கிரிமினல் ஞானி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு…நலமென நம்புகிறேன்.

முட்டாள்களின் மடாதிபதி என்ற தலைப்பை ஓஷோவின் படத்துடன் பார்த்தவுடன் எனக்கு ஒரு உண்மை புரிந்து போயிற்று…எங்கோ யாரையோ தூண்டுகிறீர்கள் என்று. ஏன் என்றால் உங்களின் இந்து ஞான மரபில் ஆறு தத்துவங்கள் படித்தபொழுது அவர் உலக ஞான மரபை முழுமையாகக் கற்றுத் தேர்ந்தவர் என்று எழுதி இருக்கிறீர்கள். அவர் மடத்தில் முட்டாள்கள் இருந்திருக்கலாம், ஆனால் அவர் முட்டாளாக இருக்க வாய்ப்பே இல்லை. இதை அவர் மீது எனக்கு இருக்கும் நன்றி உணர்ச்சியினால் கூறுகிறேன்.

எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது.. 24 வயதில் எனக்கு ஓஷோ புக்ஸ் மட்டும் கிடைக்கவில்லை என்றால் நான் இப்பொழுது எல்லோரையும் கடித்துக் கொண்டுதான் இருந்திருப்பேன். என்னுடைய உணர்ச்சி வேகம் அப்படிப்பட்டது. எப்பொழுதும் கொந்தளித்துக்கொண்டே இருக்கும் மனதை சற்றுப் புரிய வைத்து ஓஷோவின் புக்ஸ் மட்டுமே. காரணம் நான் ஒரு மாதிரி மிகவும் கண்டிப்பான சூழலால் வளர்க்கப்பட்டவன். எனக்கு சொல்லிக் கொடுத்த உலகம் ஒரு மாதிரி. ஆனால் கல்லூரி முடித்து வெளிவரும்பொழுது நான் எதிர்கொண்ட உலகம் வேறு மாதிரி இருந்தது. அந்த அதிர்ச்சியில் இருந்து மீள எனக்கு நிறைய காலம் ஆனது. எனக்குத் தோன்றிய முதல் கேள்வியே எல்லோருக்கும் சாப்பாடு கிடைக்கும் சூழ்நிலை இருந்தும் அதை ஏன் போராடிப் பெற வேண்டும் என்பதே.. மனிதனுக்குள் இருக்கும் இந்த ஈகோவை என்னால் புரிந்து கொள்ள நிறைய காலம் எடுத்தது.

ஆனால் இதற்கு விடை எங்கெங்கோ தேடினேன். எல்லோரும் எனக்கு “மனிதனாய்ப் பிறந்தால் நிறைய கஷ்டப்பட வேண்டும்; இலக்கு இருக்க வேண்டும்; பொருளால் அனைவரையும் கவர வேண்டும்; சமுதாயத்தில் அப்பொழுதுதான் மதிப்பு இருக்கும்” இப்படியே அறிவுரை கூறி என்னை சாகடித்தார்கள். என்னுடைய சாதாரண சிறுபிள்ளைத்தனமான கேள்வியைப் புரிந்துகொள்ளக் கூட முயலாமல் கேள்வியை முடிக்கும் முன்னரே அறிவுரை ஆரம்பம் ஆகிவிடும். மீறிக் கேள்வி கேட்டால் இப்படி எல்லாம் யோசிக்கக் கூடாது என்று சுலபமாக முடித்துக் கொள்வார்கள்.

எனக்கு ஒரே ஒரு வழி புத்தகம் மட்டுமே. அப்படிப் படித்ததால்தான் உங்கள் புத்தகங்கள் வரை வந்து சேர்ந்தேன்.

ஓஷோவின் புத்தகங்கள் வழியாக உலகைப் பார்க்கும்பொழுது தான் முதலில் எனக்கு ஒரு மாற்றுசிந்தனை கிடைத்தது. ஒவ்வொன்றுக்கும் அவர் கொடுத்த அறிவியல் மற்றும் வரலாறு பூர்வமான விளக்கங்கள் தர்க்கங்கள் எனக்கு ஒரு பெரிய relief கொடுத்தது. அதே சமயம் ஒரு 15 புத்தகங்கள் படிக்கும்பொழுது குழப்பமும் ஏற்பட்டது.

