எறும்புக் கூட்டங்களின் அதிகார அடுக்குகளில் எல்லா எறும்புகளும் வேலைத் திறனில் சமம்தான் என்று இதுநாள் வரை நம்பப்பட்டு வந்தது. ஆனால் இது உண்மையில்லை என்றும், ‘விஷயமறிந்த’ தனிப்பட்ட சில எறும்புகளின் தீர்மானங்களே மொத்தக் கூட்டத்தையும் புதிய வாழ்விடங்களை நோக்கி வழி நடத்துகின்றன என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரிஸ்டல் பல்கலையைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு பற்றிய சுட்டி இங்கே… http://www.wired.com/wiredscience/2011/08/experienced-ants/
விஷயம் ஒருபுறம் இருக்கட்டும். இந்த அறிவியல் தகவலை நாம் நன்கு அறிந்த சிலர் எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்று பார்த்தால்…
1 . ‘வசவு புகழ்’ சகா.செம்பட்டை :
“மார்க்சியம் என்றும் அறிவியல் பூர்வமாகவும், வரலாற்றின் இயங்கியல்படியும் தான் இயங்கும் என்பதை அறியாத வலதுசாரி, பாசிச வெறி பிடித்த, முதலாளிகளின் கைக்கூலியான, தொழிலாளர் வர்க்க எதிரிகளான, ஆன, ஆன, ஆன கயவர்கள் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் நவீன அறிவியல் நமது மூத்த தோழர் மார்க்ஸ் சொன்னது உண்மை என்று நிரூபித்து விட்டது. உழைப்பாளர் வர்க்கமாகிய வேலைக்கார எறும்புகளை வழிநடத்தி தோழர் மார்க்ஸ் வகுத்த செம்புரட்சிப் பாதையில், சமத்துவ சமூகத்துக்கான புரட்சியை ப்ரோலட்டேரியன் எறும்புகளே முன்னின்று நடத்துகின்றன என்பதை செவ்வெறும்புகளை வைத்து விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளார்கள். இதை அறியாத வலதுசாரி, பாசிச வெறி பிடித்த, முதலாளிகளின் கைகூலியான, தொழிலாளர் வர்க்க எதிரிகளான, ஆன, ஆன, ஆன………
2 . ‘காசிரங்கா புகழ்’ ஹரிராம்ஜி தீனதயாள்ஜி அக்னிஹோத்ரிஜி மகாராஜ்:
‘ப்ராஹ்மநோஸ்ய முகமாசீத்’ என்ற வாக்யத்தால் முகத்தில் தோன்றிய பிராமணனே பிரம்மத்தை உணர்ந்தவன் என்று சொல்கிறது ஸ்ரேஷ்டமான வேதம். ஆர்யனாகிய பிராமணனே லோகக்ஷேமத்திற்காகவும், இதர வர்ணங்களின் உஜ்ஜீவனத்திற்காவும் பிரம்மவித்யையை அனுஷ்டானம் பண்ணி சகலஜனங்களையும் மோக்ஷ சாம்ராஜ்யத்திற்கு உத்தாரணம் பண்ணுகிறான்ங்கிறதை இப்போ விக்ஞான சாஸ்த்ரகாராளே பிபீலிக சமூஹத்தை வச்சு சம்சோதனம் பண்ணி நிரூபணம் பண்ணிவிட்டார்கள். ஆகையினாலே ஸ்ரேஷ்டமான வேதம் சொல்கிறாற்படி அவரவர்கள்…
3 . பேரா.முனைவர். அற்புதப் பாண்டியன்:
ஆதிமந்திவமிசத்தாரே லெமூரியக் கண்டத்து மூத்த தமிழ்க் குடிகள், என்று நாட்டுப்புறவியலை அடிப்படையாக வைத்து குரங்கிலிருந்து பரிணமித்த ஆதிமனிதன் செந்தமிழனே என்று நான் நிரூபித்தபோது எள்ளிநகையாடி எக்காளமிட்ட ஆரிய சதிகாரர்கள் மீண்டும் கைபர்கணவாய் வழியாக ஓடும்படி ஒரு வெள்ளைத் தமிழன் (ஆரிய திராவிட கலப்பு சதியில் நிறம்மாற்றப்பட்ட அப்பாவி ஆதிதமிழன்) கரிய எறும்பு இனங்களை வைத்து அறிவியல் ஆராய்ச்சிசெய்து நிரூபித்துள்ளான். கரிய