ஓஷோ – உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம் – 1

இரண்டு சினிமாக்கள் நினைவுக்கு வருகின்றன. இரண்டுமே பாலசந்தர் எடுத்தவை. இரண்டுமே கமலஹாசன் நடித்தவை. 1980ல் வெளிவந்த வறுமையின் நிறம் சிவப்பு. 1988ல் வெளிவந்த உன்னால் முடியும் தம்பி.

இந்த இரு படங்களுக்கும் நடுவே உள்ள தூரம் என்பது இரு தலைமுறைகளுக்கு, இரு காலகட்டங்களுக்கு நடுவே உள்ள தொலைவு. வறுமையின் நிறம் சிவப்பு எண்பதுகளில் வெளியானாலும் அது உண்மையில் எழுபதுகளின் மனநிலைகளையும் எண்ணங்களையும் வெளிப்படுத்திய படம். தொண்ணூறுகளுக்குப் பின்னால் வலுப்பெற்ற மனநிலைகளையும் எண்ணங்களையும் காட்டும் படம் உன்னால் முடியும் தம்பி.

வறுமையின் நிறம் சிவப்பு இந்தியாவில் அறுபது எழுபதுகளில் நிலவிய உக்கிரமான வேலையில்லாத் திண்டாட்டத்தைப்பற்றிப் பேசுகிறது. ‘வேலையில்லா பட்டதாரி’ என்ற சொல்லாட்சி அன்று மிகப்பிரபலம். இணையான இன்னொரு சொல்லாட்சி ‘முதிர்கன்னி’. ஒரே பிரச்சினையின் இருமுகங்கள். இவ்விரு சரடுகளையும் பின்னியே அன்றைய கதைகளும் படங்களும் வெளிவந்தன.

வறுமையின் நிறம் சிவப்பு நகரத்தில் வேலையில்லாமல் அனாதையாக விடப்பட்ட இளைஞர்களின் பட்டினியை காட்டுகிறது. அவர்களின் மனக்கசப்பும், விரக்தியும், அமைப்பு மீதான கோபமும், ஒட்டுமொத்தமான ஏளனமும் அதன் காட்சிகளில் வெளிப்படுகின்றன. குப்பைத்தொட்டியை துழாவும் கதாநாயகனிடம் ‘அங்கே என்ன செய்றே?’ என்று கதாநாயகி கேட்கையில் ‘ம்ம்ம் இன்னும் கொஞ்சம் தோண்டினா சோஷலிசமே கிடைச்சிரும்போல இருக்கு’ என்று அவன் சொல்வது உதாரணம்.

முழுமையான விரக்தியில் முடியும் ‘வறுமையின் நிறம் சிவப்பு’க்கு நேர் மாறான படம் ‘உன்னால் முடியும் தம்பி’. தலைப்பே அதைச் சொல்லிவிடுகிறது. எண்பதுகளில்தான் தமிழில் சுயமுன்னேற்ற நூல்கள் வெளிவர ஆரம்பித்து எண்ணையில் தீ போல பரவின. அந்த எழுத்தாளர்களில் முதன்மையானவரான எம்.எஸ்.உதயமூர்த்தியின் பேச்சுக்களை அடிபப்டையாகக் கொண்டு உருவான படம் அது. கதாநாயகன் பெயரே சத்யமூர்த்திதான்.

எழுபது எண்பதுகள் இலட்சியவாதத்தைப் பேசின. இளைஞர்கள் பொதுநலம் நாடுபவர்களாக, போராடுபவர்களாக இருக்கவேண்டும் என இலக்கியமும் அரசியலும் அறைகூவின. ஆனால் எண்பதுகளின் தொடக்கத்தில் வெளிவர ஆரம்பித்த சுயமுன்னேற்ற நூல்கள் ஒரு தனிமனிதனின் இயல்பான இலக்கு சுய முன்னேற்றம்தான் என்று சொல்ல ஆரம்பித்தன.

பாப் மார்லியும் சேகுவேராவும் எழுபதுகளின் இலட்சிய புருஷர்கள். எண்பதுகளில் ராக்ஃபெல்லரும் ஃபோர்டும் அந்த இடத்துக்கு வந்து அமர்ந்தார்கள். தகுதிகளை வளர்த்துக்கொண்டு கொஞ்சம் கவனமாக செயல்பட்டால் பணமும் அதிகாரமும் கைவரும், அதுவே வாழ்க்கையின் வெற்றி என அந்த சுயமுன்னேற்ற நூல்கள் சொல்லின.

