சந்திப்புகள் – சில கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்!

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ஏறத்தாழ பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்னதாக உங்களோடு பயணிக்கத் தொடங்கினேன் – உங்கள் படைப்புகளின் ஊடாக. என் தந்தை வழியாகத்தான் உங்களை வந்தடைந்தேன். வீட்டில் எங்கு திரும்பினாலும் புத்தகங்கள் என்ற சூழலில் வளர்ந்தேன். அலுவல் முடிந்து மிகத் தாமதமாக படுக்கையில் விழுந்த ஓர் இரவில், விஷ்ணுபுரம் (அகரம் வெளியீடு) புத்தகத்தைக் கையில் எடுத்தேன். தொடர்ச்சியாகப் பல இரவுகள் அந்தப் புத்தகத்தோடு பயணித்தேன். கொந்தளிப்பான இரவுகள் அவை. அன்று உங்களோடு ஆரம்பித்த விவாதம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. விஷ்ணுபுரம் படித்த அந்த நாட்கள் மன எழுச்சிகொண்டவை. மிக அந்தரங்கமாக உணர்ந்த இரவுகள் அவை. படித்து முடித்த ஓர் அதிகாலையில், உங்களுக்கு ஓர் மின்னஞ்சல் அனுப்பினேன். விஷ்ணுபுரம் படித்து நான் அடைந்த பேரனுபவத்திற்கு நன்றி தெரிவித்து. நான் மீண்டும் மீண்டும் படிக்கும் புத்தகமாக விஷ்ணுபுரமும் காடும் ஆகிவிட்டன.

நான் படிக்காமல் இருப்பது உங்கள் கொற்றவை மட்டும் தான். அதையும் இன்று படிக்க ஆரம்பிக்கிறேன். இதுவே நான் உங்கள் பிறந்த நாளைக் கொண்டாடும் முறை.

அலுவல் சூழலில் சிக்கிப் புத்தகமே படிக்காத நாட்களில் உங்களது ‘ஊமைச்செந்நாய்’ என்னை மீண்டும் இலக்கிய உலகத்திற்குள் இழுத்துக்கொண்டது. ‘மாடன் மோட்சமும்’ , ‘ஊமைச்செந்நாய்’ புதினமும் உலகின் தலைசிறந்த இலக்கியப் படைப்புகளில் என்றும் இடம் பெறக்கூடியவை.

‘அறம்’ தொகுப்பு நான் விஷ்ணுபுரம் படித்த நாட்களில் அடைந்த மனவெழுச்சியை மீண்டும் என்னுள் ஏற்படுத்தியது. என் அடுத்த தலைமுறையினருக்கு இன்று ‘அறம்’ நூலையே பரிசாக அனுப்பி வைத்துக்கொண்டிருக்கிறேன்.

சுனாமி காலத்தில் உங்களோடு ஓர் கடித உரையாடல் நடந்தது. நீங்கள் அந்த நேரத்தில் எழுதிய ‘இந்தியா’ பற்றிய மன எழுச்சியை விவாதத்திற்கு உட்படுத்தி இருந்தேன். உங்கள் பதில் மிக சுருக்கமாக இருந்தது – ‘இது மேலோட்டமாக போகிற போக்கில் பேசக்கூடிய விஷயமல்ல. ஆழமாக விவாதிக்க வேண்டிய ஒன்று’ என்று கூறி இருந்தீர்கள். இந்தியாவில் உள்ள அனைத்து மக்களையும் இணைக்கும் கூறு என்ன என்பதைப் பின்னாட்களில் மெதுவாக உணரத்தொடங்கிய பொழுது நீங்கள் சுனாமி காலத்தில் எழுதிய கட்டுரையின் முழு வீச்சும் புரிந்தது.

உங்கள் இலக்கியப் படைப்பாகட்டும், கட்டுரை ஆகட்டும் அல்லது தனிப்பட்ட மின்னஞ்சல் ஆகட்டும். அனைத்திலும் நீங்கள் எதிர்த்தரப்பினர் விவாதிக்கத் தேவையான வெளியைக் (Space) கொடுக்கிறீர்கள். அதுவே எனக்கு உங்களிடம் மிகவும் நெருக்கமானவனாக உணரவும் செய்கிறது. விவாதங்களின் மூலமாகவே நான் முன்னேறிச் செல்கிறேன்.

இன்றைய தமிழ்ச்சூழலில் தவிர்க்கமுடியாத ஆளுமை நீங்கள். A top intellect. மீண்டும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அன்புடன்,

பழநிவேல்

“Conformity Leads to Mediocrity.”

அன்புள்ள பழனிவேல்,

நலம்தானே? வாழ்த்துக்கு நன்றி. சிறுவனாக இருந்த காலத்தைத் தவிர்த்தால் நேற்றுதான் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம். சென்னையில் இருந்தேன், சிறில் அலெக்ஸ் வீட்டு கிருகப்பிரவேசத்துக்குச் சென்று அங்கே ஒரு விடுதியில். கூட மற்ற நண்பர்கள் இருந்தார்கள். அரங்கா, சிறில் போன்றவர்கள். எல்லாருமாகச் சேர்ந்து திடீரென்று கேக்கெல்லாம் வெட்டிக் கொண்டாடினோம். வேடிக்கையாக இருந்தது.

