«

»


Print this Post

‘யாரும் திரும்பவில்லை’


 

ஒரு பெரும் கனவு எழுந்து  அது நரம்புகளில் புதிய ரத்தமாக ஓடிய நாட்களில், இடைவிடாது இலட்சியபுருஷர்களை உருவாக்கிக்கொண்டிருந்த பிராயத்தில் நான் கருணாகரனின் கவிதைகளை படிக்கவில்லை. அப்போதைய கவிஞர்கள் என்றால் சு.வில்வரத்தினமும் சேரனும் வ.ஐ.ச ஜெயபாலனும்தான்.

அது சகோதரப்போராட்டமாகச் சிதைந்து, வெறும்போராக உருமாறி, ரத்தம் மட்டுமேயானதாக மாறிவிட்ட பின்னர் வரலாறு குறித்த மாற்று நோக்குகள் உருவான வயதில் அவரது கவிதைகள் வாசிக்கக் கிடைத்தன. ஆரம்பத்தில் உதிரிக்கவிதைகளாக. பின்னர் அவரது தொடர்பு ஏற்பட்டது. தொடர்ச்சியான கடிதங்கள் வழியாக உரையாடிக்கொண்டே இருந்தோம். நாங்கள் நேரில் கண்டதேயில்லை என்றாலும் நெருக்கமான ஒரு நட்பு உருவாகி விட்டிருந்தது. என் குடும்ப ஆல்பத்தில் இன்னும் அவரது குடும்பப்படம் இருக்கிறது.

என்னுடைய அவநம்பிக்கைகளை, கசப்புகளை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. என் வரலாற்றுணர்வை அவர் அங்கீகரிக்கவுமில்லை. அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். போராட்டத்தின் நடுவே இருந்தார். இழப்புகளுக்கும் மேலும் இழப்புகளுக்கும் தயாராக இருந்தார். ஒரு கவிஞனாக ஒவ்வொரு கணமும் வன்முறையை வெறுத்தபடி ஓர் அறிவுஜீவியாக அதை நியாயப்படுத்தியபடி அங்கே இருந்தார். யாழ்ப்பாணத்திலிருந்து பின்பு திருவையாறிலிருந்து இயக்கச்சியிலிருந்து வன்னியிலிருந்து கடிதங்கள் எழுதிக்கொண்டிருந்தார்.

 

ஆழிபேரலை அடித்து அடங்குவதுபோல அந்தக் காலகட்டம் பின்வாங்குவதை இப்போது கண்டுகொண்டிருக்கிறேன். இனி மண்ணுடன் கலந்த பிணங்கள், இடிபாடுகள், அழுகுரல்கள் மட்டுமே மிச்சம். நினைவுகளும் கொடுங்கனவுகளும் இன்னும் கொஞ்ச காலத்துக்கு.நேற்றும் முன்தினமும் செயவதறியாமல் பழைய கடிதங்களையே படித்துக்கொண்டிருந்தேன். மங்கிய நீலவண்ண உறைகளில் நுணுக்கி எழுதப்பட்ட வரிகள். எத்தனை கனவுகள், ஆவேசங்கள், இலட்சியங்கள், நியாயப்படுத்தல்கள், தர்க்கங்கள், மீண்டும் நியாயப்படுத்தல்கள், விவாதங்கள், மீண்டும் நியாயப்படுத்தல்கள்…. தங்கள் மனசாட்சியைத்தான் ஓயாமல் நியாயப்படுத்திக் கொண்டிருந்தார்களா? தொலைதூர நாடொன்றில் வாழும் ஓர் எழுத்தாளனை அம்மனசாட்சியின் ஆடிப்பிம்பமாக எண்ணிக்கொண்டார்களா?

