வேதஞானம் எவருக்கு இருந்தது?

அன்புள்ள ஜெ,

வழக்கம் போல உங்களின் விசாலமான பார்வையுடன் எழுதப்பட்ட கட்டுரை. நன்றி.

வேதக்கல்வி பிராமணரல்லாதவர்களுக்கு மறுக்கப்பட்டது என்ற வாததை நான் ஏற்கவில்லை.

ஆம் ஜெ, எங்கள் ஊரில் விஸ்வகர்மா கர்மா இனத்தவர்க்கு உபநயனம், கல்யானம், இறுதிக் கருமங்கள் என சடங்குகள் செய்து வைக்கும் அவர்கள் குல வைதீகரை அறிவேன். ஆச்சார்லு என்று அழைப்பார்கள். அவரிடம் கிரந்த லிபியில் வேத நூல்கள் மற்றும் பிரயோக விதிகள் பற்றின பழைய கையெழுத்துப்பிரதிகள் பார்த்திருக்கிறேன். அவர் வேதம் கற்றவர். பல கோயில்களுக்கு தலைமைப் பொறுப்பில் இருந்து கும்பாபிஷாகம் நடத்தி வைத்துள்ளார். இப்போது உயிருடன் இல்லை. அவருடைய தந்தை தான் அவர்கள் குல பாடசாலையில் ஆசிரியராக இருந்திருக்கிறார். வேதக் கல்வியில் யாரும் ஆர்வம் காட்டவில்லை. பாரம்பரியம் அறுபடக்கூடாது என்று தனது மகனுக்கு கற்றுக் கொடுத்திருந்திருக்கிறார். அவர்கள் குடும்பத்திலேயே அடுத்த தலைமுறை அதைக் கற்கவில்லை. எனக்குத் தெரிந்து பிராமணரல்லாத வேதமறிந்த ஒரு குடும்பத்தின் தொடர் அறுபடுவதைக் கண் முன்னால் காண்கிறேன்.

இன்னொரு ஸ்தபதியை அறிவேன், பல யஜுர் வேத மந்திரங்களை அழகாகச் சொல்வார். அவரும் பாரம்பரியமாகக் கற்றவர் தான். பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டன. அநேகமாக அவர் பிள்ளைகளும் பாரம்பரிய வேதக் கல்வியை படிக்காமல் விட்டிருக்க வாய்ப்புள்ளது. இப்படிப்பட்ட குடும்பங்களை கேள்விப்பட்டிராதவர்கள் வேதக்கல்வி என்பது பிராமணரல்லாதவர்க்கு மறுக்கபட்டது என்றே வாதிடுவார்கள். இது போலவே தொடர்ந்து அனைவரும் கைவிடும் போது, இயல்பாகவே வேதக்கல்வியில் பிராமண முற்றதிகாரம் என்ற மாயை உருவாக ஆரம்பிக்கும்.

எனக்கு ஒரு சந்தேகம். பிராமண, சத்திரிய, வைஸ்ய என மூன்று வர்ணத்தவரும் கண்டிப்பாக வேதம் பயில வேண்டும் என்பது இந்துமதத்தின் விதியாக இருந்த பொழுது, பிராமணர் அல்லாதவர் வேதக் கல்வியை கைவிட்டதற்கு ஏதாவது வரலாற்றுக் காரணம் உண்டா? எந்தக் காலக் கட்டத்தில் அப்படி பெருவாரியான பிராமணரல்லாதவர்கள் வேதக்கல்வியை கைவிட ஆரம்பித்தனர். இஸ்லாமியர் ஊடுருவலின் போதா அல்லது ஐரோப்பிய ஆதிக்கத்தின் போதா, இல்லை இவற்றுக்கெல்லாம் முன்பேவா?

