அறமெனப்படுவது – கடிதங்கள்

அன்பின் ஜெயமோகன் ,

மானுட அறமே மேலான அறம் என்ற உங்கள் கட்டுரை அருமை, அறுதியிட்டுக் கூறுவதே அறம் எனப்பட்டதா? குடும்ப அறம் காக்க முயலாமல், குல அறமும் காக்க முயலாமல், மானுட அறத்தைக் காத்ததினாலேயே கண்ணகி தெய்வம் ஆகி நின்றாளோ ??

நன்றி

சிவகுமார்

அன்புள்ள சிவகுமார்,

ஆம், அதனால்தான் கண்ணகி அறச்செல்வி என்று ஆசிரியராலேயே சுட்டப்படுகிறாள்.

ஜெ

துபாய் ஜெயகாந்தன் இல்லம்

அன்புள்ள ஜெ,

உங்கள் துபாய் உரை மிகச்சிறப்பாக இருந்தது. பொதுவாக உங்கள் கட்டுரைகளை விட உரைகள் கவித்துவமாகவும் கூர்மையாகவும் ஆகியபடியே உள்ளன. சமீபத்தில் வந்த எல்லா உரைகளுமே சிறப்பானவை. நீங்கள் தொடர்ந்து உரைகள் ஆற்றவேண்டும் எனக் கோருகிறேன்.

சுவாமி

அன்புள்ள சுவாமி,

உரைகள் ஆற்றுவதில் நான் எனக்கென சில நிபந்தனைகளை வைத்திருக்கிறேன். உரைகளை உடனே வெளியிட்டுவிடுவேன். அந்நிலையில் என்னால் உரைகளை மீண்டும் மீண்டும் செய்ய முடியாமலாகும். பெரும்பாலான பேச்சாளர்கள் வருடத்துக்கு இரண்டு உரைகளையே நிகழ்த்துகிறார்கள். அதைத் திரும்பத்திரும்பச் செய்கிறார்கள். அவர்களிடமிருக்கும் சரளம் அப்படி வந்ததுதான். நான் அதை விரும்பவில்லை.

இரண்டாவதாக உரைகள் வெற்றிகரமாக அமைய அவற்றைக் கொஞ்சம் நீளமாக, நீட்டிமுழக்கிச் சொல்லவேண்டும். நான் என் உரைகள் செறிவாக இருக்கவேண்டும் என நினைக்கிறேன். ஆகவே உரைகளை எழுதிக்கொள்கிறேன்.

இந்த உரைகளை உரைகள் என்று சொல்லமுடியாது. இவை குறுங்கட்டுரைகள். ஆங்கிலத்தில் essay என்று சொல்லப்படும் வகை, கவித்துவம், நகைச்சுவை கலந்தவை. கொஞ்சம் புனைவுக்கு இடம்கொடுப்பவை. நான் எழுதும் கட்டுரைகள் பெரும்பாலானவை நீள்கட்டுரைகள். Article எனலாம். அவற்றின் அமைப்பு வேறு. அவை சொல்பவை அல்ல, விவாதிப்பவை.

என் உரைகள் குறுங்கட்டுரைகளாக எழுதப்பட்டு நினைவிலிருந்து நிகழ்த்தப்படுபவை. நல்ல உரைகள் மேடையில் நிகழக்கூடியவை. அவற்றை எழுதினால் அவை கொஞ்சம் வளவளவென்று, கொஞ்சம் சுற்றிச் சுற்றி வருவதாகத்தான் இருக்கும்.

இந்த சுயநிபந்தனைகளால் நான் அதிக உரைகளை நிகழ்த்த முடியாது. வருடத்தில் 5 உரைகள் என்றாலே அதிகம்.

ஜெ

அன்புள்ள ஜெ,

தேவையேற்பட்டாலொழிய அதிகம் பேசுபவன் அல்லன். நாலாயிர திவ்ய ப்ரபந்தமும், சங்கப்பாடல்களும், கம்பராமாயணமும்,திருக்குறளும் கொஞ்சம் வாசித்திருக்கிறேன். அதிகமும் கவனிப்பவன். உங்களின் “காடு” நாவல் கூட மிளைப்பெருங்கந்தனாரின் பாடல் பார்த்துதான் உள்ளே நுழைந்தேன், பெருங்கந்தனாரின் பேய் உங்களையெழுத வைத்திருந்ததெனச் சொல்வேன். அப்படியானால் கொற்றவை? என நீங்கள் சிரிப்பது எனக்குக் கேட்கிறது. அன்று கூட நீங்கள் “தாள்தோய் தடக்கை” எனச் சொன்னதும் எனக்கு சாத்தனாரின்

“ஆரம் தாழ்ந்த அணிகிளர் மார்பின்

தாள்தோய் தடக்கை, தகை மாண் வழுதி”

என்கிற பாடல் நினைவில் எழுந்தது. அதன் முடிவு இன்னும் அற்புதமானது.

