குருபீடம்

நான் பத்மநாபபுரத்தில் வசிக்கையில் பேராசிரியர் ஜேசுதாசனைச் சந்திக்க என்னை இலக்கிய விமர்சகர் வேதசகாயகுமார் அழைத்துக்கொண்டுசென்றார். வேதசகாயகுமாரின் ஆசிரியர் அவர். திருவனந்தபுரம் பல்கலைக் கல்லூரியில் தமிழ்த்துறைத்தலைவராக இருந்து ஓய்வுபெற்றுத் தன் மனைவியின் சொந்த ஊரான புலிப்புனத்தில் ஒரு ஆங்கிலப்பள்ளி நடத்திக்கொண்டிருந்தார்.

பழைய ஓட்டுவீடு. சுற்றிலும் ரப்பர்த்தோட்டம். பேராசிரியர் அன்பளிப்பாகக் கொடுத்த இடத்தில் கட்டப்பட்ட ஒரு குடிநீர்த்தொட்டிக்கு கீழே அவரது வீடு இருந்தது. அதுதான் அடையாளம். நாங்கள் சென்றபோது பேராசிரியர் யாரோ ஒரு கிராமவாசியிடம் ஆர்வமாகப் பேசிக்கொண்டிருந்தார். ‘வாடே’ என்று வேதசகாயகுமாரை அழைத்தார். ‘தைலம் தீந்துட்டு பாத்துக்க…நீ கொண்டு வருவேண்ணு நினைச்சுக்கிட்டு இருந்தேன்’

வேதசகாயகுமார் தைலம் கொண்டு சென்றிருந்தார். பேராசிரியரிடம் கற்று அவர் பணியாற்றிய அதே கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார் வேதசகாயகுமார். முப்பதாண்டுகளுக்கும் மேலாக அதே குருபக்தியுடன் ஆசிரியருக்குப் பணிவிடைசெய்து வந்தார். ‘இவரு ஜெயமோகன்…தமிழிலே எழுதுகாரு’ என்றார் வேதசகாயகுமார்.

பேராசிரியர் வணங்கி ‘கேட்டிட்டுண்டு…சுந்தர ராமசாமி சொல்லியிருக்காரு’ என்றார். ‘நானும் காணணமெண்ணு நினைச்சிட்டுண்டு…ஒண்ணுரெண்டு கதை வாசிச்சிருக்கேன்…மத்த பேச்சிப்பாறைய பத்தின கதை…’ நான் ‘படுகை’ என்றேன். ‘ஆமா…நல்ல கதையாக்கும். அதில கன்யாகுமரி ஜில்லாவுக்க ஒரு ஆத்மா உண்டு’என்றார் பேராசிரியர். நான் புன்னகை செய்தேன்.

பேராசிரியர் பெரும் கல்வி கொண்டவர்.ஆனால் அவரது பேச்சுமொழி குமரிமாவட்டத்தின் வட்டாரத்தமிழ். பாமரர்கள் பேசுவதுபோல இழுத்து இழுத்துத்தான் பேசுவார். அவரே தன் கல்வியை வெளிக்காட்டும் தருணங்கள் குறைவு. நாம் கேள்வி கேட்கையில் அவர் அதற்கான சிறிய ஆனால் கச்சிதமான விளக்கத்தை அளிப்பார். அனேகமாக அவர் சொல்லும் முதல் பதிலிலேயே அவர் எவரெனத் தெரிந்துவிடும்.

அன்று பேசிக்கொண்டிருக்கையில் கைலாசபதி பழந்தமிழ் மரபை வீரயுகப் பாடல்கள் என்று சொன்னதை சரி என்று ஒப்புக்கொள்ளலாமா என்று கேட்டேன். பேராசிரியர் சொன்னார் ‘அப்படி மேலைநாட்டுப் பகுப்புகளைப் போட்டுப் பார்த்தோமென்றால் அவை குத்துமதிப்பாகவே இருக்கமுடியும். சங்க காலத்தில் பாடாண் என்னும் திணை உள்ளது. வெற்றி பெற்ற வீரனை வாழ்த்திப்பாடும், பாடு + ஆண் திணை அது. அதன் நீட்சியாகவே பின்னால் காப்பியங்கள் வந்தன. ஆனால் அந்தப் பாடல்களைக் கூர்ந்து நோக்கினால் எப்போதும் மன்னர்கள் மட்டுமே பாடப்பட்டுள்ளார்கள். சாதாரண வீரனின் வீரம் பாடப்படவில்லை. வீரம் முக்கியமான விழுமியமாக இருந்தால் சாதாரண மனிதனின் வீரமும் பாடப்பட்டிருக்குமே?

