அடிமைகளும் கலையும்

அன்புள்ள ஆசிரியருக்கு,

‘அருகர்களின் பாதை’ – வரலாறும் ஆன்மீகமும் கலையும் இலக்கியமான வர்ணனைகளும் கலந்த உன்னதமான அனுபவத்தில் தினமும் திளைத்தேன். உங்களைப் போன்றே ஆன்மஉணர்ச்சி கொண்ட மொழிபெயர்ப்பாளர்களால் இந்தியிலும் மற்ற மொழிகளிலும் மாற்றப்பட்டு மேலும் பல கோடி பேர் அனுபவிக்க வேண்டும் என்று ஆசையாகஇருக்கிறது !

அற்புதமான கோயில் கலைகளைப் பார்க்கையில் மனதோரம் களிம்பு போல ஒருசந்தேகம் ஒட்டிக் கொள்கிறது. (நீங்கள் சொல்லும் மனிதச் சிறுமையின்அடையாளமா என்று தெரியவில்லை). தங்கள் விளக்கம் என் பார்வையை விசாலமாக்கும் என்ற நம்பிக்கையில் கேட்கிறேன்…

எகிப்து பிரமிடுகளைப் பற்றிய ஒரு காணொளியில் சில எலும்பு அகழ்வாராய்ச்சிகளைக் காட்டினார்கள் – குடும்பம் குடும்பமாக வருடக்கணக்கில் பிரமிடுக்கருகே வாழ்ந்து, டன் கணக்கில் கல் சுமந்து முதுகெலும்பு வளைந்தே போன பெயரற்ற அடிமைகளின் எலும்புகள்.

இதே போல இந்தியக் கோயில்களைக் கட்டவும் அடிமைகள் பயன்படுத்தப்பட்டார்களா? எனக்கு ராஜராஜன் மேல் இந்த விஷயத்தில் நம்பிக்கை இல்லை – ஆனால் குமாரபாலரும் ஆற்றிமாப்பியும் கட்டிய சமண ஆலயங்களிலும் இதே ரத்தக்கறை இருக்கிறதா ? அப்படி இருந்தால் அவற்றின் ஆன்மீகம் சற்று ஒளியிழக்கிறதா ?

நன்றி
மது

அன்புள்ள மது,

ஒரேவரியில் இதற்கான பதிலைச் சொல்லிவிடலாம். அடிமைகளால் உழைப்பைக் கொடுக்கமுடியும், கலையை கொடுக்க முடியாது. கலையுருவாக்கத்தையும் கட்டாய உழைப்பையும் பிரித்தறியத் தெரியாத பாமரர்களால் உருவாக்கப்பட்டது இந்த விசித்திரமான வாதம்.

சென்ற காலங்களில் கூட்டான பெரும் உழைப்பு மனிதர்களால் சாத்தியமாகியிருக்கிறது. அதன் பிரமிக்கத்தக்க தடயங்களை நாம் உலகமெங்கும் காண்கிறோம். அந்த உழைப்பு கட்டாயமாக அவர்களிடமிருந்து பிடுங்கப்பட்டிருக்க வேண்டும், வேறுவகையில் உழைப்பு அவர்களிடமிருந்து வெளிப்பட்டிருக்கவே முடியாது என்பது கார்ல் மார்க்ஸ் என்ற உடலுழைப்பை அறியாத பிரபு உருவாக்கிய பாடம்.

அடிமைமுறை என்றால் என்னவென்றே தெரியாத பழங்குடிச்சமூகங்களில்கூட மகத்தான உழைப்பின் சின்னங்கள் உள்ளன. ஏனென்றால் உழைப்பில் மனிதனின் பேரின்பம் உள்ளது. உழைப்பு மனிதனுக்கு அவனுடைய சூழலை வென்று செல்வதற்கான ஒரு வழியாக, தன்னை பிரம்மாண்டமாக ஆக்கிக்கொள்வதற்கான முறையாக இருந்திருக்கிறது. அந்த உழைப்பே அவனை இங்கே கொண்டுவந்து சேர்த்தது.

