காந்தியும் அம்பேத்காரும்

 அன்புள்ள ஜெயமோகன்,

டி.ஆர்.நாகராஜ் அவரது ‘எரியும் பாதங்கள்’ நூலில் சொல்வார் –

‘ வரலாற்றின் மயக்கும் வசீகரம் என்னவென்றால் அது பாதி கோணமே முழுமையான கோணம் என்று நம்மை நம்ப வைத்து செயல்படுவதற்கான உணர்வெழுச்சியை அளிக்கிறது என்பதே.  முழுமையான பார்வைக்காக காத்திருக்கும் ஒருவர் செயல்படப்போவதேயில்லை. வரலாற்றில் குதிக்கப்போவதுமில்லை. இங்கேதான் வரலாற்றின் விடுதலை வாய்ப்புகள் உள்ளன. பாபா சாகேப் அவர்களும் பாபுவும் அத்தகைய படைப்பூக்கம் கொண்ட பொறுமையின்மையுடன் வரலாற்றில் குதித்தனர். மோதிகொண்டனர். படைப்பூக்கம் கொண்ட பொறுமையின்மை அடைந்தவர்களுக்கு மகாசமாதிநிலை என்பது வரலாற்றுச்செயல்பாடே.. வரலாற்றில் குதித்தபின் ஒருவரின் மீறல்களை இன்னொருவர் சமன்செய்துகொண்டார்கள். அவர்களின் உக்கிரமான மோதல்களுக்குப் பின் இறுதியில் இருவருமே உருமாற்றம் பெற்றவர்களாக எழுந்து வந்தார்கள்… ‘

இந்தப் பத்தியை திரும்பத் திரும்ப படித்த ஞாபகம். இன்னமும் புரியாத புதிராகத் தான் இருக்கிறது.

-அரவிந்த்

 
அன்புள்ள அர்விந்த்

பெரும் கிளர்ச்சியாளர்கள் வாழ்க்கையை ஒரு புள்ளியை மட்டும் சார்ந்து குறுக்கிக்கொண்டு புரிந்துகொண்டவர்கள். இது கோட்பாடுகளை உருவாக்கும் பெரும் தத்துவவாதிகளுக்கும் பொருந்தும். காந்தியின் பட்டியலில் நீங்கள் மார்க்ஸையும் சேர்த்துக்கொள்ளலாம். அவர்களின் வாழ்வனுபவங்களின் மூலம் உண்மையின் ஒரு நுனி அவர்களுக்கு அகப்படுகிறது. அவர்களின் அபாரமான அறவுணர்வு அல்லது தீவிரமான தர்க்கபோதம் அவர்களை அந்த நுனியில் இருந்து ஒரு முழுமையையே  உருவாக்கிக் கொள்ளச்செய்கிறது

மெல்ல அவர்கள் அதை அவர்கள் தங்களுக்குரிய உண்மையென ஆக்கிக்கொள்கிறார்கள். அதை நம்பி தங்கள் வாழ்க்கையை சமர்ப்பணம்செய்கிறார்கள். எவன் ஒருவன் தன் ஒட்டுமொத்த வாழ்க்கையை ஒரு கருத்துக்காக முழுமையாக சமர்ப்பணம்செய்கிறானோ அப்போதே அவன் ஒரு கருத்தியல் சக்தியாக ஆகிவிடுகிறான். கருத்தியல் சக்தி என்பது அதிகாரத்தின் சக்தியே. அவனைச்சுற்றி மக்கள் சேர்கிறார்கள். அவன் ஒரு வரலாற்று நிகழ்வாக ஆகிறான்.

 

ஒரு வரலாற்று நாயகனுக்கு தன் அகங்காரத்தின் எல்லையைத்தாண்டியும் யோசிக்கும் திறன் இருக்க வேண்டும். தன் உண்மைக்காக தன்னையும் தன்னைச்சார்ந்தவர்களையும் அவன் அர்ப்பணம்செய்யும்போதே தனக்கு முற்றிலும் மாறான ஒரு உண்மை இருக்கக்கூடும் என அவன் நம்ப வேண்டும். அதற்கான இடம் அவனுடைய செயல்பாடுகளில் இருக்க வேண்டும். அந்த நெகிழ்நிலை இல்லையேல் அவன் ஆக்குவதை விட அழிப்பதே அதிகமாக இருக்கும். ஸ்டாலினின் வரலாற்றை நான் கூர்ந்து படித்திருக்கிறேன். ஒருகாலத்தில் அவர்மேல் பெரும் மோகம் கொண்டவன் என்ற நிலையில். இந்த மாமனிதனுக்குள் கொஞ்சம் கருணை, கொஞ்சம் நெகிழ்ச்சி இருந்திருந்தால் மானுடம் என்ன பேறு பெற்றிருக்கும் என எண்ணி கண்ணீர் மல்கியிருக்கிறேன்.

