மதிப்புமிகு ஜெயமோகன் அவர்களுக்கு.
நான் இது இரண்டாவது முறை எழுதும் கடிதம். எனது முந்தைய கடிதமும் ஏறக்குறைய இதை ஒட்டியதே. இதற்கும் விளக்கம் கிடைக்காவிட்டால் இனி நான் இலக்கியம் வாசிப்பது வீண் என்றே நினைக்கிறேன். இந்தக் கேள்வியை நான் உங்களிடம் கேட்கக் காரணம் உங்கள் அறம் சிறுகதைத் தொகுப்புதான். மானுடத்தின் மீதான நம்பிகையை அது கூட்டுகிறது. அதுவே நான் இலக்கியமாக நம்பி வாசிக்கும் வடிவம்.
இந்நிலையில் ‘பாலமுருகனின் நாவல்‘ எனும் தலைப்பில் தாங்கள் இணைத்த கட்டுரையில் ஷோபா சக்தியின் ‘ம்’ நாவல் குறித்த தகவல் வருகிறது. நான் வாசிந்து நொந்த நாவல் அது. அதன் ஆசிரியர் ஷோபா தகப்பனால் ஒரு குழந்தை கர்ப்பபமானதற்கு வக்காலத்து வாங்கியிருப்பார். நவீன் என்பவரின் கட்டுரையும் ‘அது சரிதான்’ என்பது போல அமைகிறது. இவர்களுக்கெல்லாம் என்ன மனநோயா? இதைத்தான் இலக்கியம் கொடுக்க வேண்டுமா?நம்பிக்கையின்மையையும் சிதைவையும் புகுத்துவதுதான் இலக்கியமா?
பாலமுருகன் என்பரின் ‘நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள் ‘ நாவலையும் நான் வாசிக்கவில்லை. அவரின் சோளகர் தொட்டியை மட்டுமே வாசித்துள்லேன். அது முக்கியமானது. ஆனால், குழந்தைகளை விட்டு ஓடும் ஒரு தகப்பனின் நிலைதான் வாழ்க்கை என்றால் அந்த வாழ்வைச் சொல்லும் இலக்கியம் எதற்கு. நான் எதற்கு வாசிக்க வேண்டும்?
மருது.
அன்புள்ள மருது,
நமக்கு இலக்கியம் பள்ளிப்பாடம் வழியாக அறிமுகமாகிறது. அது நல்லுரைகள் மற்றும் நற்கருத்துக்களால் ஆனது அதுவே அப்போது தேவையானதாக உள்ளது. அது ஒரு காலகட்டம்.
அதன்பின்னர் நாம் வெளியே வந்து வாழ்க்கையை நேரடியாகச் சந்திக்க ஆரம்பிக்கிறோம். அப்போது நாம் சந்திப்பது வாழ்க்கையின் இரக்கமற்ற தன்மையை. மனித மனங்களுக்குள் இருக்கும் இருட்டை. நம் மனத்தின் ஆழத்தில் உள்ள அழுக்குகளை. நாம் தொடர்ந்து அதிர்ச்சியும் மனக்குழப்பமும் அடைகிறோம். பள்ளிப்பாடங்கள் எல்லாமே பொய்கள் என்ற எண்ணம் ஏற்படுகிறது. இந்தப் புதிய உண்மையை அறியவும் புரிந்துகொள்ளவும் நாம் முயல்கிறோம்.
உண்மையில் பெரும்பாலானவர்களுக்கு இலக்கியத்தின் வீச்சும் விரிவும் புரிவது இந்த இரண்டாம்நிலையில்தான். இந்தப் பருவத்தில் ‘அப்பட்டமான உண்மை’ மட்டுமே முக்கியம் என்ற எண்ணம் வந்துவிடுகிறது. அதற்கான இலக்கியங்களை நாம் தேடுகிறோம். இதை வாசிப்பின் இரண்டாம்நிலை என்று சொல்லலாம்
இலக்கியம் வாசிப்பின் எல்லா நிலைகளில் உள்ளவர்களுக்காகவும் எழுதப்படுகிறது. அது ஒரு பாடத்திட்டம் என்று வையுங்கள். ஒன்றாம் வகுப்புப் பாடம் மட்டுமே போதும் என்று சொல்லமுடியுமா? இல்லை இரண்டாம் வகுப்புப் பாடமே போதும் ஒன்றாம் வகுப்பு தேவையில்லை என்று சொல்லமுடியுமா?
