நிதீஷ்

அன்பின் ஜெ..

நிதிஷ் குமார் என்னும் அரசியல் தலைவரை ஒரு 15 வருடங்களாகக் கவனித்து வந்திருக்கிறேன் (தொலைவில் இருந்துதான்).

முதலில், மத்திய வேளாண் அமைச்சராக.. குறைந்த விலையில் பாமாயில் வேண்டும், எனவே சுங்க வரிகளைக் குறைக்க வேண்டும் என்னும் வேண்டுகோளோடு, ஒரு தொழில் கட்டமைப்பில் இருந்து பார்க்கச் சென்றது முதல் முறை. மிகத் தெளிவாக, பாமாயில் மீதுள்ள சுங்க வரி குறைக்கப் பட்டால், இந்திய விவசாயிகள் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள் என்று புள்ளி விவரங்களோடு பேசிய அவர் – எனக்கு முதல் வேலை இந்திய விவசாயிகளைப் பார்த்துக் கொள்வதுதான். பின்னர் நுகர்வோர், அதன் பின்தான் நீங்கள் என்று தயவு தாட்சண்யமில்லாமல் பிஹாரி ஆங்கிலத்தில் சொன்ன அந்தக் கறார்த்தன்மை மிகப் பிடித்திருந்தது.

அதன் பின், மத்திய ரயில் மந்திரியாக – இந்திய ரயில்வே ஒரு deadwood என்று சொல்லி, அதை 7 ஆகப் பிரித்துத் தனியார் மயமாக்க வேண்டும் என்று ராகேஷ் மோகன் கமிட்டியை வழிமொழிந்து அவர் பேசிய போது பிடிக்காமல் போனது.

நிதீஷ் குமார்

ஆனால், பிஹாரின் முதல்வராக அவர் ஆனது, இந்திய அரசியலில் ஒரு பெரும் மாற்றத்தை உருவாக்கும் செயல் என்றே தோன்றியது. முதல் ஐந்து வருடங்கள் அந்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைச் சரி செய்யவே தேவைப்படும். அதைச் சரியாகச் செய்தார் என்றே தோன்றியது.

ஆனால் பீஹாரின் களப்பணியில் இருக்கும் என் கல்லூரியில் படித்த சிலர், இன்னும் சட்டம் ஒழுங்கு மிக அதிகம் மாறி விடவில்லை என்றே சொல்கின்றனர். அண்மையில் நண்பர் ஒருவரின் போலேரோ வண்டி எவ்வாறு ஒரு லோக்கல் எம்.எல்.சியின் ஆட்களால் கடத்தப்பட்டு, அதற்கான பேரங்கள் எவ்வாறு நடந்தன என்று ஒரு சினிமா போல் விவரித்த மெயில் வந்திருந்தது. இறுதியில் வண்டி கிடைக்கவில்லை.

பிஹாரில் எங்கள் வணிக அணுகுமுறையும் மிக ஜாக்கிரதையான ஒன்றாகவே இன்னும் உள்ளது. மிக அதிகம் மாறிவிடவில்லை.

நிதிஷ் குமாராலும் பிஹாரை மாற்ற முடியவில்லை என்றால் அது ஒரு பெரும் சரித்திர சோகமாக ஆகும். வருத்தமாக உள்ளது.

அன்புடன்

பாலா

நிதீஷ் ஒரு கட்டுரை

அன்புள்ள பாலா,

திடீரென்று காமராஜர் தமிழக முதல்வராக வந்தார் என நினைத்துக்கொள்ளுங்கள். தமிழகத்தில் இருந்து ஊழலை அவரால் எளிதில் ஒழித்துவிட முடியுமா என்ன?

இன்று தமிழகத்தில் ஊழல் என்பது சாதாரண மக்களின் அன்றாட ஒழுக்கமாக ஆகிவிட்டிருக்கிறது. ஒவ்வொரு சின்ன விஷயத்திலும் தமிழகத்து மக்கள் குறுக்குவழியையே நாடுகிறார்கள். எந்த விதியையும் மீறுவதற்கே முயல்கிறார்கள். அதற்கு என்ன செய்யவேண்டும் என்றே யோசிக்கிறார்கள். லஞ்சம் என்பது ‘சம்பாத்தியம்’ என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது. சாதாரணமாக டீக்கடைப்பேச்சுகளிலேயே எதற்கு எப்படி லஞ்சம் கொடுப்பது என்றே பேசப்படுகிறது. லஞ்சம் ஒரு குற்றம் என்றோ தவறு என்றோ எவரும் கருதுவதில்லை.