சர்ச்சைக்காளான தன் நூலை நாகராஜ் எழுதும்காலகட்டத்தில் நான் அவருடன் தொடர் உரையாடலில் இருந்தேன். என் ‘இலக்கிய உரையாடல்கள்’ நூலில் நான் எடுத்த நாகராஜின் விரிவான பேட்டி உள்ளது. அந்தப்பேட்டி தொண்ணூறுகளில் காலச்சுவடில் வெளிவந்தது. நாகராஜ் அந்நூலில் காந்தியையும் அம்பேத்காரையும் ஒருவர் இடைவெளியை ஒருவர் நிரப்பிக்கொள்ளும் இரு பெரும் வரலாற்று சக்திகளாகக் காண்கிறார். இருவருமே தங்களுடைய சொந்த வரலாற்று உண்மைக்காக வாழ்க்கையை அர்ப்பித்தார்கள். இருவரது வரலாற்று உண்மைகளும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.இருவரும் ஒரே வரலாற்றுக்காலகட்டத்தைப் பகிர்ந்துகொண்டார்கள்.

 

 

ஆனால் இந்தியாவின் நல்லூழ் என்பது இரு பெரும் தலைவர்களும் தங்கள் மறு தரப்புமேல் கொண்டிருந்த மரியாதையில் இருந்தது. அவர்களுக்கு மறு தரப்பு எப்போதுமே முக்கியமாக இருந்தது. காந்தியின் அரசியல் சிந்தனைகளில் தொடர்ச்சியாக அம்பேத்கரின் சிந்தனைகள் ஊடுருவியதன் தடையங்களைக் காணலாம். ஆகவேதான் காந்தி எப்போதும் தன் கொள்கைகளை தானே ஐயப்பட்டுக்கொண்டிருந்தார். தானறியாத மாற்றுக்கருத்து ஒன்று இருக்கும் என்று எப்போதும் எண்ணிக் கொண்டிருந்தார். ஆம், அவர் அம்பேத்காரை தனக்குள் இழுக்க வாழ்நாளெல்லாம் முயன்றுகொண்டிருந்தார்.

காந்தியின் அரசியல்போராட்டம் மெல்ல சமூகப்போராட்டமாக மாறியது அம்பேத்காரின் சிந்தனைகளின் மூலமே என்பதுதான் நாகராஜின் கருத்து. அதை பெருமளவுக்கு ஒத்துக்கொள்ளக்கூடியவன் நான். காந்தியின் அரசியல் அதுநாள் வரை நம் உயர்மட்ட அரசியலில் பொருட்படுத்தப்படாமல் இருந்த அடித்தளத்தை மையத்துக்குக் கொண்டுவந்தது. கல்விபரவல், கிராம சுயராஜ்யம், கள்விலக்கம் என காந்தியின் சமூகத்திட்டங்கள் இந்திய சமூகத்தின் அடிவரை சென்று இந்த தேசத்தை கண்விழிக்கச்செய்தன.

அதேபோல  அம்பேத்காரில் காந்தியின் செல்வாக்கு ஆழமானது என்பது டி.ஆர்.நாகராஜின் எண்ணம். அம்பேத்காரைப்போன்ற ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்கள் உலகமெங்கும் என்ன செய்திருக்கிறார்கள் என்று பார்த்தால் அந்த வேறுபாட்டை நாம் காணலாம். சினம் கொள்ள, கொலைவாளை எடுக்க, அனைத்து நியாயங்களும் அவருக்கு இருந்தன. உக்கிரமான கோபத்துடன் அம்பேத்கார் அவற்றை பதிவுசெய்யவும் செய்கிறார். ஆனால் மீண்டும் மீண்டும் தன் கோபங்கள் மேல் அவர் ஐயம் கொண்டிருந்தார். அதற்குக் காரணம் காந்தி

ஜனநாயகத்தின் மென்மையான, சீரான வழிமுறைகள் மேல் பொறுமையிழந்தாலும் அவற்றை கைவிட அம்பேத்கார் தயாராகவில்லை. திட்டவட்டமாக சீராக ஓர் அரசியல் விழிப்பை நோக்கி தன் மக்களை இட்டுச்சென்றார். அவர்களை மைய ஓட்டத்தின் எதிரிகளாக அவர் உருமாற்றவில்லை. அந்த மைய ஓட்டத்தின் நீதியுணர்வுடன் உரையாடச்செய்தார். அந்த மைய ஓட்டத்துடன் அதிகாரப்பேரத்தில் அமரச்செய்தார்.

