழைபெய்திருந்தால் சிக்கலாகியிருக்கும். வருகையாளர்களிடம் அசௌகரியங்களை பொறுத்துக்கொள்ளவேண்டும் என்று கோரியிருந்தேன். அவர்கள் அதையெல்லாம் பெரிதுபடுத்தமாட்டார்கள் என நினைக்கிறேன். குருகுலம் நித்யாவின் வாசஸ்தலமாக பொலிந்தது. இன்று அவர் இல்லை. ஆகவே வருகையாளர்கள் மிகவும் குறைவு. மெல்லமெல்ல அது பழுதடைந்து மறையக்கூடும். ஒருவகையில் அதுவும் இயல்பான ஒன்றே.

பத்து மணிக்குள் குளித்து காலையுணவு உண்டு தயாராகிவிட்டேன். பிறகூட்டங்களைப்போல கூட்டம் தொடங்குவதற்காக அனைவரையும் மாறிமாறி கூப்பிட்டுக்கொண்டே இருக்கவேண்டிய நிலை எங்கள் கூட்டங்களில் இல்லை. பொதுவாக எல்லாருமே பழகிவிட்டார்கள். ஒருநாளைக்கு குறைந்தது எட்டுமணிநேரம் விவாத அமர்வு என்பது எங்கள் திட்டம். அப்படி தீவிரமாகவும் முழுமூச்சாகவும்தான் அமர்வுகள் இருக்கும் என்பதை அறிந்தவர்கள் மட்டுமே வருகிறார்கள்.

பத்தரைக்கு ஆரம்பித்தோம். சுவாமி வியாசப்பிரசாத் வாழ்த்துரையாக நான்கு சொற்றொடர்கள் சொன்னார். சென்னையில் இருந்து வந்தவர்கள் மட்டும் வண்டி தாமதமானதனால் கொஞ்சம் பிந்தி வந்தார்கள். மலேசியாவிலிருந்து சுவாமி பிரம்மானந்தாவும் எழுத்தாளர் கோ.புண்ணியவானும் சு.யுவராஜனும் வந்திருந்தனர். மொத்தம் அறுபத்திமூன்றுபேர் பங்கெடுத்தார்கள்

முதல் அரங்கு நாஞ்சில்நாடனின் கம்பராமாயண விளக்கவுரை. சென்றமுறை பாலகாண்டம் நடத்தியிருந்தார். ஆகவே இம்முறை அயோத்தியா காண்டம் நடத்தினார். கிட்டத்தட்ட நூறுபாடல்களை தேர்ந்தெடுத்து கொடுத்திருந்தார். அவற்றை அச்சிட்டு அனைவருக்கும் கொடுத்திருந்தோம்.

முறையான செவ்வியல் வாசிப்பின் வழிதான் கடைப்பிடிக்கப்பட்டது. முதலில் பாடல் நாலைந்துமுறை வெவ்வேறு பேர்களால் பதம்பிரித்து வாசிக்கப்படும். பின்பு அருஞ்சொற்கள் விளக்கப்பட்டு வரிகளை கொண்டுகூட்டி பொருள் விளக்கம் பெறப்படும். அதன்பின் அதில் உள்ள நுட்பங்களும் நயங்களும் நாஞ்சிலால் சுட்டிக்காட்டப்படும். அதன்மேல் ஜடாயு, எம்.ஏ.சுசீலா உள்ளிட்ட பிறர் அவர்கள் அறிந்த நயங்களை சொல்வார்கள். சமானமான பிற பாடல்களை சுட்டிக்காட்டுவார்கள்.

மரபான செய்யுட்களை வாசிக்கும் வழக்கமே இல்லாதவர்களுக்கு ஆரம்பத்தில் ஒரு சிறு திகைப்பு இருந்தாலும் சட்டென்று செய்யுட்கள் திறந்துகொள்ள ஆரம்பிக்கும். பலநண்பர்கள் சில பாடல்களுக்குப் பின் தாங்களே பொருளை புரிந்துகொண்டுவிட்டோம் என்று சொன்னார்கள். இவ்வளவு எளியதா இவ்வாசிப்பு என்ற ஆச்சரியத்தை சிலர் சொன்னார்கள். பெரும்பாலானவர்களுக்கு பிரச்சினையாக இருப்பது கொண்டுகூட்டி பொருள் கொள்ளுதலே என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.

நவீன உரைநடை வாசிப்பவர்கள் கம்பன் கவிதையையும் அப்படி நேர்கோடாக வாசிக்கிறார்கள். பொருள் கிடைப்பதில்லை. அவற்றை உடைந்த வரிகளாக பார்க்கவேண்டும், பொருள் வரும்படியாக மறுபடியும் தொகுத்துக்கொள்ளவேண்டும். அதை சிலமுறை செய்யக்கண்டால் அந்த முறைமை பிடிகிடைக்கும்.

காலை அமர்வு மதியம் இரண்டு மணிக்கு முடிந்தது. மதிய உணவு இடைவேளை ஒரு மணிநேரம். அதன்பின்னர் மீண்டும் மூன்றுமணிக்கு இரண்டாம் அமர்வு. ஐந்தரை மணிக்கு இரண்டாம் அமர்வு முடிந்தபின்னர் மாலைநடைக்கான இடைவேளை. நாங்கள் சிலர் குருகுலத்துக்கு அருகே உள்ள பெரிய தேயிலைத்தோட்டம் வழியாக சென்று மேலே இருந்த சிறிய காட்டுக்குச் சென்றோம். அதன் கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். தேவதேவனும் நண்பர்களும் ஒரு குழுவாக நடைசென்றனர். நாஞ்சில்நாடனும் நண்பர்களும் இன்னொரு குழுவாக.

