புராதனமான சீன ரகசிய மெய்ஞானநூல் ஐ ச்சிங். மாற்றங்களின் புத்தகம் என்று அதற்குப் பெயர். அதை இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னாலேயே சோதிடநூலாகப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். மொத்த நூலுமே பலவகையான கூறுகளாகப் பிரிக்கப்பட்டு இன்று ஒரு சோதிட உபகரணமாக உள்ளது.
ஒரு காலகட்டத்தின் நூலை இன்னொரு காலகட்டம் தனக்கேற்ப கையாள்கிறது. இது இலக்கியத்துக்கு சரிவரும். ஏனென்றால் பன்முக வாசிப்பு வழியாகவே இலக்கியம் தன்னை பெருக்கிக் கொள்கிறது. இலக்கிய வாசிப்பென்பது பெருகும் வாசிப்பு.
ஆனால் ஞானநூல்களுக்கு இது சரியல்ல. அது குறுகும் வாசிப்பு. மையம் நோக்கி கூர்ந்து செல்லும் வாசிப்பு. ஆகவே அதை எல்லா கோணத்திலும் அணுகி அறியவேண்டியிருக்கிறது. ஆகவேதான் அவற்றுக்கு உரைகள் தேவையாகின்றன, ஆசிரியர்கள் தேவையாகிறார்கள்.
நூல்களுக்குப் பொருந்துவது ஆசிரியர்களுக்கும் பொருந்தும். ஒரு காலகட்டத்தை நோக்கி பேசிய ஞானாசிரியனை இன்னொரு காலகட்டத்தில் நின்று பொத்தாம்பொதுவாகப் புரிந்துகொள்வது மிகப்பிழையானது. ஆனால் அது அடிக்கடி நிகழ்கிறது.
ஓஷோ கொந்தளித்த எழுபது எண்பதுகளை நோக்கி பேசியவர். அமைதியிழந்த தலைமுறையின் ஆசான் அவர். அவரை இன்றைய தலைமுறை தங்களுக்கேற்ப அணுகுகிறது. ஓஷோவை வணிகமுத்திரையாக ஆக்குபவர்கள் அதை ஊக்குவிக்கிறார்கள். ஓஷோ மீதான இன்றைய அசட்டு வாசிப்புகளுக்கு இதுவே காரணம்.
இன்றைய தலைமுறையின் பிரச்சினைகள் இரண்டு. ஒன்று முன்னேற்றவேட்கை. ஆகவே அவரக்ள் ஓஷோவை ஒரு நவீன ஆன்மீக சுயமுன்னேற்ற எழுத்தாளராகப் பயன்படுத்துகிறார்கள். இரண்டாவது பிரச்சினை, மன அழுத்தம். ஆகவே அவரை மன அழுத்தம் தணிக்கும் ஓர் உளவியல் நிபுணராக அணுகுகிறார்கள்.
நான் ஓஷோவை இரு வகையில் பகுத்துக்கொள்வேன். அவரது நூல்கள், அவரது ஆளுமை. இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற விஷயங்கள். ஆனால் ஒன்றை ஒன்று நிரப்பக்கூடியவை.
ஓஷோவின் நூல்கள் என நான் சொல்லும்போது கீதை, தம்மபதம் முதல் உலகின் முக்கியமான மெய்ஞான நூல்களுக்கு அவர் அளித்துள்ள விளக்கவுரைகளையே குறிப்பிடுகிறேன். இந்த நூல்களை பயில்வதற்கு என ஒரு புத்தம்புதிய வழியை ஓஷோ திறந்தார். அதுவே அவரது முதன்மைப்பங்களிப்பு.
மரபான ஞானநூல்களைப்பயில இரு வழிகளே இருந்தன. ஒன்று, மரபான அமைப்புகள் வழியாகப் பயில்வது. கீதையை கீதை உபன்னியாசகர்கள் வழியாக அறிவது போல. இன்னொரு வழி, நவீன ஆய்வாளர்கள் வழியாக வாசிப்பது. டாக்டர் ராதாகிருஷ்ணன் அல்லது டி.டி. கோஸாம்பி வழியாக வாசிப்பது போல.
இவ்விரு வழிகளுமே அந்நூல்களை ‘நேற்றில் வைத்து’ வாசிப்பவை. மரபான வாசிப்பு என்பது அந்நூல் ஒரு பண்டை ஞானம் என்ற பாவனை கொண்டது. ஆய்வு வாசிப்பு சென்று மறைந்த வரலாற்றைப்புரிந்துகொள்ளும் நோக்கு கொண்டது. ஓஷோ அந்நூல்களை ‘இன்றில் வைத்து’ வாசிக்கும் வழியைத் திறந்தார். அது மிகப்புரட்சிகரமான ஒரு வழி.