அலுவலகச்சூழல் பெரும்பாலானவர்களுக்கு அந்தரங்கமான கலை, ஆன்மீக உலகில் வாழமுடியாத அளவுக்கு நெருக்கடி மிக்கதாக ஆகிவிட்டிருக்கிறது. ஆனால் அப்படி வாழ முடியாவிட்டால் அது பெரும் இழப்பே. பாறையைப் பிளந்து இதழ் விரிக்கும் சிறுசெடி போல நேரத்தைக் கண்டுகொள்ளத்தான் வேண்டும்.

உங்கள் தனிப்பட்ட உலகின் விரிவுக்கு என் எழுத்துக்களின் பங்கு ஒன்று இருப்பது நிறைவளிக்கிறது. எழுதுங்கள்.

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்,

சனிக்கிழமை மாலை உங்களை சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி. ஆனால், உங்களுடன் என்னால் சாதாரணமாக உரையாட முடியவேயில்லை. ஒரு படி மேலே சொல்ல வேண்டும் என்றால் உங்கள் அண்மை ஏதோ செய்தது :). இயல்பாக இருக்கவே முடியவில்லை. இதை நீங்கள் உணர்ந்தீர்களா தெரியாது.

நான் இதுவரை என் ஆதர்சங்களாகக் கொண்டவர்களுடன் அதிகம் உரையாடியது கிடையாது, என் பெரியப்பாவைத்தவிர. என் மனைவி சொன்னாள், “you are in awe of him”. அது உண்மைதான். இதையும் மீறி, வரும் வாழ்வில் (நாட்களோ, மாதங்களோ, வருடங்களோ தெரியாது) ஒரு அர்த்தமுள்ள நட்பு சாத்தியமாகும் என்று நம்புகிறேன் (இதை எழுதும் போது அந்த நம்பிக்கை மிகக் குறைவே:) ). என்ன ஆகிறதென்று பார்ப்போம்.

இந்தக் கடிதத்தை முதலாகக்கொண்டு உங்களுடன் உரையாட முயல்கிறேன்.

அன்புடன்,

ஸ்கந்த நாராயணன்

அன்புள்ள ஸ்கந்த நாராயணன்,

நாம் இதுவரை இருமுறை நேரில் சந்தித்திருக்கிறோம். இருந்தும் பேசமுடியவில்லை என்பது கொஞ்சம் ஆச்சரியம்தான். நான் எப்போதுமே புதிய நண்பர்களிடம் அந்த வேறுபாடு எழக்கூடாது என்பதில் கொஞ்சம் கவனம் எடுத்துக்கொள்வேன்.

ஆனால் ஒன்றுண்டு, ஆழமான அந்தரங்கப்பகிர்வு ஒன்று உண்டு. அது ஒரு பொதுச்சந்திப்பில் சாதாரணமாக நிகழாது. அதற்கான தருணம் ஒன்றுண்டு. அதற்காகக் காத்திருக்கவே வேண்டும்.

ஜெ

அன்புள்ள ஜெ. மோ.,

சற்று முன்தான் ‘ஏழாம் உலகம்’ வாசித்து முடித்தேன். என் மனம் தற்பொழுது சமநிலையில் இல்லை.

என் வாழ்க்கையில், எனது அசட்டுத்தனங்களால் பலமுறை விளைந்த தவறுகளை, நான் ‘ஏதோ நடந்துவிட்டது, இனி மாற்ற இயலாது’ என்று சுலபமாகத் தாண்டிச் சென்று இருக்கின்றேன். ஆனால், 2009-ஆம் ஆண்டு தங்களின் அமெரிக்கப் பயணத்தினூடே சாக்ரமெண்டோஅருகே Folsom Intel-இல் நடந்த கலந்துரையாடலில் கலந்துகொள்ள ஆசைப்பட்டு அந்த அறை வாசல் வரை வந்து நின்று விட்டு பிறகு ஏனோ ஒரு அர்த்தமற்ற தயக்கத்தினால் திரும்பிச் சென்ற தவறை மறந்து, கடந்து செல்ல இயலாமல் இப்பொழுது தவிக்கின்றேன்.

என் மனக்கொந்தளிப்பு அடங்கிய பின்னர் இந்நாவலைப் பற்றிய எனது புரிதலை விரிவாக எழுத ஆசை. என்னால் முடியுமா, எனக்கு அந்தத் தகுதி இருக்கின்றதா என்று தெரியவில்லை.

எனக்கு தற்பொழுது சொல்லத் தோன்றும் ஒன்றே ஒன்று – “என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் ஐயா”.

அன்புடன்,
-பாலாஜி.

அன்புள்ள பாலாஜி,

அன்று சந்தித்திருக்கலாம். ஆனால் சந்திக்காமல் போனதிலும் இழப்பு ஏதும் இல்லை. இன்னும் பொருத்தமான ஒரு தருணத்துக்காக அந்தச் சந்திப்பு ஒத்திப்போயிருக்கலாம். சந்தித்தே ஆகவேண்டுமென்ற நிலை உருவாகும்போதுதான் பலசமயம் முக்கியமான சந்திப்புகள் நிகழ்கின்றன.

ஏழாம் உலகம் நாவலைப்பற்றி எழுதுங்கள். நாவலைக் கடந்துசெல்ல, உள்வாங்கிக்கொள்ள அது நல்ல வழி.

ஜெ

முந்தைய கட்டுரைஇரு கடிதங்கள்
அடுத்த கட்டுரைவினோபா, ஜெபி, காந்தி