இதற்கு எதிராக ஒரு தர்மாவேசத்துடன் சின்னக்குழு ஒன்று பேசிக்கொண்டிருக்கிறது. அவர்களைப் பொதுவாக இதழாளர்கள் எனச் சுட்டலாம். ஆனால் இன்று இதழாளர்களில் பெரும்பாலானவர்கள் அதிகாரத் தரகர்கள், வணிகத்தரகர்கள், ஊழலுக்கான மடைகள். இந்த இணையதளத்தைப்பாருங்கள். நம் இதழாளர்களின் லட்சணம் புரியும்.

சிற்றிதழ்களின் தலையங்கங்கள் ஊழலுக்கு எதிராகக் கொந்தளிக்கின்றன. ஆனால் நானறிந்த முக்கியமான சிற்றிதழ் ஆசிரியர்கள் சென்ற ஆட்சியில் அவர்களுக்கு ஒரு சாதாரணமான அதிகார வர்க்கத் தொடர்பு கிடைக்கும் என்ற சாத்தியம் கண்ணுக்குப் பட்டதும் எப்படியெல்லாம் பல்லிளித்துக் கும்பிட்டுப் பரிதவித்தார்கள், எப்படித் தங்கள் பக்கங்களை உலகின் மிகப்பெரிய ஊழலாளர்களுக்குத் திறந்து போட்டார்கள், எப்படி விழாக்களில் தங்கள் தலைமை இடத்தில் வைத்து அழகுபார்த்தார்கள் என்பது வரலாறு.

சிற்றிதழ்த் தரப்பில் இருந்து அரசியலுக்குச் சென்ற இரு எழுத்தாளர்கள் சென்ற ஆட்சியின் முக்கியமான ஊழல்முகங்களாக மாறினார்கள் என செய்திகள் காட்டின. ஊழல்பணத்துக்கான பினாமி ஆக, நிலத்தரகரகர்களாக மாறியதே அவர்களின் அரசியல் சாதனை.

ஏன்? காரணம் இதுதான். ஊழல் என்பது மேலே தொடங்குகிறது. கீழிறங்க இறங்க அது ஒரு சமூக நடைமுறையாகவே மாறிவிடுகிறது. அதற்குப் பல ஆண்டுகள் ஆகும். ஒரு கட்டத்தில் கீழ்மட்டம் மேல் மட்டத்தைவிட ஊழல் மிக்கதாக ஆகிறது.

எந்த ஆட்சியிலும் ஊழல் ஒரு சரடாக ஓடிக்கொண்டே இருக்கும். அதிகாரம் ஊழலின்றி சாத்தியமில்லை. ஆனால் தமிழகத்தில் ஊழலை ஒரு அப்பட்டமான அரசியல்செயல்பாடாக முன்னிறுத்தியது மு.கருணாநிதி அவர்கள் 1969 ல் நடத்திய ஆட்சியே. அன்று மக்கள் அந்த ஊழலால் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் மெல்ல மெல்ல ஊழல் இங்கே மேல்மட்டத்தின் அன்றாட நடவடிக்கையாக ஆகியது. அடுத்த இருபதாண்டுகளில் மக்களின் ஆசாரமாக மாறியது.

இனிமேல் மாற்றம் வேண்டுமென்றால் ஊழலுக்கு எதிரான திட்டவட்டமான ஒரு தலைமை வேண்டும். மேல்மட்டத்தில் தெளிவான மாற்றம் தேவை. அந்த மாற்றம் நிகழ்ந்து மேல்மட்டம் அரசமைப்பு மீதும் சாதாரண மக்கள் மீதும் வலுவான கண்காணிப்பை செலுத்தவேண்டும். அப்படி ஒரு இருபது வருடங்கள் சென்றால்தான் ஊழல் இல்லாமலாவதை நாம் கீழ் மட்டத்தில் உணர முடியும்.

நான் பிகாருக்கு எண்பதுகளில் சென்றிருக்கிறேன். அன்றே பிகார் அழிய ஆரம்பித்தது. பிகாரின் அழிவைப்பற்றி நான் தனியாகவே எழுதவேண்டும்.

