தெலுங்கு குடியேற்றம்:கடிதமும் பதிலும்

என்ன சார், தமிழ்நாட்டின் தெலுகு மொழி பேசுபவர்கள் எல்லாம் நாயக்கர் படையெடுப்பின்போது வந்தவர்கள் என்று சொல்லிவிட்டீர்கள். ஒருவேளை அப்படி இல்லையோ என்று நினைக்கிறேன். டில்லி சுல்தான்கள் வலுவிழந்தபோது, பாமினி சுல்தான்கள் தக்கானப்பீடபூமியில் தலையெடுத்தபோது, அங்கிருந்து தமிழ் மன்னர்கள் ஆண்ட பகுதிக்குள் புகுந்தவர்கள் அதிகம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதன்பின்னரே விஜயநகரப் பேரரசு உருவாகி, அதன்பின்னரே நாயக்கர் ஆட்சி நிகழ்ந்தது. http://jeyamohan.in/?p=15 எழுதிய நீங்களே இப்படிச் சொல்வீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை.நாயக்கர் படையெடுப்பு என்று நீங்கள் குறிப்பிடுவது எதை என்றும் புரியவில்லை. அச்சுதராயர் எனும் விஜயநகர அரசர் 1535ல் செவப்ப நாயக்கர்(1535-1590) என்பவரை நாயக்கர் பரம்பரை ஆட்சியாக தஞ்சையில் நிறுவினார். ரகுநாத நாயக்கர் (1600-1645) அந்தப்பரம்பரையில் வந்த ஒரு அரசரே. திருமலை நாயக்கர் (1623-1659) மதுரை நாயக்கர் வகையில் வருகிறார். இதில் படையெடுப்பு ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை.
 
-ராம்
அன்புள்ள ராம்
இதை எப்படி எடுத்துக்கொள்வதென்பது வரலாற்றை நாம் எப்படி பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தது. நாயக்கர்கள் தமிழகத்தில் எக்காலத்திலும் புகலிடம் தேடி வரவில்லை. அவர்களின் ஆரம்பகால குடியேற்றங்கள் தேனி கம்பம் மற்றும் எட்டையபுரம் பகுதிகளில். இங்குள்ள பாளையபப்ட்டுக்கள் தான் ஆகப்பழையவை என்கிறார்கள். இவை குமார கம்பணனின் ஆட்சிக்காலத்தில் உருவானவை. குமார கம்பணன் காலத்தில்தான் நாயக்கர்கள் முதன்முதலாக தமிழகத்துக்குள் புகுகிறார்கள். மாலிக் காஃபூரின் படையெடுப்பால் அழிந்து சின்னபின்னமாகிக் கிடந்த மதுரையை தன் படையுடன் வந்து கைப்பற்றிய குமார கம்பணன் அங்கே இருந்த இஸ்லாமிய ஆட்சியாளர்களை தோற்கடித்தான். மதுரை கோலிலை மீண்டும் எடுத்து கட்டினான். இந்த நிகழ்ச்சிகளை அவன் மனைவி எழுதிய மதுரா விஜயம் என்னும் சிறு காவியம் [தெலுங்கு] விரிவாகவே பேசுகிறது. இக்காலத்தில் கூடவந்தவர்களே ஆரம்பகால நாயக்கர் பாளையக்காரர்கள். அவர்கள் இங்கேயே தனி குறுநாடுகளாக பின்னர் பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் வரை நீடித்தார்கள். அவர்களில் தொக்லவார் நாயக்கர்கள் அதிகம்.

அதன்பின்னர் மதுரையை விஸ்வநாத நாயக்கன் கைப்பற்றினான். அவன் மதுரையில் நிரந்தர அரசை அமைத்தான். பாலையப்பட்டுகக்ளை 72 ஆக வரையறை செய்தான். அந்த நாயக்க வம்சத்தின் ஆட்சி 1730 வரை நீடித்தது. சந்தா சகிப் ராணி மீனாட்சியை ஏமாற்றி நாட்டைப்பிடிக்கும் வரை. மதுரை நாயக்கர் ஆண்ட காலத்தில்தான் விஜயநகர ஆட்சி வீழ்ச்சி அடைந்தது. தலைக்கோட்டை போரில் ராமநாயர் தோற்ரார். நாயக்கர்கள் Hஅம்பியை கைவிட்டு அனந்தபூருக்கும் கூத்திக்கும் வந்தார்கள். இக்காலகட்டத்தில்தான் நீங்கள் சொன்னதுபோல இஸ்லாமிய நிலப்பகுதியைச்சேர்ந்த நாயக்கர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தார்கள். அவர்களும் சிறு சிறு படையுடன் வந்தார்கள் தம்ழிஅக நிலப்பகுதிகளை மதுரை செஞ்சி தஞ்சை நாயக்கர்களின் உதவியுடன் கைப்பற்றி ஆட்சி செய்தார்கள். பின்னர் அனந்தபூரும் பெனுகொண்டாவும் வீழ்ந்தபோது மேலும் நாயக்கர்கள் அங்கிருந்து வந்தார்கள்.  அவர்களில் பெரும்பாலும் அனைவருகே குறுநில ஆட்சியாளர்கள். அவர்களின் அரசு இங்கே இருந்தமையால் வந்தவர்கள்.

ஆனால் தெலுங்கு செட்டியார்கள் வொக்கலிகர்கள் போன்றவர்கள் அப்படி வரவில்லை. அவர்கள் இஸ்லாமிய ஆட்சியை அஞ்சி வந்தார்கள். ஆனால் அவர்களின் அரசு இங்கே இருந்தமைதான் அவர்களை வரத்தூண்டியது. வரண்ட நிலத்தில் வேளாண்மை செய்யும் பழக்கம் அவர்களிடம் இருந்தமையால் தமிழகத்தின் வரண்ட நிலங்களை அவர்கள் வேளாண்மைக்குக் கொன்டுவந்தார்கள். காலாகாலமாக பொட்டல்களாக கருதபப்ட்ட இந்லங்களிலேயே அவர்கள் வேளாண்மையும் மேய்ச்சலும் செய்து அங்கே குடியேற்றங்களை உருவாக்கினார்கள்.

நானறிந்தவரை இதுவே வரலாறு
ஜெ

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைஎழுத்தாளர் “நிலக்கிளி” அ.பாலமனோகரனின் ஆங்கிலநாவல்