வேதங்களின் முக்கியத்துவம் ஒரு பொதுப்பிரமையா?

நான்மறை சொல்லினும் மெய்தனை அறி? என்ற தலைப்பில் சிறகு இதழில் பெரியண்ணன் சந்திரசேகரன் எழுதிய கட்டுரையை வாசித்தேன். வேதங்களைப்பற்றிய ஒரு கறாரான கட்டுரை.

வேதங்களைப்பற்றி நம்மிடையே எழுதப்படும் சாதக பாதக விமர்சனங்களில் பெரும்பகுதி வேதங்களைப்பற்றிய பிரமைகளில் இருந்து எழக்கூடியவை. வேதங்களில் இல்லாதது இல்லை, உலக ஞானத்துக்கே அவைதான் அடிப்படை, அவை மாபெரும் தத்துவக் களஞ்சியங்கள் என்றவகையிலே ஒரு தரப்பு எழுதிக்கொண்டிருக்கும். அதற்கு மாறாக வேதங்கள் சாதியவெறுப்பை உருவாக்கும் பார்ப்பனியக்குப்பைகள் என்ற கருத்து சொல்லப்படும்

தமிழில் வேதங்கள் கிடைக்கின்றன. ஜம்புநாதன் மொழியாக்கம்செய்த வேதங்களை ஒரு வாசகன் வாசித்தால் நேரடியாக சம்ஸ்கிருதம் படித்த நிறைவை அடைவான் – ஒன்றும் புரியாது. எழுவாய்பயனிலையைக்கூட கவனத்தில் கொள்ளாத மொழியாக்கம். ‘கண்ராவி’ என்ற சொல்லின் அர்த்தம் எனக்குத் தெரியாது. அச்சொல்லை அம்மொழியாக்கத்துக்குப் பயன்படுத்தலாமென உறுதியாகச் சொல்வேன்.

வேதங்கள் உண்மையில் என்ன வகையான நூல்கள்? வேதங்களைப்பற்றி இந்து மரபில் மூவாயிரம் வருடங்களாக இருந்து வரும் பெருமிதமும் அவற்றுக்கு சுருதிகள் என்ற வகையில் முக்கியத்துவமும் சரியானவைதானா?

பெரியண்ணன் சந்திரசேகரன் வேதங்களுக்கு அளிக்கப்பட்டுவந்த அதீத முக்கியத்துவம் என்பது அவற்றை அவற்றின் ஆதரவாளர்களல்லாதவர்கள் பயில வாய்ப்பில்லாத நிலையில் அவற்றின் தொன்மை காரணமாக உருவான பிரமையே என்று சொல்கிறார்.

வழக்கமாக இவ்வகை நிலைப்பாடு கொள்பவர்கள் சட்டென்று அடுத்த கட்டத்துக்குச் சென்று எல்லாம் பார்ப்பன சதி என்று சொல்லி விடுவார்கள். அதை இவர் செய்வதில்லை என்பதே இக்கட்டுரையின் சமநிலைக்கு ஆதாரம் என நினைக்கிறேன். வேதங்களைத் தொன்மையான பண்பாட்டுக்கருவூலங்கள், தென்னகப்பண்பாட்டின் கூறுகளையும் உள்ளடக்கியவை என்று அவர் சொல்கிறார்.

வேதங்கள் எவ்வகை நூல்கள்? ஏன் அந்த முக்கியத்துவம் அவற்றுக்கு வந்தது? அந்த முக்கியத்துவத்துக்கான அடிப்படை அவற்றில் உண்டா? சுருக்கமாகச் சொன்னால் என்னுடைய விளக்கமாக இப்படிச் சொல்வேன்.

வேதங்கள் இந்து ஞானமரபின் வைதீகத்தரப்புகளுக்கு சுருதிகள். சுருதி என்ற சொல்லை மூலநூல் canon பொருளில் பயன்படுத்துவதே உகந்தது. ஆனால் செவ்விலக்கியம் classic என்ற பொருளிலும் பயன்படுத்தலாம்.

செவ்விலக்கியம் என்பது அந்தப்பண்பாட்டில் பின்னர் உருவான அனைத்து சிந்தனைகளுக்கும் அழகியலுக்கும் தொடக்கப்புள்ளிகள் கொண்ட ஒரு தொன்மையான இலக்கியத்தொகை. அது அந்தப்பண்பாட்டின் விதைநிலம்.

