முட்டாள்களின் மடாதிபதி

அன்புள்ள ஜெயமோகன்,

நான் உங்கள் இணைய தளத்தைக் கடந்த 4 வருடமாக வாசிக்கிறேன். நான் ஓஷோவின் தீவிர வாசகன். சமீபத்தில் இணையத்தில் ஓஷோ, காந்தி மற்றும் ஹரிதாஸ் பற்றிப் பேசிய சுட்டியைத் தற்செயலாக வாசிக்க நேர்ந்தது மிக அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் காந்தி, ஹரிதாஸ் பற்றி நீங்கள் எழுதியதற்கு அப்படியே எதிராக இருந்தது. ஓஷோவை ஞானி என்று நீங்களே குறிப்பிட்டுள்ளீர்கள். எனவே அவர் நிச்சயமாக அவதூறு செய்ய மாட்டார். காந்தி குடும்பத்துடன் நேரடித் தொடர்புடையவர் அவர். ராம்தாஸ் எனது நண்பர் என்று அவரே கூறி இருக்கிறார். நேருவிடம் ஓஷோ நெருக்கமான தொடர்பில் இருந்தார். எனவே இதுபற்றித் தாங்கள் விளக்க வேண்டும். இது பற்றிய சுட்டியைக் கீழே கொடுத்துள்ளேன்.

ஓஷோ 2

அன்புடன்

கார்த்திகேயன்.J

அன்புள்ள கார்த்திகேயன்,

நான் ஓஷோவைப் ‘புரிந்துகொண்டவன்’ அல்ல. புரிந்துகொள்ள முயல்பவன். எனக்கு அவரைப்பற்றிய எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லும் திராணி இல்லை.

காந்தியைப்பற்றி ஓஷோ சொன்னவை பெரும்பாலும் எல்லாமே வசைகள், அவதூறுகள், முழுப்பொய்கள். சாதாரணமாக எவருமே அதைத் தெளிவாக நிரூபிக்க முடியும். ஓஷோ பெரும்பாலும் தெரிந்தே அவற்றைச் சொல்லியிருக்கிறார் என்பதே உண்மை. ஓஷோவின் நோக்கம் காந்தி என்ற அடையாளம் மீதான தாக்குதல், அதன்வழியாக இந்திய மனதுக்கு ஓர் அதிர்ச்சி, உடைவு.

ஓஷோவின் உரைகளை வாசித்தால் அதேபோல ஏராளமான விஷயங்களை அவர் தவறாகச் சொல்லியிருப்பதை, வேண்டுமென்றே திரித்திருப்பதை, முரண்பாடாகச் சொல்வதை கவனித்தபடியே செல்லலாம். இதன் மூலம் உருவான எரிச்சலால் அவரை வாசிப்பதை நான் விட்டுவிட்டேன். மீண்டும் ஆரம்பித்தேன். ஒருகட்டத்தில் ஓஷோ பெரும் சலிப்பை ஏற்படுத்தினார். அவர் திரும்பத்திரும்பச் சொல்கிறார், ஒரு அளவுக்குமேல் நகரவே இல்லை என அறிந்தேன். அவர் வழியாக நம்மை உடைத்துக்கொள்ளலாம். கண்டடையமுடியாது. அந்த அறிதல் வழியாகவே அவரைக் கடந்துசென்றேன். இன்று எனக்கு ஓஷோ தேவையில்லை.

ஓஷோ மனித மனத்தின் பல இருண்ட ஆழங்களைத் தொட்டுக்காட்டியவர். வழக்கமான விஷயத்தை முற்றிலும் புதிய இடத்தில் திறந்து பார்க்கக்கூடியவர். தத்துவங்களை உடைத்துக்கலக்க முடிந்தவர். ஞானம் என நாம் எதையெல்லாம் சொல்கிறோமோ அவற்றையெல்லாம் மீறிய முற்றிலும் வேறான ஒரு ஞானம் அவரளிப்பது. ஆம், அவரது பணி என்பது கலைப்பதும், குலைப்பதும் மட்டுமாகவே இருந்திருக்கிறது. இந்த அர்த்தத்தில்தான் அவரை இந்திய ஞானிகளில் ஒருவராக எண்ணுகிறேன். இந்நூற்றாண்டில், பக்திமரபில் உறைந்த இந்திய சமூகத்திற்கு, அவரது வருகை தேவையாக இருந்திருக்கிறது, நிகழ்ந்திருக்கிறது.