சுருக்கமான என் மனச்சித்திரம் இதுதான். இது ஒருவகையில் நேரடிச்சித்திரம். பிகார் மிக வளமான மண். ஆகவே வேளாண்மை பெருகி வலுவான நிலப்பிரபுத்துவம் உருவாகியிருந்தது. இந்திய சுதந்திரப் போராட்டத்துக்குப்பின் மற்ற பகுதிகளில் நிகழ்ந்தது போல அந்த நிலப்பிரபுத்துவ அமைப்பு மெல்ல மெல்ல அடிவாங்க ஆரம்பித்தது.

ஒருகாலகட்டத்தில் பிகார் நல்லாட்சி நிகழும் பகுதியாக விளங்கியது. கிருஷ்ண சின்ஹா, அனுக்ரஹ் நாராயணன் சின்ஹா போன்றவர்கள் பிகாரின் இலட்சிய ஆட்சியாளர்களாகக் கருதப்படுகிறார்கள். அந்தப் போக்கு தொடர்ந்திருந்தால் இந்தியாவின் மிகச்சிறப்பான ஒரு மாநிலமாக பிகார் ஆகியிருக்கும்.

என்னைப்பொறுத்தவரை தமிழகத்துக்குக் கருணாநிதி என்ன செய்தாரோ அதை இந்தியாவுக்கு செய்தவர் இந்திரா காந்தி. வெறும் ஏவலடிமைகளை அவர் பிகார் முதல்வர்களாக நியமிக்க ஆரம்பித்ததும் நிலைமை மாறியது. அதிகாரம் அடுக்களைச்சதிகள் மூலம் நிகழ ஆரம்பித்தது. அதில் ஊடுருவிய பழைய நிலப்பிரபுத்துவ ஆசாமிகள் ஜனநாயகம் வந்ததும் தளர ஆரம்பித்த பிடிகளை மீண்டும் இறுக்கிக்கொண்டார்கள். அவர்களே பிகாரின் நவமுதலாளிகளாக ஆனார்கள்.

அந்த நவீன நிலப்பிரபுத்துவ முதலாளித்துவத்துக்கு எதிரான எளிய மக்களின் பொறுமையின்மை இடதுசாரி எழுச்சியாக ஆகியது. எழுபதுகளில் பிகாரை உலுக்கிய நக்ஸலைட் போராட்டத்தை அடக்க இந்திரா பிகார் அரசையும் அதிகார வர்க்கத்தையும் மேலும் மேலும் மூர்க்கமானதாக ஆக்கினார். மக்கள் உரிமைக்கான எல்லா சட்டங்களும் மெல்லமெல்ல இல்லாமலாயின.

பிகாரின் முக்கியமான பிரச்சினை போலீஸ்தான். இன்றைய போலீஸ் மனநிலைகள் எல்லாமே அன்று உருவானவை. பிகாரின் போலீஸ்துறை உச்சநீதிமன்றம் ஒருமுறை குறிப்பிட்டதுபோல ‘இந்தியாவிலேயே பெரிய சீருடை அணிந்த குற்றவாளிக்கும்பல்’ ஆக மாறியது அப்போதுதான். அதற்குக் கட்டற்ற அதிகாரம் அளிக்கப்பட்டது. அது என்ன செய்தாலும் தண்டிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. பிகாரின் ஆட்சியராக இருந்த மலையாள எழுத்தாளர் ஒருவர் ஒருமுறை இச்சித்திரத்தைத் தனிப்பட்ட உரையாடலில் விரிவாகப் பேசியதைக் கேட்டிருக்கிறேன்.

பிகாரின் போலீஸ்ராஜ்ஜியத்துக்கு அப்பட்டமான உதாரணமாகவும் குறியீடாகவும் பேசப்பட்டது பாகல்பூர் குடுடாக்கல் நிகழ்ச்சி. போலீஸார் எந்தத் தயக்கமும் இல்லாமல் தெருவில் சென்றவர்களைப் பிடித்துக் கொள்ளையர் எனக் குற்றம்சாட்டிக் கண்களை குருடாக்கித் தெருவில் நிறுத்தினார்கள். அச்செய்தி அன்று இந்தியாவை உலுக்கியது.