ஜனநாயகத்தை நம்புவதற்கு அம்பேத்காருக்கு அவர் காலத்தில் நியாயங்களே இல்லை. வன்முறை சார்ந்த விடுதலைக் கருத்துக்கள் காற்றில் கொந்தளித்துக்கொண்டிருந்த காலகட்டம் அது. அம்பேத்கார் வன்முறை இல்லாத ஜனநாயகத்தை நம்பினார். அவரது சமூகத்தை ஜனநாயக அரசியல் செயல்பாடுகளுக்கு கொண்டுவந்தார். இன்று அரைநூற்றாண்டு கழித்து பார்க்கையில் இந்திய தலித்துக்கள் அடைந்துள்ள அனைத்துமே அந்த சமநிலையின் விளைவாகப் பெற்றவை என்பதைக் காணலாம்.அவர்களை அவர் ஆயுதமெடுகக்ச்செய்திருந்தால் இந்த நாடு ரத்தத்தால் நனைந்திருக்கும். பிறர் ரத்தம், அவர்களின் ரத்தம்.

பியாரிலாலுடன் உரையாடும்போது காந்தி சொல்கிறார், உள்முரண்பாடுகள் கொண்ட ஒரு சமூகம் ஆயுதம் எடுத்தால்  எதிரிக்காக அல்ல அந்த முரண்பாடுகளுக்காகவே அது ஆயுதத்தை கையாளும், அவர்களையே அது அழித்துக்கொள்ளும் என. எதிரியுடன் போராடும் போது மெல்லமெல்ல எதிரியின் அதே குணத்தை தானும் அடையாமல் இருக்கும் நிலையையே காந்தி சத்யாக்ரகம் என்றார். அம்பேத்கர் தலித்துக்களை அவர்களை ஒடுக்கிய சாதி வெறியர்களுக்கு எதிரான சாதி வெறியர்களாக ஆக்கவில்லை.

கிட்டத்தட்ட அம்பேத்காருடன் ஒப்பிடத்தக்க மால்கம் எக்ஸ் , மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் ஆகியோருடன் இணைத்து சிந்தனை செய்தால் இது புரியும். மால்கம் எக்ஸ் வாழ்நாள் முழுக்க வெறுப்பையே கக்கிக்கொண்டிருந்தார். வெறுப்புக்கு அப்பால் சென்று அவரால் ஒரு கணம் கூட சிந்தனைசெய்ய முடியவில்லை.  தன் மக்களுக்கு அழிவையல்லாமல் எதையுமே அளிக்க அவரால் இயலவில்லை. தங்களுக்குள்ளேயே கொன்றுகொள்ளும் அளவுக்கு அந்த வெறுப்பு வளர்ந்தது. அவரையே கொலையாகச் செய்தது. மால்கம் எக்ஸில் இருந்து மார்ட்டின் லூதரிடம் உபரியாக உள்ள அம்சம் காந்தியம் தான். ஆகவே அகிம்சை, ஜனநாயகம். அதன் வெற்றியை வரலாறு காட்டுகிறது

அந்த நெகிழ்வைத்தான் மீண்டும் மீண்டும் டி.ஆர்.நாகராஜ் சுட்டிக்காட்டுகிறார். இந்தியாவில் தலித் அரசியல் உருவாகிவந்தபோது எழுதப்பட்ட நூல் அது. தலித் அரசியலின் முன்னோடிகள் ஒருவர் நாகராஜ். அந்த அலைகளின் வழியாக உருவாகி வந்தவர். அந்த அலையில் ஒரு சாராரிடம் இருந்த வன்முறை நாட்டத்துக்கும், ஒற்றைப்படையான கருத்துவெறிக்கும், ஜனநாயக மறுப்புக்கும் எதிராக அவர் நிகழ்த்திய விவாதங்களின் விளைவாக உருவான நூல். ஒரு கட்டத்தில் அது தலித் சிந்தனையாளர்களால் பெரும்பாலும் ஏற்கவும் பட்டது.

உண்மை என்பது பலமுகம் கொண்டது என்று உணராதவர்களால் ஜனநாயகத்தை நம்ப முடியாது. ஜனநாயகத்தை, பன்மைத்துவத்தை நம்பாத எதுவும் படிப்படியாக பேரழிவையே உருவாக்கும். எத்தனை லட்சியங்களை முன்வைத்தாலும் இறுதியில் அந்த லட்சியங்களின் புதைமேட்டில்தான் அது அமர்ந்திருக்கும்.

ஜெ

 

http://www.gandhiserve.org/gsf/

முந்தைய கட்டுரைகவிதை–ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைசமணம் ஒரு கடிதம்