ஓஷோ – கடிதங்கள்

அன்பின் ஜெ,

ஓஷோவிற்கு இன்னொரு முகமும் உண்டு.

உலகின் மிக முக்கியமான சிந்தனையாளர்களையும், மதங்களையும், உண்மையான ஞானிகளையும் தரம் பிரித்து, மிக எளிதான முறையில் அவர்களை அவர் முன்னிறுத்தியது.

ஜென் பத்து மாடுகள் பற்றிய அவர் உரை – songs of ecstasy என்னும் பெயரில் பஜ கோவிந்தம் பற்றி அவர் ஆற்றிய உரை, சூஃபி ஞானிகள் பற்றிய – wisdom of sands, zorba பற்றிய அவர் அறிமுகம், மஹாவீர் வாணி – இந்தி உரை.. ஒரு தேர்ந்த ஹிப்னாடிஸ்ட் போன்ற ஒரு குரலில், அவரின் இவ்வுரைகள் மனதை ஒருமுகப்படுத்தி, ஒரு தளத்தில் மிதக்க உதவுகின்றன.

அவரின் ஆசிரம வாயில் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் பெயரால் அழைக்கப் படுகிறது. ஆசிரமத்தின் பிரமிட் பாணியில் அமைக்கப் பட்டிருக்கும் தியான மண்டபம் மிக அழகானது. தியானம் செய்ய மிக ஏற்ற இடம்.

மிக அபத்தமான, செக்ஸ் ஜோக்குகள் மட்டுமே நிரம்பிய உரைகளும் உண்டு. அவரின் மிக அதிகம் பாப்புலரான “fuck” என்னும் வார்த்தைக்கான பாஷ்யம் போன்ற அபத்தங்களும் உலவுகின்றன. நீங்கள் சொன்ன மாதிரி அவரை நிச்சயம் தாண்டித்தான் செல்ல வேண்டும். காந்தி பற்றிய உளறல்கள் படிக்கவே மிக அருவெறுப்பாக இருக்கின்றன.

புனே ஆசிரமம் – அதன் நிர்வாகம் எல்லாம், வெளியில் இருந்து பார்க்கும், ஓஷோ என்ன சொன்னார் என்று மட்டுமே பார்க்கும் மனிதருக்கு, மிக நன்றாகவே நடப்பதாகவே தோன்றும். அங்கும் அரசியலும், கீழ்மைகளும் உண்டு. சங்கர மடங்களிலும், சைவப் பண்டார மடங்களில் உள்ளது போலவே. ஓஷோவின் சிந்தனைகளை சேமித்து, பிற்காலச் சந்ததிகளுக்குக் கொண்டு செல்லும் ‘நிலைச் சக்தி’ என்றும் பார்க்கலாம்.

தலைப்பு உறுத்துகிறது ஜெ..

அன்புடன்,

பாலா

***

அன்புள்ள ஜெ.,

அறத்தின் குன்றேறி நின்ற ஞானிகள் இருக்கமுடியுமென்றால் ஒரு கிரிமினல்ஞானி ஏன் இருக்கக் கூடாது? இந்தியஞான மரபின் அந்த சாத்தியம்தான் ஒரு துணுக்குறவைக்கும் உண்மை. இன்றும் என்னால் முழுக்க புரிந்துகொள்ளமுடியாத ஒரு மர்மம் அது.”

முற்றிலும் உண்மை. அவரைக் கிரிமினல் என்று சொன்ன ஜெ.கே.வைக் கூட ஓஷோ மூலம் தான் அறிந்து கொண்டேன். இந்தியாவின் ஆன்மீகம், தத்துவம் அனைத்தையும் ஓஷோ இல்லாமல் என்னால் இவ்வளவு தூரமேனும் புரிந்து கொண்டிருக்க முடியுமா என்பது சந்தேகமே..

ஆனால் ஒன்று… ஒரு ஞானி கிரிமினலாகவும் இருக்க முடியும் என்ற சாத்தியக்கூறை உணராமல், நம்மால் எந்த ஞானியையும் அணுக முடியாது என்று நினைக்கிறேன்… ஞானிக்கான அளவுகோல் நம் மனதில் இருக்கும் வரை, நம் மனம் அவர்களை அளந்துகொண்டுதான் இருக்கும் – இதுவும் ஓஷோ மூலம் வந்த தெளிவுதான்… கடந்த பத்து வருடங்களாக அவரை நான் படித்ததில்லை.. கடந்துவிட்டேன் என்று சொல்ல முடியவில்லை; ஆனால் நீங்கள் சொன்னதுபோல புதிதாக ஏதும் அறிவதற்கில்லை… ஞானம் என்பது புத்தகம் மூலம் வராது என்று தெளியவைத்தவர் அவர்தான்; தெளிந்தபின் அவர் புத்தகம் தேவைப்படவில்லை.

நன்றி
ரத்தன்

***

அன்புள்ள ஜெ,

ஓஷோ – கடிதங்கள்.. அம்ருத் என்பவரின் கடிதமும் உங்கள் பதிலும் பார்த்து வெடித்துச் சிரித்துவிட்டேன்.

நன்றி,
வள்ளியப்பன்

***

முந்தைய கட்டுரைவிளாங்காடு விச்சூர்
அடுத்த கட்டுரைபௌத்தமும் அகிம்சையும்