தமிழில் சங்க இலக்கியங்களை செவ்விலக்கியம் என்று சொல்லலாம். இன்றுவரை தமிழில் உருவான எல்லா இலக்கிய எழுச்சிகளுக்கும் அதில் தொடக்கத்தைக் காணமுடியும். தமிழ்ப்புதுக்கவிதைக்குக்கூட சங்க இலக்கியமே தொடக்கம் என்று பிரமிள் எழுத்யிருக்கிறார்.

செவ்விலக்கியம் என்பது இலக்கிய உச்சம் அல்ல. அதன் பெரும்பகுதி இலக்கியரீதியாக பொருட்படுத்தக்கூடியதாக இருப்பதில்லை. அது தொன்மையான பழங்குடிவாழ்க்கையில் இருந்து இலக்கியம் முளைவிட்டபோது உருவான முதல் வடிவம் அவ்வளவுதான்.

ஆகவே பழங்குடி வாழ்க்கையில் உள்ள எல்லாமே அதில் இலக்கியமாக மாறியிருக்கும்.தண்ணீர் பட்டதும் மண்ணில் உள்ள எல்லா விதைகளும் முளைப்பது போல. அதிலிருந்து தேவையானவற்றை மட்டுமே அடுத்தடுத்த தலைமுறைகள் வளர்த்தெடுத்துக்கொள்கின்றன.

ஒரு வகையில் செவ்விலக்கியத்தை ஒரு பண்பாட்டின் ஆழ்மனம் என்று சொல்லலாம். அங்கே இருப்பவற்றை அவ்வப்போது அப்பண்பாடு கனவுகளாக க்ண்டுகொண்டிருக்கிறது. மறு ஆக்கம்செய்து நனவாக்கிக்கொண்டிருக்கிறது.

வேதங்கள் அத்தகையவை. வேதங்களைப்பற்றிய ஒரு கட்டுரையில் ஷெர்பாட்ஸ்கி அவற்றை தொல்பிரதிகள் [primitive texts] பண்படாபிரதிகள் [savage texts] என்று சொல்வதை வாசித்து அதிர்ந்ததை நினைவுகூர்கிறேன். ஆனால் பின்னர் அந்த விவரணை மிகச்சரியானது என புரிந்துகொண்டேன். அது ஓர் எதிர்மறைக்குறிப்பல்ல.

பண்பாடு என்னும்போது நாம் உத்தேசிப்பது ஒரு மக்கள்தொகுதி காலப்போக்கில் உருவாக்கிக்கொண்டுள்ள ஞானத்தொகுதியைத்தான். பண்படுதல் என்பது அந்த ஞானத்தொகுதியுடன் கொள்ளும் இசைவு மட்டுமே. அந்த ஞானத்தொகுதி உருவாவதற்கு முந்தைய நூல்களையே தொல்பிரதிகள் பண்படாபிரதிகள் என்கிறோம்.

பண்பாட்டில் பொருந்திய மனம் அனைத்தையும் அது பொருந்தியிருக்கும் பண்பாட்டுச்சூழலின் நீட்சியாகவே அணுகுகிறது. வேறு வழியே இல்லை.ஆனால் பண்படாமனம் பிரபஞ்சத்தின் முடிவின்மையையும் இயற்கையின் பேரழகையும் புத்தம்புதிய கண்களுடன் அணுகுகிறது. புத்தம்புதிய தரிசனங்களை நோக்கிச் செல்கிறது.

உலகமெங்குமுள்ள பழங்குடிக்கற்பனைகளில் உள்ள பிரமிப்பூட்டும் கற்பனைவளத்தின் ரகசியம் இதுவே. செவ்வியல் என்பது இந்த ஆதிக்கற்பனைகளின் நாற்றங்கால். ஆனால் பெரும்பாலான பழங்குடிக்கற்பனைகள் இயற்கையை தன்னுடைய வாழ்க்கைக்கு ஏற்ப விளங்கிக்கொள்வதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றன. இயற்கையை தன்னை நோக்கி இழுத்துக்கொள்கின்றன. தன்னை இயற்கையையும் பிரபஞ்சத்தையும் நோக்கி விரித்துக்கொள்வதில்லை.