வேதம் கற்பித்தலும், சடங்குகள் செய்வித்தலும் தொழிலாக இருந்த பிராமணர்களில் மாறிவரும் காலச்சூழலில் அதன் பொருளியல் ரீதியான லாபமின்மையைக் கருதி மிகக் கணிசமானவர்கள் வேதகல்வியை கைவிட்டிருக்கின்றனர். ஆனால் சத்திரிய, வைசியர்களுக்கு அது தொழிலாக இல்லாததால் பொருளியல் காரணமும் இருந்திருக்கமுடியாது என்று எண்ணுகிறேன். மேலும் வேதக்கல்வி என்பது பெருமைக்குரிய, பிறருக்கு கிடைக்காத சிறப்புத் தகுதியாக, கௌரவமாகக் கருதப்பட்ட காலகட்டத்தில் ஏன் வேதக் கல்வியை தொடராமல் விட்டார்கள்?
நன்றி,

பிரகாஷ்

அன்புள்ள பிரகாஷ்,

இந்தியமெய்ஞானம் சம்பந்தமான விஷயங்களில் இன்று நிலவும்பெரும்பாலான கருத்துக்கள் அரைகுறையான ஆரம்பகட்ட புரிதல்களுடன் அல்லது தெளிவான உள்நோக்கத்துடன் ஐரோப்பிய ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்டவை. இன்றுகூட நம் கல்வித்துறையை அந்த எல்லைகளை விட்டு விலகிச்சிந்திக்க ஐரோப்பிய ஆதிக்கம் அனுமதிப்பதில்லை.

ஓர் ஆய்வுக்கு ஐரோப்பிய அங்கீகாரம் தேவை என்ற தாழ்வுணர்ச்சி நம்மிடம் உள்ளது. பல்வேறு கருத்தரங்குகள், நிதியளிப்புகள் வழியாக தங்கள் ஆதிக்கத்தை நம் கல்வித்துறையில் நிலைநாட்டி வருகிறது ஐரோப்பியமைய நோக்கு. அதன் கூலிப்படைகளின் கூச்சல்களையே நாம் அதிகமும் கேட்டு வருகிறோம்.

இதிலிருந்து விலகிச் சிந்திப்பதற்குத் தேவையானது இந்தப்பொது மரபுக்கு வெளியே உள்ள ஏதேனும் குருமரபுகளுடனான தொடர்பு. நீடித்ததும் தொடர்ந்ததுமான ஆராய்ச்சி. என்னைப்பொறுத்தவரை இவ்விஷயத்தில் பிற ஆய்வாளர்கள் செய்யும் ஆய்வுகளை வாசித்தறியும் இடத்திலேயே உள்ளேன். அசலான ஆய்வுகளைச் செய்ய என்னுடைய மனநிலையும் நான் ஈடுபாடு கொண்டுள்ள கலையும் என்னை அனுமதிப்பதில்லை.

இந்தியஞான மரபு பற்றிய என்னுடைய பார்வை இவ்விஷயத்தில் விரிவான ஆய்வுகளைச் செய்த நித்ய சைதன்ய யதி மற்றும் முனி நாராயணபிரசாத், சுவாமி வியாஸப்பிரசாத் போன்றவர்களின் நூல்கள் மற்றும் விவாதங்கள் வழியாக உருவானது. இவற்றிலிருந்து நான் அடைந்த சிலப்பொதுப்புரிதல்களைக் கொண்டே இவ்விஷயத்தில் கருத்துச் சொல்கிறேன். இவை இந்தக்கோணத்தில் சிந்திப்பவர்களுக்கான தொடக்கமாக அமையும் என்ற நம்பிக்கையில்.

இந்தியா என்ற மாபெரும் நிலப்பரப்பு எப்போதுமே ஒற்றைப்போக்கு கொண்டதாக இருந்ததில்லை என்ற யதார்த்தத்தில் இருந்தே நாம் ஆரம்பிக்கவேண்டும். ஏதேனும் ஒரு விஷயம் இந்தியா முழுக்க ஒரேசமயம் ஒன்றுபோல கடைப்பிடிக்கப்பட்டது என்று சொல்வதைப்போல அபத்தமான ஏதுமில்லை. இந்தியா பல்வேறு சமூக சக்திகளின் முரணியக்கத்தின் விளைவாக பல்வேறு கலாச்சாரப்படிநிலைகளில் வளர்ந்து வந்தது. பல்வேறு கருத்தியல்நிலைகள் ஒரே சமயம் இருந்துகொண்டிருந்தன.