இந்நூல்கள் மீது அவற்றின் தொன்மை உருவாக்கும் பிரமைகளை தூக்கி வீசினார் ஓஷோ. அவற்றுக்கு அளிக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான உரைகளின், விளக்கங்களின் சுமைகளைக் களைந்தார். இன்றைய மனிதன் தன் இன்றைய வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் நோக்குடன் இன்றைய அறிவுச்சூழலில் நின்று அவற்றை அணுகச்செய்தார். அவசரமாகப் பயணம் செய்யவிருப்பவன் ரயில்அட்டவணையை ஆராய்வதுபோல அவற்றை வாசிக்கச்செய்தார்.
இந்த மூல நூல்கள் மீது ஓஷோ எடுத்துக்கொள்ளும் சுதந்திரம் பிரமிப்பூட்டுவது. அவற்றை அவர் பயன்படுத்துகிறார். அவற்றை அவர் கோயில் கருவறையின் அம்பாள் சிலையை அணுகுவதுபோல அணுகவில்லை. தாய்மடி மீது ஏறி உழப்பி மூத்திரமடித்து துள்ளி விளையாடும் பிள்ளைபோல அணுகினார்.
ஓஷோவின் இந்த ஆய்வுமுறையைத்தான் நாம் முன்னுதாரணமாகக் கொள்ளவேண்டும். மூலநூல்கள் மீது தன் முழுக்கற்பனையாலும் உள்ளுணர்வாலும் மோதும் அவரது பிரக்ஞை எவ்வளவு தூரம் செல்கிறது என்பதே நாம் கவனிக்கவேண்டியது.
அதற்குப்பதிலாக அவரை அம்மூலநூல்களுக்கு இன்னொரு உரை எழுதியவர் என்று பார்த்து அந்த உரையை கடைசிச்சொல் என எடுத்துக்கொண்டால் பலசமயம் பெரும் பிழைகளுக்குச் சென்று சேர்வோம். அந்நூல்களை மிக எளிமைப்படுத்திக்கொள்வோம். இன்று பெரும்பாலானவர்கள் செய்வது அதையே.
காரணம், ஓஷோவை இங்கே பெரும்பாலானவர்கள் படிப்பது அவர் படிக்க எளிதாக இருக்கிறார் என்பதனாலேயே. அனேகமாக அவரது எல்லா நூல்களும் சொற்பொழிவுகள் அல்லது உரையாடல்கள். வாயால் சொல்லப்படுபவை எப்போதுமே செறிவற்ற சரளமான மொழியில் இருக்கும். ஒரு கட்டுரையில் நான்கு வரிகளில் சொல்லப்படவேண்டியதை உரையில் நான்கு பத்திகளில் சொல்லியிருப்பார்கள். உரைகளை கட்டுரையாக்கும்போது நீர்த்துப்போன, திரும்பத்திரும்ப ஒன்றையே சொல்லக்கூடிய, ஓரு நடை உருவாகிறது. அதிகம் வாசிக்காத வாசகர்களுக்கு அது மிகுந்த ஈர்ப்பை அளிக்கிறது.
இப்படி வாசிக்க நேரும் ஆரம்பகட்ட வாசகர்களில் ஒருசாரார் ஓஷோ வழியாக உலகமெய்ஞானத்தையே வாசித்துவிட்டதாக நினைக்க ஆரம்பிக்கிறார்கள். உலகமெய்ஞானிகளில் முக்கியமானவர்கள் அவர்களுக்கு ஓஷோ வழியாக அறிமுகமாகிவிடுகிறார்கள். அந்த உரைகளைக் கொண்டு அந்த ஞானிகளை முழுமையாக அள்ளிவிட்டதாக நினைத்துக்கொள்கிறார்கள்.
இந்த ஓஷோ வாசகர்கள் ‘நிபந்தனையற்ற அன்பு’ ‘வாழ்க்கையை அப்படியே ஏற்றுக்கொள்ளுதல்’ போன்ற சில வரிகளை வைத்துக்கொண்டு தங்களை குட்டி ஞானிகளாக கற்பனைசெய்துகொண்டு அனைவரையும் குனிந்து பார்த்து ஒரு அபத்தமான அறியாமையுலகில் வாழ ஆரம்பிக்கிறார்கள்.
ஓஷோ அளிக்கும் இந்தப்போதைதான் அவரது நூல்களின் வெற்றிக்குக் காரணம். இந்தப் படிமத்தையே இன்று ஓஷோவின் அமைப்பு முன்வைக்கிறது. ஓஷோவின் இந்த உரைநூல்களில் சிலவற்றை வாசித்தாலே போதும். அவற்றில் ஏதேனும் ஒரு உரை அந்த மூலநூலை அணுகும் நமக்கான பாதையை காட்டிவிடும். அதன்பின் ஓஷோவை தவிர்த்து அந்நூலை நாமே நம் ஞானத்தாலும் கற்பனையாலும் உள்ளுணர்வாலும் மேலே வாசித்துச்செல்லவேண்டும்.
