«

»


Print this Post

ஓஷோ-கடிதங்கள்


வியாபாரத்தைக் கணக்கில் கொண்டு ஓஷோவை சிலர் அதீதமாக பிரமாண்டப்படுத்திக் காட்டுகிறார்கள் ( இலக்கியத்தில் சுஜாதாவுக்கு நடப்பது போல ) . இந்தச் சூழ் நிலையில் , ஓஷோவைப் பற்றிய ஜெயமோகன் கட்டுரை முக்கியமான ஒன்று.

டீக்கடை ஆன்மீக வாதிகளின் ஆன்மீக விவாதம் குறித்துக் கவலைப்படவேண்டியதில்லை என்றாலும் , ஓஷோவே சொல்லி விட்டார் என காந்தியைப் புரிந்துகொள்வதில் சிலருக்கு சிக்கல் ஏற்படும் அபாயம் இருக்கிறது.

அந்தக் கட்டுரையில் ஜெயமோகனின் ஒரு கருத்தில் மட்டும் எனக்கு உடன்பாடுஇல்லை.

“ காந்தியை அவர் இந்தியாவின் பழமைவாத ஒழுக்க நோக்கின் பிரதிநிதியாகமட்டுமே பார்க்கிறார்.காந்தியை உடைக்காமல் இந்திய மனதை உடைக்கமுடியாதென
நினைக்கிறார்.

என எழுதுகிறார் ஜெ.

ஆனால் இத்தகைய நோக்கத்துடன் ஓஷோ காந்தியை விமர்சிக்கவில்லை என்பது ஓஷோநூல்களைப் படித்தவர்களுக்குத் தெரியும். இது குறித்துத் தன் கடைசி காலத்தில்ஓஷோ எழுதி இருக்கிறார். கிட்டத்தட்ட வாழ்க்கை வரலாறு போன்ற நூலில் இதைச் சொல்லும்போது, முட்டாள் இந்திய மக்களிடம் சுலபமாகப் பிரபலமாகும் வழி ,ஏற்கனவே பிரபலமாக இருப்பவர்களை மனம்போன போக்கில் அவதூறு செய்வதுதான் எனத் தான் கண்டு கொண்டதாகக் குறிப்பிடுகிறார். பிரபலமாகவும் , ஆபத்து இல்லாதசாஃப்ட் டார்கெட்டாகவும் இருந்த காந்தி இதற்கு சரியான நபர் எனத் தீர்மானித்து , அவரை விமர்சிக்கத் தொடங்கியதாகவும் எழுதி இருக்கிறார்.

இப்படி எல்லாம் புத்திசாலித்தனமாக செயல்பட்ட அந்த ஞானி தன் கூடஇருந்தவர்களால் ஏமாற்றப்பட்டு , முட்டாள் ஆனது வரலாறு.

ஏழைகளையும் , இந்தியாவையும் மனம் போன போக்கினால் திட்டினார். ஏதோ வெளிநாட்டிலேயே பிறந்தவர் போல நடந்து கொண்டார். கடைசியில் வெளி நாட்டினர்இவரைக் கை விட்டதும் , அவரால் அது வரை விமர்சிக்கப்பட்ட இந்தியாதான்அவருக்குத் தஞ்சம் அளித்தது.

எஸ் எஸ் பாண்டியன்

அன்புள்ள ஜெ,

ஓஷோ என்று அழைக்கப்படும் ரஜ்னீஷ் பற்றி ஒரு நல்ல மதிப்பீட்டை அளித்துள்ளீர்கள். சமீபகாலத்திலே இப்படி ஒரு சமநிலையான மதிப்பீட்டை வாசித்ததில்லை. அவரை ஒரு செக்ஸ் சாமியார், போலிச்சாமியார் என்ற ரீதியிலே ஏராளமானவர்கள் எழுதியிருக்கிறார்கள். அவருடைய பணவெறி, காமவெறி ஆகியவற்றைப்பற்றி நிறைய வாசிக்கக் கிடைக்கிறது. இன்னொரு பக்கம் அவரை இன்னொரு கடவுளாக ஆக்கும் பக்தர்கூட்டம்.

இன்றைக்கு ஓஷோ ஒரு பிராண்ட். இந்த பிராண்ட் அவர் இறந்துபோனபிறகு அவரது ஆசிரமத்தால் மிகத்திறமையாக உருவாக்கி வளர்க்கப்படுகிறது. இங்கே ஓஷோவைப்பற்றி இன்றைக்கு அதிகமாகப் புளகாங்கிதம் அடைபவர்கள் எல்லாருமே ஓஷோ என்ற இந்த பிராண்ட்டை மட்டும்தான் அறிவார்கள்.