அன்றைய சூழலை வைத்தே அந்தக் கூற்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எண்பதுகளில் இந்தியா கடைப்பிடித்துவந்த அரைகுறை சோஷலிசம் மீதான நம்பிக்கை தகர்ந்தது. பொதுத்துறைகள் செயலிழந்து தேங்கின. பெரும் வேலைநிறுத்தங்களால் தொழில்துறை உறைந்து நின்றது. விளைவாக உச்சகட்ட வேலையில்லாமை. நாம் முன்னுதாரணமாகக் கொண்ட சோவியத் ருஷ்யாவே தத்தளித்துக் கொண்டிருந்தது.

அந்நிலையில்தான் அமெரிக்க பாணி முதலாளித்துவத்துக்கான குரல்கள் எழ ஆரம்பித்தன. தனியார்த்துறைக்கான கோரிக்கைகள் எழுந்தன. அந்தப் பொதுவான எண்ண ஓட்டம்தான் மெல்ல மெல்ல முதிர்ச்சி கொண்டு ராஜீவ் காந்தியில் செயல்வடிவம் பெற்று சோஷலிசத்தை தூக்கிப்போடச்செய்தது. அமெரிக்கத் தொழில்நுட்ப முதலாளித்துவத்தின் முகமான சாம் பிட்ரோடா வந்து சேர்ந்தார். உலகமயமாக்கல் ஆரம்பித்தது.

உலகமயமாக்கல் கீழ்மட்ட வறுமையை பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. ஆனால் நடுத்தரவர்க்கத்துக்கு வாய்ப்புகளை அதிகரித்தது. வேலையில்லா திண்டாட்டம் குறைய ஆரம்பித்தது. உருவாகி வந்த புதிய வாய்ப்புகளுக்காக முண்டியடித்த இளைஞர்களுக்கு நம்பிக்கையை ஊட்டுபவையாக அந்தச் சுயமுன்னேற்ற நூல்கள் அமைந்தன.

வேலைசெய்து ஊதியம் பெறுவது என்பதே நம்முடைய பழைய மனநிலையாக இருந்தது. வேலையை ஒரு போட்டியாக, போராக நாம் கற்பிதம்செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்தை முதலாளித்துவம் உருவாக்கியது. போட்டியையே வாழ்க்கைவிதியாகக் கொண்ட ஒரு சமூகத்தை கட்டமைக்க வேண்டியிருந்தது. அதைச்செய்தவை சுயமுன்னேற்ற நூல்கள்.

பொதுநலன், சமூகநலன் எதைப்பற்றியும் கவலைகொள்ளவேண்டாம் என அவை கற்பித்தன. படிகளில் ஏறுவதே வாழ்க்கை என்று சித்தரித்தன. நம்முடைய அரசியல் பிரக்ஞையில் இந்தச் சுயமுன்னேற்ற நூல்கள் உருவாக்கிய பெரும் மாற்றத்தை நாம் இன்னும் சரியாக மதிப்பிடவில்லை.

எண்பதுகளில் இருந்து நம் கல்லூரிச்சூழல் எப்படியெல்லாம் மாறிவந்திருக்கிறது என்று பார்த்தாலே இது புரியும். எண்பதுகளில் கல்லூரிகள் அரசியல் சித்தாந்தங்களின் நாற்றங்கால்கள். கொந்தளிப்பும் பதற்றமும் கொண்டவை. இன்றைய கல்லூரிகளில் அரசியலே இல்லை. மாணவர்கள் முழுக்கமுழுக்க தொழில்முறை நோக்கு கொண்டவர்கள். அன்று அரசியல்பிரக்ஞை கொண்ட, வாசிக்கும் பழக்கம் கொண்ட, கலைத்திறன் கொண்ட மாணவர்கள் கதாநாயகர்களாகக் கருதப்பட்டனர். இன்று, பணக்கார மாணவர்கள், நன்றாகப்படிக்கும் மாணவர்களே கல்லூரிகளின் நாயகர்கள்.

இந்தமாற்றம் நிகழ ஆரம்பிக்கும் காலகட்டத்தைக் காட்டுகிறது உன்னால் முடியும் தம்பி. ஆனால் அன்று இந்தச் சுயநலச் சிந்தனைகள் இன்னும் முதிரவில்லை. முந்தைய இலட்சியவாதத்தின் சாயலும் கொஞ்சம் இருந்தது. அந்தப்படத்தில் சத்தியமூர்த்தி கொஞ்சம் இலட்சியவாத நோக்கு கொண்டிருக்கிறான். சேவைகள் செய்கிறான். ஆனால் வறுமையின் நிறம் சிவப்பு முந்தைய காலகட்டத்தின் முற்றிய விரக்தியைக் காட்டுகிறது.