நாஞ்சில்நாடன், முகாமில்

இந்த சந்திப்புகளில் மிக முக்கியமான அம்சமே இந்த இடைநேரங்கள்தான். இவை ஒருவரோடொருவர் பேசிக்கொள்ளவும் விவாதிக்கவும் இடமளிக்கின்றன. கேலியும் கிண்டலும் உண்டென்றாலும் பெரும்பாலானவர்கள் தீவிரமாகப் பேசிக்கொண்டிருப்பதையே கேட்க முடிந்தது.

மாலை ஏழரை மணிக்கு மீண்டும் கம்பராமாயண அரங்கு. ஒன்பதரைவரை. நாஞ்சில்நாடன் அயோத்தியா காண்டத்தில் அவர் கொண்டுவந்திருந்த பாடல்களை முடித்ததும் ஜடாயு தொடர்ந்து கம்பராமாயண வகுப்பெடுத்தார். நாஞ்சில்நாடன் அவரது இயல்புக்கு ஏற்ப உணர்ச்சிகரமான கதைச்சந்தர்ப்பங்களில் உச்சகட்ட உரையாடல்கள் கொண்ட பகுதிகளை தேர்வுசெய்திருந்தார். ஜடாயு கம்பனின் இன்னொரு முகத்தை காட்டும் முகமாக வர்ணனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பாடல்களை தேர்வுசெய்திருந்தார்.

நாஞ்சில் கம்பராமாயண வகுப்பு

இரவு தங்குவதற்கு பாதிப்பேருக்குத்தான் அறைகள். மிஞ்சியவர்கள் அதே நூலகக் கூடத்தில்தான் படுத்துக்கொள்ளவேண்டும். அனைவருக்கும் கம்பிளிகள் வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தன. நிர்மால்யா அலைந்து திரிந்து புத்தம்புதிய கம்பிளிகளாக வாடகைக்கு எடுத்திருந்தார். அறைகளில் தங்குபவர்கள் பொதுவாக மூத்தவர்கள் என்பது வழக்கம். கூடத்தில் இரவுணவுக்குப்பின்னர் இசைநிகழ்ச்சிகள். சுரேஷின் ‘மிமிக்ரி’ நிகழ்ச்சி. அதன்பின் அவரும் ராமசந்திர ஷர்மாவும் ஸ்ரீனிவாசனும் பாடினார்கள். திரைப்படப்பாடல்கள், மரபிசைப்பாடல்கள். சிரிப்பும் உற்சாகமுமான நேரம்.

பொதுவாக பதிவுசெய்யப்பட்ட இசையை கேட்பதற்கும் நேரடியாக இசைகேட்பதற்கும் மிகப்பெரிய வேறுபாடுள்ளது. நேரடியாகக் கேட்கும் இசை நம்மை அப்படியே ஆட்கொள்கிறது. கருவியில் இருந்து எழும் இசையில் இருந்து நாம் விலகி விலகிச்செல்கிறோம். ராம் பாடிய மரபிசைப்பாடல்களை கருவி வழியாகக் கேட்டிருந்தால் அவ்விசைக்குப் பழக்கமில்லாத பெரும்பாலானவர்கள் எளிதில் தாண்டி சென்றிருப்பார்கள். அன்று உணர்ச்சிகரமாக கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

தேவதேவன்

இரவு பன்னிரண்டு மணிக்கு நிறுத்திக்கொள்வோம் என்று நானே கேட்டுக்கொண்டேன். ஆனால் அதற்குப்பின்னரும் மூன்றுமணிவரை ஷர்மாவும் ஒரு சிறு கும்பலும் வெளியே குளிரில் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் உள்ளே வரும் ஒலி கேட்டுத்தான் அதை நான் கவனித்தேன்.

காலை ஆறரை மணிக்கு எழுந்து டீ குடித்ததும் காலைநடை சென்றோம். லவ்டேல் பள்ளிவளாகம் இருக்கும் அழகிய பள்ளத்தாக்கு வரை. அங்கே ஓடும் ஒரு ஓடையின் மீதுள்ள பாலத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது நித்யாவின் வழக்கம். ஒவ்வொருமுறை நாங்கள் செல்லும்போதும் அங்கே அமர்வதை தவிர்ப்பதில்லை. ஊட்டியில் இம்முறை மிகவும் மிதமான காலநிலை. பகலில் ஸ்வெட்டர் தேவைப்படவில்லை. இரவில் ஒரு கம்பிளியே போதுமானதாக இருந்தது. மலைப்பகுதிகளில் காலையொளி பரவுவதைக் காண்பது ஓர் அற்புதமான அனுபவம்.
[மேலும்]

படங்கள் : ஆனந்த் உன்னத்


படங்கள் ஜடாயு

முந்தைய கட்டுரைபுனைவு, முழுமை
அடுத்த கட்டுரைஊட்டி காவிய முகாம் 2012 – புகைப்படத் தொகுப்பு