இலக்கியம் வாழ்க்கையை ஆராய்ந்து அதன் சாரம் நோக்கிச் செல்லக்கூடியது. ஆகவே வாழ்க்கைக்குள் நிகழக்கூடிய அனைத்துமே அதற்கு முக்கியமானதுதான். அது ஆராயக்கூடாத விஷயம் என எதுவுமே இல்லை. வாழ்க்கையின் குரூரமும் அபத்தமும் அசிங்கமும் இலக்கியத்தின் ஆழ்ந்த கவனத்துக்குரியனவாக எப்போதுமே இருந்து வந்துள்ளன.
இப்போதல்ல, புராதன செவ்விலக்கியங்களில் கூட அவை உள்ளன. பண்டை இலக்கியங்களில் உள்ள நவ ரசங்களில் அருவருப்பும் ஒரு ரசம்தான்.
அப்படி அல்லாமல் ‘தகாத’ விஷயங்களை இலக்கியம் பேசக்கூடாது என்று தவிர்த்தால் இலக்கியம் மனித மனத்தின் பெரும்பகுதியைப் பேசாமலாகிவிடும் இல்லையா? அதன் பின் அது பேசும் விஷயங்களுக்கு உண்மையின் மதிப்பு உண்டா என்ன?
இலக்கியத்துக்கு என்று ஒரு விதியோ வழியோ கிடையாது. அதற்கான வடிவமும் இல்லை. அது காடு போல. எங்கே ஈரமிருக்கிறதோ எங்கே வெளிச்சமிருக்கிறதோ அங்கெல்லாம் காடு வளரும். எல்லா விதைகளும் முளைக்கும். முளைத்தவை ஒன்றோடொன்று போராடி எது மேலோங்குகிறதோ அது நீடிக்கும்.
இலக்கியத்தை எல்லாரும் எழுதலாம். தங்களுக்குத் தோன்றியபடி எழுதலாம். தங்கள் வாழ்க்கையும் சிந்தனையும் எதைக் காட்டுகிறதோ அந்தக் கோணத்தைப் பதிவுசெய்யலாம். எந்த விதியும் இல்லை. அப்படைப்புகள் அனைத்தும் வாசகன் முன் வருகின்றன. எது வாசகர்களைக் கவர்கிறதோ, எது வாசக சமூகத்தில் நீடித்த பாதிப்பை உருவாக்குகிறதோ அவை நீடிக்கின்றன. தேர்வு வாசகன் கையில் உள்ளது.
பொதுவாக நம்முடைய சமூகச்சூழல் ஆசாரமானது. நாம் பள்ளிக்கூடத்தில் ‘நல்ல விஷயங்களை’ மட்டுமே சொல்லிக்கொடுக்கிறோம். பிள்ளைகளைப் பொத்திப்பொத்தி வளர்க்கிறோம். ஆகவே வளார்ச்சியின் ஒரு கட்டத்தில் தாங்கள் வாழும் வட்டத்துக்கு வெளியே உள்ளவற்றின் மீது நமக்கு பெரும் ஈர்ப்பு ஏற்படுகிறது.
நம் இளம் வாசகர்கள் ஒருகட்டத்தில் பாலியல் மீறல்கள் போன்றவற்றில் பயங்கரமான மனக்கிளர்ச்சியை அடைகிறார்கள். அதுவரை நம்பிய அனைத்தையும் உடைத்துத் தூக்கிவீசுவதைப்பற்றிப் பேசும் சிந்தனைகள் மீது ஆர்வம் கொள்கிறார்கள். இது வாசிப்பில் ஒரு கட்டம், அவ்வளவுதான்.