மிக எளிமையாக இந்தியாவை ஒற்றைக் கலாச்சாரவெளியாகவும் , இங்கே நிலவிய கருத்தியலை ஒற்றைப்படையான இயக்கமாகவும் வகுத்துக்கொண்டதே ஆரம்பகால இந்தியவியலாளர்களின் மிகப்பெரிய பிழையாகும்.

அதற்கு மிகச்சிறந்த உதாரணம் மனுநீதிக்கும் வர்ணாசிரமதர்மத்துக்குமெல்லாம் ஐரோப்பியர்களால் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம். இந்தியாவையே மனுநீதி என்னும் நெறிநூல்தான் ஆட்சி செய்கிறது என்றும், இந்தியாவின் ஒட்டுமொத்த சமூக அமைப்பும் மனுநீதியால் வகுக்கப்பட்ட வர்ணாசிரம அமைப்புக்கு கட்டுப்பட்டு உருவானது என்றும் அவர்கள் வகுத்துக்கொண்டார்கள்.

இன்றுவரை இந்தியாவின் பொதுவான கருத்தியல்விவாதத்தளத்தில் மையக்குரலாக ஒலிப்பது இந்தக்குரலே. இதை திட்டவட்டமாக நிலைநிறுத்த ஐரோப்பிய ஆய்வாளர்கள் இன்றுகூட அவர்கள் நூல்களில் படும்பாடு ஆச்சரியமூட்டுவது. மேற்கோள்காட்டுவதையே சிந்தனை என்று கற்றுக்கொண்ட நம்மூர் அசடுகள் அதற்கு உரிய பின்பாட்டும் பாடிவருகிறார்கள்.

வேறு ஒரு கோணத்தில் சாதாரணமாக ஒருவர் சிந்திக்கமுயல்வதுகூட பெரும்பிழையாக, அத்துமீறலாக இவர்களால் கருதப்படுகிறது. கல்வித்துறையில் ஒருவர் அப்படிச் சிந்திக்கப்புகுந்தால் அவர் பல்வேறு முத்திரைகுத்தல்களுக்கு ஆளாவார். விலக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு அழிவார் என்பதே இன்றைய நிலை. ஆனாலும் எதிர்காலத்தில் இந்த கோணத்திலான ஆய்வுகள் உருவாகி வரும் என்றே நான் நினைக்கிறேன்.

வியாசமகாபாரதம் பல்வேறு ஸ்மிருதிகளைக் குறிப்பிடுகிறது.பல ஸ்மிருதிகள் பெயர் மட்டுமே அறியப்பட்டவை. உதாரணம் லஹிமாதேவி என்ற சத்ரியப்பெண் எழுதிய விவாதசந்த்ரம் என்ற ஸ்மிருதி. ஸ்மிருதிகள் உருவாகிக்கொண்டே இருந்திருக்கின்றன. என் வீட்டிலேயே நான் யாக்ஞவால்கிய ஸ்மிருதி உட்பட மூன்று ஸ்மிருதிநூல்களை வைத்திருக்கிறேன். அவற்றில் ஒன்றே மனுஸ்மிருதி

ஸ்மிருதிகள் ஓர் அதிகாரச்சூழலில் அச்சூழலின் தேவைக்கேற்ப உருவாக்கப்பட்டவை. பல ஸ்மிருதிகள் நான்குவருணத்தவரும் அவரவருக்கான வேதமந்திரங்களை கற்று அவரவருக்குரிய வேள்விச்சடங்குகளை செய்யவேண்டுமென அறிவுறுத்துகின்றன. நாரதஸ்மிருதி சூத்திரர்கள் உட்பட அனைவருக்கும் வேதஞானத்தை கட்டாயப்படுத்துவதோடு வருணம் விட்டு வருணத்துக்கு மாறுவதையும்கூட அங்கீகரிக்கிறது.

