பெரியார்-ஒருகடிதம்

அன்புள்ள நண்பர், ஜெயமோகன் அவர்களுக்கு, அறிவழகன் அன்புடன் எழுதுவது, தங்கள் மேலான கருத்து என்று ஒன்றை, ஒரு வார இதில் பார்த்தேன், ” தந்தை பெரியாரை நீங்கள் ஒரு தமிழினத் தலைவராக எற்றுகொள்வதில்லை என்று”.

அய்யா,நீங்கள் ஏற்றுக்கொண்டாலும், இல்லையென்றாலும் அவர் தமிழினத்தின் இணையற்ற தலைவர் தான், அவர் நேரடியாக தமிழுக்கும், தமிழர்க்கும் செய்த பணிகள் உங்கள் கண்களுக்கு தெரியவில்லை என்றால், அவர் மறைமுகமாக தமிழுக்கும், தமிழர்க்கும், செய்த பணிகளை நான் பட்டியல் இடுகிறேன்.

அய்யா, கல்வியும், சமூக நிலைப்பாடும், பொருளாதார வாய்ப்பும் இன்றி தவித்த ஒரு சமூகத்திற்கு அவர் தான் கலங்கரை விளக்கம், அவர் வந்து சொன்ன பிறகு தான் உரிமை என்றால் என்ன, வாய்ப்புகளை பற்றிக்கொண்டு எப்படி நாமும் பொருளாதார, சமூக முழுமை பெற்ற வாழக்கை வாழ முடியும் என்ற உண்மை உணரப்பட்டது,

வீதிகளில் நடக்க கூட உனக்கு உரிமை இல்லை என்று காலம் காலமாய் சொல்லப்பட்டு, அதையே உண்மை என்று நம்பிய ஒரு கூட்டம், இல்லை நாமும், நமது குடும்பமும் தலை நிமிர்ந்து இந்த சமூகத்தில் வாழ முடியும் என்ற நம்பிக்கையை அவரது இருப்பு தான் உறுதி செய்தது,

கடவுளரின் பெயரால், சந்தியில் நிறுத்தப்பட்டு, சாதியின் பெயரால் சங்கு நெரிபட்டு கிடந்த ஒரு கூட்டம், இல்லை இல்லை எனக்கும் உரிமை இருக்கிறது என்று உணர முற்பட்டதே அய்யாவின் வரவுக்கு பின்னர் தான்.

நீங்கள் எல்லாம் அறிந்தவராய் இருக்கலாம், நூல்கள் பல படித்து ஆய்வுகள் பல செய்து அய்யாவை பற்றி அறிந்தவராக இருக்கலாம், ஆனால் எங்களை போன்ற அடிமை குடும்பங்களில் பிறந்து, இன்று நாங்களும் பொருளாதார விடுதலை பெற்று, சமூக விடுதலைக்காக நீண்ட போராட்டத்தில் இருக்கும் போது, எங்களுக்கும் எங்களை போன்ற லட்சோப லட்சம் ஏழை தமிழர்களுக்கும் அவர் தாம் அய்யா தலைவர், எங்களுக்கு மட்டுமில்லை, இன்று தமிழகத்தில் இருக்கும் எந்தவொரு அரசியல் அமைப்புக்கும், தலைவருக்கும் அவர் தான் அய்யா ஈடு இணையற்ற, ஒப்பற்ற தலைவர்…

இன்று மட்டுமல்ல, என்றென்றும் அய்யா பெரியார் தான் எங்கள் தமிழினத்தின் ஒரே தலைவர்.

வாழ்க பெரியார் புகழ்….

அன்புள்ள நண்பருக்கு

உங்கள் கோபத்தை நீங்கள் நேரடியாக ஆனால் மரியாதையாகக் காட்டியிருக்கும் விதம் மகிழ்ச்சி அளித்தது.