அவற்றை எழுதியவர்களில் அனேகமாக எவருமே உயிருடனில்லை. நேற்றிரவு புத்தகங்களில், இணையத்தில், சேகரிப்புகளில் பழைய புகைப்படங்களை மீண்டும் மீண்டும் பார்த்தேன். கணிசமானவை நணபர் தமிழினி வசந்தகுமார் எடுத்தவை. பல முகங்களை நீண்ட நாட்களுக்கு பின்னர் பார்க்கிறேன். இணைந்து எழுந்தவர்கள். களத்தில் பட்டவர்கள். துப்பாக்கிகளை தங்களுக்குள்ளேயே திருப்பிக்கொண்டு காலத்தில் மறைந்தவர்கள். அந்த ஆழிப்பேரலை பல்லாயிரம் மனிதமுகங்களினால் ஆனதாக இருந்தது.

அனைவருமே இப்போது ஒரே இடத்தில் சென்று படிந்திருக்கிறார்கள். வரலாறு உருவாக்கும் மாபெரும் புகைப்பட ஆல்பம் ஒன்றில். இனி மெல்லமெல்ல செங்காவி நிறத்தில் நரைத்து பின்னுக்குச் சென்று கொண்டே இருப்பார்கள். கண்களும் புன்னகைகளும் வெறும் கறைகளாக மாறும். மானுடம் கற்றுக்கொண்ட மாபெரும் கலை மறதிதான். அந்த திறனை வைத்துத்தான் அது அனைத்தையும் தாங்கிக்கொண்டு அடுத்த காலகட்டத்துக்கு நகர்கிறது.

குளச்சலில் நான்கு குழந்தைகளை கொன்ற ஆழிபேரலையின் பெயரையே தன் புதிய மகளுக்கு வைத்திருக்கும் ஓர் அன்னையின் கதையை வாசித்தேன். தன் கையில் அவள் மரணப்பேருருவமாக வந்த ‘சுனாமி’யை ஏந்திக் கொஞ்ச முடியும். குட்டிச்சுனாமியை தன் முற்றத்தில் விளையாட விடமுடியும். அதன்மூலம் அவள் அதை முழுமையாக வெல்லவும் முடியும். மானுட மனத்தின் சாத்தியங்கள் எல்லையற்றவை.

என் நண்பர்களில் கருணாகரன் மட்டுமே இப்போதும் இருக்கிறார், யாழ்ப்பாணமுகாம் ஒன்றில். அதை ஒரு வரமாகவா இல்லை சாபமாக எடுத்துக்கொள்கிறார்? மனிதனுக்கு எந்நிலையிலும் வாழ்தலே இனிது. வாழ்தல் ஒன்றே மெல்ல மெல்ல வாழ்தலை நியாயப்படுத்திவிடக்கூடும். அவரது கவிதைகளின் தொகுப்பை மீண்டும் மீண்டும் வாசித்தபடி ‘ஆம் அவர் இருக்கிறார். அவர் மட்டுமாவது இருக்கிறார்’ என்று சொல்லிக்கொள்கிறேன்.

இன்றுகாலை கருணாகரனிடம் தொலைபேசியில் பேசினேன். சென்ற ஐந்துநாட்களாக அழுத்தியிருந்த கடும் மனமூட்டம் கலைந்தது. முகாமில் நலமாகவே இருக்கிறார்.நமக்கு முற்றிலும் அன்னியமான ஒரு கொடுங்கனவிலிருந்து மீண்டிருக்கிறார்.

கருணாகரனின் முதல் தொகுப்பு யாழ்ப்பாணத்தில் எட்டுவருடங்களுக்கு முன் வெளிவந்தது. இப்போது  இரண்டாவது தொகுப்பை வடலி வெளியிட்டிருக்கிறது. அவர் வன்னியில் இருந்த நாட்களில் இணையம் மூலம் பெறப்பட்ட அவை அவரது அறிதல் இல்லாமலேயே அவர் நண்பர் த.அகிலன் முயற்சியால் நூல்வடிவம் பெற்றிருக்கின்றன.