இந்த ஸ்மிருதிகள் ஒரேசமயம் இந்தியாவின் பல இடங்களில் செல்வாக்குடன் இருந்தன. பொதுவாக புரோகிதப் பிராமணர்களுக்கு அதிக இடம் கொடுக்கும் மனு ஸ்மிருதி அவர்களால் முன்னெடுக்கப்பட்டது. எங்கே புரோகிதமரபு செல்வாக்கு பெறுகிறதோ அங்கு மனுஸ்மிருதி நிறுவப்பட்டது. பத்தாம் நூற்றாண்டுக்குப்பின்னர்தான் மனுஸ்மிருதியின் இடம் மையமான ஒன்றாகியது.

அப்போதுகூட மனுஸ்மிருதி உட்பட எந்த ஸ்மிருதியும் இந்தியாவின் கோடானுகோடி சாமானிய மக்களின் சமூக அமைப்பை வடிவமைத்தது , அவர்களை நேரடியாக கட்டுப்படுத்தியது என்று சொல்லிவிடமுடியாது. பத்தொன்பதாம்நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட இந்தியாவின் பெரும்பாலான மக்கள் தங்கள் குலநீதிகளின்படியே ஆளப்பட்டனர். குல ஆசாரங்களிலேயே வாழ்ந்தனர். அவை அம்மக்களின் வாழ்க்கையின் போக்கில் தொல்பழங்காலம் முதலே உருவாகி வந்தவை.

மனுநீதி உட்பட்ட ஸ்மிருதிகள் எல்லாமே பெரும்பாலும் உயர்மட்டத்தில்தான் இருந்தன. சொல்லப்போனால் அவை செல்வாக்குடனிருந்த இடங்களில்கூட ஒருவகையில் கொள்கையடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டவையாக மட்டுமே இருந்தன, திட்டவட்டமான நடைமுறைகளாக அல்ல.

அப்படி இறுக்கமான நடத்தைவிதிகளின் படி இந்தியா என்ற இந்த மாபெரும் மக்கள்பரப்பு செயல்பட்டிருக்க முடியாது என்பதே யதார்த்தம். மனுஸ்மிருதி இரண்டாயிரம் வருடம் முன்னரே வர்ணக்கலப்பை கடுமையாக தடைசெய்துவிட்டது. அப்படியென்றால் அடுத்த இரண்டாயிரமாண்டுக்காலம் இந்தியாவில் சாதிக்கலப்பும் இனக்கலப்பும் நிகழவில்லை என்றா பொருள்?

மனுஸ்மிருதியின் விதிகள் மகாபாரதத்தில் எங்குமே செல்லுபடியாவதில்லை என்பதை எவரும் உணரலாம். பாரதத்தின் மையமான சத்ரிய குலமான குருவம்சம் மீனவப்பெண்ணான சத்யவதியின் கொடிவழி வந்தது. சத்யவதி பட்டத்தரசியாக இருந்து அஸ்தினபுரியை ஆள அன்றைய புரோகித மதமோ,சமூக அமைப்போ, அல்லது பிற சத்ரியர்களோ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சில குரல்கள் ஒலிக்கின்றன, அவை வலுப்பெறமுடியவில்லை.