இன்று உங்கள் கடும்சினத்துடன் என்னால் விவாதிக்க முடியாது. ஆனால் நான் சொல்லும் சில விஷயங்களை மட்டும் உங்கள் மனதுக்குள் இப்போது குறித்துக் கொள்ளுங்கள். இன்னும் சற்று நாள் கழித்து, இன்னும் சற்று ஏற்புள்ள மனநிலையில் இவற்றை நீங்கள் யோசித்துப்பார்க்கலாம்.

நீங்கள் ஒரு தலித் என நான் ஊகிக்கிறேன் – உங்கள் வரிகளில் இருந்து. ஆகவே அந்தக்கோணத்திலேயே பேசுகிறேன்.

இந்திய தலித்துக்களின் நெடிய விடுதலைப்போராட்டத்தை நீங்கள் ஒரே ஒரு மனிதரில் கொண்டுவந்து நிறுத்துகிறீர்கள். உண்மையில் இந்த வரிகளை பல தலித் இளைஞர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அவர்கள் அப்படிச் சொல்லும்படிக் கற்பிக்கப்பட்டிருக்கிறார்கள்.மீண்டும், மீண்டும் உரக்கச் சொல்வதன்மூலம் அப்படியொரு வரலாறு தமிழகத்தில் கற்பிதம் செய்யபப்ட்டிருக்கிறது. தலித்துக்களின் போராட்ட வரலாற்றைக் கூட பிறரே உருவாக்கி அளிக்கும் தமிழக நிலை பற்றி மட்டும் சற்று சிந்தியுங்கள். அப்படி அளிப்பவர்கள் எவருமே தலித்துக்கள் அல்ல.

*

நணபரே, மனச்சார்புகள் இல்லாமல் உண்மைதேடும் நோக்குடன் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் இந்திய நிலமானிய முறையின் [Feudalism] பலியாடுகள் தலித்துக்கள் என்பது தெரியவரும். உலகில் எங்கெல்லாம் நிலமானியமுறை இருந்ததோ அங்கெல்லாம் இதேபோல நிலஅடிமைகள் இருந்திருக்கிறார்கள். நிலஅடிமைகள் இல்லாமல் நிலமானிய முறை இல்லை. ஆகவே நிலஅடிமைகள் இல்லாத நாடோ சமூகமோ உலகில் இல்லை. ஒவ்வொரு அடிமைமுறையும் ஒவ்வொரு வகை. ஓவ்வொரு அமைப்புக்கும் அதற்கான தத்துவங்களும் நம்பிக்கைகளும் உண்டு. இந்திய அடிமை முறை சாதியடிப்படையினால் ஆனது.

நிலமானிய முறை உலகநாகரீகத்தின் வளர்ச்சிப்பாதையில் ஒரு கட்டம். மானுட வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு சிறப்பும் அதேயளவுக்கு இழிவும் சரிசமமாகக் கலந்திருக்கும். உலகநாகரீகத்தின் தொட்டில்களான எகிப்தும் கிரேக்கமும் குரூரமான அடிமைமுறை மூலம் உருவாக்கப்பட்டவை. ஒவ்வொரு காலகட்டத்துக்கும் அதற்கான இழிவும் அநீதியும் உண்டு. அக்காலகட்டத்தில் அது கண்ணுக்குப் படுவதில்லை. ஒரு அன்றாட யதார்த்தமாகவே தோன்றும்.

உதாரணமாக இன்று இந்தியாவில் நாம் பொருளாதார வளர்ச்சிப்பாதையில் செல்பேசியும் கணிப்பொறியுமாக வாழ்கிறோம். ஆப்ரிக்காவில் காங்கோ, உகாண்டா, எதியோப்பியா போன்ற நாடுகளில் லட்சக்கணக்கானவர்கள் பட்டினியால் மாதக்கணக்கில் வதைபட்டு உடல் உருகி சாகிறார்கள்.நீங்களோ நானோ அதற்காக என்ன செய்தோம்?  நாளைய தலைமுறையில் அன்றைய இளைஞன் ஒருவன் நம்மையெல்லாம் மனிதாபிமானமே இல்லாத மிருகங்களாகக் கருதக்கூடும்.