வேதங்கள் அதி உக்கிரமாக தங்களை இயற்கைநோக்கி விரித்துக்கொண்டு பிரபஞ்சதரிசனத்தை சென்றடைபவை. எளியபழங்குடிப்பாடல்களாக ஆரம்பிப்பவை தத்துவத்தளம் நோக்கி விரிந்து என்றுமுள ஞானச்சிக்கல்களை தொட்டு விடுகின்றன. அதுவே அவற்றின் சிறப்பு.

வேதங்களில் முதன்மையானதும் மூத்ததுமான ரிக்வேதத்தையே உதாரணமாகக் கொள்ளலாம். அதன் ஆரம்பப்பாடல்கள் மிக எளிமையான பிரார்த்தனைகள். முதலில் அப்பாடல்களில் இயற்கைச்சக்திகள் நேரடியாகவே அடையாளம் காணப்படுகின்றன, அவற்றை நோக்கி பிரார்த்தனைகள் செய்யப்படுகின்றன

ஆனால் அடுத்தகட்டத்தில் அந்த இயற்கைச்சக்திகள் குறியீடுகளாக ஆகின்றன. ஒரு பருப்பொருளை குறியீடாக ஆக்கிக்கொள்வதன் பரிணாம மாற்றம் என்பது மிகமிக வியப்புக்குரியது. பருப்பொருள் என்பது திட்டவட்டமாக அறியப்படுவது. குறியீடு என்பது நுண்மையானது, பல அர்த்தங்கள் நோக்கி விரியக்கூடியது

தீ என்ற பருப்பொருளை ரிக்வேதம் அறியும் விதத்தை மட்டுமே வைத்து இதைப்புரிந்துகொள்ளலாம். தீ முதலில் பருப்பொருளான ஒன்றாக அறியப்படுகிறது. பின்பு அதன் குணங்களே தீ என குறிக்கப்படுகின்றன. ஒளியும் வெப்பமும் நிறமும் எல்லாம் ஒன்றா ச் வெஇரு என்பது பற்பல நெருப்புகளாக மாறுகிறது. ஒளியும் வெப்பமும் செம்மையும் எல்லாமான ஒன்று என அறியப்படுகிறது

மெல்ல தீ ஒரு ஆற்றலாக அறியப்படுகிறது. பின்பு ஓர் இயல்பாக விரித்தெடுக்கப்படுகிறது. பிரபஞ்சவெளி முழுக்க நிறைந்துள்ள ஒரு பெருவல்லமை அது. நீரிலும் தளிரிலும் அது இருப்பதாக உணர்கிறார்கள் வேதரிஷிகள். சொல்லிலும் எண்ணங்களிலும் அதை காண ஆரம்பிக்கிறார்கள்.

அறிதலின் இந்தப்பயணம் மெல்ல மண்ணில் அறியப்படும் அனைத்தையும் பிரபஞ்ச அளவுக்குக் கொண்டுசென்று புரிந்துகொள்ள அவர்களை தூண்டுகிறது. மண், நீர், காற்று அனைத்துமே பிரபஞ்சமளாவிய பொருளில் ஆராயபப்டுகின்றன. காலம் தூரம் ஆகியவை அவ்வாறு அணுகப்படுகின்றன. பசி, ருசி, மூச்சு எல்லாமே பிரபஞ்ச அர்த்ததில் விளக்கப்படுகின்றன

இந்த தளத்தில் எழும் பிரபஞ்சவினாக்களை நாம் ரிக்வேதத்தின் முதிர்வுப்பகுதியாகிய பத்தாம் காண்டத்தில் தொடர்ச்சியாகப் பார்க்க ஆரம்பிக்கிறோம். இன்றைய அறிவியல் பிரபஞ்சம் நோக்கி கேட்கும் கேள்விகள் எல்லாமே அதில் கேட்கப்பட்டுவிட்டன. இன்று நம்மிடம் உள்ள உருவகங்கள் பெரும்பாலும் அங்கேயே உருவாக்கப்பட்டுவிட்டன.

