ஐரோப்பாக்கள்

ஜெயமோகன்,

பொதுவாக மேற்கத்திய கலாச்சாரத்தைப் பற்றி நம் இந்திய பாரம்பரிய நோக்கில் இருந்து பேசுகையில், ஒரு வித இகழ்ச்சி தொனியுடனேயே அது இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. ஒட்டுமொத்தமாக அது ஒரு நுகர்வு கலாச்சாரம் என்பதை வலியுறுத்தும் விதமாகவே அது அமைகிறது என்று எனக்குத் தோன்றுகிறது. இன்றைய நுகர்வு கலாச்சாரத்தை தோற்றுவித்த அதே ஐரோப்பாவே பல ஆக்கபூர்வமான சிந்தனையாளர்களையும் தோற்றுவித்துள்ளது எத்தகைய ஒரு முரண்பாடு? ஐரோப்பாவின் பல கலை சின்னங்களின் முன்னாள் நிற்கும்பொழுது ஏற்படும் மன எழுச்சி எனக்கு எந்த விதத்திலும் இந்தியாவில் உணரும் மன எழுச்சியுடனிருந்து வித்தியாசமாகத் தோன்றுவதில்லை. அவையும் மனித வாழ்க்கையின் ஊற்றுக்கண்ணாகவே நான் காண்கிறேன். நீங்கள் எப்படி மேற்கத்திய கலாசாரத்தை நோக்குகிறீர்கள் என்பதை அறிய ஆவலாக உள்ளேன்.

ஓப்லா விஸ்வேஷ்

தல்ஸ்தோய்

அன்புள்ள விஸ்வேஷ்,

மேற்கத்தியக் கலாச்சாரம் என்பது ஒரு பொதுவான சுட்டு வார்த்தை. நாம் பொதுப்பேச்சுகளில் இவ்வார்த்தையைச் சொல்லும்போது அது எதைக்குறிக்கிறது என்பது எல்லாருக்கும் தெரியும். வெஸ்டர்ன் கல்ச்சர் என்ற சொல்லின் தமிழாக்கம். பொதுவாக ஐரோப்பியப் பண்பாட்டையும் அதன் நீட்சியான அமெரிக்கப் பண்பாட்டையும் இச்சொல் சுட்டுகிறது.

இதேபோல கீழைக்கலாச்சாரம் என்றும் குறிப்பிடுகிறோம். மேலைக்கலாச்சாரத்தின் மறுபக்கமாக, மாற்றாக அது சுட்டப்படுகிறது. இந்தியா சீனா ஜப்பான் முதலிய ஆசியப் பண்பாடுகளை ஒட்டுமொத்தமாகச் சுட்ட அச்சொல் ஆளப்படுகிறது.

ஆனால் கறாராகப் பார்க்கும்போது இந்தச் சொல்லால் சுட்டப்படுவது ஒரு பெரிய தொகுப்படையாளம் என்பதை உணரலாம். முதல் விஷயம் ஐரோப்பியப்பண்பாடு என்பதும் அமெரிக்கப் பண்பாடும் பல்வேறு உள்வேறுபாடுகள் உள்ளவை. தத்துவம், அரசியல்நோக்குகள் ஆகியவற்றில் பலசமயம் ஐரோப்பியப் பண்பாட்டுக்கு எதிரான போக்குகளை அமெரிக்காவில் காண்கிறோம்.

அதேபோல ஐரோப்பியப்பண்பாடேகூட ஒன்றல்ல. பல கோணங்களில் பற்பல அடுக்குகளை அதில் பார்க்கலாம். மிக முக்கியமாக அதில் உள்ள கிரேக்க, ரோம பண்பாட்டு அம்சம். அதாவது பாகன் பண்பாடு. அதற்கு எதிராக அங்கே வேரூன்றி எழுந்த கிறித்தவப் பண்பாடு அதாவது செமிட்டிக் பண்பாடு. அவ்வாறாக இரண்டு விஷயங்களைச் சுட்டிக்காட்டலாம்.

அப்படியென்றால் நாம் இங்கே மேலைப்பண்பாடு என்று எதைச்சுட்டிக்காட்டுகிறோம்?