இந்தியாவின் பிரம்மாண்டமான சாதியசமூக அமைப்பை வர்ணாசிரமபிரிவைக்கொண்டு விளக்க முயன்ற ஆரம்பகட்ட இந்தியவியலாளர்கள் எவரும் ஷத்ரியர் என்ற வர்ணத்தை அடையாளம் காண முடியவில்லை. அப்படி ஒரு வர்ணமே இந்தியாவில் இருக்கவில்லை. பெரும்பாலான இந்திய ஆட்சியாளர்கள் யாதவர்களோ , நாடோடி மலைச்சாதியினரோ, விவசாயக்குடிகளாகவோ இருந்து நாடாள்பவர்களாக உருவானவர்களே

தேவகிரியின் யாதவர்கள் முதல் கடைசியாக விஜயநகர நாயக்கர்கள் வரை பெரும்பாலானவர்கள் மேய்ச்சல்தொழில் செய்துவந்தவர்கள். அவர்கள் பெரும்திரளாக ஆகி நிலத்தைக் கைப்பற்றி அரசை உருவாக்கும்போது இயல்பாகவே ஷத்ரியர்கள் ஆகிவிடுகிறார்கள். தக்கலை அருகே உள்ள தலக்குளம் என்ற கிராமத்தைச்சேர்ந்த நாயர்குடும்பம் ஒன்று திருவிதாங்கூர் அரசர்களாக ஆனபோது அவர்கள் ஷத்ரியர்களாக ஆனார்கள். நம்பூதிரிகள் அவர்களை ஷத்ரியர்களாக அங்கீகரித்து தங்கள் வேள்விகளுக்கு காவலர்களாக ஆக்கினார்கள்.

இந்தப்பரிணாமம் ஓர் அன்றாடச்செயலாக நடந்துகொண்டிருந்தது. மனுஸ்மிருதியைக் கொண்டு அல்லது வேறு ஸ்மிருதிகளைக்கொண்டு இதை விளக்கிவிடமுடியாது. ஒற்றைப்படையான எளிய வாய்ப்பாடுகள் எவையும் இதை விளக்க உதவாது.

நான் இப்படித்தான் புரிந்துகொள்கிறேன். இந்தியாவின் நிலப்பரப்பின் பல்லாயிரம் இனக்குழுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ,ஒருவர் மேல் ஒருவர் மேலாதிக்கம் பெற்று, அதற்கேற்ப சமூக அதிகார அமைப்பை உருவாக்கிக் கொண்டார்கள். அந்தப்பரிணாமத்தில் அதற்குத்தேவையான அளவுக்கு ஸ்மிருதிகளை பயன்படுத்திக்கொண்டார்கள்.

இந்தியாவிலிருந்த ஸ்மிருதிகள் பல அனைவரும் வேதங்கள் கற்பதை அனுமதித்திருந்தன. ஆகவே வைத்தியம் , சிற்பவியல், ஆயுதவித்தை போன்ற தொழில்கற்பவர்களும் வேதம் கற்றிருக்கிறார்கள். ஆனால் பழங்காலம் முதலே வேதங்கள் ஒரு தொன்மையின் தொடர்ச்சியை நிலைநிறுத்தும் மந்திரங்களாகவே ஓதப்பட்டிருக்கின்றன. சிற்சில குருமரபுகள் தவிர்த்து வெளியே அவை கற்று ஆராயப்படவில்லை.

மனுஸ்மிருதி பிற வர்ணத்தவர் வேதம் கற்பதை விலக்கினாலும் பற்பல இனக்குழுவினர் மனுஸ்மிருதியின் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. குறிப்பாக இந்தியாவில் மருத்துவம், ஆயுதவித்தை, சிற்பவியல் போன்ற கலைகளை குலமரபாக கற்பவர்கள் பொதுச்சமூகத்தின் கட்டுப்பாடில்லாத தனித்த துணைச்சமூகங்களாகவே இயங்கிவந்தனர். அரசனால் கூட கட்டுப்படுத்தமுடியாதவர்களாக அக்குழுக்கள் இருந்தன.

அவர்களிடம் தாந்த்ரீக வழிபாடுகள் செல்வாக்குடன் இருந்தன. அவற்றின்பகுதியாக அதர்வ வேதம் போன்றவையும் இருந்தன.அவர்களின் ஆசாரங்களும் வழிமுறைகளும் பிறருக்கு ரகசியங்களாகவே இருந்தன. சமீபகாலம் வரைக்கும் கூட இந்தநிலை நிலவியது.

