விஷ்ணுபுரம் – ஒருகடிதம்

அன்பு ஜெ,

வணக்கம். தங்களுடைய விஷ்ணுபுரம் நாவலை இப்போது படித்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை இத்தனை அருமையான வித்தியாசமான நாவல் தமிழில் எழுதப்படவில்லை என்பதை அறிந்தே வாங்கினேன். உங்களின் உலோகம் நாவலையும், காவல்கோட்டத்தையும் வாங்கினாலும், அது என்னை முழுவதுமாக புரட்டிப்போடப் போகிறது என்று தெரியாமல் விஷ்ணுபுரத்தினைத்தான் படிக்கக் கையில் எடுத்தேன்.

ஸ்ரீபாதம் படிக்கும்பொழுது முதலில் பொம்மைக்கடையில் தனியாக விடப்பட்ட குழந்தையொன்று எப்படி கண்ணில்படும் பொருட்களையெல்லாம் எடுத்துவைத்துக் கொள்ள இயலுமோ அப்படித்தான் நீங்கள் விஷ்ணுபுரம் என்ற நகரில் நிகழும் சம்பவங்களை எழுத்துக்களாக வடித்திருக்கின்றீர்கள் என நினைத்தேன். ஸ்ரீபாதத்தின் இறுதி அத்தியாயங்களைப் படிக்கும் பொழுதுதான் எல்லா கதாபாத்திரங்களும் ஒன்றுக்கொன்று எப்படி தொடர்புறுகின்றன என்பது தெரிந்தது. மிக நேர்த்தியான கட்டமைப்பினைக் கொண்ட இந்த நாவலை நான் குழந்தைக்கு ஒப்பிட்டதை எண்ணி வெட்கம் கொண்டேன். வீரன் கொல்லப்படும் இடத்தினை தவிர்த்திருக்கலாமே, ஒரு வாசகனை அழவைத்துப்பார்க்கையில் எழுத்தாளர்களுக்கு என்ன சுகமென்று நினைத்தேன். அதன் பின்தான் எல்லாமும் அந்த சம்பவத்தோடு பின்னிப் பிணைந்து நடக்கின்றன என்பதை உணர்ந்தேன். வீரனுக்காக கவலைகொண்ட மனம், அவன் காலில் மிதிபட்டு இறந்த இருபது பேருக்காக வருத்தம் அடையாதது கண்டு வியந்தேன். அப்போதே விஷ்ணுபுரம் பற்றி உங்களுக்கு எழுதியிருந்தாலோ, வலைப்பக்கத்தில் எழுதியிருந்தாலோ, அது உலகிலேயே விஷ்ணுபுரம் பற்றி ஞானமே இல்லாமல் எழுதியதாக இருந்திருக்கும். இறைவன் அருளால் அந்தத்தவறை நான் செய்யவில்லை. இந்தக்கடிதம் கூட எத்தனை தூரம் ஞானமானது எனத்தெரியவில்லை.

இப்போது ஸ்ரீபாதத்தினை முடித்தும் என்னால் அதைவிட்டு நகரமுடியவில்லை. இந்த நாவல் எழுத்தாளனைப்போல வாசகனையும் களப்பணி செய்ய கட்டளை இடுகிறது. மிகப்பெரும் தேடல்களில் இருந்து கட்டமைக்கப்பட்டவைகள் என்பதால், சிற்ப மரபுகள், யானை, குதிரை சாஸ்திரங்கள் பற்றி வரும் போது அறிவார்ந்த கற்பனை இல்லாமல் வறட்சியாக இருக்கின்றன என் கற்பனைகள். வீரனை சிறுனி என்று வாமனன் குறிப்பிடும்போது அதற்குள் இருக்கின்ற அத்தனையும் அறிந்து கொள்ள மனம் விழைகிறது. மரபுகளையும் சாஸ்திரங்களைப் பற்றியும் அடிப்படைகளைப் புரிந்துகொண்டு படித்தால் நாவலின் அடுத்தகட்ட பரிணாமத்தையும் நான் உணரமுடியும் என நம்புகிறேன். லலிதாம்பிகை நகைகளை வர்ணிக்கும்போதும், வைஜயந்தியும் சித்திரையும் தங்களை அழைத்துச்செல்ல வருகின்ற பெண் கூட்டத்தில் இருக்கும் இசைக் கருவிகளைப் பார்க்கும்போதும், குதிரை நாச்சியாரின் பெருமை விளங்கும் போதும் நான் கண்கள் இல்லாதவனாக உணர்கிறேன். உதாரணமாக அந்த இசைக் கருவிகள் எப்படியிருக்கும், அவைகள் எந்த இசையை எப்படி தரும் என்பதையெல்லாம் அறியாமல் ஒளி மங்கியது போல அவர்களை கற்பனை செய்தேன். அவைகளைப் பற்றி எங்கு சென்று படிக்கலாம் என்று சொன்னால் மிக்க கடமைப்பட்டவனாக இருப்பேன்.

