ஓஷோ – கடிதங்கள்

மரியாதைக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.

தங்களின் சமீபத்திய ‘முட்டாள்களின் மடாதிபதி’ என்ற கட்டுரையை எனது Facebook-ல் பகிர்ந்து கொண்டேன். நிச்சயமாக உங்களுக்கும் உங்களின் கருத்தை எதிர்த்துப் பல மெயில்கள் வந்திருக்கும். Facebook-ல் எனது நண்பி ஒருவர் அதற்கு பதிலுரைத்து அவரது கருத்தை உங்களிடம் தெரிவிக்குமாறு கோரியிருந்தார். அது கீழே..

உங்களது நேரத்திற்கு மிக்க நன்றி.

அன்புடன்
பாலா

***

Gayathri Karthik writes…
hmmm….சத்திய உலகில், zen உலகில் உங்களுடைய ஆழமான எந்த ஒரு எண்ணமும் நல்லதோ கெட்டதோ அதை அசைத்துப் பார்ப்பதே ஒரு குருவின் வேலை…..அந்த எண்ண வடிவு உண்மைகளால் ஆனதா பொய்களால் ஆனதா என்பதைப் பற்றி அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்…ஏன் என்றால் அவர்கள் உலகில் எந்த ஒரு எண்ணமும் அகந்தையின், நான் என்னும் மாயையையின் கீழ் வருவதே ஆகும்…ஒரு மாயா அசைக்கப்பட்டு உங்களுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது என்றால் நீங்கள் அந்த மாயையின் சக மாயா என்று அர்த்தம்….இது தவிர…Osho by his very nature is playful to the core….many has existed like him in zen but not in hinduism…மகேஷ் பட் போன்ற serious மடையர்களுக்கு அந்த spiritual playfulness புரிவது கஷ்டம்…எண்ணங்கள் ஆன உலகில் வாழும் பேர்கள் எழுத்தாளர்கள்….தங்கள் உலகை அசைக்கும் ஒருவனை அவர்கள் வெறுக்கவே செய்வார்கள்…

***

அன்புள்ள பாலா,

இந்த அம்மணியேகூட ஒரு ஜெஞ்ஞானி [ஜென்+ ஞானி] என்று தோன்றுகிறது.

ஜெ

***

அன்புள்ள ஜெயமோகன்,

எனது கடிதத்திற்கு பதில் சொன்னதற்கு நன்றி. நான் முதலில் ஒரு விஷயத்தை சொல்லி விடுகிறேன். நான் ஒஷோவை குருவாக ஏற்றுக் கொண்டவன் அல்ல. நான் வாசிக்கும் பல ஞானிகளில் அவரும் ஒருவர். அவரைப் பற்றி நீங்கள் சொன்னது உண்மையிலேயே அதிர்ச்சியளிப்பது.

ஓஷோ சேவை செய்யவில்லை என்று கூறுகிறீர்கள். எனக்குத் தெரிந்து சூஃபி, ஜென் குருமார்கள் பெரும்பாலும் சேவை செய்வதில்லை. ஜார்ஜ் குட்ஜிப் என்று ஒரு ஞானி பாரீசில் இருந்தார். அவரிடம் நீங்கள் நான் ஒழுக்கமானவன் என்று சொன்னால் சாராயம் குடிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்துவார். அற ஒழுக்க மரபுகளை எல்லாம் ஞானிகள் பொருட்படுத்த வேண்டியதில்லை. ஆனால் வெளிப்படையாக இருக்க வேண்டும். அவர் ஒன்றும் வெளியே பிரம்மசரியத்தை போதித்துவிட்டு நடிகையுடன் கூத்து அடிக்கவில்லை. “நான் எத்தனை பேருடன் செக்ஸ் வைத்துள்ளேன் என்று எனக்கே தெரியாது” என்று பேட்டியின் போது கூறியுள்ளார். அவருடைய ஆசிரமத்தில் எய்ட்ஸ் பரிசோதனை வெளிப்படையாகவே நடந்தது என்று நினைக்கிறேன். உங்கள் வரையறைப்படி பார்த்தால் சாய்பாபாவும், கல்கியும்தான் ஞானிகள். ஒருவேளை சி.டி. வெளியாகாமல் இருந்தால் நித்யானந்தாவும் அந்த லிஸ்டில் சேருவார்.