அதுவன்றி ஓஷோ அளிக்கும் உரையையே முழுமையானது என்று கொண்டால் நாம் அந்நூல்களை இழந்துவிடுவோம். அந்நூல்களை அவை உருவான வரலாற்றுப்புலத்தில் ஞானவிவாதக்களத்தில் வைத்தே புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு நிகழ்ச்சி. சாது அப்பாத்துரை என்று ஒரு ஞானி யாழ்ப்பாணத்தில் இருந்தார். அவர் நல்லூர் முருகன் கோயிலில் இருக்கையில் அங்கே பத்திரிகையாளர் மணியன் சாமி கும்பிட வந்தார். அங்கே சட்டையை கழற்றவேண்டும் என்ற சம்பிரதாயம் உண்டு. மணியன் தயங்கினார். அங்கே இருந்த அப்பாத்துரை சிரித்துக்கொண்டே கேட்டார் “ஏம்பா, இந்த துணிச்சட்டையை கழட்டிட்டு இங்கே நுழையவே இப்டி யோசிக்கிறியே. உடம்புச் சட்டையை கழட்டிட்டு அங்கே எப்டி நுழைவே?”
நாம் நுழையும் மெய்ஞானத்தின் கோயில் வாசலில் நிற்கிறார் ஓஷோ. ‘டேய் சட்டையை கழட்டிட்டு உள்ள வாடா வெண்ணே’ என்று மண்டையில் குட்டுகிறார். அவரது பணி அதுதான்.
ஓஷோவின் நூல்கள் கட்டுக்கோப்பான உள்அமைப்பு கொண்டவை. சீராக அவை நம்மை அழைத்துச்செல்கின்றன. நேர் மாறாக ஓஷோ என்னும் ஆளுமை நம்மை சிதறடித்துக்கொண்டே இருக்கிறார். நாம் மதிப்பவற்றை அவமதிக்கிறார், நம்புகிறவற்றை மறுக்கிறார், நாம் கண்ணீர்விடும் இடங்களில் சிரித்துக்கொண்டாடுகிறார்.
ஓஷோவின் நூல்களில் ஏன் சோர்பா இடம்பெறுகிறார்? சோர்பா த க்ரீக் என்ற நிகாஸ் கசந்த்ஸகிஸின் நாவல் அன்றைய இளைஞர்களை உலுக்கிய சில நூல்களில் ஒன்று. சோர்பாவின் வாழ்க்கை இலக்கற்றது, கனவுகளற்றது, முழுக்கமுழுக்க இன்பநாட்டம் சார்ந்தது. ஆனால் கள்ளமற்றது, கொண்டாட்டமானது.
அவனை ஒரு மாலுமியாகக் காட்டுகிறார் கசந்த்ஸகிஸ். ஏனென்றால் ஐரோப்பிய மனதில் மாலுமி வாழ்க்கை பற்றிய ஒரு கனவு எப்போதும் உண்டு. எழுபதுகளின் மன அழுத்தம் மிக்க தலைமுறைக்கு சோர்பா பெரியதோர் ஆதர்ச பிம்பம்.
ஓஷோவின் இலக்கு, அந்தப் பரட்டைத்தலை இளைஞருலகமே. ஆகவே அந்த பிம்பத்தை ஓஷோ எடுத்தாள்கிறார். ஆனால் மேலை மனம் எளிதில் புரிந்துகொள்ளும் சோர்பா வழியாக அந்தத்தேடலை, புத்தரை நோக்கி, கிருஷ்ணனை நோக்கி கொண்டு வருகிறார்.
ஓஷோ முன்னால் வந்து நின்றவர்கள் இருவகை. ஆசாரத்தில் வேரூன்றிய சம்பிரதாயமான சிந்தனை கொண்ட எளியமனங்கள் ஒரு சாரார். கசந்துபோன,கொந்தளிப்பு நிறைந்த இன்னொரு சாரார்.
மரபான எல்லாவற்றையும் கட்டிப்பிடித்துக்கொண்டிருந்த முதல்தலைமுறையை அவமதித்து உடைத்துப்போட்டார் ஓஷோ. மரபான எல்லாவற்றையும் தூக்கி குப்பையில்போட முயன்ற தரப்பிடம் தானும் இணைந்துகொண்டு அவர்களின் கண்கள் வழியாகவே கிருஷ்ணனையும் புத்தரையும் ஜென் ஞானிகளையும் பார்க்கச்செய்தார். அதுவே அவரது பங்களிப்பு. ஆம், அவர் அதற்காக வந்தவர்.
அதற்காகவே ஓஷோவின் பேச்சுமுறை எழுத்துமுறை அனைத்தும் உருவாகியிருக்கிறது. அவரது பேச்சில் உள்ள தடாலடிகள், திரிபுகள் அனைத்தும் அதற்காகவே. அவரது பாலியல் மீறல்கள், அவர் கற்பித்த பொறுப்பில்லாத சுதந்திரம் எல்லாம் அதற்காகவே.
[மேலும்]