வாழ்க்கையைக் கூர்ந்து அவதானிக்கும் போக்கில் ஒருகட்டத்தில் மனிதமனதிலும் வரலாற்றிலும் உள்ள இருட்டையும் அழுக்கையும் புரிந்துகொண்டு அவையும் உண்மைகளே என ஏற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறோம். அவற்றைப்பற்றி வாசிக்கையில் பெரிய ஆச்சரியமோ பரபரப்போ ஏற்படுவதில்லை. இது வளர்ச்சியின் அடுத்த கட்டம்
நற்கருத்துக்கள் மட்டுமே இலக்கியம் என்று நினைப்பது எப்படி ஒருபக்கம்சார்ந்த ஆரம்பகட்டப் பார்வையோ அதேபோலத்தான் மனிதமனதின் இருட்டு மட்டும்தான் வாழ்க்கையின் உண்மை என்று சொல்வதும் என்று நினைக்க ஆரம்பிக்கிறோம். ஒருபக்கச்சார்புள்ள முதிராத பார்வைகளைத் தவிர்த்து ஒட்டுமொத்தமான முழுமையான சமநிலையான பார்வைக்காகத் தேடுகிறோம். நான் வாசிப்பு முதிரும் நிலை என இதையே சொல்வேன்.
இந்த முதிர்ந்த வாசிப்பு என்பது மொழிசார்ந்த சுவாரசியங்கள், வடிவ சோதனைகள் ஆகியவற்றைப் பெரிதாகப் பொருட்படுத்தாது. இலக்கியத்தில் உள்ள ஒற்றைப்படையான வேகத்தை நிராகரிக்கும். வாழ்க்கை பற்றிய சமநிலையான அணுகுமுறையையே பெரிதாக நினைக்கும்.
அறம் வரிசையில் உள்ள கதைகள் எவையும் வாசிப்பின் முதல் இரு படிகளைச் சேர்ந்தவை அல்ல. நான் ஓர் எழுத்தாளனாக மனிதமனத்தின் இருட்டையும் அழுக்கையுமே அதிகமும் எழுதியிருக்கிறேன் என்பதை மறுக்கவில்லை. எந்த மருத்துவனும் நோயைத்தான் அதிகமாகக் கவனிப்பான். அந்த இருட்டைக் கணக்கில் கொண்டு, அதைத்தாண்டி உள்ள ஒளிக்கான தேடலைப் பதிவுசெய்பவை அறம் வரிசை கதைகள்.
அவை நல்ல கருத்துக்களைச் சொல்லவில்லை, நல் வழி காட்டவில்லை. மாறாக ‘இத்தனைக்கும் அப்பால் என்ன இருக்கமுடியும்?’ என்று தேடுகின்றன.அவற்றின் அமைப்புக்குள் மனித மனதின் தீமையை அவை நுட்பமாகப் பேசியிருக்கின்றன. அவற்றை இலட்சியவாதம் தாண்டிச்செல்லும் சில அபூர்வமான தருணங்களை மட்டும் கணக்கில் கொள்கின்றன, அவ்வளவுதான்.
ஒரு வாசகனாக நீங்கள் மனித மனத்தின் இருட்டை, வரலாற்றின் அபத்தத்தைக் கருத்தில் கொண்டுதான் ஆகவேண்டும். அவற்றை நோக்கிக் கண்களை மூடிக்கொண்டு உங்களுக்கு சௌகரியமானதை மட்டும் வாசிப்பதென்பது சுய ஏமாற்றுதான். அது போலியான ஒரு பகற்கனவு உலகில் உங்களை வாழச்செய்யும்.
அந்த இருட்டை அறிந்தபின் அதைத் தாண்டிச்செல்லும் ஒளியை நோக்கித் தேடுங்கள். அதுவே பயனுள்ளது
ஷோபா சக்தி வரலாற்றின் அபத்தமான பெருக்கெடுப்பை, மனித மனதின் இருட்டை சித்தரிக்கும் கலைஞர். அவரைப் புறக்கணிப்பது கொல்லைப்பக்க சாக்கடையைத் தவிர்க்க சன்னலை மூடி வைப்பது போன்றது.
என்னுடைய கதைகளிலேயே ஷோபா சக்தி எழுதியவற்றை விடத் தீவிரமான எதிர்மறை தரிசனம் கொண்ட பல கதைகள் உள்ளன. அவற்றையும் வாசியுங்கள்
ஜெ