அப்புறம் அவர் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தார் என்று கூறுகிறீர்கள். என்ன தவறு? ஆன்மீகம் ஒன்றும் செல்வத்திற்கு எதிரி அல்ல. இதே வரையறயைக் கிருஷ்ணர் மேல் உங்களால் போட முடியுமா? எனக்குத் தெரிந்து அவர் சொந்தமாக ஒரு கார்கூட வைத்திருக்கவில்லை. எல்லாம் சீடர்களுடையது. அவர் சும்மா வாங்கிப் பயன்படுத்திவிட்டுக் கொடுத்துவிடுவார். அப்புறம் ஏழைகளைப் பற்றி மீடியா முன் கண்ணீர்விட அவர் என்ன அரசியல்வாதியா? லட்சக்கணக்கானவர்கள் வறுமையில் வாடும்போது கோடிக்கணக்கில் பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டே இருந்தால் திட்டாமல் என்ன செய்வது?அவர் பணக்காரர்களை மிரட்டினார் என்று சொல்கிறீர்கள். இது உண்மையிலேயே மிகக் கடுமையான குற்றச்சாட்டு. இது உண்மையாக இருந்தால் நிச்சயம் அவர் ஞானி கிடையாது என்று தூக்கிப்போட நான் தயார். ஆனால் அவர் யாரை மிரட்டினார் என்று நீங்கள் நிரூபிக்க வேண்டும். எனக்குத் தெரிந்து ஒரு பெரும் பணக்காரர் (பிர்லாவோ அல்லது ரத்தன் டாட்டாவின் தந்தையோ சரியாக நினைவில்லை) ஒரு blank chequeஐக் கொடுத்து இதற்குப் பிரதிபலனாக இந்து மதத்தை உலகம் முழுக்க பிரச்சாரம் செய்யுமாறு கூறியுள்ளார். அதற்கு ஒஷோ “பணம் இருந்தால் அனைத்தையும் வாங்கிவிட முடியும் என்று நினைக்கிறீர்களா? நான் இந்து மதத்திற்கு எதிராகத்தான் பேசுவேன்” என்று பதில் சொன்னதாக அறிகிறேன். அவரின் ஆசிரமத்தில் பாலியல், அதிகார மோதல்கள் நடந்ததாகக் கூறியுள்ளீர்கள். அது சீடர்களின் தவறு. புத்தரின் சீடன் அதிகாரத்திற்காக அவரையே கொல்ல முயற்சித்ததுதானே வரலாறு? கடைசியாக உங்களிடம் கேட்பது ஒன்றுதான். ஓஷோ உண்மையிலேயே பணக்காரர்களை மிரட்டினாரா? ஆம் எனில் அது பற்றி சற்று விரிவாக எழுதவும். வினோத் மெஹரா ஓஷோ மீது கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து சுருக்கமாகக் கூறவும்.

நன்றி
அன்புடன்,
கார்த்திகேயன்.J

***

அன்புள்ள கார்த்திகேயன்,

முதலில் ஒரு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். முந்தைய பதிலில் தலைப்பில் இருந்த கடுமைக்காக. அதை வேண்டுமென்றேதான் எழுதினேன். ஓஷோவின் எழுத்துக்களை வாசிப்பவர்களில் எத்தனைபேருக்கு ஓஷோவின் மனநிலையை, பாணியை உண்மையிலேயே புரிந்துகொள்ள முடிகிறது என பார்க்க நினைத்தேன். எதிர்வினைகள் நான் எண்ணியபடியே இருக்கின்றன.