வேதங்கள் பெரும் தொகைநூல்கள். அவற்றின் மிகப்பழைய கவிதையில் இருந்து மிகப்புதிய கவிதை வரைக்குமான காலமென்பது குறைந்தது இரண்டாயிரம் வருடமாக இருக்கலாம். இந்த பெரும் காலவெளியில் மனிதசிந்தனை அடைந்த வளர்ச்சி, தாவல் அவற்றில் பதிவாகி இருக்கிறது. ஆகவேதான் அது எப்போதும் ஆய்வாளர்களை கவர்கிறது

இந்தியமரபில் பின்னர் உருவான சிந்தனைகளைப் பொறுத்தவரை வேதங்கள் அவற்றின் தொடக்கப்ப்புள்ளிகளின் தொகுப்பு. ஆகவே அவற்றை சுருதிகள் என்றார்கள். சுருதி என்ற முக்கியத்துவம் எப்போதும் அந்நூல்தொகைக்கு இந்திய ஞானமரபில் இருந்துகொண்டே இருந்தது.

சுருதி என்றால் முன்னறிவு என்று பொருள். நேர்க்காட்சி [பிரத்யட்சம்] உய்த்தறிவு [அனுமானம்] ஆகிய இரு அறிதல்முறைகளுக்கு நிகரான முக்கியத்துவமுள்ள ஒன்றுதான் முன்னறிவு [சுருதி] வேதங்களை வைதீக மரபுகள் எல்லாம் சுருதி என்று கொண்டன. வேதமறுப்பு சிந்தனைகள் வேதங்களையும் அவற்றைப்போன்ற எல்லா பழைய சிந்தனைகளையும் ஒட்டுமொத்தமாக சுருதி என்றன.

வேதங்களை அணுகுவதில் உள்ள இருவகை பிழைப்போக்குகள் உள்ளன.வேதங்களில் உள்ள எளிய பாடல்களை மட்டுமே எடுத்துக்காட்டி அவை வெறும்பழங்குடிப்பாடல்கள் மட்டுமே என வாதிடுவது ஒன்று. அவற்றில் உள்ள ஞானக்குறிப்புள்ள வரிகளை மட்டுமே சுட்டிக்காட்டி அவற்றை உலகஞானம் அனைத்தும் அடங்கிய பெட்டகங்களாக அணுகுவது.

வேதங்களை இந்தியஞான மரபின் செவ்வியல் பரப்பாக, இவையனைத்தும் உருவாகி வந்த தொடக்கநிலமாக, இந்திய ஞானமரபின் ஆழ்மனமாக , எடுத்துக்கொள்வதே சரியானது.

பெரியண்ணன் சந்திரசேகரன் வேதங்களில் சாபங்கள், அழிவுக்கான பிரார்த்தனைகள் ஆகியவை இல்லை என புறநாநூறு குறிப்பிடுவதைச் சொல்லி, உண்மையில் வேதங்களில் அவை உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். வேதங்கள் மீதான பெருமதிப்பு காரணமாக அவற்றில் இவையெல்லாம் இருக்காது என்னும் பிரமை அக்காலகட்டத்தில் நிலவியது என்கிறார்.

வேதங்கள் அவற்றை பிறர் வாசிக்க வாய்ப்பில்லாத நிலையில் நெடுங்காலமாக இருந்தமையால் இந்த நம்பிக்கை உருவாகி நீடித்திருக்கலாம் என அவர் ஊகிக்கிறார். வேதங்கள் வெறுமே சடங்குகளுக்கான மந்திரங்களாக மட்டுமே நீடித்தன என்றும் ஆகவே அவை நலமளிக்கும் சொற்கள் என்ற அளவிலேயே எண்ணப்பட்டன என்றும் நினைக்கிறார்.

பெரியண்ணன் சந்திரசேகரன் அவர்கள் ‘மக்கள் தத்தம் காலநிலைகளில் நிலவிய கொள்கைகளை நான்மறைகளின்மேல் ஏற்றிப் பேசியுள்ளனர் என்பதனையும் அந்தப் பிழைகளை இனிமேலாவது தவிர்த்து மெய்யினை அறியவேண்டும்’ என்று குறிப்பிடுகிறார். அது உண்மை.

இரு விளக்கங்களை மட்டும் இதைச்சார்ந்து அளிக்க விரும்புகிறேன். ஒன்று, இன்று நாம் வேதங்கள் என்னும்போது உத்தேசிப்பது ஐரோப்பியர்களால் உருவாக்கப்பட்ட மனச்சித்திரத்தைத்தான். கீழை ஞான மரபைப்பற்றி பேசும்போது ஐரோப்பியர் வருகைக்கு முன் வருகைக்குப்பின் என பிரித்துக்கொண்டுதான் ஆராயவேண்டும்.

