மதிப்பிற்குரிய ஜெயமோகன்,
எழதுவதைப் பற்றிய ஒரு கேள்வி. நீங்கள் பல கேள்விகளுக்கு பத்தி பத்தியாக பதில் எழுதுகிறீர்கள். அவை படிக்கும்போது அபாரமான தெளிவுடன் கோர்வையாக இருக்கிறது. இப்பதில்களை நீங்கள் முழுமையாக யோசித்துவிட்டு உங்கள் மனதில் தொகுத்துக்கொண்டு பின் எழுதுவீர்களா அல்லது எழுதும்போதே உங்கள் மனதில் அப்படித் தோன்றுமா? இந்த முறை உங்கள் நாவல்களுக்கும் பொருந்துமா? பின்தொடரும் நிழலின் குரலை படித்த பின்னர் எனக்கு இந்தக் கேள்வி மீண்டும் மீண்டும் வருகிறது. நான் ஏதாவது எழுத ஆரம்பித்தால் பிரயோகிக்க வேண்டிய வார்த்தைகளை மனதில் தேடுவதிலும், அதை தட்டச்சு செய்வதிலும் ஏற்படும் அயர்ச்சி சொல்லவந்த கருத்தை முற்றிலுமாக சிதைத்து விடுகிறது. எழுதியதை படித்தால் இதை எழுதியே இருக்கவேண்டாம் என்று தோன்றுகிறது. இந்தத் தடங்கலை தாண்ட நீங்கள் பரிந்துரைக்கும் அணுகுமுறை ஏதேனும் உண்டா ? மிக்க நன்றி.
கோகுல்
அன்புள்ள கோகுல்,
நான் எழுதுவதை திரும்பப் படிப்பதுகூட இல்லை. வேறு நண்பர்கள்தான் பிழை திருத்துகிறார்கள். எழுதுவதே சிந்திப்பதற்கான ஒரு வடிவமாக மாறிவிட்டிருக்கிறது.
பொதுவாக நம் மனதுக்கு ஒரு வழக்கம் உண்டு. நேரடியாகச் சிந்திப்பது அதனால் முடியாத காரியம். ஒரு புற வடிவத்தை கற்பனை செய்துகொண்டு அந்த வடிவத்துக்குள் அமர்ந்துகொண்டுதான் நாம் சிந்திக்க முடியும்.
அதாவது ஒருவிஷயத்தை யாரிடமாவது சொல்வது போல, விவாதிப்பதுபோல, உரையாற்றுவதுபோல, நூலில் எழுதுவதுபோல கற்பனைசெய்துகொண்டு அந்த வடிவிலேயே நாம் சிந்திக்கிறோம்.
நான் ஆரம்பத்திலிருந்தே என்னுடைய சிந்தனையை எழுதுவதுபோல கற்பனை செய்துகொள்வேன். ஆகவே சிந்தனையும் எழுதுவதும் மெல்ல மெல்ல ஒன்றாக ஆகிவிட்டிருக்கின்றன.
புணிஞ்சித்தாய என்று ஓர் ஓவியர் காஸர்கோட்டில் இருந்தார். என்னுடைய மூத்த நண்பர். ஒரு கான்வாஸில் வண்ணங்களை அள்ளி வீசுவார். அதுவழியும்போது அந்த வழிதல்களை கத்தியால் பூசிப்பூசி ஓவியமாக்குவார். அருவ ஓவியங்கள் அல்ல, நல்ல உருவம் உடைய ஓவியங்கள். வண்ணங்கள் தங்கள் போக்கிலே வழிந்தால்தான் தன்னால் உருவங்களை கற்பனைசெய்ய முடிகிறது என்று ஒருமுறை சொன்னார்.
எனக்கும் மொழி மிக முக்கியம். ஒரு நல்ல தொடக்கவரி கிடைத்தால் சிந்தித்துக்கொண்டே செல்லமுடியும். நாவல்கள் சிறுகதைகள் கட்டுரைகள் எல்லாவற்றையும் அப்படித்தான் எழுதுகிறேன். முதல் வரி அளிக்கும் தூண்டுதல் தொடர்ந்து எழுதச்செய்து ஒரு முழுமையான வடிவத்தை உருவாக்கிவிடுகிறது.
ஜெ
அன்புள்ள ஜெ,
தொடர்ந்து இணையங்களில் வாசித்து வருகிறேன். உங்களின் சமீபத்திய ‘அருகர்களின் பாதை’ பயணக் கட்டுரைகளை விடாமல் வாசித்தேன். கவனம் கொள்ள மறந்த வரலாற்றுச் சம்பவங்களை / இடங்களை இந்தக் கட்டுரைகள் மூலம் தெரிந்து கொண்டேன். எனக்கு நல்ல இலக்கியங்களை இனங் கொள்ளத் தெரியவில்லை என்றே எண்ணுகிறேன். எனக்கு வாசிப்பு அனுபவமும் குறைவே, அவைகளை பிரித்தறிவது பற்றி கூறுங்களேன்?!
– ஹாரூன்
சிங்கப்பூர்
அன்புள்ள ஹாரூன்,
நான் பாலக்கோட்டில் பணியாற்றியபோது அங்கே குப்புசாமி என்ற நண்பரை அறிமுகம் செய்துகொண்டேன். அவர் ஒருநாள் அசோகமித்திரன் நாவலை வாசிக்கக் கண்டு ஆச்சரியம் கொண்டேன். அவர் மாரண்டஹள்ளி என்ற சிற்றூரில் பிறந்தவர். அங்குள்ள கிராமநூலகத்தில்தான் அவற்றை வாசித்திருக்கிறார்.