இந்திய நில அடிமைகளான தலித்துக்கள் எப்படி அப்படி ஆனார்கள் என்பதைப்பற்றி விரிவான ஆய்வுகள் இன்று வருகின்றன. பொதுவாக அதிகாரப்போட்டியில் தோற்று நிலம் பிடுங்கப்பட்ட சமூகங்களே அடிமைகள் ஆகின்றன. உதாரணமாக பறையர்கள் ஏதோ ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் நிலமுள்ள, செல்வாக்கான சாதிகளாக இருந்திருக்கிறார்கள். புலையர்கள் அவ்வாறு கேரளத்தில் இருந்திருக்கிறார்கள்.பின்னர் அவர்கள் நிலம் பறிக்கப்பட்டு அடிமைகளாக ஆனார்கள்.

அயோத்திதாச பண்டிதரைப் பற்றி கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். தமிழக தலித்துக்களின் எழுச்சியின் முதல் கோட்பாட்டாளர் அவர். தமிழின் முக்கியமான முன்னோடிச் சிந்தனையாளர். அவர் பறையர்கள் பௌத்தர்களாக இருந்தவர்கள் என்றும் பௌத்த மதம் மறைந்தபோது மன்னர்களால் நிலம்பிடுங்கப்பட்டு அடிமைகளாக ஆனார்கள் என்றும் சொல்கிறார். இதேபோன்ற சித்திரமே கேரளத்தில் புலையர்களைப்பற்றியும் உள்ளது.

இரு ஆதாரங்களைச் சொல்கிறேன். ஒன்று, திருவாரூர் ஆலயத்தில் பறையர்களுக்கு உள்ள சிறப்பு உரிமைகளை எடுத்துச் சொல்லும் ‘அபிதான சிந்தாமணி’ ஆசிரியர் சிங்காரவேலு முதலியார் ஒருகாலத்தில் பறையர்கள் ஆலய உரிமைகளுடன் இருந்தார்கள் என்கிறார். கேரளத்தில் முன்பு பௌத்த ஆலயமாக இருந்த கொடுங்கோளூர் ஆலயத்தில் இன்றும் புலையர்கள்தான் முதல் திருவிழாவை நெல் கொடுத்து நடத்த வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

ஒரு அடிமைமுறை வன்முறையாலும், அதை நியாயப்படுத்தும் கருத்துக்களாலும் உருவாக்கப்படுகிறது. இரண்டுமே இங்கே இருந்தன. தலித்துக்களை தீண்டத்தகாதவர்களாகவும் அடிமைகளாகவும் நிலைநிறுத்தும் கருத்துக்கள் இவ்வாறு உருவாக்கப்பட்டவையே. இக்கருத்துக்கள் நம்பிக்கைகளாக ஆகி , அவற்றில் உள்ள அநீதியே கண்ணில் படாமலாகிவிடுகிறது.மாபெரும் சிந்தனையாளர்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. ஆதிசங்கரர் சாதியமைப்பை ஆதரித்து விவேகசூடாமணியில் எழுதியிருக்கிறார். பிளேட்டோ அடிமைமுறையை ஆதரித்து எழுதினார். அவர்களின் சிந்தனைகள் அடிப்படையானவை. ஆனால் அதில்  அன்றைய அநீதியும் கலந்தே உள்ளது. அப்படி தன் காலகட்ட அழுக்குகள் கலக்காத சிந்தனையே உலகில் இல்லை.

ஆகவே ஐரோப்பியர் வரும்வரை இம்முறையில் இருந்த அநீதி இந்தியர்களின் கண்களுக்குப் படவில்லை. ஐரோப்பியர் நிலமானியமுறையும் பண்ணையடிமை முறையும் உச்சபட்சக் கொடூரத்துடன் இருந்த ஒரு காலகட்டத்தைத் தாண்டி வந்துவிட்டிருந்தார்கள். அதற்கு அங்கே பலவகையான சிந்தனைக் கொந்தளிப்புகள் தேவைப்பட்டன. நமது சாதிமுறையின் குரூரத்தை நமக்கு உணர்த்தியவர்கள் மதம் மாற்ற வந்த ஐரோப்பியரே. அவர்களே தலித் விடுதலையின் முதல் விதைகளை பரப்பியவர்கள். அவர்களை – குறிப்பாக கால்டுவெல்லை- அதற்காக நாம் நினைவுகூரவேண்டும்.  