சமீபத்தில் என் ஊருக்குச் சென்றிருந்தேன். எங்களின் வடக்கத்தி வயலில் இருந்து வீட்டுக்கு ஆறு கிலோமீட்டர் தூரம் என்பதை இப்போதுதான் அறிந்தேன். முழுக்கமுழுக்க தலைச்சுமையாக அங்கே மொத்த சாணியையும் சுமந்து சென்றிருக்கிறேன். கதிர்களை சுமந்துகொண்டு வந்திருக்கிறேன். ஒருநாளில் நூறு கிலோமீட்டர்கூட சுமையுடன் நடந்திருப்பேன்! இன்று நினைத்துப்பார்க்கவே முடியவில்லை.

ஏனென்றால் அது அன்றைய வாழ்க்கை. அங்கே உடலுழைப்பை எவரும் அளவிடுவதில்லை. அது அன்றாடவாழ்க்கையின் இயல்பான பகுதியாக இருந்தது. அந்த வாழ்க்கையுடன் முழுமையாக பிணைக்கப்பட்டிருந்தோம். வேறு எதுவும் தெரிந்திருக்கவில்லை. வெற்றியும் நிறைவும் அதில்தான் இருந்தது.

திருவட்டார் கோயிலுக்கு அருகே கிராமங்களில் கல்வேலை செய்பவர்கள், சுண்ணாம்புவேலை செய்பவர்களின் தெருக்கள் இப்போதும் உள்ளன. முந்நூறு வருடம் முன்பு மார்த்தாண்ட வர்மா அக்கோயிலை விரிவாக்கிக் கட்டியபோது கொண்டுவந்து குடியேற்றப்பட்டவர்கள். அத்தகைய தெருக்களை எல்லா பெரிய கோயில்களை ஒட்டியும் காணமுடியும். அவர்கள் அடிமைகள் அல்ல. அவர்கள் அந்தவேலைகளுடன் முழுமையாக பிணைக்கப்பட்டிருந்தார்கள். அதில்தான் அவர்களின் திறமையை வளர்த்துக்கொண்டார்கள். வெற்றியையும் முழுமையையும் அடைந்தார்கள்.

இந்திய ஆலயங்களைக் கட்ட அடிமைகளைப் பயன்படுத்தினார்கள் என்பதற்கான எந்த ஆதாரத்தையும் நாம் எந்த நூலிலும் காண முடிவதில்லை. நம்முடைய மாபெரும் ஆலயங்களைக் கட்டியவர்கள் கலைஞர்களும் தனித்திறன் கொண்ட தொழிலாளர்களும்தான். அவர்கள் அந்தந்தத் தொழிலுக்கு ஏற்ப துணைச்சாதிகளாக இருந்தனர். இந்த துணைச்சாதிகள் உண்மையில் தனித்தொழிலாளர் குழுக்கள்தான். ஐரோப்பிய தொழிற்கூட்டுகளுடன் [ Labor Guilds] இவற்றை ஒப்பிடலாமென பலர் எழுதியிருக்கிறார்கள்.

இந்தக் கலைஞர்குழுக்கள் மற்றும் தொழிற்குழுக்கள் அரசாங்கத்திற்குக் கூட கட்டுப்படாதவையாக, பொதுவான சமூக ஆசாரங்களுக்கு மாறானவையாக இருந்திருக்கின்றன என்பது தொடர்ந்து பதிவுசெய்யப்பட்டுள்ளது. பக்தி இயக்கம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில்கூட இவற்றில் பல தாந்த்ரீக மதங்களை பின்பற்றின.

சின்ன விஷயங்களுக்கெல்லாம் அரசர்களுடன் முரண்பட்டபோது இவர்கள் ஒட்டுமொத்தமாக நாட்டை விட்டு கிளம்பியதையும் அரசர்கள் சென்று சமாதானம்செய்து அழைத்துவந்ததையும் பல கல்வெட்டாதாரங்கல் காட்டுகின்றன

இந்தக் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் எந்த நிலையில் இருந்தார்கள் என்பதை நாம் நம்மிடம் புழங்கும் நாட்டார் கதைகளில் இருந்தே அறியலாம். ராஜராஜனைப்பற்றியே ஒரு கதை உண்டு. தஞ்சை பெரிய கோயிலைக் கட்டியபோது சிலைவடித்த சிற்பிக்கு அவன் வெற்றிலை மடித்துக்கொடுத்தான் என்று. அது அச்சிற்பிகளின் குழுமங்களுக்கு இருந்த அதிகாரத்தையே காட்டுகிறது.