ஸ்ரீபாதம் முழுக்க விரவியிருக்கும் கடவுள்கள் இந்து மதத்தில் இருப்பவைகள் என்பதால் கருடன், இந்திரன் என்றவுடன் என்னால் கற்பனை செய்ய இயலுகிறது. ஸ்ரீசக்கரத்தின் அமைப்புகளை உணர முடிகிறது. விஷ்ணுபுர கோவில்களின் பிரம்மாண்டத்தை அறியமுடிகிறது. ஆனால் பௌத்தம் பற்றிய அடிப்படை அறிவு இல்லாமல் போதிசத்துவர் என்று வருகிறபோது என் அறிவை நாவல் கேலி செய்கிறது. சென்று அறிந்துவிட்டு பின் வந்து என்னைத் தொடு என்று சொல்வது போல இருக்கிறது. அதிகார வர்க்கத்தின் எதிர்ப்புக் குரல்களும், எளியவர்களின் வாழ்வியல் நெறிகளையும் ஏற்கனவே பல வாசகர்கள் உங்களிடம் தாங்கள் உணர்ந்ததாகக் கூறியிருக்கிறார்கள். இந்து மதத்தில் ஓரினச்சேர்க்கை இருந்ததா என்று ஆச்சரியத்தில் வினவியிருக்கின்றாரகள். என்றாலும் இவைகளை நானும் உணர்ந்தேன் என்று கூறாமல் இருக்க முடியவில்லை.

மஹாபாரதம் போன்ற உறுதியான தளத்தினை விஷ்ணுபுரத்தில் காண்கிறேன். கிளைக்கதைகளும் பெரும் நாவலாக மாற்றமெடுத்து நிற்கும் மரபை, மீண்டும் விஷ்ணுபுரம் வழிவகை செய்திருக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரங்களைப் பற்றியும் ஒரு தனி காவியம் உருவாக விஷ்ணுபுரம் அனுமதியும் தருகிறது. நளன் – தமயந்தி போல விஷ்ணுபுரத்தில் மூழ்கிப்போகும் ஒரு சிறந்த வாசகனால் எழுத்தாளனாகவும் மாற முடியும் என நம்புகிறேன். நமது தலைமுறையிலோ, அல்லது நம் வருங்கால தலைமுறையிலோ விஷ்ணுபுரத்தினை ஆராய்ந்து என் எண்ணத்திற்கு உயிர் கொடுக்கும் நிகழ்வு நடக்குமெனத் தோன்றுகிறது. வெறும் ஒரு பாகம் படித்த சாதாரணமான எனக்கே இந்த விஷயம் தோன்றும்போது, நிச்சயமாக இதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். விஷ்ணுபுரத்தினை அடிப்படையாகக் கொண்டு சிறுகதைகள், நாவல்கள் வருவதை வரவேற்பீர்கள் என நம்புகிறேன். அப்படி எழுத முனைபவர்களுக்கு தாங்கள் நிச்சயம் வழிகாட்ட வேண்டும்.