ஐரோப்பியர் நம்மை நமக்குக் காட்டிய பின்னர்தான் சமூக சீர்திருத்த அலைகள், மதச் சீர்திருத்த அலைகள் உருவாயின. இந்தியாமுழுக்க தலித் விடுதலைக்கான செய்தி ஓர் அலைபோல பரவியதற்கு இந்தச் சீர்திருத்தவாதிகள் முக்கியமான காரணம். நாராயண குருவை கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். நமது அண்டை மாநிலமான கேரளத்தில் ஒரு தீண்டத்தகாத சாதியில் பிறந்தவர். அவர் தொடங்கிய பேரியக்கம் அடித்தள மக்களை கல்வி- அரசியல் உரிமை ஆகியவற்றில் முன்னேற்றியது.

நாராயண குருவால் ஊக்கம்பெற்ற சகோதரன் அய்யப்பன், அய்யன் காளி முதலியோர் என் சொந்த மண்ணில் தலித் இயக்கத்தை உருவாக்கினார்கள். இக்காலகட்டத்தில் தமிழகத்தில் தங்கள் வாழ்நாளையே தலித் விடுதலைக்காக செலவிட்ட பல முக்கியமான முன்னோடிகளை நீங்கள் அறிந்திருக்க நியாயமில்லை. சுவாமி சகஜானந்தரை உதாரணமாகச் சொல்கிறேன். இக்காலக்ட்டத்தில் அடிப்படை சிவில் உரிமைகளான கல்வி, பொது இடங்களில் நடமாடுவது ஆகியவையே முக்கியமான இலக்குகளாக இருந்தன.

இதற்கு அடுத்த காலகட்டத்தில்தான் தலித்துக்களுக்கு அரசியல் அதிகாரத்துக்கான குரல் எழுந்தது. அதன் நாயகன் அம்பேத்கர். அவரது பங்களிப்பு முதன்மையானது. இந்தியாவை முழுக்க உள்ளடக்கியது. அணுகி வாசிக்கும்தோறும் என் மனதில் மாபெரும் அறிஞனாகவும் அதைவிட மேலாக ஆன்மீக வழிகாட்டியாகவும் அம்பேத்கர் வளர்கிறார். அதற்கு தனிப்பட்ட முறையில் எழுத்தாளர் பிரேமுக்கு கடன்பட்டிருக்கிறேன்.

ஆனால் அதற்கிணையான பங்களிப்பு காந்திக்கும் உண்டு என்பதே என் எண்ணம். அம்பேத்கர் காந்தியை எதிர்த்து அரசியல் செய்ய நேர்ந்தது. ஆகவே அவர் காந்திமேல் கடுமையான தாக்குதல்களை தொடுத்திருக்கிறார். அவற்றின் அடிப்படையில் காந்திமேல் கடுமையான வெறுப்பை இன்றைய தலித் தலைவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். அதற்கான அரசியல் காரணங்கள் பல. காங்கிரஸே பெரும்பாலான தலித் ஓட்டுக்களைப் பெற்று வந்த சூழலில் அதிலிருந்து தலித்துக்களைப் பிரிக்க காங்கிரஸின் அடையாளமான காந்தியை தாக்க வேண்டிய தேவை அவர்களுக்கு இருந்தது.

