இ.எம்.எஸ்ஸும் கேரள தேசியமும் 2

இ எம் எஸ்சின் ஆய்வுக் கருவிகள்
=========================

இ எம் எஸ்ஸின் ஆய்வுக்கருவிகள் மூன்று. ஒன்று அவரது அடிப்படையான வரலாற்றுத்தரிசனம். வரலாற்றை எதிர்காலத்துக்கு நகர்வதற்குரிய வரலாற்றுத் தருக்கத்தையும் , பண்பாட்டுக் கூறுகளையும் கண்டடையவேண்டிய அகழ்வாய்வுநிலம் என்ற அளவில் மட்டுமே அவர் பார்க்கிறார். அதாவது எதிர்காலத்துக்கு உதவாத வரலாற்றாய்வு அவரைப்பொறுத்தவரை பயனற்றது. அவ்வெதிர்காலத்தை கட்டமைக்கும் போராட்டத்தின் ஒரு பகுதியாக மட்டுமே வரலாறு ஆய்வுக்கு உட்படுத்தபட வேண்டும்.  வரலாற்றுக்காக வரலாறல்ல, அரசியல் போராட்டத்துக்காகவே வரலாறு. வரலாற்றிலிருந்து பழம்பெருமை இன அடையாளம் முதலியவற்றை தோண்டியெடுப்பதனை அவரால் ஏற்கமுடியாது. உதாரணமாக அவர் கேரள வரலாற்றின் பழம்பெருமையாளர்களை தன் மிக முக்கியமான கட்டுரையான ‘ நூற்றாண்டுகள் வழியாககேரள மக்கள்’ [1974]  என்ற ஆக்கத்தில்  இவ்வாறு எதிர்கொள்கிறார்.

” அதி புராதனமான ஒரு கலாச்சாரத்தின் உரிமையாளர்கள் தாங்கள் என்று நிறுவ முயலும் பலரையும்போல கேரளீயர்களும் அந்த உரிமைகொண்டாடலை நிகழ்த்துவதுண்டு. நமது வரலாற்றாசிரியர்கள் சிலரும் அதற்கு ஆதரவளிக்க முயல்வதுமுண்டு.

ஆனால் இந்த உரிமைகொண்டாடல் அடிப்படையுள்ள ஒன்றா என்று யோசிக்கவேண்டியுள்ளது. அதை உறுதிசெய்யத்தக்க எந்த புறவய ஆதாரமும் இதுவரை வெளிவரவில்லை என்று சுட்டிக்காட்டவேண்டியுள்ளது. கலாச்சாரத்தின் காலப்பழைமையல்ல அதன் உயிர் துடிப்பே முக்கியம். அதாவது மாறும்தன்மை. காலம் தாண்டியானாலும் கேரள சமூகத்திலும் கலாச்சாரத்திலும் உருவாகிவந்த மாற்றங்களுடைய மூலத்தன்மை, அவற்றின் இன்றைய நிலை, எதிர்காலம் ஆகியவற்றைப்பற்றியே கலாச்சரத்தில் ஆர்வம் கொண்டவர்கள் சிந்தித்து பார்க்கவேண்டும் ”