எப்படி இலக்கிய அறிமுகமும் ரசனையும் கிடைத்தது என்று கேட்டேன். அப்போது நவீன இலக்கியம் பரவலாக அறிமுகமாகவில்லை. வணிக எழுத்துக்களுக்கே மதிப்பிருந்தது. நூலகத்திலே எல்லா நூல்களையும் வாசித்துப்பார்ப்பேன். இவரைப் பிடித்திருந்தது என்றார்.
இவரை வாசிக்க ஒரு ரசனை வேண்டும். அது எப்படி வந்தது என்று கேட்டேன். என் வாழ்க்கையில் எது எனக்கு அர்த்தமாகிறதோ அதை ரசிக்கிறேன். எது முக்கியம், எது அழகு என்று எனக்கு என் வாழ்க்கையனுபவங்களே சொல்லித்தந்தன என்றார்.
அது எனக்கே பெரிய திறப்பாக இருந்தது. அன்று வரை இலக்கியத்தை ஒரு அறிவுத்துறையாக, பயிலவேண்டிய ஒன்றாகவே எண்ணிக்கொண்டிருந்தேன்.
இலக்கியத்தை ரசிக்க, அடையாளம் கண்டுகொள்ள, தரவரிசைப்படுத்த நம்முடைய சொந்த வாழ்க்கையனுபவமே ஆதாரம். நல்ல ஆக்கம் நம் அந்தரங்கத்துடன் உரையாடும். நம்மையே நமக்கு காட்டித்தரும்.
இலக்கியம் சொல்பவற்றை நிரூபிக்க முயல்வதில்லை. அது சொல்லிச் செல்கிறது, அவ்வளவுதான். நாம் வாசித்ததுமே அதை உண்மை என நம் அந்தரங்கத்தால் உணர்கிறோம். அல்லது அது பொய் என உணர்கிறோம்.
தொடர்ந்து வாசிப்பது மட்டுமே நாம் செய்யவேண்டியது. நம்முடைய மதநம்பிக்கைகள், அரசியல்கள், நம்முடைய சுய பாவனைகள் ஆகியவை அந்த அக உண்மையை மறைக்காமல் பார்த்துக்கொண்டால் போதும், இயல்பாகவே நல்ல ஆக்கங்களை நோக்கி வந்துவிடுவோம்.
ஜெ
அன்புமிக்க ஜெ,
உங்கள் கட்டுரைகளின் வழி, வாழ்வு குறித்த நம்பிக்கைகளை தொடர்ந்து பரிசீலித்துக் கொண்டிருக்கும் வாசகன் நான்.
இப்பொழுதெல்லாம் தர்க்கத்தின் வழி அல்லாமல், ஆத்மாவின் வழியாய் உங்களை பின்தொடரும் எளிய வாசகன்.
என்னுடைய கேள்வி என்னவென்றால், எழுத்தாளரின் நேர்மையும் அவன் சுயத்தையும் நம்பி
அவர் முன்னிறுத்தும் கொள்கைகளையும் ஆளுமைகளையும் அப்படியே நம்பும் வாசகன், எழுத்தாளனின் அடிப்படை நேர்மையின் மீது நம்பிக்கை இழக்கும்போது
அந்த எழுத்தாளனின் கொள்கைகளையும் இழக்கும் சோர்வு ஏற்படுகிறது எனில், தர்க்கம் தான் எழுத்தாளனை அணுக ஒரே வழியா?
எழுத்தாளனின் அடிப்படை நேர்மையும் அவன் சுயமும் அவன் புனைவில் வகிக்கும் பங்குதான் என்ன?
என் கேள்வியை சரியாகக் கேட்டுவிட்டேனா தெரியவில்லை.
அன்பின்,
அருண் ஹரிச்சந்திரன்.
அன்புள்ள அருண்,
இலக்கிய ஆக்கங்களுக்கும் அவற்றை எழுதிய இலக்கியவாதிகளுக்கும் இடையே மிகப்பெரிய தூரம் உள்ளது. இலக்கிய ஆக்கங்கள், படைப்பூக்கத்துடன் அவை நிகழ்ந்திருக்குமென்றால், அவற்றின் மேல்மட்ட அலைகளுக்கு அப்பால் ஒரு சாராம்சமான உறுதிப்பாட்டை கொண்டிருக்கும். இந்த Certitude பற்றி தல்ஸ்தோய் சொல்லியிருப்பது எனக்கும் ஏற்புள்ள கருத்தே.
ஆனால் இலக்கியவாதி அந்த உறுதிப்பாடுள்ளவனாக இருக்கவேண்டியதில்லை. உணர்ச்சிகரமான சஞ்சலம் என்பது எப்போதுமே எழுத்தாளனை ஆட்டிவைக்கிறது. நாம் நினைப்பது தவறாக இருக்குமோ அந்தப்பக்கம் உண்மை இருக்குமோ என்ற அக்கரைப்பச்சை தேடல் இல்லாத எழுத்தாளன் இல்லை.
ஆகவே ஒருபோதும் எழுத்தாளனை ஆதாரமாகக் கொள்ளாதீர்கள். எழுத்துக்களையே ஆதாரமாகக் கொள்ளுங்கள். அந்த எழுத்துக்களை புரிந்துகொள்ள எழுத்தாளனை ஒரு மேலதிக சான்றாக எடுத்துக்கொள்ளுங்கள்.
ஜெ