அச்சொல் புழக்கத்துக்கு வந்தது பதினெட்டாம் நூற்றாண்டின் பண்பாட்டு விவாதங்களில். ஆசியப்பண்பாட்டுக்கூறுகள் அதிகமாக ஐரோப்பியப் பண்பாட்டுக்கூறுகளைச் சந்திக்க நேர்ந்தபோது ஓர் ஒப்பீடாக இச்சொற்கள் உருவாகி வந்தன.

நடைமுறையில் இச்சொல் அன்றைய ஐரோப்பாவின் பொதுவான, மேலோங்கிய பண்பாட்டையே சுட்டிக்காட்டின. அன்றைய ஐரோப்பியப் பண்பாட்டில் மேலோங்கிய விஷயங்களை இரண்டு அடிப்படை கொண்டவையாகச் சொல்லலாம்.

ஒன்று, பதினாறாம் நூற்றாண்டு ஐரோப்பிய மறுமலர்ச்சியின்போது உருவாகிவந்த ஒட்டுமொத்தமான ஐரோப்பியப் பண்பாட்டு அடையாளம். இரண்டு, தொழிற்புரட்சியை ஒட்டி உருவாகிவந்த ஐரோப்பியப் பண்பாட்டு அடையாளம்.

ஐரோப்பிய மறுமலர்ச்சி ஐரோப்பியசிந்தனையில் உருவான பெரும் கொந்தளிப்பு. அது கிறித்தவமதத்தின் மேலாதிக்கத்துக்கு எதிராக ஐரோப்பா தன்னுடைய கிரேக்க, ரோமானியப் பண்பாட்டு அடிப்படைகளை மறு கண்டுபிடிப்பு செய்வதாக ஆரம்பித்தது.

அந்தப்போக்கு தத்துவத்தில் கலைகளில் இலக்கியத்தில் அரசியலில் மறுமலர்ச்சியை உருவாக்கியது. உலகுக்கே ஜனநாயகம், தனிமனித உரிமை, அறிவியல்சிந்தனை ஆகியவற்றை அளித்த ஒரு பெரும் வரலாற்று நிகழ்வாக நான்கு நூற்றாண்டுக்காலம் நீண்டது.

ஐரோப்பியமறுமலர்ச்சியின் விளைவாக ஐரோப்பாவில் உருவான நிரூபணவாத அறிவியலின் வளர்ச்சி இயந்திரப்புரட்சியை உருவாக்கியது. அது தொழில்புரட்சியை நிகழ்த்தியது. அதன் விளைவாக நவீன தொழில்நுட்ப உலகம் உருவாகிவந்தது.

போக்குவரத்து, செய்தித்தொடர்பு, நிர்வாகம், ராணுவம் ஆகியவை நவீன தொழில்நுட்பத்துடன் இணைந்து பெருவளர்ச்சி அடைந்தன. விளைவாக நவீன முற்றாதிக்க அரசுகள் உருவாயின. பெருமுதலியம் உருவாகியது. உலக ஆதிக்கத்துக்கான முனைப்பும் அதன் விளைவான காலனியாட்சிகளும் பிறந்தன. அதன் விளைவாக பேரழிவு ஆரம்பித்தது.

ஆக, மேலைப்பண்பாடு என்னும்போது இவ்விரண்டையும் சேர்த்தே சுட்டிக்காட்டுகிறோம். ஐரோப்பிய மறுமலர்ச்சி இல்லையேல் இன்றைய உலகம் இல்லை. நாம் இன்று சிந்திக்கும் கருத்துக்களில் மிகப்பெரும்பாலானவை ஐரோப்பிய மறுமலர்ச்சிக்காலத்தில் இன்றைய வடிவம் கொண்டவைதான்.

கலை இலக்கியம் அறிவியல் என எல்லா துறைகளிலும் ஐரோப்பாவே நவீன உலகுக்கு வழிகாட்டி. அந்த ஐரோப்பாவை நிராகரித்து நவீன சிந்தனை உள்ள எவரும் பேசிவிடமுடியாது. கதே, தல்ஸ்தோய், மொசார்த், பீத்தோவன், வால்டேர், மார்க், டார்வின், ஐன்ஸ்டீன் என அந்த ஐரோப்பியப்பண்பாட்டின் முகங்களே உலகின் நவீன முகங்கள்.

karl marx

தொழிற்புரட்சியை ஒட்டி உருவான ஐரோப்பியப்பண்பாடு முழுக்க முழுக்க பேராசையின், பெருநுகர்வின், வல்லாதிக்கத்தின் முகம். அதுவே காலனியாதிக்கமாக நாம் அறிந்தது. அந்த வல்லாதிக்கம் உருவாக்கிய செல்வம் அசிங்கமான ஒரு மதிப்பீடுகளற்ற கேளிக்கைசார் வாழ்க்கையை அங்கே உருவாக்கியது.

இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய ஐரோப்பா நேரடியான ராணுவ வல்லாதிக்கத்துக்குப் பதிலாக பொருளியல் வல்லாதிக்கத்தை உலகுமீது சுமத்த எண்ணுகிறது. அதற்கான எல்லா தந்திரங்களையும் அது செய்கிறது.

பொருளியல் வல்லாதிக்கத்துக்கு ஐரோப்பா விரிக்கும் வலை என்பது இருவகை. ஒன்று அரசியல் வலை. அது ஆதிக்கம்செலுத்த விரும்பும் நாடுகளில் அரசியல் நிலையின்மையை உருவாக்குவது அதன் முக்கியமான நோக்கம். அதற்காக அது பிளவுபடுத்தும் அரசியல் கொள்கைகளை ஏற்றுமதி செய்கிறது.

தன்னுடைய கல்விநிறுவனங்கள் மூலம், இதழ்கள் மூலம், சிந்தனையாளர்கள் மற்றும் கலாச்சாரவாதிகள் மூலம் மத, இன, இடம் சார்ந்த, மொழிசார்ந்த பிரிவினைச்சிந்தனைகளை ஐரோப்பா உற்பத்தி செய்துகொண்டே இருக்கிறது. அதேசமயம் தன்னுடைய நிலப்பரப்புக்குள் அச்சிந்தனைகளை முழுக்க இல்லாமலாக்கி ஒற்றுமையை மேலும் மேலும் உருவாக்கிக்கொண்டும் இருக்கிறது.

தன் அரசியல் திட்டங்களை ஐரோப்பாவும் அமெரிக்காவும் பல்வேறு நிதியுதவிகள் மூலம் பிறநாடுகளில் கொண்டுசெல்கின்றன. கல்விக்கான நிதிகள், சேவைக்கான நிதிகள் என்ற பேரில் அவை இந்தியா முதலிய நாடுகளுக்கு வருகின்றன. இங்கே கூலிச்சிந்தனையாளர்களையும் கூலி அரசியல்வாதிகளையும் உருவாக்குகின்றன. இந்தியா முதலிய நாடுகளில் உள்ள பிரிவினைப்போக்குகள் அனைத்துக்கும் உள்ளே இந்தக் கூலிப்படையும் அவர்கள் பெறும் நிதியும் உள்ளன.

இரண்டாவது, பண்பாட்டுவலை. தன்னுடைய பொருளியலாதிக்கத்துக்காக கட்டற்ற நுகர்வை ஐரோப்பா உலகப் பண்பாடாக ஆக்க நினைக்கிறது. அதற்காக கேளிக்கைமட்டுமே இன்பம் என்ற விழுமியத்தையே ஐரோப்பியப் பண்பாடாக அது உலகமெங்கும் பரப்புகிறது. இதற்காக கலைகளையும் இலக்கியத்தையும் கருவியாக அது கையாள்கிறது.

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் பொருளியல் வல்லாதிக்க நோக்கு பற்றிய பிரக்ஞை உடையவர்கள் மேலைப்பண்பாட்டை இந்த இரு அடிப்படைகளில் எதிர்த்து நிராகரிக்கிறார்கள். அதாவது அதில் உள்ள ஆக்ரமிப்பு மற்றும் சுரண்டல்நோக்கையே நிராகரிக்கிறார்கள். மிகச்சிறந்த உதாரணம், முதன்மையான தொடக்கப்புள்ளி காந்திதான்.

ஆனால் இந்த நிராகரிப்பு ஐரோப்பாவின் பண்பாட்டை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதல்ல என்ற பிரக்ஞை காந்தியிடம் இருந்தது. காந்தி ஐரோப்பியப்பண்பாட்டின் சிறந்த அம்சங்களை முழுக்க உள்வாங்கிக் கொண்டவர். அவரது முன்னுதாரணங்கள், ஆசிரியர்கள் தோரோவும் தல்ஸ்தோயும்தான்.