ஒரு கண்ணாடியில் நம்மைப்பார்த்துக்கொள்வதுபோலத்தான் இது. இந்திய ஞானமரபு அதன் தோற்றுவாயில் இருந்து ஐரோப்பியர் வருகை என்ற புள்ளிவரை வந்து அங்கே நின்றுவிடுகிறது. கண்ணாடிப்பிம்பம் கண்ணாடிக்கும் வெகுதூரத்தில் ஆரம்பித்து கண்ணாடிப்பரப்பு வரை வந்து நின்றுவிடுவது போல. நாம் இப்பால் நின்று அதை பார்க்கிறோம். நம் பார்வை நம்மிடம் தொடங்கி அந்த கண்ணாடிப்பரப்பு வரை சென்று தொடுகிறது, அவ்வளவுதான்.

நம்முடைய ஞானமரபுக்குள் நாம் இல்லை. நாம் அதை வெளியே இருந்து பார்ப்பவர்களகாவே இன்று இருந்துகொண்டிருக்கிறோம். அதற்கு அன்னியமானவர்களாகவே இருக்கிறோம். ஆகவே நம்முடையதாக அல்ல ,நம்மால் பார்க்கப்படுவதாகவே அது உள்ளது. நம்முடைய நேர் எதிர் பிம்பமாக , இடவலம் திரும்பியதாக தெரிகிறது.

இந்திய சிந்தனை மரபுக்கு ஒரு பரிணாமத் தொடர்ச்சி இருந்தது. அது அறிந்து நிலைத்து செயலற்றுவிட்டபின் ஐரோப்பியர் அவர்களின் அறிவுக்கருவிகளைக் கொண்டு அவற்றை கண்டுபிடித்து மீட்டு கட்டி எழுப்பினார்கள். அந்த ஐரோப்பிய கட்டுமானத்தையே நாம் இன்று இந்தியசிந்தனை என அறிகிறோம்.

ஆகவே நம்முடைய பண்டை நூல்களை புரிந்துகொள்ள நம்முடைய இன்றைய நோக்கில் அவை எப்படி பொருள் கொள்கின்றன என்பது எப்போதுமே உதவாது. அவை அன்று எப்படி அணுகப்பட்டன என்பதை பல்வேரு ஊகங்கள் மூலம் ஆராயவேண்டியிருக்கிறது

நான்கு வேதங்கள் என நமக்கு இன்று கிடைக்கும் நூல்கள் ஐரோப்பியரால் அச்சுக்குக் கொண்டுவரப்பட்டவை. அவர்களுக்கு நூல்பகுப்புக்கு இருந்துவந்த முறைமைப்படி அவர்கள் அவற்றை பகுத்து அச்சாக்கினார்கள். வேதங்களாக இன்று நாம் நினைப்பவை சம்ஹிதைகளை மட்டுமே. சென்றகாலத்தில் வேதங்கள் இப்படி தனியான நான்கு நூல்களாக இருந்ததில்லை.

வேதம் என்பது ஒரு ஒட்டுமொத்த ஞானத்தொகையாகவே சென்றகாலகட்டத்தில் கருதப்பட்டது. மரபான பார்வையின்படி வேதம் என்பது நான்கு பகுதிகளால் ஆனது. சம்ஹிதை, ஆரய்ணயகம், பிராம்மணம், உபநிடதம். இவற்றை பிரித்துப்பார்க்க்கும் வழக்கம் இருக்கவில்லை.

சம்ஹிதைகளை மட்டுமே வேதங்களாகக் கொள்ளவேண்டும் என வாதிட்டு அதை நிறுவியவர் ஆரிய சமாஜத்தின் தலைவரான சுவாமி தயானந்த சரஸ்வதிதான். அது ஐரோப்பிய அரிதல்முறையை அடியொற்றிய ஒரு நோக்கு. இந்திய ஞானமரபில் ஐரோப்பிய பாணியிலான ஒரு மூலநூல் வாதத்தை உருவாக்க முயன்றவர் அவர்.