காந்தியின் பாங்களிப்பு என்பது தலித் அல்லாத உயர்சாதியினரின் மனசாட்சியுடன் தலித்துக்களின் பொருட்டு அவரால் பேச முடிந்தது என்பதே. தலித்துக்கள் இந்த அறுபது வருடத்தில் அடைந்துள்ள விடுதலைக்கான முக்கியமான அரசியல் காரணம் அது. குறிப்பாகச் சொல்லவேண்டுமானால் இட ஒதுக்கீடு. காங்கிரஸ் அப்போது உயர்சாதியரால்தான் நிறைந்திருந்தது என்பதை நினைவுகூருங்கள். அந்தக் கட்சிதான் தலித்துக்களுக்கான இட ஒதுக்கீட்டை நிறைவேற்றியது. அதற்குக் காரணம் அவர்கள் மேல் காந்தி செலுத்திய அழுத்தமான தார்மீகக் கட்டாயம்தான்.

இந்தியச்சூழலில் தலித் எழுச்சியின் அடுத்த அத்தியாயம் கம்யூனிஸ்டுகளால் எழுதப்பட்டது. தமிழகத்தில் தலித்துக்களின் நில உரிமை, கூலி உரிமை மற்றும் மனித உரிமைக்கான பெரும் போராட்டங்கள் அனைத்துமே கம்யூனிஸ்டுக்கட்சிகளால் நேரடியாக முன்னின்று நடத்தப்பட்டவை. அந்த தீரம் செறிந்த வரலாற்றை நீங்கள் சற்று முயற்சிசெய்தால் கூட அறிந்துகொள்ள முடியும். அதன் தியாகத்தலைவர்களைப்பற்றியும்.

இக்காலகட்டத்தில் தமிழகத்தில் தலித் உரிமைகளுக்காக போராடிய எம்.சி.ராஜா, இரட்டைமலை சீனிவாசன் போன்ற தலைவர்கள் உருவாகி வந்தார்கள். ஆனாலும் கம்யூனிஸ்டுகளே இக்கால தலித்துக்களின் வெகுஜன இயக்கமாக இருந்தார்கள். இன்றைய தலித் ஒருவன் அவர்களின் சேவையை மறுப்பானாகில் அதைவிடக் குரூரமான வரலாற்றுத் துரோகமும் வேறு இல்லை.

இக்காலகட்டத்தில் ஈ.வே.ராவின் திராவிட இயக்கம் தலித் விடுதலைக்கான குரலாக ஒலிக்கவில்லை. அது பிற்படுத்தப்பட்டவர்களின் குரலாகவே ஒலித்தது. சில தருணங்களில் தலித்துக்களுக்கு எதிராகவும் இருந்தது. பல தருணங்களில் மௌனமாக இருந்தது. இந்த வரலாற்று உண்மையை மழுப்பவே இன்று தலையணை தலையணையாக வரலாற்று நூல்கள் எழுதப்படுகின்றன.

தமிழக ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை வரலாற்றை ஈ.வே.ராவில் தொடங்கி ஈ.வே.ராவிலேயே முடிக்கும் ஒற்றைப்படையான கூற்றுக்கள் இப்போது தொடர்ந்து மேடைகளில் முன்வைக்கப்படுகின்றன. அதற்குக் காரணம் இன்று உருவாகிவரும் தலித் அரசியல் எழுச்சியே. இவ்வரலாறுகள் முழுக்கமுழுக்க உள்நோக்கம் கொண்ட திரிபுகள். அவை ஒரு நெடிய தியாக வரலாற்றை மறைப்பவை. ஆகவே முற்றிலும்  அநீதியானவை.

*

ஈவேராவின் மீது எந்தவிதமான வெறுப்பும் எனக்கு இல்லை. சொல்லப்போனால் மதிப்பும் மரியாதையும் உண்டு. நான் என் குருவாக எண்ணும் ‘நித்ய சைதன்ய யதி’ நாராயணகுருவின் வழி வந்தவர். நித்யா துறவு பூண்டபோது அன்று திருச்சியில் இருந்த ஈவேராவைச் சென்றுகண்டு ஆசிபெற்றுத்தான் துறவை மேற்கொண்டார். ஆகவே ஈவேரா என் குருவுக்கு குரு