புரோகிதர்களின் ஆதிக்கம் இந்தியாவில் சீராக அதிகரித்து அதன் விளைவாக மனுஸ்மிருதி மையமாக ஆனபோது பிறர் வேதங்களை ஓதுவது இல்லாமலாகி தொழில் சார்ந்த சடங்குகளுக்குள் மட்டுமே ஒடுங்கியிருக்கலாம்.

பொதுவாக ஒன்றைப்பார்க்கிறேன். மரபான ஞானத்தில் எது நடைமுறைத்தேவை கொண்டதோ அது எளிதாக அழிந்துவிடுகிறது. இன்னும் நடைமுறைத்தேவை கொண்ட ஒன்று வந்து விடுகிறது. மருத்துவமும், தச்சு சாஸ்திரமும், ஆயுதவித்தையும் வேகமாக தொடர்ச்சியறுந்து அழிந்தன.
ஆனால் நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் அழிவதில்லை. நம்பிக்கை அவற்றை பிடிவாதமாக நிலைநிறுத்துகிறது. வேள்விச்சடங்குகள் மட்டுமல்ல சோதிடம்கூட அப்படித்தான் தாக்குப்பிடித்தது.

இந்தியாவின் மருத்துவம் சிற்பம் ஆயுதவித்தை போன்றவை எல்லாமே பதினாறாம் நூற்றாண்டு முதல் சரிவுக்கு ஆளாயின. அவற்றைப்பேணுவதற்கான அதிகார அமைப்புகள் இல்லாமலாயின. அவற்றை நிலைநிறுத்தியிருந்த தொழில்சார்ந்த குலக்குழுக்கள் அவற்றின் கட்டமைப்பை இழந்தன. இந்தியாவின் இருபெரும் பஞ்சங்களுக்குப்பின்னர் இந்த தொழிற்குழுக்கள் அனேகமாக மறைந்து சாதிசார்ந்த சில செயல்முறை பயிற்சிகள் மட்டுமே எஞ்சின.

வேதக்கல்வி என்பது பெருமைக்குரிய, பிறருக்கு கிடைக்காத சிறப்புத் தகுதியாக, கௌரவமாக இருக்கவில்லை. தொழிலின் ஒரு பகுதியான உச்சாடனச் சடங்காக மட்டுமே இருந்தது. அந்த தொழில் அழிந்தபோது அதுவும் அழிந்தது.

இந்தியாவின் இந்த நடைமுறைசார்ந்த ஞானங்கள் பெரும்பாலும் ஏட்டுச்சுவடிகளில் இருந்து பின்னாளில் மீட்கப்பட்டன என்பதைக் காணலாம். உதாரணமாக மருத்துவம். எந்த மருத்துவக்குடும்பத்தைக் கேட்டாலும் நூறு வருடம் முன்பு ஒரு துறவி அவர்களுக்கு ஒரு சுவடிக்கட்டை கொடுத்தார் என்றும் அதைக்கொண்டு வைத்தியம் செய்வதாகவும் சொல்வார்கள். அந்தச்சுவடியை வாசிக்கும் முறையும் அதனுடன் ஒட்டிய ஆசாரங்களும் எல்லாம் மறைந்துவிட்டன.ஆங்கிலவழிக்கல்வி வந்த பின்புள்ள சூழலில் அச்சுவடிகள் வாசிக்கப்ப்பட்டு பொருள்கொள்ளப்பட்டு அந்த ஞானம் மீட்கப்பட்டுள்ளது. அதற்கும் மரபுக்கும் தொடர்பில்லை.

