தமிழினி மாத இதழின் இரண்டாவது இலக்கம் வெளிவந்திருக்கிறது. வழக்கமாக சிறு பத்திரிகைகளில் எழுதும் எழுத்தாளர்கள் அதிகமில்லாமல் வேறு ஒரு வகையான எழுத்தாளர்கள் எழுதுவதனால் ஒரு தனித்துவம் தெரியக்கூடிய இதழாக உள்ளது இது.
இதழில் சிறப்புக் கட்டுரை என்று குமரிமைந்தன் எழுதிய ‘தமிழன் கண்ட ஆண்டுமுறைகள்’ ஐத்தான் சொல்லவேண்டும். தமிழருக்கு தொன்மையானதும் தனித்துவமானதுமான ஒரு வானியல் இருந்தது என்று விரிவான ஆதாரங்களுடன் வாதிடும் குமரிமைந்தன் அதுவே சித்திரை முதல் எண்ணப்படும் ஆண்டுக்கணக்கு என்கிறார். இந்த வானியலே பின்னர் இந்தியாவெங்கும் பரவி மேலைநாடுகளுக்கும் சென்றது என்கிறார். கிரகோரிய நாள்காட்டிக்கும் அதுவே அடிபப்டை என்கிறார். தமிழர் வானியல்பின்பு சோதிடமாக சிதைவுற்றது. இக்கட்டுரை எளிய மொழியில் அமைந்திருந்தாலும் இத்துறையில் உண்மையான ஆர்வமும் ஓரளவு பயிற்சியும் உள்ளவர்களாலேயே வாசிக்கமுடியும். இத்துறையில் குமரிமைந்தனும் அவர் நணப்ர் வெள்ளுவனும் இணைந்து பலகாலமாக ஆய்வுசெய்துவருகிறார்கள். ‘சொல்புதிது’ இதழ் சிலகட்டுரைகளை வெளியிட்டுள்ளது.
கள் எடுப்பதை அனுமதிக்க வேண்டுமென நாஞ்சில்நாடன் எழுதியிருக்கும் கட்டுரை [உண்ணற்க கள்ளை!] அவருக்கே உரிய இடக்கரடக்கல்கள் அங்கதங்களுடன் ஆர்வமூட்டும் வாசிப்பனுபவம் அளிக்கும் இலக்கிய ஆக்கமாக உள்ளது. கள் தொன்மையான தமிழர்பானம் என்று சொல்லும் நாஞ்சில்நாடன் அரசு தன் வருமானத்தின் பொருட்டே அதை தடைசெய்து எளியவர்களை சுரண்டுகிறது என்கிறார்
‘எனது கவிதைக் கோட்பாடும் சங்கக் கவிதையும்’ என ஸ்ரீரங்கம் மோகனரங்கன் எழுதியிருக்கும் கட்டுரை வாசிப்புக்கு கடினமான ஆய்வுக்கட்டுரை. ஆனால் முக்கியமானது. கவிதையின் ‘உள்ளிசை’ பற்றிய அவரது அவதானிப்புகளும் சங்கக் கவிதையின் திணையமைப்பு குறித்த கண்ணோட்டமுமும் முற்றிலும் புதியவை. பெரும்பாலான சங்கக் கவிதைகளில் ஒரே பாடலில் எல்லா திணைகளையும் கண்டுவிடலாம் என்கிறார்
சி.கெ.சுப்ரமணிய முதலியார் என்ற பழைய தமிழறிஞர் பற்றி அ.கா.பெருமாள் எத்தியிருக்கும் கட்டுரையும், ‘மனித உடலின் அன்பும் ஞானமும்’ என்ற தலைப்பில் இரா.குப்புசாமி எழுதியிருக்கும் மெய்யியல் நோக்கிலான திருக்குறள் வாசிப்பும், ஆய்வளர் எஸ்.ராமச்சந்திரன் ஏறுதழுவுதல் பற்றிஎழுதிய கட்டுரையும் தமிழ்பண்பாடு சார்ந்த பல கோணங்களிலான ஆய்வாக உள்ளன.எ,வேதசகாயகுமார் தமிழின் தன்வரலாற்றுநாவல்கள் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.
இவ்விதழில் புனைகதைகளும், கவிதைகளும் இல்லை.
தமிழ் பண்பாடுசார்ந்த நேர்மையான அசலான ஆய்வுகளுக்காக மிகவும் கவனிக்கத்தக்கதாக உள்ளது இதழ்
தமிழினி பதிப்பகம், 67,பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை,சென்னை, 600014.