அன்புள்ள ஜெ.,
ஏழாம் உலகத்தைக் கடந்து போக இயலாமல், அதை எழுதிக் கடக்க முயன்றிருக்கின்றேன். எழுதிப் பழக்கம் இல்லாததால் (வாசிப்புப் பழக்கமே சற்றுக் குறைவு), என்னால் இயன்றவரை எனது எண்ணங்களைக் கோர்வையாகக் கொடுக்க முயன்றுள்ளேன். எனது புரிதல் எந்த அளவு உள்ளது என்று தெரிந்து கொள்ள ஆவல்.
நேரம் கிடைக்கும் போது படிக்கவும். இந்தத் தொந்தரவுக்கு மன்னிக்கவும்.
நன்றி,
-பாலாஜி.
ஏழாம் உலகம்.
ஞாயிற்றுக்கிழமை பின் மதியம். முன்தினம் தொடங்கிய ‘ஏழாம் உலகம்’ நாவலை வாசித்து முடித்து நிமிர்ந்தேன். மனத்தினுள் அலை அலையாய் எண்ணக் கொந்தளிப்புகள். ஒரு நிலைக்கு வர முடியாத தடுமாற்றம். எல்லாம் சேர்ந்தடங்கி ‘எரப்பாளி’ என்ற வார்த்தை மட்டும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. வெளியே சென்று வெயிலில் அமர்ந்தேன். யாருமில்லாத தெருவில் கண் கூசும்படி விழுந்து தெறித்துக்கொண்டிருந்த வெயிலைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். மீண்டும் ‘எரப்பாளி’, ‘எரப்பாளிப் பய’ எனும் ரீங்காரம். நினைவோடையில் ஒரு நாள் முன் சென்று, இந்நாவலை வாசிக்கத் தொடங்கியதிலிருந்து என்னுள் நிகழ்ந்த மாற்றங்களை எண்ணிப் பார்க்கிறேன்.
இருள் பிரியாத அதிகாலை நேரத்தில் பண்டாரமும், அவர் மனைவி ஏக்கியம்மையும், பேசுவதிலிருந்து தொடங்கி அந்த உலகை எட்டிப் பார்க்கத் தொடங்கும் நாம், அந்த முதல் அத்தியாயம் முடிவதற்குள் ஒரு அடிவயிற்றுப் புரட்டலோடு அந்தப் பாதாளத்தினுள் விழுந்து விடுகிறோம். பண்டாரத்தின் ‘உரு’க்களில் ஒன்றான முத்தம்மை பெற்றெடுக்கும் ‘ரசனிகாந்த்’துடன் நாமும் ஏழாம் உலகில் புதிதாகப் பிறக்கிறோம். நம்மைச் சுற்றி அந்த உலகின் மக்கள் ஒவ்வொருவராக அறிமுகமாகிறார்கள். பண்டாரத்தின் தொழிலைக் கவனித்துக் கொள்பவர்கள் – (மாதவன்) பெருமாள், வண்டி மலை. அவர்களின் தொழில் முதலீடுகள், ‘உரு’க்கள் – முத்தம்மை, ரசனிகாந்த், குய்யன், ராமப்பன், குருவி, எருக்கு, தொரப்பன்,மாங்காண்டிச் சாமி முதலானோர். இந்த ‘உரு’க்களின் பேச்சு, நட்பு, சண்டை, சிரிப்பு, இழப்பு,பழக்க வழக்கம், இவை எல்லாவற்றிலும் வாழ்தலின் கொண்டாட்டமும், இன்றியமையாமையும் அபரிமிதமாக வெளிப்படுகின்றன.