சொல்லப்போனால் இந்த இரண்டாவது ஐரோப்பாவை வலுவாக எதிர்க்க மிகச்சிறந்த ஆயுதங்களை அளிப்பது முதல் ஐரோப்பாதான். மார்க்ஸும் தல்ஸ்தோயும் தோரோவும்தான் ஐரோப்பிய வல்லாதிக்கத்துக்கு எதிரான வெற்றிகரமான கருவிகள்.

இன்றைய சூழலில் நாம் இந்தப்பிரிவினையை நிகழ்த்துவது எளிய விஷயம் அல்ல. நுட்பமான பண்பாட்டு ஆய்வும் நேர்மையும் தேவைப்படுகிறது. சுரண்டல் சக்திகளால் பேணி வளர்க்கப்படும் ஐரோப்பிய அறிவுப்புலமானது பிளவுபடுத்தும் சிந்தனைகளை வரலாற்றாய்வு என்றும் பண்பாட்டு பன்மைத்தன்மையை வெளிக்கொணர்தல் என்றும் சொல்லியே முன்வைக்கிறது.

images (9)

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பேணுதல் என்றும், சிறுபான்மையினர் பாதுகாப்பு என்றும் இன்னும் பல பெயர்களிலும் இந்தப் பிளவுபடுத்தும் சிந்தனைகள் முன்வைக்கப்படுகின்றன.

அதேபோல பாலியல் சுதந்திரம், பாலியல் சமத்துவம், தனிமனித உரிமை என்றெல்லாம் ஒருவகை இலட்சியவாத முகமூடியுடனேயே கட்டற்ற நுகர்வுக்கோட்பாடுகள் முன்வைக்கப்படும். உடலரசியல் என்றும் பாலியலின் அரசியல் என்றும் சிக்கலான கொள்கைகள் உருவாக்கப்பட்டே அவை முன்வைக்கப்படும். அவற்றை பன்னிப்பன்னி பேச நிதியுதவி பெறும் அறிவுஜீவிகளும் உருவாக்கப்படுவார்கள்.

முதல் ஐரோப்பா மீது நமக்கு இருக்கும் மதிப்பையும் மோகத்தையும்தான் இரண்டாவது ஐரோப்பா பயன்படுத்திக்கொள்கிறது. நமக்கு மார்க்ஸ் மீது மதிப்பிருக்கிறது. ஆகவே பிளவுபடுத்தும் சிந்தனைகள் நவமார்க்ஸிய பூச்சுடன் இங்கே வந்திறங்குகின்றன..நமக்கு ஐரோப்பிய நவீன இலக்கியம் பிரியமானது. ஆகவே கட்டற்ற களியாட்டத்தை பிரச்சாரம்செய்யும் ஆக்கங்கள் நவீன இலக்கியமாக வந்து சேர்கின்றன.

இந்தச் சிக்கலை புரிந்துகொள்ளாதவர்கள் மனதில் இரண்டாவது ஐரோப்பா பற்றிய விமர்சனமும் வெறுப்பும் முதல் ஐரோப்பாவை நிராகரிப்பதாக உருவாகிவிடுகிறது. ஒட்டுமொத்தமாக மேலைப்பண்பாடே இப்படித்தான் என்றவகையிலான முத்திரைகள் குத்தப்படுகின்றன. அதையே நாம் அடிக்கடி காண்கிறோம்.

ஐரோப்பாவின் அனைத்து சுரண்டல்களையும் நுட்பமாகப் புரிந்துகொண்டவர் காந்தி. அதற்கான எதிர்ப்புக்கருத்துக்களையும் ஐரோப்பாவிலேயே கண்டுகொண்டவர். ஐரோப்பாவை எப்போதும் தெள்ளத்தெளிவாக பிரித்துக்காணமுடிந்தவர். ஐரோப்பாவின் இரண்டாம் வடிவை, அதன் சுரண்டலை முழுமையாக நிராகரித்த காந்திக்கே ஐரோப்பிய சீடர்களும் நண்பர்களும் நிறைய இருந்தனர். அவர்களெல்லாம் முதல் ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள்.

ஐரோப்பாவை அணுக மிகச்சிறந்த முன்னுதாரணம் காந்தியே.

ஜெ

மறுபிரசுரம் முதற்பிரசுரம் May 2, 2012

முந்தைய கட்டுரைவெ.ஸ்ரீராம்
அடுத்த கட்டுரைஅண்ணா ஹசாரே மீண்டும்