சமூகக் கிளர்ச்சியின் வன்முறைக்கு எதிராகப் போராடும் அரசாங்கம் சர்வாதிகாரம் கொள்வதை, கொடிய அடக்குமுறை அமைப்பாக ஆவதை உலகமெங்கும் காணலாம். அந்தக் குரூரமான அரசுக்கு எதிராகப் போராடும் சமூக சக்திகள் அப்போரில் தாங்களும் குரூரமானவையாக ஆகிவிடுகின்றன. ஒருகட்டத்தில் இரு குரூர அமைப்புகள் நடுவே சிக்கிய மக்களை அவை மிதித்து அழிக்கின்றன. அதுவே பிகாரிலும் நடந்தது.

பிகார் நக்சலைட் அமைப்புகள் முதலில் முதலாளிகளைக் கொள்ளையிட்டன. நிதி போதாமலானபோது சாமானியர்களைக் கொள்ளையிட ஆரம்பித்தன. அவர்களை வேட்டையாடிய போலீஸும் அதே சாமானிய மக்களை சூறையாடியது. நான் எண்பதுகளில் கயா வரை அலைந்த நாட்களில் அச்சூழலைக் கண்டிருக்கிறேன்.

அந்தக்கொள்ளைக்கு எதிராக அம்மக்கள் சாதியக்குழுக்களாகத் திரண்டனர். ஏனென்றால் அதுதான் அவர்கள் அறிந்த ஒரே வழி. சாதியக்குழுக்கள் ஆயுதமேந்தின. பிகார் கிராமங்களில் சாமானிய மக்கள் கைகளில் ரைஃபிள்களுடன் அலைவதை எண்பதுகளில் கண்டேன். ஆச்சரியமென்னவென்றால் 2008ல் நாங்கள் இந்தியப்பயணம் போனபோதும் அதைக் கண்டோம். நண்பர்கள் அடைந்த பீதி நினைவிருக்கிறது.

அவ்வாறாக எழுபதுகள் முதல் படிப்படியாக பிகாரின் கிராமங்களில் அரசில்லாத நிலை உருவாகிவிட்டது. சாதியத்தலைமை கொண்ட ஆயுதமேந்திய ரவுடிகள் கிராமங்களை ஆண்டனர். அதைச் சீரமைப்பதற்குப்பதிலாக அந்த அரசின்மைச்சூழலில் பல்வேறு அடாவடித்தரப்புகள் நடுவே ஒரு சமரசத்தை உருவாக்கி மேலே இருந்து ஆட்சி செய்யவே எல்லா அரசுகளும் முயன்றன. பிகாரின் அழுகிப்போன போலீஸைத் தொட எவரும் துணியவில்லை.

சாதிய ரவுடிகளுடன் அரசு சமரசம்செய்துகொண்டபோது அவர்கள் அரசியலுக்குள் நுழைந்து அரசியல்வாதிகளாக ஆனார்கள். ஒரு கட்டத்தில் அரசியலும் அரசும் அவர்களுடையதாக ஆகியது.

பிகாரில் சாதிய அமைப்புகள் கிராமங்களில் தேசியநெடுஞ்சாலைகளில் சோதனைச்சாவடிகளை உருவாக்கி வாகனங்களிடம் கட்டாய வசூல் செய்வது சர்வ சாதாரணம். சென்றமுறை இந்தியப்பயணம் சென்றபோதுகூடப் பல இடங்களில் நாங்கள் கப்பம் கொடுக்க நேர்ந்தது. அந்த வசூல் ஒரு கொள்ளை என்ற நிலையைத் தாண்டி ஒரு ஆசாரமாகவே அங்கே மாறிவிட்டிருக்கிறது.

பிகாரில் அரசமைப்பின் வீழ்ச்சி லல்லுவின் காலகட்டத்தில் அதன் உச்சிக்குச் சென்றது. லல்லுவின் அரசியல்சூத்திரம் எளியது. காங்கிரஸ் என்பது நிலப்பிரபுக்களினால் ஆன அதிகார அமைப்பு. லல்லு அதற்கு எதிரான சாதிய ரவுடிகளைத் திரட்டி ஒரு மாற்று அதிகாரத்தை உருவாக்கினார். அதைக்கொண்டு அவர் உருவாக்கிய அதிகாரம் அப்பட்டமான ரவுடியரசியல். முன்பெல்லாம் அரசு என்ற பாவனையாவது இருந்தது. லல்லு நேரடியாக நிர்வாகமே இல்லாத நிலையை நிறுவினார்.