எனக்கு வாசிப்பில் ஆர்வம் இருக்கும் அளவு அனுபவம் இல்லை. மேலும், சில புத்தகங்களைப் படிப்பதற்கு நேரம், காலமெல்லாம் கனிந்து வர வேண்டும் என்பது போன்ற மூட நம்பிக்கைகளால் இது போன்ற புத்தகங்களை அடுக்கி வைத்து அழகு மட்டும் பார்த்துக் கொண்டிருந்தேன். என்னுடைய இந்த மடத்தனத்திலிருந்து வெளிவர இது ஒரு நல்ல தொடக்கம் என்று எண்ணுகிறேன். புத்தகத்தின் பக்கங்கள் நகர நகர, பல படிமங்கள் என்னுள் உருவாகி, திரிந்து, விரிந்து கொண்டிருப்பதை உணர்ந்தேன். இது எனக்கு முற்றிலும் ஒரு புதிய அனுபவம்.
ஜெ.வின் எழுத்து நான் முற்றிலும் எதிர்பார்க்காத வகையில் என்னை வசீகரித்தது. அவரது இணைய எழுத்துக்களுக்கு மட்டும் (நவீனத் தமிழ் இலக்கிய அறிமுகம் மற்றும் சில சிறுகதைகள் உட்பட) பரிச்சயமான எனக்கு, இந்த நாவல் தந்து கொண்டிருந்த உக்கிர தரிசனங்கள் நிலை குலைய வைத்தன. இத்தனைக்கும் அவர் பயன்படுத்திய கூறல் முறை ஆர்ப்பாட்டமில்லாதது. வலிகளும், வதைகளும், வேதனைகளும் நிரம்பிய இந்த உலகத்தை சித்தரிக்கும் எழுத்தில் துளிக்கூட மிகையுணர்ச்சியோ, செயற்கையான உரிச்சொற் பிரயோகங்களோ காணப்படவில்லை. இயல்பான, செறிவான, நேரடியான எழுத்து. படைப்பின் தீவிரமே, காட்சிகளில், மொழியின் உதவியின்றி இயல்பாக வெளிப்படுகின்றன. உதாரணத்திற்கு சில,
தைப்பூசத்திற்க்குப் பிச்சைக்காரர்களை வண்டியில் அடைத்து எடுத்துச் செல்லும் பொழுது, மாங்காண்டிச் சாமியை விவரிக்கும் காட்சி (…ஒரு கை, இரு கால்கள் இல்லாதவர்…). மேலும், வண்டியின் ஆட்டத்தில் அவரை வைத்த இடத்திலிருந்து விழுந்து வேறு இடத்தில் கிடந்தார் என ஒற்றை வரியில் ஒரு கொடுமையை சொல்லிச் செல்லுதல்.
குருடன் தொரப்பு, தன் குழந்தையைத் தொட்டுப் பார்க்க விழையும் காட்சி. அதோடு ஒட்டி நிகழும் சம்பவம்.
ஆனால், நாவலின் துல்லியமான கட்டமைப்பு, பல காட்சிகளை உள்வாங்கி, விரிய விட்டு, மேலேடுத்துச் செல்லக் கச்சிதமாக உதவுகின்றன. உதாரணத்திற்கு, மேலே குறிப்பிட்ட, இரு காட்சிகளுடனும், அந்தந்த அத்தியாயங்கள் முடிவடைகின்றன. இவ்வாறு கட்டமைப்பில் உள்ள சரியான இடைவெளிகளில், மொழி சுட்டிக் காட்ட வேண்டிய தேவையின்றி, கதையின் ஓட்டத்தை ஆழமாக புரிந்து கொள்ள உதவுகிறது.