கேரளத்து கோயில்களில் கூம்புவடிவக்கூரையின் மையத்தில் எல்லா கழுக்கோல்களும் சென்று இணையும் இடத்தை குடம் என்பார்கள். அந்த மையம் மிகநுட்பமான கணக்குகளால் ஆனது. ஆனால் நூறுவருடம் முன்னரே குடம்கூட்டத் தெரிந்த மூத்தாசாரிகள் மறைந்துவிட்டார்கள். பேச்சிப்பாறை அணையைக் கட்டிய பொறியாளர் தச்சுநூல்களை வாசித்து அந்த முறைக்கு ஒரு புதிய வரைபடத்தை உருவாக்கினார் என்று சமீபத்தில் ஒரு ஆசாரி சொன்னார்..

ஆதிக்கவாதிகள் அளித்த எளிய அரசியல் வரைபடங்களைச் சுமந்தலையாமல் நம்முடைய பண்பாட்டையும் அணுகும் புதிய தலைமுறை உருவாகி வரக்கூடும். அவர்கள் நமக்கு புதிய வெளிச்சங்களை அளிக்கலாம்

ஜெ

ஜெ,

அருமையான கட்டுரை. மிக்க நன்றி.

அடுத்து வேதம்பாடின ஆரியர்களின் வழித்தோன்றல்கள் மதம்மாறி விட்டார்கள்: அத்தாவது, வேதங்களில் பாடியுள்ள கடவுளர்களை விட்டுவிட்டு முற்றிலும் வேறுபட்ட கடவுளர்களைப் பேணத் தொடங்கினார்கள்[iv]. சான்றாகப் பூசன் (Pūṣan), மித்திரன், வருணன் போன்ற தலைசிறந்த வேதக்கடவுளர் மறந்து பின்னர் அவற்றில் சொல்லாத கிருட்டிணன், இராமன், சிவன் போன்றோர் ஆரியரிடையே ஊன்றினர். அதனால் இன்னும் வேதங்களின் பொருள் விளங்காமல் மறைந்தது. ஆயினும் பொருள்தெரியாவிடினும் வேதத்தினைச் செய்வினைகளில் (சடங்குகளில்) ஓதுவதையும் அதன் பெருமதிப்பினையும் கைவிடவில்லை. எனவே வெறுமனே அதனைப் பேணிப்பாராட்டல் என்பதையேகூடப் பெரிதாகக் கருதினர். இந்த மதிப்பால் பின்னால் ஏற்றுக்கொண்ட கடவுளர்களைப் பாராட்டும்பொழுதுகூட அவர்களை வேதத்தோடு இணைத்துப் பாடுவதும் வழக்கமாகிவிட்டது.

இவரது புரிதல் எவ்வளவு மேம்போக்கானது என்று இதிலிருந்து தெரிகிறது. ராமனும், கிருஷ்ணனும், சிவனும் திடீரென்று எங்கிருந்தோ முளைத்தவர்களல்ல – வேத தெய்வங்களின் பரிணாமும் நீட்சியுமே அவர்கள். ஸ்ரீஅரவிந்தர் பிற்காலத்திய புராண தெய்வங்களின் உருவாக்கம் அனைத்தும் எப்படி அக்னி, ருத்திரன், விஷ்ணு போன்ற வேத தெய்வங்களிலிருந்தே உருவானது என்று தெளிவாக விளக்கியிருக்கிறார். வேதம் தமிழ்செய்த மாறன் சடகோபன் என்று வைணவ மரபில் புக்ழப் படும் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் ஏராளமான வரிகள் ரிக்,யஜுர்,சாம வேத மந்திரங்களின் நேரடி மொழியாக்கம் போலவே உள்ளன என்பதனை இருமொழியும் கற்றறிந்த பெரும்புலவர்களான வைணவ அறிஞர்கள் விளக்கியுள்ளார்கள். கார்காத்த வேளாளர் குடியில் பிறந்த திருநாவுக்கரசர் ‘உருத்திர திருத்தாண்டகம்’ என்ற பதிகத்தைப் பாடியுள்ளார். இதன் வரிகள் கிருஷ்ண யஜுர்வேதத்தில் உள்ள ஸ்ரீருத்ரம் என்ற துதியின் சாரமாக, அதன் நேரடி மொழிபெயர்ப்பாகவே உள்ளது என்றும் சைவ அறிஞர்கள் விளக்கியுள்ளனர்.