ஒட்டுமொத்த விளைவாக பிகார் பஞ்சப்பரதேசி நாடாக ஆகியது. இன்று பிகாரிகள் இந்தியாவெங்கும் கூலியடிமைகளாக வாழும் நிலை உருவாகியது. இங்கே வரும் பிகாரிகளை வைத்து பிகாரை மனதில் உருவகித்து வைத்திருந்த என் நண்பர்கள் 2008இல் கண் தொடும் இடமெல்லாம் பசுமைநிறைந்த சொர்க்கபூமியாகிய பிகாரை நேரில்கண்டபோது அடைந்த அதிர்ச்சியை நினைவுகூர்கிறேன்.

நிதீஷ் போராடுவது முப்பதாண்டுகளாக மெல்லமெல்ல உருவாகி வந்த ஒரு ஒட்டுமொத்த சமூக அமைப்பை மாற்றுவதற்காக என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அது அத்தனை எளிய விஷயம் அல்ல.

நிதீஷ் அதிகாரத்தில் இருப்பது பிகாரில் உருவாகி வந்த மூன்றாவது அதிகார சக்தியால். அது நடுத்தரவர்க்கத்தாலும், வணிகர்களாலும் ஆனது. தொடர்ந்த ரவுடி-போலீஸ் ஆட்சியால் வணிகம் சீரழிந்து, தொழில்கள் அழிந்து, உருவான தேக்கநிலையால் பொறுமை இழந்த ஒரு வட்டத்தால் அவர் மீண்டும் மீண்டும் பதவிக்கு வருகிறார். அவரால் மீண்டும் பிகாரில் சட்டத்தின் ஆட்சியை உருவாக்க முடிந்தால் தொழிலும் வணிகமும் பெருகி, பிகார் மற்ற இந்திய மாநிலங்களில் நிகழும் பொருளியல் வளர்ச்சியைத் தானும் அடைய முடியும்.

நிதீஷ்குமாரின் நோக்கமும் அவரது நேர்மையும் ஐயத்துக்கிடமற்றவை. அவர் தீவிரமாகச் செயல்படுகிறார். மேல்மட்டத்தில் கணிசமான மாறுதல்களை அவரால் உருவாக்க முடிந்திருக்கிறது. கடந்த பத்தாண்டுகளாகவே பிகாரில் ஓர் அரசு உருவாகியிருப்பதை உணர முடிகிறது. அதன் செயல்பாடுகளை கீழ்மட்டம் வரை காணமுடிகிறது. இதுவே ஒரு பேரற்புதம்.

உண்மையான மாற்றங்கள் கீழ்மட்டத்தில் உருவாக இன்னும் பத்தாண்டுகள்கூட ஆகலாம். அதுவரை நிதீஷோ அவரைப்போன்றவர்களோ நீடிக்கவேண்டும். மீண்டும் ஒரு ‘நல்லாட்சி’யை லல்லுவோ காங்கிரஸோ அமைத்துவிடக்கூடாது.

அதைவிட முக்கியமாக பிகாரின் சாமானிய மக்கள் தற்காப்புக்காக உருவாக்கிக்கொண்ட சாதிய ரவுடி அமைப்புகள் அவற்றின் இறுக்கத்தைக் கைவிட்டுக் கரைந்தழிய வேண்டும். வரலாறு ஒன்றும் வேதியியல்நிகழ்வு இல்லை. ஒரு வேதிப்பொருளை செலுத்தினால் அது உறுதியான குறிப்பிட்ட விளைவை உருவாக்க வேண்டும் என்பதில்லை. வரலாற்றில் விதிகளே இல்லை. எதுவும் நிகழலாம்.

நிதீஷ் முயல்கிறார் என்பதே மகத்தான விஷயம். அவரால் இதுவரை நிகழ்ந்த மாற்றங்களே அற்புதமான நிகழ்வு. அவ்வளவுதான் சொல்ல முடியும்.

ஜெ

முந்தையவை

ஜோதிபாசு

முந்தைய கட்டுரைஅறமெனப்படுவது – கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘சயன்ஸே சொல்லுது!’