நான் எழுதியதை நீங்கள் புரிந்துகொண்டதை வைத்துப்பார்த்தால் உங்களைத் தேவையில்லாமல் புண்படுத்தியிருப்பதாகவே படுகிறது. ஆகவேதான் மன்னிப்பு.

ஓஷோ பற்றிய குற்றச்சாட்டுகளை அறிய உண்மையிலேயே ஆர்வமிருந்தால் அதிகபட்சம் இருபது நிமிடத்தில் இணையத்திலேயே பலவற்றை வாசிக்கலாம். நான் சொன்னவை எவையும் இப்போது சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் அல்ல. பலநூறு பக்கங்கள் அன்றும் இன்றும் எழுதப்பட்டுவிட்டவை. இங்கே அவற்றைப் புரட்டிப்போட்டு விவாதிக்க நான் விரும்பவில்லை.

மேலும் பிளாங்க் செக் போன்ற தொன்மங்களை நம்பும் இடத்தில் நீங்கள் இருக்கும்போது அதை விவாதிப்பதிலும் பொருள் இல்லை.

நான் எழுதியதற்கும் நீங்கள் புரிந்துகொண்டதற்கும் இடையேயான தொலைவு மிக நீண்டது. அந்தத் தொலைவைத் தாண்டியபின்னரே ஓஷோகூட உங்களுக்குப் பிடிகிடைப்பார்.

ஜெ

***

ஜெயமோகன்,

ஓஷோ பற்றிய அபத்தமான முட்டாள்தனமான கட்டுரையை வாசித்தேன். ஓஷோ என்றால் யாரென்று நினைத்தீர்கள்? ஓஷோவின் கல்லறையில் என்ன எழுதியிருக்கிறதென்று தெரியுமா? ஓஷோ பிறக்கவும் இல்லை இறக்கவும் இல்லை. ஜென் ஞானிகளுக்குப் பிறப்பும் இறப்பும் இல்லை. அவர் அதையெல்லாம் கடந்தவர்.

நீங்கள் வாசிக்கவேண்டிய நிறைய நூல்கள் உள்ளன. குர்ஜீப் எழுதிய ஆன்மீக நூல்களை நீங்கள் வாசிக்கவேண்டும். ஜென்கதைகள் கவிதைகளை வாசிக்கவேண்டும். மிர்தாதின் புத்தகம் ஆகியவற்றை வாசிக்கவேண்டும். அதன்பிறகுதான் நீங்கள் எழுதவேண்டும். கலீல் கிப்ரானைப்போன்ற ஒரு கவிதையை எழுதிவிட்டு ஓஷோவைப்பற்றிப் பேசுங்கள். ஓஷோவைப் புரிந்துகொள்வதற்கு நிறைய அறிவு தேவைப்படும். காதல்கதைகளை எழுதிக்கொண்டிருக்கும் தமிழ் எழுத்தாளர்களுக்கு ஓஷோவைப் புரிந்துகொள்ள முடியாது.

ஓஷோ காமத்திலே ஈடுபட்டார் என்று சொல்கிறீர்கள். ஓஷோ எந்தப் பெண்ணிடமும் உறவு வைத்துக்கொண்டதில்லை. அதை அவரே சொல்லியிருக்கிறார். அவர் அவர்களை மன அளவிலே லீலையிலே ஈடுபடுத்தினார். அதையெல்லாம் புரிந்துகொள்ள நீங்கள் நிறைய வாசிக்கவேண்டும். நீங்கள் My way the way of white clouds என்ற நூலை வாசிக்க ஆரம்பிக்கலாம்.

நன்றி

வணக்கம்

அம்ரித்

***

அன்புள்ள அம்ருத்,

வாசிக்கிறேன்.

நன்றி

ஜெ

***

முந்தைய கட்டுரையானைப்பலி – கடிதம்
அடுத்த கட்டுரைடார்த்தீனியம் – கடிதம்