‘யாரும் திரும்பவில்லை
நினைவுகளை புதைக்கமுடியாத சகதியில்
கிழிபட்டுக் கிடந்ததென் பறவை’

என்று தன்னைப்பற்றிச் சொல்ல ஆரம்பிக்கும் கவிஞன்

‘நானோ
உள்ளுமில்லை வெளியுமில்லை

கதவிடுக்கில்’

என்று சொல்லி மௌனமாகிறான்.

மீண்டும் மீண்டும் இக்கவிதைகள் அழிவின்முன் திகைத்து நிற்கும் கவிமனதின் சித்திரத்தை அளிக்கின்றன. இலக்கற்ற அழிவு. அழிவில் வினோத இன்பமொன்றைக் கண்டுகொண்ட மனங்கள் கொண்டாடும் அழிவு. அன்றாடக் கொலைகள், அழுத்தமிழந்துபோன குருதி, எவரும் கேட்காத கதறல்கள், மீட்பற்ற கைவிடப்படுதல்கள்…நுட்பங்களை நோக்கிச் செல்லாத நேரடியான அப்பட்டமான வரிகள் இவை. பலசமயம் புலம்பல்கள். சிலசமயம் மூர்க்கமான ஆவேசங்கள்.
…….
எண்ணித்தீராத நட்சத்திரங்களில்
எப்போதுமிருக்கிறது
நம்பிக்கையும் துரோகத்தனமும்
வானத்தைத் தின்கிற
வன்மமும்

எல்லோராலும் கைவிடப்பட்ட
விருந்தாளிகள்
புறப்பட்டு போனார்கள்
எதுவும் சொல்வதற்கின்றி
ஓரிரவில்

போர் தன் விதியை தானே எழுதிச்செல்ல
நீர் தளும்பிய கண்களில்
யார் விடுவது தூண்டிலை?

[முள்]
கருணாகரனின் இக்கவிதைகளை போரழிவு குறித்து எழுதப்பட்ட பலநூறு ரத்தம் தோய்ந்த வரிகளில் இருந்து விலக்கி நிறுத்துவது அவரில் அவ்வப்போது மட்டும் கூடும் ஆழமான கவித்துவத்தின் மௌனம். வரலாற்று அலைகளினூடாக ரத்தம் பெருகிச்செல்லும் காட்சியைக் கண்டபிரமிப்பிலிருந்து எப்போதாவது மீளும்போது அவரது குரல் தனக்குள் அடங்கி அழுத்தமான சுயதரிசனமாக ஆகிறது

தகிக்கும் கூடு

காயங்களிலிருந்து
வெளியேறிய பறவை
தன்னுடன் எடுத்துச்செல்கிறது
தன் அழகிய மலரை.
தன்னுடைய பெருந்தீயை
தன் கடலை
தன் வெளியை.

அதனிடமில்லை
மீண்டும் கூடு திரும்பும்
நினைவின் நிழல்.

அது செல்லும் வழியில்
தன் சிறகுகளையும்
கொடுத்துச்சென்றது காற்றிடம்.

வலிகளைக் கடந்து போகும் பயணம்
வெறுமையை
நிரப்பிவிடுகிறது கூட்டினுள்.

பறவையின் ஆறாச்சூட்டில்
தவிக்கிறது கூடு தனியே.

வடலி வெளியீடு. எண் 6/13, சுந்தரர் தெரு, எம்.ஜி.ஆர் நகர், சென்னை 600078 தமிழ்நாடு. 0091 444 43540358
[email protected]