எறும்புகள் திராவிட இனம் என்பது சொல்லத் தேவை இல்லை. தங்கள் வாழ்விடம் அழிந்தபோது அவை வடக்கு நோக்கி நகர்ந்து இன்னொரு வாழ்விடத்தைக் கண்டுகொண்டு மற்ற திராவிடத் தமிழ்ச் சகோதர்களையும் வழிநடத்திச் சென்றதை நாம் லெமூரிய கண்டத்து ஆதிமந்தி மக்கள் கடல்கோளின் போது வடக்கு நகர்ந்து குமரிகண்டம் வந்ததுடன் ஒப்பிட்டுப் பார்த்துப் புரிந்து கொள்ளவேண்டும். அனால் இந்த ஆரியச் சதியாளர்கள்…
4 . பிரபல தோமாகிறித்தவ ஆய்வாளரும் அதன் நிறுவனருமான முனைவர். ஆ.ஆ.தெய்வீகராகம் அவர்கள்:
ஆவிக்குப் பிரியமானவர்களே.. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, “என் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும்” (யாத்திராகமம் 33:14) என்றபடியாலே, மேய்ப்பராகிய இயேசு கிறிஸ்துவே குஞ்சாடுகளை தன் பிதாவினிடத்தில் கொண்டுசெல்லுகிறார் என்பதை பரிசுத்த வேதாகமத்தில் தேவவசனங்கள் சொல்லுகிறபடிக்கு தேவனுடைய கிருபையாலே..ப்ரைஸ் தி லார்ட்… நமது அன்பிற்குரிய சயன்டிஸ்ட் சகோதரர்கள் கர்த்தருடைய படைப்பிலே கீழ்மையான எறும்புக் கூட்டங்களை வைத்து விஞ்ஞான ஆராய்ச்சி செய்து தேவனுடைய சத்திய வாக்குகளின் மகிமையை நிரூபித்து, ப்ரைஸ் தி லார்ட்… சேசுவுக்கு சாட்சியம் தந்துள்ளார்கள். பாவிகளாகிய மற்ற எறும்புகளை மீட்டு பரலோகத்திற்கு பரமபிதாவினிடத்திலே அழைத்துச் செல்லுபவை சுவிசேஷகர்களாகிய புனித எறும்புகளே என்பதையும் கர்த்தருடைய வல்லமையினாலே நிரூபித்துள்ளனர். சகோ.பேரா. முனைவர். அற்புதப் பாண்டியன் சொன்னது போலே தேவன் தம்முடைய மெய்யான வாக்குத்தத்தத்தின் படி மெய்யாகவே மெய்யாகவே புனித தோமையர் மூலம் பாவிகளாகிய ஆதிமந்தி வமிசத்தாரை தேவனுடைய இராஜாங்கத்துக்கு அழைத்துச் சென்றார் என்பதையும் இங்கே பிரசங்கிக்கிறேன். ப்ரைஸ் தி லார்ட்… அல்லேலூயா…யா..யா..
5 . ‘நான்காவது கொலை புகழ்’ மிஸ்டர் ஷெர்லக் ஹோம்ஸ்:
பிரிட்டிஷ் பாரம்பரியப்படி மோவாயைத் தூக்கிக் கொண்டு நடந்து வந்து, “மிஸ்டர். வாட்சன், மேன்மை தாங்கிய மகாராணியாரின் மேன்மைதங்கிய அரசாட்சியில் உங்களுக்கு இந்த நாள் இனிமையாக அமையவேண்டுமென்று வாழ்த்த விரும்புகிறேன் என்பதைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்”. “அபாரம் மிஸ்டர் ஹோம்ஸ்” என்றார் மிஸ்டர்.வாட்சன். “சூரியன் மறையாத நமது பிரிட்டிஷ் அரசாட்சியில், நமது மேன்மை தாங்கிய மகாராணியாரின் தலைமையில் பிரிட்டிஷ் கனவான்களே உலகை வழிநடத்துகிறார்கள் என்பதை என் துப்பறிவில் கண்டுபிடுத்துள்ளேன் என்பதை பிரிட்டிஷ் தன்னடக்கத்துடன் உங்களிடம் நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் என்பதைத் தெரியப்படுத்த விரும்புவதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நான் நம்பலாமா மிஸ்டர் வாட்சன்?” பைப் புகையை வானத்தை நோக்கி விட்டபடி கண்ணடித்தார் மிஸ்டர் ஹோம்ஸ்.