வீரர்களுக்கு நடுகல் நாட்டி வணங்கும் வழக்கம் இங்கே இருந்திருக்கிறது. அவ்வழக்கம்மூலம் நாட்டுப்புறக் காவல்தெய்வங்கள் பல உருவாயின. அவர்களின் வீரகதைகள் நாட்டுப்புறப்பாடல்களாக உள்ளன. அவ்வழக்கம் அன்றும் நாட்டுப்புற மரபில் இருந்திருக்கலாம். ஆனால் நம் சங்ககாலச் செவ்விலக்கியங்களில் வீரவழிபாடு சரியான பொருளில் இல்லை என்றே சொல்லவேண்டும்.

ஆகவே அது வீரயுகமா என்று கேட்டால் அப்படியும் பொருள்கொள்ளலாம் என்றுதான் சொல்லமுடியும். வீரத்தைவிட குலமுறைகளுக்குத்தான் அப்போது மதிப்பு அதிகம் என்றும் சேர்த்துச் சொல்லவேண்டும்’ நிதானமான குரலில் சொல்லி நிறுத்தினார்.

மிகச்சரியான பதில் அதை அவர் ஏற்கனவே யோசித்து வைத்திருப்பார். கேட்டால் தெளிவாக விளக்குவார். அதேசமயம் அதிரடியாக ஏதும் சொல்லவும் மாட்டார். அவர் எப்போதும் ஆசிரியர். அவரது பேச்சு எல்லாமே வகுப்புகள் தான். அத்துடன் ஒன்றும் தோன்றியது, அந்தப்பதிலை இன்னொருவர் சொல்லியிருந்தால் எவ்வளவு கோபத்துடன், ஆவேசத்துடன் சொல்லியிருப்பார்? மொத்தத் தமிழ்மரபு மீதும் அடித்தளச் சாதியைச் சேர்ந்த ஒருவர் வைக்கும் கறாரான விமர்சனம் அந்தப்பதிலில் இருந்தது. ஆனால் பேராசிரியர் அதை ஒரு சாதாரண கல்லூரி வகுப்பைப் போலத்தான் சொன்னார்

அதன்பின் நான் அவரைப் பலமுறை சென்று சந்தித்திருக்கிறேன். அவரை ஒரு நீண்டபேட்டி எடுத்தேன். அந்தப்பேட்டி சொல்புதிது இதழில் வெளிவந்தது. அந்த பேட்டியைப்பற்றி அசோகமித்திரன் எழுதும்போது ‘ஒரு பெரும் ஆசிரியரின் சிறந்த வகுப்பு போல் உள்ளது. பேட்டி எடுத்தவரும் கொடுத்தவரும் மிக உயர்ந்த நிலையில் இருந்தபோது நிகழ்ந்த உரையாடல்’ என்று குறிப்பிட்டார்.

நான் எடுத்த ஒரு பேட்டியில் அவரிடம் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையின் வாசிப்பு கேட்டிருக்கிறீர்களா என்று கேட்டேன். ‘ராஜரத்தினம் பிள்ளை மேதை. காட்டருவிபோல சங்கதிகளாகக் கொட்டுவார். எனக்கு அதேயளவுக்கு திருவெண்காடு சுப்ரமணியம் வாசிப்பும் பிடிக்கும். அந்த அளவுக்கு மேதமை கிடையாது. அவர் அடக்கமான மனிதர். நாதசுரத்தை தம்பூரா சுருதிக்கு வாசிப்பார். இனிமை அதிகம். தன் இயல்புக்கு ஏற்ப தன்னுடைய கலையை மாற்றி தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டார். அதுதான் கலையில் முக்கியமானது’ என்றார். அவரது அழகியல்நோக்கே அதுதான்.

இலக்கியக் கலையில் இதுதான் சிறந்தது என்று கிடையாது என்பது அவரது கொள்கை. ஒரு கவிதை மென்மையான அழகிய சொற்களால் ஆனதாக இருக்கும். இன்னொரு கவிதை வன்மையான சொற்களால் ஆனதாக இருக்கும். ஒன்று அழகாக இருக்கும் ஒன்று கொடூரமானதாக இருக்கும். பொருத்தப்பாடு அல்லது ஒத்திசைவு [conformity] தான் முக்கியம். அக்கலைபப்டைப்பு அது சொல்லும் விதத்திற்குரிய மொழியைக் கொண்டிருக்கவேண்டும். அதன் எல்லா கூறுகளும் ஒன்றுடன் ஒன்று ஒத்துப்போக வேண்டும். அதற்கும் அதன் ஆசிரியரின் ஆளுமைக்கும் ஒத்திசைவு இருக்கவேண்டும் என்று சொன்னார் ஒருமுறை.