இன்னும் சொல்லப்போனால், அந்த வட்டார வழக்கின் பிரயோகம் மிகவும் அருமை. எனக்குப் பெரிதும் பழக்கமில்லாத அந்தப் பேச்சு மொழி எனது வாசிப்பின் வேகத்தைக் குறைத்தாலும், அந்த பாஷையில் இயல்பாகவே ஒரு எக்காளமும், அங்கதச் சுவையும், அலட்சியமும் கலந்திருப்பது போலத் தோன்றியது. உக்கிரமான கருவில் விரிவடையும் காட்சிகளைச் சித்தரிக்க இவ்வழக்கைப் பயன்படுத்தும் போது, காட்சியின் தீவிரத்தோடு மொழியின் அங்கதம் வலுவாக மோதுகிறது. இம்மோதலில் வெளிப்படுவதே கதையின் மைய ஓட்டமான ‘வாழ்தலின் கொண்டாட்டம்’ எனத் தோன்றியது.
இந்நாவலை வாசிக்கும்போது என்னுள் உருவான காட்சிப் படிமங்களும், கதாபாத்திர உருவங்களும் என்னைப் பலவகையில் ஆச்சரியப்படுத்தியது. ‘நான் கடவுள்’ பார்ப்பதற்கு முன் இந்நாவலைப் படிக்கவில்லையே என்ற வருத்தம் சிறிது (மிக மிகச் சிறிது) இருந்தாலும், காட்சிகளைப் படிமப்படுத்துவதில் படத்தின் பாதிப்பு என்னுள் ஆரம்பக் கட்டத்திற்குப் பிறகு மறைந்து விட்டது. தைப்பூசப் பழனியின் கூட்ட நெரிசலை என்னைச் சுற்றி உணர்ந்தேன். பண்டாரத்தோடும், எரப்பாளிகளோடும் திரிந்தேன். ஆனால் பாத்திரங்களை உருவாக்கிக்கொள்ளும்போது மட்டும் திரைப்படம் வலுவாகக் குறுக்கிட்டது. ‘ராமப்பன்’ வரும்பொழுதெல்லாம் ‘விக்கிரமாதித்தன் நம்பி’ என்னுள் உறப்போடு உருவானார். அதைக் கடைசி வரையில் என்னால் மாற்ற இயலவில்லை. அதே போல அந்த மாங்காண்டிச் சாமி. ஆனால், பண்டாரத்தை உருவகிக்கும்போது அந்த வில்லன் நடிகர் தோன்றவில்லை. பண்டாரத்தின் விரிவான சித்தரிப்பு, என்னைப் படத்தைத் தாண்டி சிந்திக்க வைத்தது.
பண்டாரத்தின் சம்பந்தியம்மாள் ஒரு ஆச்சரியம். அவள் பண்டாரத்தைத் திட்டி, சண்டை போடும் காட்சியில் என்னுள் துல்லியமாக உருவானாள். நான் பதின்ம வயதில் (15-16 வருடங்களுக்கு முன்) சில நண்பர்களுடன் வேறு இடத்திற்குச் சென்று கிரிக்கெட் விளையாடும்போது ஒரு சமயத்தில், சுமார் 40 வயதுள்ள ஒரு பெண்மணி இதே போல அவரை ஒத்த வயதுடைய ஒரு ஆணை (கணவனோ யாரோ, நினைவில்லை) இது போலவே திட்டிக் கொண்டிருந்தார். என் மனதில் அந்த வயதில் உச்சபட்ச அதிர்ச்சிக்குள்ளான பெண் பிம்பம் அது. இருந்தும் கால ஓட்டத்தில் நான் முற்றிலும் மறந்து போன ஒரு பிம்பம். இந்த பாத்திரத்தைக் கடக்கும் போது, என் மூளை மடிப்புகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு குதித்த அந்த பிம்பத்தைக் கண்டு அரண்டே போனேன். ஏனோ ஒரு ‘தூள் சொர்ணாக்காவோ’ அல்லது வேறு சினிமா பாத்திரமோ தோன்றாமல்,இப்படிப் பல வருடங்களுக்கு முன் நான் நிஜ வாழ்க்கையில் கண்டு மறந்து போன ஒரு உருவம் வந்ததற்குக் காரணம் ஒன்றே ஒன்று தான் தோன்றுகிறது – படைப்பின் நம்பகத்தன்மை மற்றும் யதார்த்தச் சித்தரிப்பு.