நான் இருபதாண்டுகளுக்கும் மேலாக ஓஷோவைத் தீவிரமாக வாசித்தேன். பலமுறை புனாவிலே தங்கியிருக்கிறேன். பிறகு எனக்கு அவர் தேவைப்படவில்லை. ஓஷோவின் எல்லா எழுத்துக்களையும் வாசித்த எனக்கு இன்றைக்கு இளைஞர்கள் அவரைப்பற்றிப் பேசுவதைக் கேட்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது.

ஓஷோ என்ற இந்த பிராண்ட் எப்படி எல்லாம் உருவாக்கப்படுகிறது என்பதை ஓஷோ இருந்தபோது அவரது எழுத்துக்களும் அவரும் எப்படி வெளிப்பட்டார்கள் இப்போது எப்படி வெளிப்படுகிறார்கள் என்பதை ஒப்பிட்டுப்பார்த்தால் தெரியும்.

ஓஷோ இந்தியாவில் உள்ள எந்த ஒரு மனிதக்கடவுள்களையும்போலத் தன்னை பகவான் என்று சொல்லிக்கொண்டார். அதை நெடுங்காலம் அவரும் ஆசிரமும் முன்வைத்தன. அவரது மரணத்துக்குக் கொஞ்சநாள் முன்னர்தான் அவர் ஓஷோ என்ற பெயரும் அடையாளமும் அவருக்குப் போடப்பட்டன. அதை அவரே தனக்குச் சூட்டிக்கொண்டார். அந்த அடையாளத்தை ஒட்டி அவரைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்ட ஆரம்பித்தார்கள்.

ஓஷோ பெரும்பாலும் இந்துமரபுக்குள் நின்று யோசித்தவர். அதற்கான Space இந்து மதத்தில் மட்டுமே உள்ளது என்பதும் அவருக்குத் தெரியும். அதை அவருக்கு அமெரிக்கா கற்றுக்கொடுக்கவும் செய்தது. கடைசிக்காலத்தில் அவர் அதைச் சொல்லவும் செய்தார். உபநிடதங்களைப்பற்றி, கீதையைப்பற்றி ஓஷோ ஏராளமாகப் பேசியிருக்கிறார். இந்துமதத்தின் ஒரு பிரிவாகிய தந்த்ராதான் தன் வழி என்று சொல்லியிருக்கிறார்.

ஆனால் அவரை ஒரு இந்திய ஜென் குருவாகக் கட்டமைக்கக் கடந்த முப்பதாண்டுகளாகத் திட்டமிட்டு முயற்சி செய்கிறார்கள். ஓஷோவுக்கு ஜென் மீது ஈடுபாடிருந்தது. ஆனால் அவரை ஜென் குரு என்று சொல்வது பெரிய காமெடி. ஓஷோவிடம் ஒருபோதும் ஜென்னில் உள்ள மர்மமும் களங்கமற்ற விளையாட்டும் இருந்ததில்லை.

ஓஷோ இந்துமதத்தை எதிர்த்தார் என்று சமீபகாலமாகக் கட்டமைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்கான நோக்கங்கள் அவர்களுக்கு இருக்கின்றன. அதாவது தந்த்ரா இந்துமதம் இல்லையாம். கீதை இந்துமதம் இல்லையாம்.

இன்றைக்கு அவரது மீறல்களை எல்லாம் ஜென் வழி என்று சொல்லி நியாயப்படுத்த முயல்கிறார்கள். அதோடு ஜென்னுக்கு உலகம் முழுக்க உள்ள பிராபல்யத்தைப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார்கள். .

இன்றைக்கு அதிகமாக வாசிக்கும் வழக்கம் இல்லாத, மேலோட்டமான , அரைகுறை ஆன்மீக ஈடுபாடுள்ள ஒரு கும்பலுக்கு பிரியமான பிராண்ட் ஆக அவரை ஆக்கிவிட்டார்கள். அவர்களுக்கு ஓஷோ பெரிய தன்னம்பிக்கையைக் கொடுக்கிறார். எதைப்பற்றியும் தெரிந்துகொள்ளாமல் எங்கேயும் போய் ஆன்மீகமும் தத்துவமும் பேசக்கூடியவர்களாக அவர்கள் மாறிவிடுகிறார்கள்.

ஒட்டுமொத்தமாக ஒரு பெரிய முட்டாள்கூட்டத்தை ஒரு சின்ன வியாபாரிக்குழு ஓட்டிச்செல்ல உதவக்கூடிய ஒரு சர்வதேச பிராண்ட்தான் இன்றைக்கு ஓஷோ

ராமகிருஷ்ணன்.கெ.ஆர்

தத்துவத்தைக் கண்காணித்தல்

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/27005