டார்த்தீனியம் – கடிதம்

இங்கு சிவராமன் வெங்கட்ராமன் டார்த்தீனியம் படித்ததும் The Fall of the House of Usher நினைவுக்கு வந்ததாக சொன்ன பிறகுதான் கவிதா பதிப்பித்த மண் கதைத் தொகுப்பு வாங்கி நானும் படித்தேன். நிழல்வெளிக் கதைகளையும் Poeவையும் சேர்த்து மெதுவாக படித்துக் கொண்டிருந்தேன். Usher கதை “இமையோன்” கதையுடன் ஒப்புமை உடையது என்ற எண்னம் முன்னர் ஏற்பட்டிருந்தது.

டார்த்தீனியம் என்னை அமைதியிழக்க வைத்த கதை. அது நடப்பட்டதிலிருந்து வளர்ந்து மெதுவே ராஜூவின் அப்பா மீது முழுவதுமாய் படர்ந்து ஆட்கொள்ளும் வரை கதையின் நகர்வு இனம் புரியாத தீவிரத்தன்மையுடன் இருந்தது. டார்த்தீனியம் கறுப்பு என்று சொல்லியும் தொடக்கம் முதலே ராஜூ மற்றும் ஆனந்தம் ஆகியோரின் மனதில் எதிர்மறை மனக்காட்சிகளையே எழுப்பியும் எதிர்மறைகளின் தீமையின் குறியீடாகவே அமைந்திருப்பது, நன்மையின் ஒரு சிறிய கூறு கூட இல்லாமல் அமைந்திருப்பது என்னவோ புரியாத ஒரு பெரிய ஏமாற்றத்தை அளித்தது.

படித்து முடித்த பிறகு டார்த்தீனியம் ஒரு நல்ல விஷயமாக இருந்திருக்கக் கூடாதா என்று மனம் ஏங்கியபடியே இருந்தது. இரண்டாம் வாசிப்பில் அந்த ஏமாற்றத்தின் காரணமாக கருநாகம் வரும் காட்சிகளில் கூட திகில் உணர்வு குறைந்தே இருந்தது. ஆழமான, தீவிரமான, காரணமற்ற, பிரதிபலன் எதிர்பார்க்காத மனதின் அடி ஆழத்திலிருந்து இச்சை ஒன்றன்மீது எழுமானால் அது தீமையானதாக இருக்கலாகாதே, தீமையில் கொண்டுபோய் முடியக்கூடாதே என்று மனம் சொல்லியபடியே இருந்தது. இம்முறை படிக்கும்பொழுது கதையை எப்படியாவது நிராகரிக்க வேண்டும் என்று மனம் திரிந்துகொண்டே இருந்தது. குறைந்தபட்சம் ஏதாவது நொள்ளநொட்டாவது சொல்லி இந்த ஏமாற்றத்திலிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டும் என்று பார்த்துக் கொண்டிருந்தது.

நமக்குள் இருக்கும் பேய் ஒன்று எப்பொழுது வேண்டுமானாலும் நம்மையே விழுங்கிவிடும் என்ற கருத்துடைய இக்கதையில், தொடக்கம் முதலே ராஜுவின் அப்பா உணவு, அப்பளம், வெற்றிலை என்று சுக போகங்களில் இயல்பாகவே ஈடுபடுபவர் என்று சித்தரிக்கப்படுகிறார். குரங்கு முகம் சிவந்திருப்பதை பார்த்து கூட “ருதுவாயிருக்கு” என்றுதான் அவருக்குத் தோன்றுகிறது. இயற்கையில் ஒரு vulnerability இருப்பதாக சொல்லியிருப்பதால் கதையில் உண்மை இருந்தாலும் அது முழுமையான உண்மையாகாது என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். Vulenrabilityயெல்லாம் பெரிதாக எதுவும் இல்லாமல் யுத்தத்தில் த்ரிஷ்டனாகவும் தர்மனாகவும் இருப்பவனும் சொக்கட்டான் ஆடத் தொடங்கி நாடு, மனைவி வரை அனைத்தையும் இழக்கும் கதைதான் இந்தக் கருத்தை முழுமையாக சித்தரிக்கக் கூடிய கதை என்று சொல்லிக்கொண்டேன். நாய், பசு, கன்று என்ற மூன்று பிராணிகள் கதையில் வந்தாலும் நாயைப் பற்றிய சித்தரிப்புகளே பசுவைப் பற்றிய சித்தரிப்புகளை விடவும் நுண்மையாகவும் அழகாகவும் அமைந்துள்ளன. ஆகையால் இக்கதையை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை என்றெல்லாம் கூட சொல்லிக்கொண்டேன்! மனம் சாந்தியடையவே இல்லை.

இந்த மன நிலையிலேயே இருந்ததாலோ என்னவோ ந. பிச்சமுர்த்தியின் இந்தக் கவிதை கண்ணில் தென்பட்டது.

தீக்குளி

அட கதையே!
விளக்குப் பூச்சியா மாய்வதற்கு உதாரணம்?
இதோ ஒரு சிறகு பொசுங்குகிறது,
போகட்டும் என்று சுற்றுகிறது.
இதோ மற்றொன்றும்.
விடேன் என்ற சங்கற்பம்,
தீயில் குளிபேன் என்ற உயிராசை
சக்தி தூண்ட, துணிவு பொங்க,
நகர்ந்தேனும் சுடரண்டை செல்லுகிறது.
அதோ சென்று விட்டது!
அதுதான் உருமாற்றும் தெய்வமுயற்சி –
அத்வைத சாதனை
ஜோதியின் அகண்டம் ஜீவாணுவை அழைக்கிறது.
லயம்!
விட்டிலின் உடல் சாம்பலாகி விட்டது.
விட்டிலா மாய்வதற்கு உதாரணம்?

இதனை நாலைந்து முறை படித்து என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன்!

விஜயராகவன் சுந்தரவரதன்

முந்தைய கட்டுரைஓஷோ – கடிதங்கள்
அடுத்த கட்டுரைவிளாங்காடு விச்சூர்