ஓஷோவின் மீது ஒரு பெரிய குற்றசாட்டே பாலியல் சம்பந்தமானதுதான். முறையற்ற பாலியல் உறவை ஆதரிக்கிறார் என்றுதான். சில புத்தகங்களில் அப்படியும் உள்ளது. ஆனால் அவருடைய தந்திரா போன்ற உரைகளை வாசிக்கும்பொழுது அவர் கூறுகிறார், ஒரு ஆணுக்கு “ஒரு பெண்” என்பவள் மிக மிக அதிகம் என்று.

பசுவை அம்மா என்று அழைப்பவர்கள் காளை மாட்டை அப்பா என்று அழைப்பதில் என்ன தவறு இருக்க முடியும் என்று கேட்கிறார் . அதே சமயம் பசுவை நாம் ஏன் அம்மா என்று அழைக்கிறோம் என்ற விளக்கத்தை இன்னொரு உரையில் விளக்குகிறார். ஜோதிடம் ஒரு பெரிய பொய் என்கிறார். அதே சமயம் ஒரு சமயம் ஜெர்மனியில் உள்ள போர் தளபதிகளின் பெரும்பாலான ஜாதகங்களைப் பார்க்கும்பொழுது அவர்களுக்கு செவ்வாயின் ஆதிக்கம் அதிகம் உள்ளதாகக் கூறுகிறார். மகாபாரதம் ஒரு பெரிய playboy நாவல் என்கிறார். அதே சமயம் அவற்றுக்கு அவர் அளித்த உரை ஒரு 25 volume வெளி வந்துள்ளது.

இந்த முரண்பாடு எனக்கு மறுபடியும் மலைப்பை ஏற்படுத்தியது. மேலும் படிக்க ஆரம்பித்தேன். இந்த மாதிரி உலகியல் ரீதியான விஷயங்கள் எல்லாம் மேல்மனதில் உள்ள எண்ணங்களை மோதவிடுவதுதான். குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது போன்று. இன்னும் கொஞ்சம் நுண் உணர்வு மிக்கவர்கள் இதை ஈசியாகக் கடந்து விடுவார்கள். இன்னும் கொஞ்சம் ஆழ் மனதிற்குள் நகர ஆரம்பிப்பார்கள். மேம்போக்காகப் படிப்பவர்கள் இதை மட்டுமே வைத்துகொண்டு சமுதாயத்துடன் மோதிக் கொண்டிருப்பார்கள். நான் ஓஷோவின் ரசிகன் என்று மிகவும் திமிருடன் நடப்பவர்களை நேரில் கண்டிருக்கிறேன். இதை ஓஷோவிற்குக் கிடைத்த சாபம் என்றுதான் சொல்ல வேண்டும்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் ஓஷோ ஒரு கடல். அவர் ஒரு ஒரு சிறிய குழுவுக்கு சொந்தக்காரர் அல்ல. அவர் மிகக் கடுமையான விதிகளுக்கு உட்பட்டு யோகா வழியாக ஞானத்தை அடைபவனுக்குப் பேச வேண்டியதாயிற்று அதே சமயம் எஸ்கிமோ மக்களுக்காகவும் பேச வேண்டியது ஆயிற்று. பதஞ்சலி பற்றியும் விளக்க வேண்டியதாயிற்று அதே சமயம் zorba மனிதனுக்கும் விளக்க வேண்டியதாயிற்று. மொத்தத்தில் ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள விதையை , ஞானத்திற்கான உரிமையை அதற்கான சந்தர்ப்பங்களை அவர் பேசினார். காலம் அப்படி. இதே புத்தருக்கு இவ்வளவு படிக்க வேண்டிய பேச வேண்டிய நிர்பந்தம் இல்லை. அப்பொழுது இருந்த மக்கள் வேறு. ஆனால் இப்பொழுது இருக்கிற மனங்கள் வேறு. இதற்கு ஒரு phd philosophy படித்த புத்தர் தேவை இருக்கிறது. அதற்கு ஓஷோ தேவைப்படுகிறார். நீங்கள் சொல்வது போல் இது காலத்தின் கட்டாயம் ஆகும்.