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/2687

1 comment

2 pings

 1. Dondu1946

  யாரும் திரும்பவில்லை என்னும் வரியைப் படித்ததும் நான் எனது ஒரு பதிவில் எழுதிய கீழ்க்கண்ட வரிகள் நினைவுக்கு வருகின்றன. பார்க்க:
  http://dondu.blogspot.com/2009/06/28062009.html
  „Wanderer, kommst du nach Sparta, verkündige dorten, du habest uns hier liegen gesehn, wie das Gesetz es befahl.
  கி.மு. 480-ல் தெர்மோபைலே என்னும் இடத்தில் தங்களை விட பலமடங்கு அதிகம்பேரை கொண்ட பாரசீகப் படையினரை 300 பேர்களே இருந்த கிரேக்கப் படை எதிர்த்து போராடி அத்தனை பேரும் அழிந்த இடத்தில் உள்ள நடுகல்லில் மேலே கூறிய ஜெர்மானிய வாசகங்கள் கிரேக்க மொழியில் எழுதப்பட்டுள்ளன.

  அதன் பொருள் பின்வருமாறு, “இதைப் பார்க்கும் நாடோடிகளே, நீங்கள் எங்கள் ஊரான ஸ்பார்ட்டாவுக்கு செல்ல நேரிட்டால் அங்குள்ள எங்களவரிடம் கூறுங்கள், நாங்கள் யாவரும் ஒருவர் விடாமல் எதிரிகளுடன் போராடி எங்களுக்கென விதிக்கப்பட்ட வீர மரணம் அடைந்தோம் என”.

  உலக சரித்திரத்தில் பல போர்கள் நடந்து விட்டன, நடக்கின்றன, நடக்கவும் இருகின்றன. ஆனால் இந்தப் போரும் அதை போன்ற வெகு சில போர்கள் மட்டும் இன்னமும் மக்களின் நினைவுகளில் பசுமையாக உள்ளன. வெற்றியா தோல்வியா என்பது இரண்டாம் பிரச்சினை. முக்கிய விஷயம் என்னவென்றால், மரணம் நிச்சயம் என அறிந்திருந்தும் கடைசிவரை எதிர்த்து போராடி உயிர்த்தியாகம் செய்வதே. அவர்கள் கொல்லப்பட்டாலும் அவர்களது பெயர்கள் மக்கள் மனதில் வைக்கப்பட்டு பாடப்படும்.

  அதே போல இஸ்ரவேலர்களது வரலாற்றில் மஸாடா என்னும் இடத்தில் நடந்த போரை இன்னமும் இஸ்ரவேல குழந்தைகள் போற்றுகின்றனர். அப்போரில் எல்லா யூதர்களும் இறந்தனர். அவ்விடத்தில் இன்னமும் இஸ்ரவேலர்கள் “மஸாடா இனிமேல் விழாது” என்னும் வீரச்சபதம் எடுக்கின்றனர்.

  1943-ல் போலந்து தலைநகரம் வார்சாவின் யூதக் குடியிருப்பை நாஜிகள் நாசமாக்கிய போது அவர்கள் எதிர்த்து போராடினர். அது April 19, 1943 – May 16, 1943 வரை நீடித்தது. 1939-ல் போலந்தின் அதிகாரபூர்வமான ராணுவம் கூட அவ்வளவு நாள் தாக்கு பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

  அமெரிக்க யூத எழுத்தாளர் எழுதிய “மிலா 18” நாவலிலும் அமெரிக்க எழுத்தாளர் ஜான் ஹெர்சி எழுதிய “தி வால் (சுவர்)” என்னும் நாவலிலும் இது பற்றி பார்க்கலாம். இங்கும் போராளிகள் கடைசியில் கொல்லப்பட்டாலும் மக்கள் மனதில் அழியா இடம் பெற்றுள்ளனர்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 1. வடலி » யாரும் திரும்பவில்லை – ஜெயமோகன்

  […] ஜெயமோகன் This entry was posted on Tuesday, April 13th, 2010 and is filed under அறிவிப்புக்கள். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site. « என் கம்போடியப் பயண நூல் பிறந்த கதை நேர்காணல் – த.அகிலன் (ஞாயிறு தினக்குரல்) » […]

 2. பிறந்தநாள்

  […] யாரும் திரும்பவில்லை […]

Comments have been disabled.