இ எம் எஸ்ஸின் பார்வையை இவ்வரிகள் அடிக்கோடிட்டு காட்டுகின்றன. அதாவது அவரைப்பொறுத்தவரை கலாச்சாரம் என்பது ஒரு சமகாலநிகழ்வே ஒழிய ஒரு தொல்பொருள் அல்ல. வாழும் கலாச்சாரத்தில்தான் அவருக்கு ஆர்வம். அதன் உயிர்துடிப்புக்குத்தேவையான அளவில் மட்டுமே அவர் பழைமையை பொருட்படுத்துகிறார். ஆகவே அவர் பழம்பெருமை வரலாறுகளை முதலிலேயே நிராகரித்துவிடுகிறார். ஐதீகங்களை அவர் பொருட்படுத்துவதேயில்லை. அவை நம்பற்குரியவையல்ல என்ற உறுதியான எண்ணம் அவருக்கு உண்டு. குறையாக சொல்ல வேண்டுமென்றால் ஐதீகங்கள் ஒரு சில கவிஞர்களின் ஆக்கங்களல்ல, அவை சமூகக் கூட்டு நனவிலியின் ஆக்கங்கள் என்பதை இ எம் எஸ் கருத்தில் கொள்ளவில்லை என்று சுட்டிக் காட்டலாம். உதாரணமாக கேரளத்தின் புராணப்பெருமையை இ எம் எஸ் இவ்வாறு கேள்விக்குட்படுத்துகிறார்.  அதற்கு அவருக்கு முக்கியமான காரணமாக இருப்பது மார்க்சிய நோக்கிலான உபரி குறித்த கேள்விதான் . இது அவரது இரண்டாவது ஆய்வுக்கருவி. மகாபாரதத்தில் கேரளத்திலிருந்து அரிசி வந்தது என்று சொல்லப்பட்டுள்ள ஒரு வரியே கேரளத்தின் பழைமை குறித்து பேசுபவர்களுக்கு ஆதாரமாக உள்ளது.  ‘ப்ரக்ஷிப்தம்’ என்றறியப்படும் இடைச்செருகல் மட்டுமே அது என கருதும் இ எம் எஸ் அப்படி அரிசி போனதென்றால் அத்தனை பெரிய பொருளியல் அடித்தளம் அதற்குரிய [கலாச்சார]மேற்கட்டுமானத்தை ஏன் உருவாக்கவில்லை என்று கேட்கிறார். “அரிசி வந்தது என்று எழுத கவிஞன் இருந்ததுபோல,  போனதை எழுத ஏன் கவிஞன் உருவாகவில்லை?” என்கிறார் .[அதே]பழங்கால பெருமையை வெறுமே இலக்கிய ஆதாரங்கள், தொல்பொருள் தடையங்கள் மூலம் வலியுறுத்துபவர்கள் அதற்குரிய பொருளியல் விளக்கமும் அளிக்கவேண்டும் என்பது இ எம் எஸ் முன்வைக்கும் முக்கியமான கோரிக்கை.  சுரண்டலே பெரிய நாகரீகங்களை,அரசாங்கஅமைப்புகளை உருவாக்குகிறது . ஆகவே அம்மாதிரியான நாகரிகமோ பேரரசோ அடையாளம் காணப்பட்டால் உபரியை மையம் நோக்கி குவிக்கும் மிகப்பெரிய சுரண்டல் அமைப்பும் கண்டடையப்பட வேண்டும். அச்சுரண்டலானது வன்முறை மூலமும், மேல் நோக்கி குவியும் அதிகாரப் படிநிலை அமைப்புகள் மூலமும், சமூக மத நம்பிக்கைகள் மூலமும் உருவாக்கப்பட்டிருக்கும். ஆகவே சுரண்டலே பெருமைகளின் அடிப்படை. அதனால் நவீன மனிதனுக்கு பழம்பெருமைகளில் பெருமிதம் கொள்ள ஏதுமிலை.அவனுடைய கனவு எதிர்காலம் பற்றியதாகவே இருக்கவேண்டும். இதுவே இ எம் எஸ் முன்வைக்கும் பொதுக்கருத்து.