இந்துமதத்தின் நசிவுப்போக்குகளுக்கு எதிரான போராட்டக்காரராகவே நான் ஈவேராவை கருதுகிறேன். மூடநம்பிக்கைகள், புரோகித ஆதிக்கம் ஆகியவற்றுக்கு எதிரான அவரது போராட்டம் எனக்கு முற்றிலும் உடன்பாடானதே. நான் கடவுள் நம்பிக்கை கொண்டவனல்ல. மதச்சடங்குகள் எதையுமே செய்பவனுமல்ல. முற்றிலும் புரோகித ஆதிக்கத்துக்கு எதிரானவன். என் நாவல்கள் எதை வேண்டுமானாலும் நீங்கள் படித்துப்பார்க்கலாம். ஒரு தொடக்கமாக ‘ஏழாம் உலகம்’ மட்டும் படியுங்கள். தமிழ்பண்பாட்டின் ஆழத்தையும் வரலாற்றையும் என் ‘கொற்றவை’ போன்ற நாவல்கள் மூலம் முன்வைத்துவருபவன்.

ஆனால் ஈவேரா மீது எனக்கு சில விமரிசனங்கள் உண்டு. அவர் இருந்திருந்தால் ‘நான் நித்யாவின் மாணவன்’ என்றுசொல்லி அவரை நேரில் சந்தித்து அவற்றைச் சொல்லியிருப்பேன்.”வாங்க தம்பி ” என எனக்கு ஒரு இருக்கை கொடுத்து அவற்றை  அவர் கேட்டிருப்பார். இன்று ஈவேரா பற்றி கூச்சலிடுபவர்களை விடவே நான் அவரை அறிந்தவன், ஒருவகையில் நெருக்கமானவன்.

என் குற்றச்சாட்டு இதுதான். ஈவேரா சமூகத்தின் இயக்கத்தை மிகவும் எளிமைப்படுத்திக் கொண்டார். ஒரு சமூகத்தில் உள்ள கொடியமரபுகளுக்கு பற்பல பொருளியல் காரணங்கள் இருக்கும். வரலாற்றுக் காரணங்கள் இருக்கும். ஏற்கனவே தலித் அடிமையான வரலாற்றைப்பார்த்தோம். அவற்றை வரலாற்றையும் சமூக அமைப்பையும் எல்லாம் கணக்கில் கொண்டு விருப்பு வெருப்பில்லாமல் ஆராய வேண்டும்.

அத்தகைய ஆராய்ச்சிக்குரிய படிப்பும், சுயமான கண்ணோட்டமும் ஈவேராவுக்கு இல்லை. அவர் சங்க இலக்கியம் பற்றி, காப்பியங்கள் பற்றி ஏன் தமிழ் மொழி பற்றிச் சொல்லி இன்று அச்சில் கிடைக்கும் விஷயங்களையே பாருங்கள். அவற்றை இன்று ஈவேராவை ஆதரிப்பவர்கள் எவராவது ஏற்றுக் கொள்வார்களா? தமிழரின் தொன்மை, நாகரீக வெற்றி எதுவுமே அவர் கண்ணுக்குப் படவில்லை. பெரும்பாலும் ஐரோப்பியப் பகுத்தறிவு நோக்கில் அவற்றையெல்லாம் தூக்கி வீசுபவராகவே அவர் இருந்திருக்கிறார்.

ஈவேரா இங்குள்ள எல்லா தீமைகளும் ஒருசில சமூகங்களின் சதிவேலை மட்டுமே என்று எளிதாகச் சொல்லிவிட்டார். அதற்குக் காரணம் அவரது தனிப்பட்ட வெறுப்பு. ஆகவே வெறுப்புதான் வளர்ந்தது. நோயின் காரணம் தப்பாகக் கண்டுபிடிக்கப்பட்டமையால் நோய் நித்தம் வளர்ந்தது.

இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் தலித்துக்களுக்கு எதிராக கொடிய சாதிக்கலவரம் நடந்த பல ஊர்களுக்கு நான் சென்றிருக்கிறேன். அவையெல்லாம் பிற்படுத்தப்பட்ட சாதிகள் வாழும் ஊர்கள். அங்கே ஒரு பிராமணன்கூட இல்லை. பிராமணியம் சார்ந்த மதமும்கூட இல்லை. பல ஊர்கள் முழுக்க முழுகக் திராவிட இயக்கத்தின் கோட்டைகள்! ஆனால் அம்மக்களுக்கு இருக்கும் தலித் வெறுப்பு என்னை அஞ்ச வைத்தது. அதில் அவர்கள் சமரசத்துக்கே தயாராக இல்லை. ஆனால் அதேயளவுக்கு தீவிரமாக பிராமணர்களையும் வெறுக்கிறார்கள். ஏன் தெரியுமா? பிராமணன் சாதியை தமிழகத்தில் பரப்பி தமிழர்களை பிரித்தானாம்.

உண்மையான எதிரி நிலமானிய முறையின் சமூக அமைப்பும், அதன் நம்பிக்கைகளும்தான். அதனுடன் மட்டுமே போராட வேண்டும். அதையே ஒழிக்க வேண்டும். நாராயணகுரு செய்தது அதையே. அவர் எந்தத் தனிமனிதர்களுடனும் எந்தச் சாதியுடனும் போராடவில்லை. அதன் மூலம் இங்கே தமிழ்நாட்டில் இன்றுகூட நிகழாத மாற்றத்தை அங்கே ஐம்பது வருடம் முன்பே கொண்டுவந்தார். உண்மையான காரணத்தை திசை திருப்பி தன் எதிரியை தலித்துக்களின் எதிரியாக காட்டியதே ஈவேரா செய்த பிழை. இந்த உண்மையை தலித் இயக்கங்கள் கண்டுகொள்ளாத வரை அவர்கள் உண்மையான எதிரியுடன் போரிட முடியாது. ஆம், எதிரி மனிதர்கள் அல்ல. சென்ற காலகட்டம்தான்.

இன்னொன்று ஈவேராவின் இயக்கத்தில் உள்ள எதிர்மறைத்தன்மை. ஒரு சமூக இயக்கம் அப்படி கசப்பையும் வெறுப்பையும் கொட்டியபடி இயங்கினால் தீய விளைவுகளே உருவாகும் என நான் உறுதியாக நம்புகிறேன். ஒரு சமூக சீர்திருத்த இயக்கம் ஒரு மாபெரும் கல்வி இயக்கமாக இருக்கும். நாராயணகுருவின் இயக்கம் அத்தகையது. ஆகவே தான் அங்கே அவ்வியக்கம் சார்ந்து மாப்ரும் அறிஞர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் உருவானார்கள்.

மாறாக இன்று ‘பெரியாரியர்கள்’ என்று சொல்லி பேசிக்கொண்டிருப்பவர்களைப் பாருங்கள். வெறும் வெறுப்பை மட்டுமே எங்கும் எவ்விடத்திலும் கொட்டுகிறார்கள். தங்களுக்கு பிடிக்காதவர்களை எல்லாம் தலித் எதிரிகளாகச் சித்தரித்துவிடுகிறார்கள். ஆக்கபூர்வமாக எதுவுமே இல்லை.

யோசித்துப் பாருங்கள். ஒருவன் பெரியார் என்று சொல்லாமல் ஈவேரா என்று சொன்னாலே கோபம் கொள்கிறார்கள்– தனிநபர் வழிபாட்டை கண்டித்த ஈவேராவின் பெயரால்! ஈவேராவின் மாணவர்கள் எவருடைய பெயரையுமே நாம் இன்று சொல்ல முடியாது. கடும் சினம் கொள்கிறார்கள்.இதுதான் சுயமரியாதையா? காந்தி என்றும், இ.எம்.எஸ் என்றும் சொல்லலாம் என்றால் ஏன் ஈவேரா என்று சொல்லக் கூடாது? இந்தப் பகுத்தறிவுகூடவா நமக்கு இல்லை?