மந்திரத்தின் சப்தம் மட்டுமே முக்கியம் பொருளல்ல என்று கூறும் சடங்கர்களைப் பரிகசித்து நிருக்தம் என்ற வேத இலக்கணம் வகுத்த யாஸ்கர் என்பவரே தன் நூலில் எழுதியுள்ளார். சடங்கில் பொருளறியாது மந்திரங்களை ஓதுவது என்பது ஒருவகைப் புரோகிதப் போக்கு. அது பண்டைக்காலம் முதல் தொடங்கி இன்று வரை நீடித்து வரும் ஒன்று தான். ஆனால் அந்தப் போக்கு மட்டுமே அல்ல வேதம். உண்மையில் தெய்வீக ஞானம் அனைத்தின் தொகையே அது என்று தான் தமிழ் பக்தி இலக்கியங்களைப் பாடிய ஆழ்வார்களும் நாயன்மார்களும் கருதினார்கள், புறநானூற்றுப் புலவர்கள் கருதியது போல. அதனால் தான் அவர்கள் பாசுரம் தோறும் சிவனையும் திருமாலையும் வேதத்துடன் இணைத்தே பாடினார்கள். வேதம் என்றால் என்ன என்று மிகச் சரியாகவே புரிந்து கொண்டிருந்தவர்கள் தான் அவர்கள்.

அன்புடன்,
ஜடாயு

அன்புள்ள ஜடாயு

சமணநூலான நீலகேசியில் இருந்து நாஞ்சில்நாடன் எடுத்துக்காட்டிய செய்யுளை சற்றுமுன் வாசித்தேன்.

தோற்றமும் நாற்றமும் சுவையுடன் ஊறு இவற்றால் தொடங்கி
ஆதரவும் ஆயிருவல்லார்கள் அஃது அறிந்துரைப்ப
மேற்குலத்தோரோடு இழிந்தவர் என்பது மெய்மைபெறா
நூற்றிறம் செய்தவர் அறிகுவர் நுழைந்தறிவு உடையவரே

இதற்கான உரையாசிரியர் கூற்று. மருத்துவநூல் கற்று தேர்ந்தவர்கள் மலத்தில் நிறம் நாற்றம் சுவை ஊறு என்னும் தன்மைகளால் ஆராய்ந்து அது நோயாளியின் மலமா ஆரோக்கியமுள்ளவனின் மலமா என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் அது மேற்குலத்தாரின் மலமா இல்லை கீழைக்குலத்தோரின் மலமா என்று சொல்லமுடியாது. அதைப்போல நுண்ணறிவுடைய சான்றோர் வேதத்தைச் செய்தவர் சிறந்த அறிவுடையவரா அல்லது அறிவில்குறைந்தவரா என்று நூலை ஆராய்ந்து சொல்ல முடியும். அதனைச்செய்தவர் மேற்குலத்தாரா அல்லது கீழ்க்குலத்தாரா என்று சொல்லிவிடமுடியாது

இந்திய மரபில் சாதியப்போக்கும் சாதிமறுப்புப்போக்கும் என்றும் இணையான வலுவுடன் இருந்துள்ளன. எல்லா காலத்திலும் அறிவார்ந்த போக்குகள் ஆசாரங்களை தாண்டிசென்றுள்ளன. சாதி மறுப்பு நோக்கை இல்லையென மறுத்து இந்தியாவை ஒற்றைப்படையாக காட்டும் முயற்சிகளுக்குப்பின்னாலுள்ளது வெறும் ஆதிக்க அரசியல்

ஜெ

முந்தைய கட்டுரைபெண்ணின் கதை
அடுத்த கட்டுரைவாவிகள்