“ஞாயிறு அனையை, நின் பகைவர்க்கு

திங்கள் அனையை, எம்மனோர்க்கே.”

முதல் நாளன்று உங்கள் அறிமுகத்தின்போது பாலை நிலம் பற்றிப் பேசும்போது ஒளவையின் வரிகள் “நாடாகொன்றோ”பாடலில் இருந்து

“எவ்வழி நல்லவர் ஆடவர்

அவ்வழி நல்லை, வாழிய நிலனே”.

யெனப் பேசினோம்.

கம்பராமாயணம் போன்ற இதிகாசங்களை “பூனை பாற்கடலை நக்கிக் குடிக்க முயலுவது போலவே அவ்வப்போது சிறிது குடிக்கிறேன்”. அன்றும் திரு. நா. நாடன் பேசுகையில் “வாலி வதைப் படலத்தின்” பாடல்களின் போது கண்கலங்கித் தழுதழுத்தேன். இறுதியாக அவரிடம் விடை பெறும் போது சொன்னது “களம் புகல் ஓம்புமின்” எனும் ஒளவையின் பாடல் “மறம்” சார்ந்து சொல்வதற்கு நல்ல தேர்வு. (அவரிடம் சொல்லாதது).

அதே ஒளவையின் மற்றொரு பாடல்

“கடல் கிளர்ந்தன்ன கட்டூர் நாப்பண்,

வெந்து வாய் மடித்து வேல் தலைப் பெயரி,

தோடு உகைத்து எழுதரூஉ, துரந்து எறி ஞாட்பின்

வரு படை போழ்ந்து வாய்ப் பட விலங்கி,

இடைப்படை அழுவத்துச் சிதைந்து வேறாகிய,

சிறப்புடையாளன் மாண்பு கண்டருளி

வாடு முலை ஊறிச் சுரந்தன

ஒடாப் பூட்கை விடலை தாய்க்கே” (புறநானூறு)
திணை : உவகைக் கலுழ்ச்சி

இத்திணையில் போரில் மகன் வீரப்போரிட்டு இறந்த நிலை கண்ட தாயின் உவகையைக் காட்டும் அதேநேரம் மகனின் மறம் குறித்தும் ஒளவை சிறப்பாகப் பேசுகிறார். கம்பன், ஆழ்வார்கள், சங்கப்புலவர்கள் போன்றவர்களை வாசிப்பதே பிறவிப் பெரும்பயன்.

மரபை விமர்சிப்பது, குற்றம், குறை சொல்வது, மீற முயற்சிப்பது அனைத்தும் மரபைக் குறித்த அறியாமையிலிருந்து எழுமானால் அது எப்போதும் பொருட்படுத்தத் தக்கதல்ல. மாறாக அதே மரபைத் தேர்ந்து அதிலிருந்து மரபை மீறுவதோ, புதிய மரபுகளைப் படைப்பதோ (படைக்க முற்படுவதோ), விமர்சிப்பதோ நிகழுமானால் அதுவே ஆரோக்கியமானது, மறுமலர்ச்சியும் கூட.

(திரு.ஜெயகாந்தன் எப்போதோ சொன்னதன் சாரம்)

நானும் இப்போது அதைத்தான் செய்ய முயலுகிறேன். பழந்தமிழ் இலக்கியங்கள் சொன்ன மிக நல்ல விஷயங்கள் பாடல்கள் படித்து விட்டுத்தான், இதில் நான் புதிதாக என்ன சொல்ல வருகிறேன் என என்னைக் கேள்விக்குட்படுத்துகிறேன். ஏனெனில் எனக்கு முன்பு பிரமாதமான கவிஞர்கள் (சங்க காலத்தில்,பிரபந்தத்தில்,கம்பன்,திருவள்ளுவர்,பாரதி,பிரமிள்,தேவதேவன், ஆத்மாநாம்,பிரம்மராஜன் என) இதில் எனக்கு ஒரு perception , நாம் ஏன் கவிதையில் அறிவியலைப் பற்றிப் பேசக் கூடாது? புதிதாக ஒரு பரப்பை உருவாக்க விழையும் வேட்கை.

கான முயலெய்த அம்பினில் என்ற குறள் கூறும் பொருள் போல இம்முயற்சியில் நான் தோற்றாலும் யானை பிழைத்த வேல் ஏந்துவதையே விரும்புகிறேன் (அப்பாடா! யானை பிழைத்து விட்டது, பெரும் சந்தோஷம்).

மிக்க நன்றி, நீங்களும் வீட்டில் அனைவரும் நலம் வாழ ப்ரார்த்தனைகள்.

அவசியம் சந்திப்போம்.

(பாம்பாட்டிச்சித்தன்)

குவைத் புகைப்படங்கள்

துபாய் புகைப்படங்கள்

முந்தைய கட்டுரைவினோபா, ஜெபி, காந்தி
அடுத்த கட்டுரைநிதீஷ்