இந்த மாபெரும் கோயில்களை நாட்கணக்கில் மாதக்கணக்கில் வேறெதையுமே அறியாமல் எதைப்பற்றியும் கவலைப்படாமல் செய்துகொண்டிருக்கக் கூடியவர்கள்தான் உருவாக்க முடியும். கலையின் இயல்பு அது. கலை அவர்களை முழுமையாக உள்ளே இழுத்துவிடும். அவர்களை அச்சமூகமே பேணியது. பெரும்பாலும் போர்களால் மட்டுமே கோயில்கட்டும் வேலை முடங்கியிருக்கிறது. அன்று கோயிலைக் கட்டிய அந்தத் தொழிற்குழுக்களில் பல இன்றும் அப்படியே உள்ளன. நாகர்கோயில் மைலாடிக்கு வந்தால் பார்க்கலாம்.

இங்கே அடிமைமுறை இருந்தது. ஆனால் அது நிலம்சார்ந்த அடிமைமுறையாகவே இருந்தது. திறமையும் தேர்ச்சியும் தேவையான தொழில்கள் எதிலும் அடிமைமுறை இருந்தமைக்கான தடயங்கள் இல்லை. சொல்லப்போனால் அரேபியாவையும் ஐரோப்பாவையும்போல முழுமையான அடிமைமுறை இந்தியாவில் இருந்தது என்பதற்கான தடயங்கள் இதுவரை கிடைக்கவில்லை.

அத்தகைய முழுமையான அடிமைமுறையை உருவாக்கியதில் ஐரோப்பா அல்லது அரேபியாவின் தட்பவெப்பநிலைக்கும் நிலவியலுக்கும் பெரும்பங்கு உண்டு. அங்கே பனிப்பாலைகளிலும் பாலைநிலங்களிலும் மிகக்கடுமையான உழைப்பின்மூலமே உபரியை உருவாக்க முடிந்தது. ஆகவே அடிமைமுறை தேவைப்பட்டது. அடிமைமுறை இல்லாமல் அங்கே உபரி உருவாகியிருக்காது. அரசுகளும் அமைந்திருக்காது.

நிலநடுக்கோட்டுப்பகுதியான இந்தியா சாதகமான பருவநிலையும் நிலஅமைப்பும் கொண்டது. ஆகவே பழங்காலத்தில் மிகக்கடுமையான உழைப்பு எங்கும் தேவைப்படவில்லை. அதனால் உறுதியான அடிமைமுறையும் தேவைப்படவில்லை. வரலாற்றைப்பார்த்தால் இந்திய நிலப்பகுதியில் பல்லாயிரம் பழங்குடியினங்கள் சுதந்திரமாகவே வாழ்ந்திருக்கின்றன என்பதைக் காணலாம்.இந்திய சுதந்திரம் வரைக்கும்கூட அவர்கள் அப்படியே நீடித்தனர். அவர்கள் அடிமைகளாக பிடிக்கப்படவில்லை. நுகத்தில் கட்டப்படவில்லை.

அதேபோல எந்த அரசுக்கும் கட்டுப்படாத சுதந்திரமான பல்லாயிரம் மேய்ச்சல்சமூகங்கள் இந்தியப்பெருநிலத்தில் அலைந்திருந்தன. குறைவான உழைப்பிலேயே அவர்களுக்குத் தேவையான உணவையும் உடையையும் அளிக்குமளவுக்கு இந்த நிலம் வளமானதாகவும் பெரிதானதாகவும் இருந்தமையால்தான் அது சாத்தியமானது. அந்தச் சமூகங்களில் சில சட்டென்று ஒருங்கிணைந்து அரசுகளாகவும் சாம்ராஜ்ஜியங்களாகவும் ஆகியிருக்கின்றன.

பலபோகங்கள் வேளாண்மை செய்யப்பட்ட மருதநிலப்பகுதிகளிலேயே நில அடிமைகள் இருந்திருக்கிறார்கள். அது நம் வரலாற்றின் ஒரு பக்கம் மட்டுமே. அதை மட்டுமே பார்க்க நாம் சில கோட்பாட்டாளர்களால் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம்.