எல்லா வேதங்களுக்கு கிருஷ்ண விபாகமும் சுக்ல விபாகமும் உண்டு. அதவாது இருண்ட பகுதி , வெண்மையான பகுதி. ரிக்வேதத்துக்கு நான்கு கிருஷ்ண சுக்ல விபாகங்க இருந்தன. யஜூர்வேதத்துக்கு எட்டு. சாமவேதத்துக்கு பத்து . அதர்வ வேதத்துக்கு பத்து. இப்போது யஜுர்வேதத்தின் விபாகங்கள் மட்டுமே அறியப்படுகின்றன.

வேதங்களுக்கு விளக்கங்கள் வேத சாகைகள் எனப்பட்டன. வேதங்களின் கிளைகள். ரிக்வேதத்துக்கு 21 கிளைகள். யஜூர்வேதத்துக்கு நூறும் சாமவேதத்த்க்கு ஆயிரமும் அதர்வத்துக்கு ஒன்பதும் கிளைகள் இருந்தன என்று சொல்லப்படுகிறது.

இதைத்தவிர ஒவ்வொரு வேதத்துக்கும் வேதாங்கங்களும் உபவேதங்களும் உள்ளன. வேத ஞானம் என்பது வேதவேதாங்கஞானம் என்றே சொல்லப்பட்டது. ரிக்வேதத்துக்கு ஆயுர்வேதம் [மருத்துவம்] உபவேதமாகும்ம். யஜூர்வேதத்துக்கு தனுர்வேதம் [ஆயுதஞானம்]. சாமவேதத்துக்கு கந்தர்வ வேதம் [இசைஞானம்]. அதர்வவேதத்துக்கு ஸ்தாபத்யவேதம்[ சிற்பஞானம்].

ஏற்கனவே சொல்லப்பட்டதுபோல வேதங்களின் சம்ஹிதைகள் என்பவை ஒரு தொடடக்கம் மட்டுமே. அவற்றில் இருந்து வெவ்வேறு கோணங்களில் விரித்தெடுக்கப்பட்டும் விளக்கப்பட்டும் வளர்ந்துருவானதே வேதஞானம் என்பது.

வேதங்களை மனு தர்ம நோக்கிலும் பிருஹஸ்பதி அர்த்த நோக்கிலும் நந்தி காமநோக்கிலும் பாதராயணன் மோட்சநோக்கிலும் ஜைமினி சொர்க்கநோக்கிலும் விளக்கினார் என்று குறிப்பிடப்படுகிறது. அதாவது பலகோணங்களில் விளக்கப்பட்டு வேதத்தொகுதி ஒரு ஞானவழியாக ஆக்கப்பட்டிருக்கிறது

வேதம் எனப்படும் இந்த ஞானத்தொகுதிக்குள்ளேயே வேதங்களைப்பற்றிய விமர்சனங்களும் விலக்கல்களும் ஏற்புகளும் உள்ளன. சாந்தோக்ய உபநிதடம் சாமவேதத்தின் பிராமணமான சாந்தோக்யபிராமணத்தைச் சேர்ந்தது. அது வேதங்களின் சடங்குமரபை மிகக்கடுமையாக விமர்சனம் செய்கிறது. பல உபநிடதங்கள் அதர்வ வேதத்தை முழுமையாக நிராகரிக்கின்றன.

அதாவது வேதம் என்ற சொல்லால் சுட்டப்பட்டது நான்கு சம்ஹிதைகள் மட்டுமல்ல. அந்த சம்ஹிதைகளில் தொடங்கி பல்வேறு நூல்கள் விளக்கங்கள் விவாதங்கள் வழியாக வளர்ந்து திரண்டு வந்த ஒரு ஞானதரிசனத்தையே. வேதங்களை வெறுமே மனனம் செய்து புரோகிதத்துக்கு மட்டும் பயன்படுத்தும் போக்கு பிற்காலத்தில் வந்தது.

எனவே புறநாநூறு வேதங்களைப்பற்றிப் பேசும் காலகட்டத்தில் வேதம் என்ற சொல் நான்கு வேதசம்ஹிதைகளை மட்டும் சுட்டியிருக்காது. இந்த ஒட்டுமொத்தம் ஞானப்பரப்பையும், அதன் சாராம்சத்தையுமே சுட்டியிருக்கும்.

