ஓரினச்சேர்க்கையும் இந்தியப்பண்பாடும்

homo2

 

ஜெ,

ஓரின சேர்க்கை பற்றி உங்களுடைய ஒரு பழைய இடுகையை பார்த்தேன்.

எனக்கு உள்ள சந்தேகம் என்னவென்றால், இப்போது இந்திய சூழலில், இதற்காக குரல் கொடுப்பவர்களில் பலர் அமெரிக்க மேற்கத்திய கலாச்சாரத்தின், துதர்களாகவே இருக்கிறார்கள். உதாரணம் பார்க்க.. [பிங்க்pages]

இவர்களுக்கு இந்திய பண்பாடு பற்றிய இடுபாடு இருக்குமா என்பது எனக்கு சந்தேகமாக இருக்கிறது..

இதனாலேயே, இதன் மூலம் நன்மை பிறக்கும் பட்சத்தில், அது நம் வேர்களை பிடுங்கி , மேற்கத்திய கலாச்சாரத்தை நிறுவதன் மூலமே நடக்கும் அல்லவா?

நன்றி,
சிவா

பி கு:
௧) நான் சரியாக விளக்கி இருக்கிறேனா என்று தெரியவில்லை. குழப்பியிருந்தால் தெரியபடுத்தவும்.

௨) என்னுடைய தனிப்பட்ட கருத்து : முதலில் இந்த ஓரினசேர்க்கையாளன் என்பதே, ஒரு வட்டத்துக்குள் மனிதனை குறுக்க நினைப்பது. காமத்தை பொறுத்த வரை, மனிதனின் தேவைகள், மிக மிக குழப்பமானது. அது நபருக்கு நபர் மட்டுமல்லாமல், ஒரே நபருக்கே நேரத்துக்கு நேரம் , சூழலுக்கு சூழல் மாறுபடுகிறது.

அன்புள்ள சிவா,

ஒரு அடிபப்டையான பிரச்சினையை அது இந்தியப்பண்பாட்டுக்கு சாதகமா பாதகமா என்ற அடிப்படையில் அணுகுவதில் எனக்கு உடன்பாடில்லை. அந்த பிரச்சினைக்கான தீர்வென்ன என்ற அடிப்படையில் மட்டுமே அணுகவேண்டும்.

இந்தியப்பண்பாடு என்பது சில சமகால ஒழுக்கவிதிகளில் உள்ளது என்பது ஒரு வகையான பாமர நம்பிக்கை. இந்து மதமும் சரி இந்தியப்பண்பாடும் சரி ஒழுக்கத்தை, நெறிகளை முதன்மையாக்குவன அல்ல.

இந்துமரபு ஒழுக்க நெறிகளை ஸ்மிருதிகள் என அவை வகுக்கின்றது. காலந்தோறும் மாறக்கூடியவை அவை. மாறாதவை சுருதிகள். மெய்ஞானத்தை விளக்கும் நூல்கள். அந்த மெய்ஞானத்தின் அடிப்படையிலேயே இந்துப்பண்பாடு அமைந்துள்ளது.

இந்தியாவின் மரபான பண்பாடென்பது இந்து பௌத்த சமணப்பண்பாடுதான். அவை ஒருபோதும் மானுடசமத்துவத்துக்கும் மானுட இன்பத்துக்கும் எதிரான மெய்யியல் கொண்டவை அல்ல. அவற்றின் ஒழுக்கநெறிகள் எப்போதும் மறுபரிசீலனைக்குரியவைதான்.

இந்துப்பண்பாடு ஓரினச்சேர்க்கை போன்றவற்றை பரிவுடன் மட்டுமே அணுகியிருக்கிறது என்பதற்கு நூற்றுக்கணக்கான நூலாதாரங்களைக் காட்டமுடியும் [மாறாக ஓரினச்சேர்க்கையை பெரும் கீழ்மையாக கருதி சபரிமலை அய்யப்பன் ஓரினச்சேர்க்கையில் பிறந்தவர் என கேலிசெய்து திரிந்தவர்கள் இங்குள்ள நாத்திகப்பிரச்சாரகள்தான்]

நம்மைப்பொறுத்தவரை மானுடசமத்துவம் சார்ந்த, மனித உரிமை சார்ந்த பெரும்பாலான சிந்தனைகள் ஐரோப்பிய தாராளவாதசிந்தனை மரபில் இருந்தே வந்துள்ளன. நேற்று பெண்கல்விக்காக பேசியவர்கள் ஐரோப்பாவால் தூண்டுதல் பெற்றவர்களே. இன்று ஓரினச்சேர்க்கைக்காக பேசுவபவகள் அப்படி இருபப்தில் என்ன தவறு?

அவர்கள் இந்தியப்பண்பாட்டை பொருட்படுத்தவில்லை என்றால் இந்தியப்பண்பாட்டில் இருந்து ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான உரிமைகளுக்காக வாதங்களை கண்டுபிடித்து குரல் எழுப்பலாமே

ஜெ

ஓரினச்சேர்க்கை

முந்தைய கட்டுரைசாமர்வெல்
அடுத்த கட்டுரைபுனைவு, முழுமை