மௌனத்தின் அழகைக்கூட வார்த்தையைக் கொண்டே விளக்க வேண்டி இருக்கிறது. ஜக்கி வாசுதேவ் ஒரு உரையில் சொல்வது போல் என்னைப் பேசாமல் இந்த இடத்தில இருக்க விடுங்கள் நீங்களும் அமைதியாக இருங்கள் இந்தச் சூழ்நிலையை மிகவும் ரம்மியமாக மாற்ற முடியும் என்கிறார். நாம் கேட்போமா என்ன??

யார் ஒருவன் ஓஷோவைத் தெரிந்து கொள்ளப் படிக்கிறானோ அவன் கண்டிப்பாக தோல்வியைத்தான் தழுவ இயலும். யார் ஒருவன் தன்னைப் பற்றித் தெரிந்து கொள்ளப் படிக்கிறானோ அவனுக்குப் பல திறப்புகள் உண்டு. விஷ்ணுபுரத்தில் அவர் ஒரு கதாபாத்திரம் அல்ல….விஷ்ணுபுரம் அவர் பேசியதைப் புரிந்துகொள்ளக் கிடைத்த ஒரு சின்ன சந்தர்ப்பம்.

நிறையவே சொல்லிக் கொண்டு போகலாம். எனக்கு அதில் விருப்பமும் இல்லை. நான் இதை எழுதினேன் என்றால் நீங்கள் ஒரு தவறான உதாரணத்தை உங்களைப் படிப்பவர்களுக்குக் கொடுத்து விடக்கூடாது என்பதற்காகவே..

பி.நடராஜன்

அன்புள்ள நடராஜன்,

நான் ஓஷோவைப்பற்றிக் கேள்விப்பட்டது முப்பத்தைந்தாண்டுகளுக்கு முன்பு. அப்போது அவர் பகவான் ரஜனீஷ்தான். பெரிய அளவில் பண ஆதரவோ புகழோ இல்லாமலிருந்தார். அவர் அன்று பேசப்பட்டது அவரது கடுமையான மட்டையடித் தாக்குதல்களுக்காக. காந்தியையும் இந்திராகாந்தியையும் அவர் ஆபாசமாக வசைபாடுவது தொடர்ந்து பிரசுரமாகிக்கொண்டிருந்தது.

அவர் புனாவின் போலீஸ் அதிகாரி ஒருவரை கடுமையாக விமர்சித்துப்பேச அந்தப் போலீஸ் அதிகாரி அவரது ஆசிரமத்தை சோதனையிட்டார். அச்செய்தியே நான் முதலில் வாசித்தது. அவர் இந்திராகாந்தியைத் தாக்கியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் ஓஷோ அவசரநிலைக் காலகட்டத்தில் ஊடகங்களில் வாய் திறக்கவில்லை.

இல்லஸ்ட்ரேடட் வீக்லி அவரது ஆசிரமம் ஒரு காமப் பரிசோதனைச்சாலை என்ற வகையில் படங்களுடன் செய்தி வெளியிட்டு பெரும்பரபரப்பை உருவாக்கியது. அந்தப்படங்களில் சில தினத்தந்தியில் வெளியாகி அதிர்ச்சியளித்தன. அந்த இதழுக்காக நாங்கள் அலைந்து திரிந்தோம். அதை ஒரு ஆசிரியர் எங்களுக்குக் கொடுத்தார்.

அந்தச் செய்தியும் படங்களும் ஓஷோவாலேயே திட்டமிட்டு அந்த இதழுக்குக் கொடுக்கப்பட்டவை எனப் பின்னர் தெரியவந்தது. அவர் எதிர்மறைப் பரபரப்பின் மூலமே தன்னை பிரபலப்படுத்திக்கொண்டவர். பாலியல் சோதனைகள் பற்றிய செய்திகளால் அவர் சட்டென்று உலகமெங்கும் பரவலாக அறியப்படலானார். அவரது ஆசிரமத்துக்கு வெள்ளையர் வந்து குவிந்தனர். பணம் வந்து கொட்ட ஆரம்பித்தது. இன்றைய ஓஷோ அவ்வாறு உருவாகி வந்தவர்.