எம் எஸ்ஸின் மூன்றாவது முக்கிய உபகரணம் முரணியக்க பொருள்முதல்வாதமாகும். இதை மிக விரிவாகவே அவர் பயன்படுத்துகிறார். இங்கே ஒரு விஷயம் குறிப்பிட்டாக வேண்டும்.சில வருடங்களுக்கு முன் இ எம் எஸ்ஸின் ‘இந்தியா—–வேதங்களின் நாடு ‘ என்ற நூல் தமிழாக்கம் செய்யப்பட்டது .அப்போது அதற்கு திராவிடர் கழகத்தின் சார்பிலும் , சிற்றிதழ் சார்பிலும் மிக மூர்க்கமான எதிர்வினைகள் வந்தன. அவ்வெதிர்வினைகளுக்கு அதன் தலைப்பே காரணமாகியது . அவ்வெதிர்ப்புகளுக்கு உரிய முறையில் பதில் சொல்ல இங்குள்ள மார்க்ஸியரால் இயலவுமிலை.  திராவிட இயக்கத்தவரின் பார்வைகள் எப்போதுமே தட்டையானவை, தத்துவார்த்த கனமற்றவை. அவர்கள் இ எம் எஸ் வேதங்களைபுகழ்கிறார், எனவே வேதகாலச் சுரண்டலமைப்பையும் சாதிப்பாகுபாட்டையும் ஏற்கிறார் என்றார்கள். அதற்கு பதில் சொன்ன மார்க்ஸியர்கள் அப்படியல்ல அவர் எங்கெங்கே அச்சமூக அமைப்பை கடுமையாக எதிர்க்கிறார் என மேற்கோள் காட்டினார்கள். விளைவாக குழப்பமே மிகுந்தது. முரணியக்கம் என்ற  தத்துவக் கொள்கை மீதான பரிச்சயமின்மையே இதற்குக் காரணம். இயங்கியல் என்ற சொல்லை முரண்பாடு என்றஒலிவரும்படி எப்படி மொழிபெயர்த்து பயன்படுத்தியிருந்தாலும் இக்குழப்பம் தவிர்க்கப்பட்டிருக்ககூடும் இ எம் எஸ்ஸின் அணுகுமுறையில் முரண்பட்டு முன்னகர்தல் என்ற நோக்கு எல்லா விஷயங்களிலும் செயல்படுகிறது. அப்பட்டமான ஒரு சுரண்டல் அமைப்பு உருவாக்கும் கலைகலாச்சாரம் அதை நேரடியாக பிரதிபலிக்கும் பிற்போக்கு சக்தியாக இருக்கவேண்டிய அவசியமில்லை. அவ்வமைப்பின் நேரடியான வாக்குமூலமாக , கருத்தியல் கட்டுமானமாக அதைக் காண்பது தவறானது. அது அவ்வமைப்பை அழிக்கும், மீறிச்செல்லும்,துடிப்பைவெளிப்படுத்துவதாகவும் அமையலாம். துஞ்சத்து எழுத்தச்சனின் காலகட்டத்தை கேரள வாழ்வின் மிக கொடுமையான நிலப்பிரபுத்துவச் சுரண்டல் காலகட்டமாக காண்கிறார் இ எம் எஸ் . எழுத்தச்சன் அவ்வமைப்பின் பிரிக்கமுடியாத புள்ளி . ஆனால் அவரது இலக்கியப்படைப்புகளே கேரளத்தின் முதல் முக்கியமான முற்போக்கு நகர்வு என்கிறார் . கொடுமையான சுரண்டலின் சாரம் விடுதலை உத்வேகமாக மலர்வதை காண்பதனாலேயே குமாரனாசான் போன்ற முற்போக்கு உத்வேகம் மிக்க கவிஞரின் ஆக்கங்களில் நிலப்பிரபுத்துவக் கூறுகள் வலுவான அழகியல் அடிப்படையை அமைப்பதையும் அவர் கண்டடைந்தார். இ எம் எஸ்ஸின் ஆய்வுகளைப்பற்றி சொல்ல வரும் பி .கோவிந்தப்பிள்ளை [இ எம் எஸ் முழுத்தொகைநூல்கள் பகுதி 2 முன்னுரை] இவ்வாறு சொல்கிறார். ” இ எம் எஸ் கைக்கொண்ட நிலைப்பாடுக்கு இரு கூறுகள் உண்டு. ஒன்று அவர் இன அடிப்படையிலான வரலாற்று ஆய்வுகளை முற்றாக நிராகரிக்கிறார். இரண்டு சமூகத்தை புரட்டிப்போடும் முக்கியமான மாற்றங்கள் ஒருபோதும் வெளித்தூண்டுதலினாலோ பாதிப்பினாலோ வருவதில்லி அச்சமூகத்தின் உள்ளைர்ந்த முரண்பாடுகளின் விளைவாகவே வரும் என்ற மார்க்ஸிய அடிப்படையை அவர் வலியுறுத்துகிறார்”