அதாவது புறநாநூறு வேதங்களை ‘தெரியாமல்’ அப்படிச் சொல்லியிருக்க வாய்ப்பில்லை. வேதங்களை நாம் இன்று பார்க்கும் பார்வையில் அவர்கள் பார்த்திருக்க மாட்டார்கள். வேதத்தை ‘தெரியாமல்’ இருப்பது நாமே ஒழிய அவர்கள் அல்ல. நாம் அவற்றிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறோம், காலத்தால்.

வேதக்கல்வி பிராமணரல்லாதவர்களுக்கு மறுக்கப்பட்டது என்ற வாததை நான் ஏற்கவில்லை. அது உண்மையில் ஐரோப்பியரால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பிதம். இங்கிருந்த மரபுகள் பெரும்பாலும் அழிந்து விட்ட, தொடர்பிழந்து நின்றுவிட்ட காலகட்டத்தில் ஐரோப்பியர் இங்கே வந்தார்கள். அவர்கள் வேதங்களை பைபிள் போன்று இந்துமதத்துக்கான மையநூலாக கருதினார்கள். அவை பைபிள் போல அனைவருக்கும் ஏன் கற்பிக்கப்படவில்லை என்று வியந்தார்கள். அவ்வாறு கற்பிக்கப்படாமல் பிராமணர் தடுப்பதாக ஒரு சித்திரத்தை உருவாக்கிக்கொண்டார்கள்.

உண்மையில் பதிமூன்றாம் நூற்றாண்டுக்குப்பின் வேதஞானம் ஒரு பொதுவான அறிவுவழியாக இல்லாமலாகிவிட்டிருந்தது. சடங்குக்கான மந்திரமாகவே வேதங்கள் எஞ்சின.மந்திரம் என்ற சொல்லுக்கே ரகசியமானது என்றுதான் பொருள். தமிழில் மறை. ஆகவே அவை ரகசியமான சொற்களாக நீடித்தன. ஆனால் அப்போதும்கூட அவை பிராமணார்களுக்கு மட்டுமானவையாக இருக்கவில்லை.

வேதத்தை வேள்விச் சடங்குகளுக்கான மந்திரங்களாக கற்பதற்கு பிராமணர்களுக்கு மட்டுமே அமைப்புகள் இருந்தன, அவர்கள் மட்டுமே அப்படி கற்றார்கள் அவ்வளவுதான். பிறர் அப்படி கற்பது வேள்விகளின் மறைத்தன்மையை இல்லாமலாக்கிவிடும் என்ற நம்பிக்கை இருந்ததனால் பிறர் அவற்றை கற்பது தடைசெய்யப்பட்டது. ஆனால் மற்ற துறையைச் சேர்ந்தவர்கள் அவர்களுடைய துறைசார்ந்த தேவைக்கேற்ப அவர்களுக்கான வேதங்களை கற்றிருக்கிறார்கள்.

உதாரணமாக ஆயுர்வேதம் பயில ரிக்வேத மந்திரங்கள் சிலவற்றையேனும் கற்றேயாகவேண்டும். மருந்துகள் அரைக்கும்போது சொல்வதற்கான மந்திரங்கள் பல பதினேழாம் நூற்றாண்டில்கூட இருந்திருக்கின்றன. அவற்றை கற்பிக்க தனி குருமரபும் ஆசாரங்களும் இருந்தன. அவற்றை சூத்திரர்களும் கற்றிருக்கிறார்கள். சிற்ப சாஸ்திரத்தை பொறுத்தவரை சமீபத்தில் கூட அவர்களின் மரபான கல்வியில் அதர்வ வேதத்தின் சில பகுதிகள் கற்பிக்கப்பட்டன.

கேரளத்தில் ஆசாரிகள் சென்ற தலைமுறையில்கூட அதர்வ வேதத்தின் சில மந்திரங்களை தங்கள் சாதிசார்ந்த ஆசாரங்களில் இருந்து கற்றுக்கொண்டு கடைப்பிடிப்பவர்களாக இருந்தார்கள். இங்கே தச்சு கழித்தல் என்ற சடங்கு இருந்தது. காட்டில் முறித்த மரத்தைக்கொண்டு வீடுகட்டும்போது அந்தக்காட்டுமரத்தில் வாழ்ந்த அமானுட சக்திகள் அதிருப்தி அடைகின்றன எனறு நம்பப்பட்டது. அந்த மூர்த்திகளை அகற்றுவதற்கான இச்சடங்கு நள்ளிரவில் மிக ரகசியமாகச் செய்யப்படும். உயிர்ப்பலி உண்டு. சென்றகாலங்களில் நரபலியும்.