ஈவேராவின் கருத்தை ஒருவன் விமரிசித்தால் ஈவேராவின் சீடர்களுக்கு கோபம் வருகிறது. வசைபாடுகிறார்கள், தாக்க வருகிறார்கள். ஈவேராவின் கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடு இல்லை, அவருக்கு தமிழ்ப்பண்பாடு புரியவில்லை என்று சொல்லும் உரிமைகூட தமிழகத்தில் எவருக்கும் இல்லை என்று உண்மையில் ஈவேராவின் நாலைந்து பக்கங்களையாவது படித்தவன் சொல்ல துணிவானா? ஈவேரா தன் மீதான விமரிசனங்களுக்கு என்றுமே இடம் கொடுத்தவர் அல்லவா?

நான் மலையாளத்தில் எழுதிய முதல் கட்டுரையே மார்க்ஸிய அறிஞரும் அரசியல்தலைவருமான இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் பற்றிய கடுமையான மறுப்பும் விமரிசனமும்தான். நான் இ.எம்.எஸ்ஸை சந்திக்க நேர்ந்த சில நிமிடங்களில் என் கட்டுரையை நினைவுகூர்ந்து ஒரு கட்டுரையை எப்படி தீவிரமாக எழுதுவது என எனக்குச் சொல்லித்தந்தார் அந்தப் பேராசான். [கட்டுரையின் மையக்கருத்தே முதல் வரியாக இருக்க வேண்டும்]

‘தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்’ என்றார் வள்ளுவர். இன்றைய பெரியாரியர்களிடம் தெரிவது ஈவேராவின் முக்கியமான குறைபாடுதான். அவர் தனிபப்ட்ட முறையில் ஜனநாயக உணர்வும், மனிதாபிமானமும், அன்பும் கொண்ட மாமனிதராக இருந்தும் எதிர்மறை நோக்கை முன்வைத்தார். அந்நோக்கே இன்று ஒரு சிறு விவாதத்துக்குக் கூட தயாராக இல்லாமல் மேடையில் கூச்சலிட்டு வசைபாடும் பெரியாரியர்களை உருவாக்கியுள்ளது.

ஈவேராவை நிராகரிகக் வேண்டுமென நான் சொல்ல மாட்டேன். நாராயண குருவின் மரபினனான எனனல் அதை ஒருபோதும் சொல்ல முடியாது. அவரது இயக்கத்தில் இருந்த எளிமைப்படுத்தல்களையும், வெறுப்பையும் களைந்து அதை மேலும் ஆக்கபூர்வமாக ஆக்கவேண்டுமென்றே சொல்கிறேன். அதற்கு அவரை விரிவான விமரிசனத்துக்கு உள்ளாக்க வேண்டும். அப்படிச்செய்ய நாம் அவரை வழிபடும் மனநிலையை துறந்தே ஆகவேண்டும்.

நான் சொன்னவற்றை நீங்கள் மறுக்கலாம். அதற்கு முன் நான் சொல்லியிருக்கும் தகவல்களை மட்டும் சரி பாருங்கள். இன்னும் கொஞ்சம் விரிவாக தெரிந்துகொள்ளுங்கள். பொதுவாக இத்தகைய விவாதத்துக்குப் பதிலாக இங்கே வசைகள் மட்டுமே வருகின்றன. அவதூறுகளும் மிரட்டல்களும் உள்நோக்கம் கற்பித்தல்களுமே கிடைக்கின்றன. ஆகவே இனி இதைப்பற்றி பேசவே வேண்டியதில்லை என்ற முடிவில் இருந்தேன். ஆனாலும் நீங்கள் எழுதியமையால் இக்கடிதம்.

அன்புடன்

ஜெயமோகன்

முந்தைய கட்டுரைதமிழினி இரண்டாமிதழ்
அடுத்த கட்டுரைகேரளமும் சுதந்திரமும் ஒரு கடிதம்