விருந்தில் அறுசுவை உணவுக்கு முன்னால் அமர்ந்த மன்னன் அருகே மலத்தில் விழுந்த மண்டை ஓட்டுடன் ஒரு பைராகி வந்து அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தான் என்றும், அந்த அதிர்ச்சியில் மன்னன் துறவியானான் என்றும் ஒரு கதை உண்டு காசியில். அகோரிகளின் கதை.

ஓஷோவின் நோக்கம் பெரும்பாலும் உடனடியாக ஓரு சிந்தனை அதிர்ச்சியை உருவாக்கி வழக்கமான பாதையில் செல்லும் நம் எண்ணங்களைக் கலைப்பதாகவே இருக்கிறது. குறிப்பாக இந்திய மரபுமனம் மீது அவருக்கு இருக்கும் எதிர்ப்புணர்வு மிகையானது. காந்தியை அவர் இந்தியாவின் பழமைவாத ஒழுக்க நோக்கின் பிரதிநிதியாக மட்டுமே பார்க்கிறார். காந்தியை உடைக்காமல் இந்திய மனதை உடைக்கமுடியாதென நினைக்கிறார். அவ்வளவுதான்.

ஓஷோ சம்பிரதாயமாகச் சிந்திக்கக்கூடிய ஆரம்பநிலையாளர்களுக்கு முக்கியமானவர். அவர்களை அவர் உடைத்துத் திருப்பக்கூடும். அதன் பின் நம்முள் உள்ள முள்ளை எடுக்க உதவிய அந்த முள்ளையும் வீசிவிட்டே முன்னகர வேண்டும்.

‘அவர் ஞானி, ஆகவே அவர் சொன்னதும் செய்ததும் சரியாகத்தான் இருக்கும்’ என்று சொல்லத்தக்கவர் அல்ல ஓஷோ. அவரது வாழ்க்கை, அவரது பேச்சுக்கள் அனைத்திலும் வழக்கமான அற, ஒழுக்க மரபுகளுக்கு முற்றிலும் ஒவ்வாதவையே நிறைந்துள்ளன.

அவரது ஆசிரமங்களின் உள்ளே நிகழ்ந்த அதிகாரச்சிக்கல்கள், பாலியல் மோதல்கள் போன்றவை ஒருபக்கம். அவரே பணக்காரர்களை உள்ளே இழுக்க வெட்கமில்லாமல் முயற்சி செய்தவர். அதற்காக அவர்களிடம் நயந்தும் ஆசைகாட்டியும் மிரட்டியும் பேசியவர். யார் போனாலும் கழுத்தில் ஒரு மாலையை மாட்டிவிட்டு அவர்களுக்கு சாமியார்த்தனமான பெயரையும் அளித்துப் பணம் கறக்கும் அமைப்பாகவே ஓஷோவின் ஆசிரமம் இருந்தது. வினோத் மெஹ்ரா போன்றவர்கள் அங்கே போனதும் மீண்டதுமெல்லாம் கேலிக்கூத்து.

ஓஷோ பற்றி மகேஷ்பட் உள்ளிட்ட பலர் வெளிப்படையாகவே எழுதியிருக்கிறார்கள். ‘ஓஷோ நீங்கள் பிறரது உள்ளார்ந்த பயத்தை வெற்றிகரமாகப் பயன்படுத்திக்கொண்டவர், நான் அவர்களின் தனிமையைப் பயன்படுத்திக்கொள்கிறேன்’ என மகேஷ்பட் அவரிடம் சொன்னதாக எழுதுகிறார். மிகச்சரியான விவரணை அது.

ஓஷோ உலகின் வறுமையை எள்ளி நகையாடினார். எளிய மக்கள் மீது வெறுப்பைக் கொட்டினார். மனிதநேயத்தை மோசடி என்றார். சேவைகளையும் புரட்சிகளையும் வெறும் அகங்காரம் என்றார். ஓஷோவின் உரைகள் இன்று மிகமிக வெட்டி ‘ஒழுங்குபடுத்தப்பட்டு’ வெளிவருகின்றன. அவற்றிலேயே நாம் ஓஷோவின் இந்தக் குரலைத் தெளிவாகக் காணலாம்.