ராஜராஜனின் கோயிலைப்பார்க்கையில் அது அடிமைகளின் ரத்தம் என்ற சங்கடம் எழுகிறது என்கிறீர்கள்.வீராணம் ஏரியைப் பார்க்கையில் ஏன் எழவில்லை? இன்று ஐந்து கிலோ மீட்டர் அகலமும் பன்னிரண்டு கிலோமீட்டர் நீளமும் கொண்ட இந்த ஏரி வெட்டப்பட்டபோது இன்னும் இருமடங்கு பெரிதாக இருந்தது. முழுக்கமுழுக்க மனித உழைப்பால் வெட்டப்பட்டது இது. இரண்டரை லட்சம் மனிதர்கள் நான்கு வருடம் வேலைசெய்தார்கள். எவ்வளவு வியர்வை சிந்தப்பட்டிருக்கும். எவ்வளவு சாட்டை சுழன்றிருக்கும் – என கற்பனைசெய்துபார்க்கலாமே!

அதேபோல எவ்வளவு ஏரிகள். சோழர்களும் நாயக்கர்களும் வெட்டிய பல்லாயிரம் ஏரிகள் இல்லை என்றால் தமிழகம் வெறும் பாலைவனம். அந்த பிரம்மாண்டமான மானுட உழைப்பைத்தான் நீங்களும் நானும் அனுதினம் சோறாக உண்டுகொண்டிருக்கிறோம்.

யோசித்துப்பாருங்கள், இன்றுவரை தமிழகத்தில் உள்ள மாபெரும் ஆலயங்களைப்பற்றிப் பேசும்போது அவை கட்டாய உழைப்பாலும் அடிமைமுறையாலும் கட்டப்பட்டவை என்ற ‘புரட்சிகர மனிதாபிமான’ ஐயத்தை எழுப்பிய ‘சிந்தனையாளர்கள்’ எத்தனைபேர்! ஆனால் ஒருவர் கூட தமிழகம் முழுக்க உள்ள பல்லாயிரம் ஏரிகளை வெட்டிய நினைத்துப்பார்க்கமுடியாத பெரும் உழைப்பை அடிமைமுறையின் விளைவு என்று நிராகரிக்கவில்லை. அவற்றைப் பார்க்கையில் யாருக்குமே அடிமைகளின் ரத்தமும் எலும்பும் நினைவுக்கு வரவில்லை. கோயில்களைப் பார்க்கத்தான் மனம் சுளிக்கிறது. ஏரிகளைப்பார்க்கையில் அல்ல.

ஏனென்றால் ஏரிகள் ‘தேவையானவை’. அவை மனிதனின் பசியை ஆற்றுகின்றன. கோயில்கள் ‘தேவையற்றவை’, அவை அரசர்களின் வெற்று ஆணவம் மற்றும் மக்களின் மூடநம்பிக்கை காரணமாக உருவானவை. இந்த எளிய வாய்பாட்டில் இருந்தே இந்த மனநிலை உருவாகிறது. உங்கள் கடிதம் அதையே காட்டுகிறது.

அதாவது நீங்கள் பொருளாதார உற்பத்தி தேவையானது ,கலையும் ஆன்மீகமும் தேவையற்றவை என நினைக்கிறீர்கள். கலைக்காகவும் ஆன்மீகத்துக்காகவும் செலவிடப்படும் உழைப்பு வீண் என நம்புகிறீர்கள். ஆகவே பிரச்சினை அடிமைமுறை அல்ல, நீங்கள் கொண்டிருக்கும் எளிமையான வரலாற்றுப் பார்வைதான். நேற்று வாழ்ந்த மக்களுக்கு எது தேவை எது தேவையற்றது என இன்று நீங்கள் தீர்மானிக்கிறீர்கள். இந்த முடிவைக்கொண்டு நேற்றைய வரலாற்றை உங்கள் விருப்பப்படி வரைகிறீர்கள். அந்த மக்களைப்பற்றி தீர்ப்பளிக்கிறீர்கள்.