ஓஷோவின் நூல்களை நான் மேலும் இருவருடங்கள் கழித்து ஓர் ஆசிரியர்வழியாகப் பெற்றுவாசிக்க ஆரம்பித்தேன். அப்போது அவர் உயிருடனிருந்தார். அலைந்து திரிந்த நாட்களில் அவரைச் சந்திக்க புனா சென்றிருக்கிறேன். அவர் அமெரிக்காவில் இருந்து திரும்பிவந்த நாட்கள் அவை. அவரைச் சந்திக்க முடியவில்லை.

அதன்பின்னர் ஓஷோவைத் தொடர்ந்து வாசித்து சிந்தித்துக்கொண்டே இருக்கிறேன். என்னுடைய கட்டுரைகளில் மேற்கோள் காட்டப்படும் மிகச்சிலரில் அவரும் ஒருவர். குறிப்பாக இந்திய தத்துவமரபைப் புரிந்துகொள்வதற்கு ஓஷோ ஒருவகையில் தவிர்க்கமுடியாதவர் என்பது என் எண்ணம். அதைச் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

ஓஷோ பற்றிப் பேசுபவர்களை நான் கூர்ந்து கவனித்துக்கொண்டே இருக்கிறேன். அவர்களிடம் இருக்கும் வெள்ளந்தித்தனம் வருத்தமூட்டுகிறது. ஒருசில நூல்களை வாசித்து அவர்கள் ஓஷோ மீது கொள்ளும் பற்றும் பக்தியும், தாங்கள் மெய்ஞானத்தின் படிகளில் இருப்பதாகக் கொள்ளும் பிரமையும் எல்லாம் பரிதாபகரமானவை.

ஓஷோ வெள்ளந்தியான வாசகர்களுக்கு உரியவர் அல்ல. மூளையில் கத்தியுடன் அணுகக்கூடியவர்களுக்கு உரியவர். பக்தர்களுக்கு மிக அபாயமான வழிகாட்டி அவர், அவருடன் போர் புரிபவர்களுக்கு மட்டுமே ஓஷோ பயன்படுவார்.

அந்தக்குறிப்பை ஓஷோ பக்தர்களைப் புரிந்துகொள்ளவே எழுதினேன். அது ஓஷோ பாணியிலானது என்று சொல்லலாம். சொல்ல வேண்டிய அனைத்துமே அதில் உள்ளன, சீண்டலாகவும் நுட்பமாகவும் சொல்லப்பட்டுள்ளன. அதற்கு வந்த எதிர்வினைகளில் எவருமே அந்தக் கட்டுரையைப் புரிந்துகொள்ளவில்லை என்பதையே கண்டேன். எந்த ஒரு சாதித்தலைவரை, அரசியல்தலைவரை, மடாதிபதியை விமர்சித்தாலும் வரக்கூடிய அதேவகையான எதிர்வினைகள்.

‘முட்டாள்களின் மடாதிபதி’ என்று எழுதியிருந்தேன். ஆனால் கட்டுரைக்குள் அவர் ஞானி என்று சொல்லியிருந்தேன். அப்படியானால் யாருக்கு ஞானி? இந்தச் சின்ன வினாவுடன் அக்கட்டுரையை வாசித்திருந்தால் நான் சொல்லவந்ததைப் புரிந்துகொள்ளமுடியும்.

ஓஷோ மடாதிபதி அல்ல. அவரை அப்படிக் காண்பவர்கள் முட்டாள்கள். அவர் ஞானி. அவரை மடாதிபதியாக அணுகாதவர்களுக்கே அவர் ஞானி. ஒரு மடாதிபதியிடம் எதிர்பார்க்கும் எதையும் அவரிடம் எதிர்பார்க்கலாகாது. அவரது அத்துமீறலே அவரை ஞானியாக்குகிறது. ‘கிரிமினல் ஞானி’ என்ற சொல்லாட்சி உருவாக்கும் சீண்டல்தான் ஓஷோவைப் புரிந்துகொள்ள சரியான திறப்பு.

சரிதான், இன்னொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப்பேசுகிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரைகாந்தியின் திமிர் பற்றிய குறிப்புகள்
அடுத்த கட்டுரைகாந்தி காமம் ஓஷோ