நாவலைப் படித்து முடித்ததும் கடிதம் எழுதலாம், இப்போது எழுதினால் அதில் தவறுகள் இருக்க வாய்ப்புகள் உண்டு என்று அறிவு எடுத்துக் கூறுவதை மனம் ஏற்கவில்லை. மேலும் எனக்கு முன்பு படித்தவர்களுக்கு உங்கள் நாவலை அடிப்படையாகக் கொண்டு படைப்புகளைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணமிருந்தால் அவர்களும் உங்கள் கருத்துகளை அறிந்து கொள்ள இது சந்தர்ப்பமாக இருக்கும் என நினைக்கின்றேன். எனவேதான் இக்கடிதம் எழுதினேன். என்னுடைய எண்ணம் நகைப்புக்குரியதாக இருந்தால் மன்னித்துவிடவும். விஷ்ணுபுரம் அள்ள அள்ளக் குறையாத மணிமேகலையின் அமுதசுரபியாக இருந்தும், அது இந்த நாவலோடு முடிந்துவிடக்கூடாது என்பதே என் எண்ணம். நான் இன்னும் இன்னும் விஷ்ணுபுரத்தில் மூழ்கக் காத்திருக்கிறேன்.

நன்றி

அன்புடன்,
ந.ஜெகதீஸ்வரன்.

சகோதரன் இணையதளம்

அன்புள்ள ஜெகதீஸ்வரன்,

விஷ்ணுபுரம் மட்டுமல்ல, ‘கிளாஸிக்’ தன்மை உடைய எந்த நாவலும் வாசிப்புக்கு ஒரு அறைகூவலையே அளிக்கிறது. எந்நிலையிலும் அந்த வாசிப்பு முடிந்துவிடுவதில்லை. ஒரு நாவலை வாசிக்க அனைத்து நூல்களையும் வாசிக்கவேண்டும் என்ற நிலையை அது எப்படியோ உருவாக்கிவிடுகிறது.

விஷ்ணுபுரம் பேசிக்கொண்டிருப்பது நம்முடைய சொந்தப்பண்பாட்டின் உள்ளடுக்குகளைப்பற்றி. நாம் அதை இழந்துவிட்டோம் என்பதனால் இந்தத் திகைப்பு ஏற்படுகிறது. அப்படியென்றால் கோதிக் காலகட்டம் பற்றிய ஒரு ஸ்பானிஷ் நாவல் நமக்கு எவ்வளவு தூரம் அன்னியமானது?அதை வாசிக்க நாம் எவ்வளவு முயற்சிகளை எடுக்கிறோம்? அம்முயற்சிகளில் ஒரு பகுதியை எடுத்தாலே விஷ்ணுபுரத்தை உள்வாங்கிக்கொள்ள முடியும்.

உண்மையில் நாவல் அளிக்கும் தகவல்களை ‘முழுமையாகவும் தெளிவாகவும்’ புரிந்துகொள்ளவேண்டுமென்ற கட்டாயமேதும் இல்லை.அத்தகவல்கள் நம்முடைய ஆழ்மனத்தில் எங்கெங்கோ பதிவாகியுள்ளன. அவை நமக்கு ஒரு கனவுநிலையை அளிக்கின்றன. கற்பனையை எப்படியோ தூண்டுகின்றன. நாவல் உத்தேசிப்பதும் அதைத்தான். அந்தக் கனவெழுச்சியும், அதன் மூலம் உருவாகும் படிமங்களுமே அந்நாவல் அளிக்கும் முதல்கட்ட அனுபவம்.

தகவல்களை மேலும் மேலும் அறிந்து விரித்து எடுத்துக்கொண்டே செல்வதென்பது நாவலை மேலும் அறிய வழிவகுக்கும். நாவலின் அடுக்குகள் விரியும். அது நாம் நம்மை, நம்முள் உறையும் நம் பண்பாட்டு ஆழத்தை அறியும் முயற்சியும் கூட. அது எளிதில் சாத்தியமாகாது. நாம் எந்தளவுக்குப் பயில்கிறோம் என்பதைப் பொறுத்தது அது.

ஆகவே முதல்முறை வாசிக்கையில் முற்றிலும் தகவல்கள் அனைத்தையும் தெரிந்துகொண்டு வாசிக்கவேண்டுமென்பதில்லை. வாசிக்க வாசிக்க நாவல் விரியலாம். விவாதங்கள் அதற்கு உதவலாம். வாசித்தது நிறைவாகிவிட்டது என்ற எண்ணம் மட்டும் வராமலிருந்தால் போதும்.

ஜெ

முந்தைய கட்டுரைபாலமுருகனின் நாவல்
அடுத்த கட்டுரைஒப்ரா வின்ஃப்ரேயும் அமீர்கானும்