அந்த மக்களுக்கு ஏரிகள் அளவுக்கே கோயில்களும் தேவைப்பட்டன. தங்களை தொகுத்துக்கொள்ளவும் தங்களைப்பற்றிய தன்னுணர்ச்சியை அடையவும் அவர்களுக்கு அவை உதவின. கலைமூலம் ஆன்மீகம் மூலம் ஒரு முழுமையை கற்பனை செய்துகொள்ள அவர்களுக்குக் கோயில்கள் இன்றியமையாதவையாக இருந்தன. கோயில்களைக் கட்டக்கட்ட அவை இன்னும் இன்னும் தேவைப்பட்டன. ஆகவேதான் கட்டி எழுப்பிக்கொண்டே இருந்தார்கள்.

மன்னர்கள் மட்டும் கோயில்களைக் கட்டினார்கள் என்பது பொய். ஊர்ச்சபைகள் கட்டியிருக்கின்றன. தாசிகளும், வணிகர்களும், வீரர்களும், விதவைகளும் கட்டியிருக்கிறார்கள். பிச்சைக்காரர்கள் கூட கோயில் கட்டியிருக்கிறார்கள். இக்கணம் வரை கோயில்கட்டுவது நடந்துகொண்டே இருக்கிறது. அது இந்தியச்சமூகத்தில் உள்ள ஓர் அடிப்படை உந்துதல்.

எந்த ஆட்சியாளனும் சாட்டையைச் சொடுக்கி ஒரு கோயிலைக் கட்டிவிடமுடியாது. அப்படிச் சொல்வதைப்போல வரலாறு அறியாத அசட்டுத்தனம் ஏதுமில்லை. அதைப் புரிந்துகொள்ள நேற்றை துழாவவேண்டிய தேவையும் இல்லை. நம்மைச்சுற்றியே கோயில்களை உருவாக்கி நிலைநிறுத்திய அந்த அமைப்புகளும் நம்பிக்கைகளும் வாழ்க்கையும் இப்போதும் உள்ளன.

ஒரு கோயில் நம் சமூகத்தில் உள்ள பல்வேறு தரப்பினரால் சேர்ந்து கட்டப்படுகிறது. பலவகை தொழிலாளர்கள், பல்வேறு வகை கலைத்திறமைகள். விதவிதமான ஆசாரங்கள், நம்பிக்கைகள் சேர்ந்து அதை உருவாக்குகின்றன. நம் சமூகமே ஒட்டுமொத்தமாகக் கோயிலை எழுப்புகிறது. மன்னர்கள் பலசமயம் அதற்கு ஒரு முகாந்திரமாக இருந்தார்கள், அவ்வளவுதான்.

மன்னர்களுக்குக் கோயில்கள் இரண்டு காரணங்களுக்காக தேவைப்பட்டன. ஒன்று சமூகத்தின் பல்வேறு அடுக்குகளைத் தொகுத்து ஒரு நிர்வாக அமைப்பை உருவாக்குவதற்கு. கோயிலை மையமாகக் கொண்டு நிலநிர்வாகம், நீர்நிர்வாகம், நீதிவழங்கல், சமூக ஒப்பந்தங்கள் நிறைவேற்றல் என பல விஷயங்கள் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன.

சுசீந்திரம் கோயிலைச்சுற்றி அமைக்கப்பட்டிருந்த ஊராய்மை, காராய்மை என்ற பிரம்மாண்டமான நிர்வாக அமைப்பைப்பற்றி கெ.கெ.பிள்ளை அவரது சுசீந்திரம் கோயில் என்ற நூலில் விரிவாகப் பேசுகிறார். அன்றைய நிலப்பிரபுத்துவ அமைப்பின் அடிப்படை அலகுகளில் ஒன்று கோயில்.

இரண்டாவதாக, பஞ்ச காலங்களில் கோயில், குறிப்பாக கோபுரம், கட்டுவது வழக்கமாக இருந்திருக்கிறது. கோயிலில் சேர்ந்துள்ள பஞ்சகாலத்துக்கான தானிய சேமிப்பை மக்களிடையே வினியோகம் செய்ய அந்த முறையை கையாண்டிருக்கிறார்கள்.

இந்திய நிலத்தை ஒருமுறை சுற்றிப்பாருங்கள். எங்கெங்கு பார்த்தாலும் மாபெரும் கலைக்கோயில்களைப் பார்க்கலாம். தேனீக்கள் தங்கள் இயல்பான உள்ளுணர்வால் தேன்கூட்டை கட்டுவதுபோல அவற்றைக் கட்டினார்களோ என்ற பிரமை நமக்கு ஏற்படும்.