தொடக்கத்தில், பண்டாரத்தின் குற்ற உணர்ச்சியற்ற முருக பக்தி எனக்கு வியப்பளித்தது. அவர் மீது வெறுப்பு வந்தது. பிறகு, அவர் பழனியில் உருப்படி வாங்க ஆசைப்பட்டு, ஒரு நாயக்கரின் ஆளோடு ஒரு வீட்டினுள் சென்று அங்கு அவருக்குக் காட்டப்படும் உருக்கள் (நாக்கறுத்த, கண் குத்திய சிறுவர், சிறுமியர்) கண்டு நடுங்கிப் பின் வாங்கி வெளியே வரும்போது சிறிது நெருங்கி வருகிறார். போகப் போக அவரது குடும்ப வாழ்வின் குழப்பங்கள், கஷ்டங்கள் ஆகியவை காணக் காண அவர் மீது பரிதாபம் உண்டாவதைத் தவிர்க்க இயலவில்லை. அதே போல ஏக்கியம்மாள். “…நாம மனசறிஞ்சு யாருக்கும் ஒரு கெடுதல் நினைக்கல…” என்று அவள் சொல்லும்பொழுது நமக்கு ஆச்சரியமே மிஞ்சுகிறது.
இதே போல, கொண்டாட்டமான பல பாத்திரங்கள்,
‘எருக்கு’ – பெருமாள் அவளை ஆஸ்பத்திரியிலிருந்து விடுவிக்க பொய்த் தாலி கட்டினான் என்று தெரிந்தும், அதை உண்மையாக எடுத்துகொண்டு அவனை ‘இஞ்சேருங்க’ என்று அழைப்பது.
‘குய்யன்’ – பண்டாரம் தன் மகள் திருமணத்திற்குத் தங்களை அழைப்பார் என எதிர்பார்த்து, அதில்லையென்றான பிறகு, கல்யாண சாப்பாடு வேண்டுமென்று அடம் பிடிப்பது.
‘ராமப்பன்’ – உருப்படிகளோடு ஒன்றாக அனைவரையும் அணைத்துச் செல்வது.
இவற்றை எல்லாம் விட அற்புதம், முத்தம்மை பாத்திரம். அவள் மூலம், இப்படைப்பின் பல்வேறு இடங்களில் மனித இருத்தலின் அவசியத்தை, வலியுறுத்திக்கொண்டே இருக்கிறார் ஜெ. அவள் பிள்ளைகள் ஒவ்வொன்றாக அவளிடம் இருந்து பிரிக்கப்பட்டு விற்கப்படும் போதும் அவள் தாங்கமுடியாத துயருறுகிறாள். ஆனாலும், மீண்டும் வாழ்வதின் மேலுள்ள ஆசையால் மீள்கிறாள். இவை எல்லாம் தாண்டிப் படைப்பின் இறுதியில் அவள் எதிர்கொள்ளும் அதிர்ச்சி, துயரம், வாசித்துக் கொண்டிருக்கிற நம்மை மிரள,பதைபதைக்க வைக்கிறது. அது மனிதப் பண்பாட்டுக்கே விடப்பட்ட சவாலெனத் தோன்றுகிறது. அதிலிருந்து அவள் மீளுவாளா என்ற சந்தேகம் வலுவாகிறது.
மொத்தத்தில், ஜெ. நாவலின் முன்னுரையில் சொன்னது போல, இருத்தலின் அவசியத்தை, கொண்டாட்டத்தை முன் வைக்கும் அற்புதமான படைப்பு என்பதை உணர்கிறேன். மீள் வாசிப்பில் இப்படைப்பு எனக்குப் பல புதிய கதவுகளைத் திறக்கும் என்று நம்பிக்கையோடு அந்த மனநிலைக்காகக் காத்திருக்கிறேன்.