ஓஷோ நகைகளில், வைரங்களில், கார்களில் பெரும் மோகம் கொண்டிருந்தார் என்பது ரகசியமல்ல. செல்வத்தில் திளைக்க அவர் விரும்பினார். எந்த அற, கல்விப்பணிகளையும் அவர் செய்யவில்லை. தன் பணத்தை முழுக்க தானே அனுபவிக்க முயன்றார். அதைப்பற்றிக் கேட்டபோது ‘ஒரு சாமியார் இதையெல்லாம் செய்யமாட்டார் என நீங்கள் நினைக்கிறீர்கள். ஆகவேதான் செய்கிறேன்’ என்று பதில் சொன்னார்.

ஓஷோ பொய் சொல்வதை மட்டுமல்ல, மோசடி, கற்பழிப்பு, கொலை எதை வேண்டுமானாலும் செய்திருக்கலாம். நான் ஆச்சரியப்பட மாட்டேன். இந்த சாத்தியத்தை வைத்துத்தான் அவரை ‘கிரிமினல்’ என்று ஜெ.கிருஷ்ணமூர்த்தி சொன்னார். அறத்தின் குன்றேறி நின்ற ஞானிகள் இருக்கமுடியுமென்றால் ஒரு கிரிமினல்ஞானி ஏன் இருக்கக் கூடாது? இந்தியஞான மரபின் அந்த சாத்தியம்தான் ஒரு துணுக்குறவைக்கும் உண்மை. இன்றும் என்னால் முழுக்க புரிந்துகொள்ளமுடியாத ஒரு மர்மம் அது.

ஆனால் அவரை வாசிக்கும் எளிமையான வாசகர்கள் அவர்களை ஒரு போதகராக எளிமைப்படுத்திக்கொள்கிறார்கள். வாழ்நாள் முழுக்க ஓஷோ வெறுத்த, நிராகரித்த இடம் என்பது ஒரு போதகரின் இடம்தான். ‘ஓஷோ சொல்லியிருக்கார் அத நான் அப்டியே செஞ்சுட்டு வர்ரேன்’ என்று சொல்பவர்களை அடிக்கடி பார்க்கிறேன். ‘ஆனை தூறுதுன்னு ஆடு தூறினா அண்டம் கிளிஞ்சிரும்’ என்ற குட்டப்பனின் பொன்மொழிதான் நினைவுக்கு வருகிறது.

ஓஷோ இறந்தபின் அவரது சீடர்களில் ஒரு பகுதியினரால் அவர் ஒரு மடாதிபதியாக ஆக்கப்பட்டார். எல்லாவற்றையும் உடைக்க முயன்றவரை ஒரு கட்டுமானமாக ஆக்க ஆரம்பித்தனர். அவரது எளிமையான நூல்கள் வழியாக ஆரம்பநிலை வாசகர்களுக்கான முதிரா ஆன்மீகம் பேசும் ஒரு முகமாக அவர் இன்று உருவாகியிருக்கிறார்.

ஓஷோவை வரிக்குவரி வேதமாக எடுத்துக்கொள்வதுபோல ஆபத்தானது ஏதுமில்லை. ஆனால் ஒரு வகையில் இது ஆன்மீகத்தில் எப்போதுமே நிகழ்வதுதான். ஓஷோ இருபதாம் நூற்றாண்டு புத்திசாலி மனிதனின் தர்க்கபுத்தியை சிதறடிக்க முயன்றவர். மெல்ல மெல்ல அவரால் முழுமையாக வெறுக்கப்பட்ட முட்டாள்களின் குருவாக அவரே உருவாகி வந்திருக்கிறார். சிலையுடைப்பாளர் சிலையாகாமல் ஒரு கதைகூட முடிந்ததில்லை மானுட வரலாற்றில்.

பக்திமரபை உடைக்க வந்த ஓஷோ பக்தர்கள் நடுவே பீடத்தில் வந்து கொலுவீற்றிருக்கும் அழகை நினைக்கையில் அவரை விஷ்ணுபுரத்தின் ஒரு கதாபாத்திரமாகவே நினைக்கத் தோன்றுகிறது.

ஜெ

முந்தைய கட்டுரைஏழாம் உலகம் இன்று
அடுத்த கட்டுரைஇணைய இசை