“அபாரம் மிஸ்டர்.ஹோம்ஸ், நீங்கள் அந்த எறும்புகளின் பின்னால் இரவில் உன்னிப்பாக கவனித்துக் கொண்டே ஊர்ந்து செல்லும்போதே நான் ஊகித்திருக்க வேண்டும். காளைச் சாணம்… ஓ..என் தெய்வமே… பிரிட்டிஷ் மரபை மீறி காளைச் சாணம் என்ற வார்த்தையை பிரயோகப்..ஆ..என் தெய்வமே மறுபடியும் சொல்லிவிட்டேன்….நீங்கள் பிரிட்டிஷ் மரபு அனுமதித்தால் என்னை மன்னித்துவிட்டீர்கள் என்று நான் நம்பலாமா என்று சொல்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் என்பதை மகாராணியாரின் மீதுள்ள விசுவாசத்தின் பேரில் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன் என்பதை சொல்லக் கடமைப்பட்டுளேன் என்று……. “
6.மார்க்க அறிஞர், விஞ்ஞான பேச்சாளர் ஹாஜி பாதுஷா பின் குலாப் ஷா ஹுசைன் அல் ஜாகிர் கல் நாயக்:
“மனிதர்களை கொஞ்சம் தூசி, கொஞ்சம் திரவம் எல்லாம் கலந்து நான் படைத்தேன் (35 : 11). இந்த எறும்பு சமாச்சாரத்தை எல்லாம் விட அற்புதமான கண்டுபிடிப்புகளை 140
7 . “ஆபிரகாமிய ஆப்பு”, “நம்பக்கூடிய அறிவியல்” புகழ் ‘அநீ’தி அறியாத அநீ:
8 . பார்வதிபுரம் B 12 ஸ்டேஷன் ரைட்டர் ஜெயமோகன்:
இயற்கையில் எல்லாமே சமம் இல்லை. உலகை வழிநடத்துபவர்கள் தங்கள் செயலூக்கத்தினால் முன்செல்லும் தேர்வு செய்யப்பட்ட சிலரே. அவர்களை விதிசமைப்பவர்கள் என்று நித்யா ஒருமுறை என்னிடம் சொல்லியுள்ளார். இதையே இன்றைய நவீன நடத்தையியல் அறிவியல் துறையில் எறும்புகளின் சமூக வாழ்வியலை உன்னிப்பாகக் கவனித்துச் செய்யப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சாங்கிய தரிசனத்தில் இதையே ‘பிபீலிக மார்க்கம்’ என்று விளக்கபட்டிருக்கிறது. நான் பேசும் தளம் வேறு. சாதாரண இணைய வம்புகளை மேயும் ஒருவரால் நான் சொல்லும் கருத்தின் ஆழத்தைப் புரிந்து கொள்ளமுடியாது என்பதை நான் நன்கு அறிவேன். இதனைப் பன்னிப்பன்னி பெரிதாக்கி அவதூறு செய்ய முயலும் ஒருவரின் மனச்சிறுமையை எண்ணி இப்போதெல்லாம் மெல்ல நகைத்துக் கொள்ளப் பழகிவிட்டேன்.
9 . ஒருவாசகரின் கடிதம்:
அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகனுக்கு,
தேர்வு செய்யப்பட்டவர்கள் கட்டுரை படித்தேன். நீங்கள் நித்யா என்று சொல்லியிருப்பது நித்தியைத் தானே? அவர் ஆதீன பீடாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டது குறித்து உங்களின் நுண்ணரசியல் கருத்துக்களை வழக்கம் போல நுழைத்துவிட்டீர்கள். அவரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? அவர் எழுதிய ‘கதவைத் திற, வாயை மூடு’ என்கிற புத்தகத்தை நீங்கள் படிக்க வேண்டும். இன்னும் நிறைய இருக்கிறது சொல்ல, உங்கள் போன் நம்பர் அனுப்புங்கள்.
-இப்படிக்கு, ம்ருத்வி.
***************************************
-பிரகாஷ்