அவரது வாழ்க்கை நோக்கின் மையமே அறம்தான். அவர் கம்பனில் இருந்து பெற்றுக்கொண்டதே அந்த அறநோக்குதான். வான்மீகியின் ராமன் வஞ்சினம் உரைக்கும்போது தந்தை சொல்லை மீறினேன் என்றால் எனக்கு பிராமணர்களைக் கொன்ற பாவம் சேர்வதாக, வேள்வியை அழித்த பாவம் சேர்வதாக என்று சொல்கிறான். ஆனால் கம்பனின் ராமனோ ஊர் உண்ணும் ஊருணியை அழித்த பாவம் என்னைச் சேர்வதாக என்றுதான் சொல்கிறான் என்றார் பேராசிரியர்.

கம்பனின் சிறப்பாக அவர் சொல்வது அவன் குல நீதியை அல்லது அக்காலகட்டத்தின் நீதியை எக்காலத்திற்கும் உரிய மானுட நீதி என்ற இடத்துக்குக் கொண்டுசெல்கிறான் என்பதைத்தான். ”அறத்தை ஒரு தனி இருப்பாகவே அவன் காட்டுகிறான் . ராமனை ‘அறத்தின் மூர்த்தியான்’ என்கிறான். ‘தர்மம் பின் இரங்கி ஏக’ என்று சொல்கிறான் ‘எப்டிச் சொல்றான் பாத்தேளா? தர்மத்தை ஒரு தெய்வமா ஆக்கிட்டான். கண்முன்னாடி அப்டியே அதை அவன் பாக்கிறான்’ பேராசிரியர் கண்கலங்கினார். தொண்டை ஏறி இறங்கியது.

வாழ்க்கை முழுக்க பேராசிரியர் கம்பனின் கவிதைக்குள்தான் இருந்தார். அவரது ஆசிரியர் கோட்டாறு குமாரசாமிப்பிள்ளை அவருக்கு அளித்த ரசனை அது. நவீன இலக்கியத்தை ஆழ்ந்து வாசிக்க கம்பன் அவருக்குத் தடையாக அமையவில்லை. கம்பன் அவரைப்பொறுத்தவரை மனிதன் அடையக்கூடிய கவித்துவ உச்சம். கடைசிக்காலத்தில் அவர் கம்பராமாயணப்படலைச் சொல்ல ஆரம்பிக்கும்போதே கண்ணீர் கொட்ட ஆரம்பித்துவிடும். அதிகபட்சம் நான்குபாடல்கள். அதன்பிறகு கண்ணீர்தான், விசும்பல்தான்.

மானுட அறத்தின் ,கருணையின் அடையாளமாகவே அவர் கிறிஸ்துவைக் கண்டார். ஆனால் அவருக்குள் மதவெறி இல்லை. அவரது துணைவியும் நாவலாசிரியருமான ஹெப்ஸிபா ஜேசுதாசன் தீவிர மத அடிப்படைவாத நோக்கு கொண்டவர். ஒருமுறை அவரது வீட்டுக்கு நான் என் மனைவியுடன் சென்றிருந்தேன். அவள் நெற்றியில் பொட்டு வைத்திருந்தாள். ஹெப்ஸிபா கோபத்துடன் ’அது என்னது நெத்தியிலே ஒட்டிவச்சிருக்கே….சாத்தானுக்க சின்னம்’ என்றார். அவள் அதை அழித்துவிட்டாள்

ஹெப்ஸிபா டீ கொண்டுவரச் சென்றபோது பேராசிரியர் சொன்னார் ‘ரெண்டு வகை கிறித்தவங்க உண்டு. கிறிஸ்துவை விரும்பறவங்க ஒரு வகை. கிறிஸ்து இல்லாத எல்லாத்தையும் வெறுக்கறவங்க இன்னொரு வகை’ சொல்லிவிட்டு சிரித்தவர் ஹெப்ஸிபா வரும் ஒலி கேட்டதும் அப்படியே கப்பென்று நிறுத்திக்கொண்டார்