அச்சடங்கு ஒன்றை நானே கண்டிருக்கிறேன். முழுக்க முழுக்க அதர்வ வேத முறைப்படிச் செய்யப்பட்ட அச்சடங்கு கொஞ்சம் கொடூரமானது. அதனுடன் மூத்தாசாரியால் ஓதப்பட்ட மந்திரங்கள் அதர்வவேதத்தைச் சேர்ந்தவை.

இன்னொரு வேடிக்கை உண்டு அந்த அதர்வ வேதச் சடங்கை ஒரு பிராமணன் தவறிப்போய் கேட்டுவிட்டால் அவனுக்கு தீட்டும் விலக்கும் வந்துவிடும். கேரளத்தில் உள்ள வலியதளி என்ற கோயிலைப்பற்றிய கதை உதாரணம். அங்கே நதிக்கரையில் இருந்த இரு சூலாயுதங்களை இரு நம்பூதிரி சிறுவர்கள் பூசை செய்து வந்தார்கள். இளையவன் அப்பகுதியில் உள்ள ஆசாரிகள் செய்யும் ஒரு அதர்வவேதச் சடங்கை ஒருமுறை கவனித்து மந்திரத்தை மனனம் செய்துகொண்டான்

ஒருநாள் பூசை செய்யும்போது ஒரு சூலம் பயங்கரமாக ஆடியது. எந்த மந்திரத்தாலும் ஆட்டத்தை நிறுத்தமுடியவில்லை. இளையவன் ஒரு தேங்காயை எடுத்து அதர்வ வேத மந்திரம் சொல்லி தாந்த்ரீக விதிப்படி அதை உயிர்ப்பலியாக உருவகித்து அந்த சூலத்தில் அடித்து பிளந்தான்.ஆட்டம் நின்றது

ஆனால் அவனுக்கு எப்படி அதர்வம் தெரியும் என்று நம்பூதிரி சபை விசாரித்து கண்டுபிடித்தது. அந்த இளையநம்பூதிரியும் அவன் வம்சத்தில் வருபவர்களும் நிரந்தரமாக சாதிவிலக்கு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒரு உபசாதியாக நீடித்தார்கள். கேரளத்தின் உயிர்ப்பலி இருந்த கோயில்களில் தாந்த்ரீக பூசைகள் செய்பவர்கள் அவர்களே. அவர்கள் இளையது என அழைக்கப்பட்டார்கள்.

இந்தியாவில் வேதங்கள் உட்பட எந்த ஞானமும் துறவிகளுக்கு விலக்கப்படவில்லை. ரிஷிமூலம் பார்க்கப்படலாகாது என்ற நெறி என்றும் இருந்தது. தீண்டப்படாத சாதியைச்சேந்த நாராயண குரு துறவு வாழ்க்கையில் வேதவேதாங்கங்களை ஐயம்திரிபறக் கற்றார் என்பது நம் முன் உள்ள வரலாறு.

வேதம் பிற வர்ணத்தவருக்கு விலக்கப்பட்டது என்றெல்லாம் பொத்தாம்பொதுவாக ஐரோப்பியர் சொல்லி நாம் கற்றுக்கொண்ட விஷயங்களை விரிவாக ஆராய்ந்து மறுபரிசீலனை செய்யவேண்டிய காலம் இது. இந்தியாவெங்கும் உள்ள ஆசாரங்கள் சடங்குகளை ஆரய்ந்து நம் வரலாற்றை நாமே எழுதிக்கொள்ளமுடியும். அப்போது பதினெட்டாம் நூற்றாண்டில் அன்றைய குறைவான தகவல்களுடன் ஐரோப்ப்பியர் உருவாக்கிக்கொண்ட பல முன்முடிவுகள் உடையும்.

முந்தைய கட்டுரைநித்தியும் நானும்
அடுத்த கட்டுரைஈஸோவாஸ்யம்- முன்னுரை