அந்த அக உந்துதலை புரிந்துகொள்ளத்தான் நாம் வரலாற்றை வாசிக்கவேண்டும். அதற்காகவே நம்முடைய கற்பனையும் உள்ளுணர்வும் விரியவேண்டும். நம்முடைய அரைவேக்காட்டு தீர்ப்புகளை நம் முன்னோர் மீது சுமத்துவதற்காக அல்ல. அவர்களின் அந்த அகத்தேவையை வெறும் மூடநம்பிக்கை என்று சொல்லும் மூர்க்கநம்பிக்கைதான் அந்த வாதத்தில் உள்ளது.

ஆகவே பிரச்சினை அந்தக் கோட்பாட்டு மூடநம்பிக்கைதான். அந்த நம்பிக்கை எவரால் எப்படி உங்களுக்குள் செலுத்தப்பட்டதென எண்ணிப்பாருங்கள். அதன் விளைவு என்ன என்று சிந்தியுங்கள். அப்படி கலையும் ஆன்மீகமும் வீண்வேலையாக ஆகக்கூடிய ஓர் உலகம் உருவாகுமென்றால் அது எப்படி இருக்கும் என எண்ணுங்கள்.

அத்தகைய உலகை அவர்கள் உருவாக்கிக் காட்டினார்கள். ருஷ்யாவிலும் ,சீனாவிலும், கம்போடியாவிலும், கொரியாவிலும்! அடிமைகளை வைத்து உழைப்பைச்சுரண்டி ஆண்ட நிலப்பிரபுத்துவகாலத்தைக் காட்டிலும் அது ஆபத்தானதாக இருந்தது. ராஜராஜனின் கோயிலை அடிமைகளின் குருதி என பார்க்கக் கற்றுத்தந்தவர்கள் உருவாக்கிய மனசாட்சியற்ற, கலை அற்ற, பொன்னுலகில் இன்றுவரை ஒட்டுமொத்த எகிப்திய பாரோ மன்னர்களும், ஒட்டுமொத்த கொடுங்கோலர்களும் செய்த மானுட அழிவுகளைவிட அதிகமான அழிவுகள் நிகழ்ந்தன.

ஏனென்றால் கலையும் இலக்கியமும் தத்துவமும் ஆன்மீகமும் மனிதனின் ஆன்ம வெளிப்பாடுகள். சுயநலமும் வெற்றியும்தான் மனிதனின் மேலோட்டமான அடிப்படை இயல்புகள். கலையும் இலக்கியமும் தத்துவமும் ஆன்மீகமும் அந்த அடிப்படை இயல்புக்கு எதிரான இன்னும் ஆழமான அடிப்படை இயல்பான கருணையையும் அறஉணர்வையும் வெளிக்கொணர்ந்து நிலைநாட்டுகின்றன. அதில் முழுமை ஒருபோதும் கைகூடாவிட்டாலும் அது ஒரு கனவு, ஒரு போராட்டம்.

ஆம், உலகம் இன்று வரை எத்தனை அடிமைகளை கொன்றழித்ததோ அதைவிட அதிகமானபேர் ஸ்டாலினும் மாவோவும் போல்பாட்டும் கிம்இல்சுங்கும் உருவாக்கிய கம்யூனிச அடிமை உழைப்பு முகாம்களில் அழிந்தார்கள். கலை அற்ற, ஆன்மீகம் அற்ற சமூகம் கருணையற்ற சமூகம் என்பதற்கான அப்பட்டமான வரலாற்று ஆதாரங்கள் அவை. அந்த கலை-ஆன்மீக நிராகரிப்பு நோக்குதான் தஞ்சை பெரிய கோயிலை வெறும் அடிமைச்சுரண்டலின் சின்னம் என்று முத்திரை குத்துகிறது.

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Jun 2, 2012

ஜெ

வரலாற்றெழுத்தும் மையக்கருத்தும்

ராஜராஜன் காலகட்டம் பொற்காலமா?

முந்தைய கட்டுரைஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 9
அடுத்த கட்டுரைஎன்னை வாசிக்கத் தொடங்குதல்