அபாரமான அற உணர்வுதான் அவரைக் கம்பனையும் ஆண்டாளையும் ரசிக்கவைத்தது. அவர் அதி தீவிர கிறித்தவர். ஆனால் கம்பனின் ராமனை ஏற்க அவருக்கு அது தடையாக இருக்கவில்லை. எங்கோ ஆழத்தில் கம்பனின் ராமனும் பைபிளின் ஏசுவும் ஒரே படிமமாக அவருக்குள் இணைந்திருக்கக் கூடும்

ஒரு விமர்சகர் என்று பேராசிரியரைச் சொல்லமுடியாது. தன் கருத்துக்களைத் தீவிரமாகவும் தொடர்ச்சியாகவும் முன்வைத்தவரல்ல அவர். அதிகமாக எழுதவில்லை. பேச்சிலும் வகுப்பிலும் சொன்னவையே அதிகம். அவரை ஆசிரியர் என்றே சொல்லவேண்டும். அவரது மானவர்களான அ.கா.பெருமாள், ராஜமார்த்தாண்டன், வேதசகாயகுமார் போன்றவர்கள் பின்னாளில் தமிழில் முக்கியமானவர்களாக ஆகியிருக்கிறார்கள். பேராசிரியரின் முக்கியமான நூல் என்றால் அவருடைய வழிகாட்டலில் அவரது மனைவியும் நாவலாசிரியருமான ஹெப்ஸிபா ஜேசுதாசன் எழுதிய Count down from salomon என்ற தமிழிலக்கிய வரலாற்று நூல்தான்.

பேராசிரியர் கருத்துக்களை எப்போதும் தெளிவாகச் சொல்வார், ஒருபோதும் கூர்மையாகச் சொல்வதில்லை. கூர்மையைத் தணிக்க லேசாக நகைச்சுவையைக் கலந்துகொள்வார். சுந்தர ராமசாமி அவருக்குப் பிடித்த ஆசிரியர். ஆனால் அவரது ‘குழந்தைகள் ஆண்கள் பெண்கள்’ நாவல் அவரைக் கவரவில்லை. அதை நாசுக்காக இப்படிச் சொன்னார் ”ஆயுர்வேத உழிச்சிலில் மூன்று நிலைகள் உண்டு. எலும்புக்குப் படும்படி தடவுவது, சதைக்குப் படும்படி தடவுவது, தோலுக்கு மட்டும் படும்படி தடவுவது. குழந்தைகள் ஆண்கள் பெண்கள் நாவல் ‘தொலிப்பதம்’ தான்”

பேராசிரியர் கடைசிக்காலத்தில் உடல்நலமில்லாமல் இருந்தபோது அவரைச் சந்திக்க நான் வேதசகாயகுமாருடன் சென்றிருந்தேன். நாற்பது வயதில் அவருக்கு சர்க்கரைநோய் வந்தது. நாற்பதாண்டுக்காலம் உறுதியான வாழ்க்கைநெறிகள் மூலம் அதை அவர் கட்டுக்குள் வைத்திருந்தார். சர்க்கரைநோய் அவரைக் கொண்டுபோக முடிவுசெய்திருந்தது நாங்கள் செல்லும்போது. குறுகிய வெளிறிய உடல் வெட்டுக்கிளி போல அதிர்ந்துகொண்டிருந்தது. கண்கள் ஒன்றை ஒன்று பார்ப்பவை போலக் கோணலாகியிருந்தன

வேதசகாயகுமாரை நோக்கி உதடுகள் அசைந்தன. வேதசகாயகுமார் குனிந்து வாயருகே காதைக் கொண்டுசென்றார். பேராசிரியர் நடுங்கும் சொற்களால் ஏதோ சொன்னார். நாலைந்துமுறை கேட்டபின்னர்தான் ஏதோ புரிந்து வேதசகாயகுமார் ‘ஆ…எழுதியாச்சு’ என்றார். நான் என்ன என்றேன். ’என்னமோ எழுதியாச்சான்னு கேக்கிறார்’ என்றார் வேதசகாயகுமார்.

எனக்கு வியப்பாக இருந்தது. கடைசிக்கணம் வரை ஜேசுதாசன் ஆசிரியராகவே இருந்தார். பேராசிரியர் என்பது அவர் வகித்த பதவி அல்ல. அவர் அடைந்த ஆளுமை. அவர் நிறைத்த ஓர் இடம்.

முந்தைய கட்டுரைகாந்தி நேரு-கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇட ஒதுக்கீடு பற்றி