இன்றைய இளைஞர்களால் வறுமையின் நிறம் சிவப்பு காட்டும் சூழலை, அந்த மனநிலையை சரியாகப் புரிந்துகொள்ளமுடியாமல் போகலாம். இரண்டாமுலகப்போருக்குப் பின்னால் மேலைநாடுகளில் உருவான மனச்சோர்வும் நம்பிக்கை இழப்பும் கலையில், இலக்கியத்தில், தத்துவத்தில், அரசியலில் கொந்தளிப்பை உருவாக்கிக்கொண்டிருந்தன. இளைய தலைமுறை எதிர்ப்பும், விரக்தியும் கொண்டதாக தெருவில் இறங்கியது.

கலையிலக்கியத்தில் பீட் தலைமுறை [Beat Generation] உருவாகி வந்தது. பொதுப்பேச்சில் ஹிப்பி இயக்கம் என இதைச் சொல்வார்கள். அரசியலில் செ குவேரா பாணி வன்முறைக்கிளர்ச்சி எழுந்தது. உலக அளவில் அது பரவியது.

இந்தியாவில் நேரு காலகட்டம் முடிந்தபின் பிறந்த தலைமுறை இலட்சியவாதத்தில் நம்பிக்கை இழந்தது. சுதந்திரத்துக்குப்பின் கல்வி பரவலாகியது, ஆனால் நேரு அரசின் முதலாளித்துவ திட்டங்கள் காரணமாகத் தொழில்கள் வளரவில்லை. ஆகவே வேலையில்லா திண்டாட்டம் உருவாகியது. ஒரு தலைமுறையே செயலற்று கோபம் கொண்டு தெருவில் நின்றது.

அவர்களுக்கு ஹிப்பி இயக்கத்தின் மனநிலைகளும் சேகுவேரா பாணி தனிநபர் வன்முறை அரசியலும் பெரும் ஈர்ப்பை அளித்தன. தாடியையும் முடியையும் நீளமாக வளர்த்துக்கொள்வது, வீட்டுக்குச் செல்லாமல் நண்பர்களுடன் அலைவது, கஞ்சா முதலிய போதைகளைப் பயன்படுத்துவது என ஒரு உலகம். இன்னொரு உலகம் நக்சலைட் இயக்கம் சார்ந்தது. இந்தியாவில் நக்சலைட் இயக்கம் அரசால் கொடூரமாக நசுக்கப்பட்டபோது மனச்சோர்வு கொண்டவர்களின் எண்ணிக்கை மேலும் பெருகியது.

இந்தக்காலகட்டத்தில்தான் நான் என் முதிரா இளமையை ஆரம்பித்தேன் என்பதனால் எனக்கு நேரடி மனப்பதிவே உண்டு. அக்கால எழுத்துக்களில் திரைப்படங்களில் எல்லாம் இந்த இலக்கற்ற கோபத்தையும் எதிர்ப்பையும் காணலாம். அந்தக் கோபத்தை உடல்மொழி மூலம் ஜஞ்சீர் என்ற படத்தில் கச்சிதமாக வெளிப்படுத்திய அமிதாப் பச்சன் பெரும் நட்சத்திரமாக ஆனார்.

தமிழில் அந்தக் கோபத்தைப் பதிவுசெய்த பிற திரைப்படங்கள் என துரை இயக்கிய பசி [1979] ராபர்ட் ராஜசேகரன் இயக்கிய பாலைவனச்சோலை [1981] பாரதிராஜாவின் நிழல்கள் [1984] போன்றவற்றைச் சொல்லலாம்.

இலக்கியத்தில் மிக அழுத்தமான பதிவுகள் கலாப்ரியாவின் நீள்கவிதையான ‘எட்டையபுரம்’, அசோகமித்திரனின் நாவலான ‘தண்ணீர்’ போன்றவை.

ஓஷோவைப்பற்றிப் பேசுவதற்காகவே இந்த விரிவான சித்தரிப்பை அளித்தேன். இந்த காலகட்டப்பிரிவினை இல்லாமல் ஓஷோவை சரியாகப் புரிந்துகொள்ள முடியாது. இப்படிச் சொல்லலாம். ஓஷோ முந்தைய காலகட்டத்தை நோக்கிப் பேசியவர். இன்று அவரை இரண்டாம் கட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் தேவைக்கும் பார்வைக்கும் ஏற்ப புரிந்துகொள்கிறார்கள்.

[மேலும்]

.

முந்தைய கட்டுரைபௌத்தம் கடிதங்கள்
அடுத்த கட்டுரையானைக்கறி