பார்வையில் தத்துவார்த்த செறிவு காரணமாகவே இ எம் எஸ் தவறாக புரிந்துகொள்ளப்படதுண்டு. ஆனால் அது பெரிதும் அறிஞர்களைல்தான் என்பதை எண்ணினால் வியப்பு ஏற்படுகிறது.  எளிய வாசகனுக்கு எவ்வித சிரமமுமில்லை .அவரது நடை , சொல்லாட்சிகள் எளியவை. கூறும் தோரணை மிக நேரடியானது. என் இருபது வயதில் எவ்வித சிரமமும் இல்லாமல் அவரது சிக்கலான நூல்களை படித்துசென்றிருக்கிறேன். அவ்வறிமுகமே இல்லாத தமிழ்ச்சூழல் அவரை மேடைப்பேச்சு வசைகளைல் எதிர்கொண்டமை இயல்பே. இ எம் எஸ் இறந்த காலத்தை எப்போதுமே பிற்பட்ட காலமாக உதறி முன்னகர வேண்டிய சுமையாக மட்டுமே பார்க்கும் ‘ தூய ‘,’ஸ்டாலினிஸ’ மார்க்ஸிஸிட் என்பதை நினைவில் கொள்ளவேண்டும் . அப்படி முன்னகர தேவையான கருத்துக்களை, மனநிலைகளை அந்த பிற்பட்ட சூழலே உருவாக்கி அளித்துள்ளது என்பதும் இன்றைய முற்போக்கு அவற்றின் நீட்சியாக மட்டுமே சாத்தியம் என்பதும்தான் அவர் சொல்லமுனைவது அவரை புரிந்துகொள்ள அவரது இந்த முரணியக்க ஆயுதம் மீதான தெளிவான புரிதல் அவசியம்.

இ எம் எஸ்ஸின் பார்வையில் பண்டைய கேரளம்
=====================================

இ எம் எஸ் எழுதிய முதல் முக்கிய நூல் என்ற தகுதிக்குரியது ‘கேரளம் மலையாளிகளின் தாய்நாடு’ என்ற  நூல். அவர் காங்கிரஸ் காரராக இருந்தபோது இரு சிறுநூல்கள் வந்துள்ளன[ 1917, ஜவகர்லால் நேரு] .அவர் கம்யூனிஸ்ட் ஆன பிறகு வெளிவந்த இரு நூல்களுமே கேரள தேசிய தனித்துவம் குறித்தவை என்பதை நாம் கூர்ந்து கவனிக்கவேண்டும். 1943 ல் வெளிவந்த ‘கேரள விவசாய இயக்கங்களின் எளிய வரலாறு’  , 1946 ல் வெளிவந்த ‘ஒன்றேகால்கோடி மலையாளிகள் ‘ என்ற  இரு சிறுநூல்கள் கேரள கலாச்சாரத்தை பொறுத்தவரை  ஒரு புதிய யுகத்தின் துவக்கப்புள்ளிகளைகும். 1948ல் வெளிவந்த கேரளம் மலையாளிகளின் தாய்நாடு 1948 வரையிலான கேரள கலாச்சாரத்தின் வளர்ச்சியை விளக்கும் முக்கியமான ஆக்கமாகும். இந்நூலில் இ எம் எஸ் கேரள கலாச்சாரத்தின் வரலாற்றுப்பின்புலம் , அதன் தனியடையாளங்கள் ,அதன் எதிர்காலத்தின் திசை  ஆகியவற்றை மார்க்ஸிய அடிப்படையில் வகுக்கமுயல்கிறார். எம் என் ராய், ரஜனி பாமி தத் , முதலியவர்கள் மார்க்ஸிய அடிப்படையில் வரலாற்றய்வை நிகழ்த்துவதற்கு முன்னோடியாக அமைந்தார்கள் என்றாலும் அவர்களுடைய ஆய்வுகள் இந்திய வரலாறு என்ற பொதுவான [macro] தளத்தை சேர்ந்தவை. இ எம் எஸ்ஸின் வரலாற்றய்வு கேரள்ம் சார்ந்த நுண் ஆய்வாகும்[micro] வகையை சேர்ந்தது .அவ்வகையில் அவர் முக்கியமான முன்னோடி. பின்னாட்களில் வந்த டி டி கோஸாம்பி ரொமீலா தாப்பர் முதலிய மார்க்ஸிய வரலாற்றாய்வாளர்களுக்கு அவரே முன்னோடி .ஆனால் துரதிருஷ்டவசமாக அவரை அவர்கள் அவ்வகையில் பொருட்படுததவில்லை. அவர்கள் கனத்த ஆய்வுக்கு பின் வந்த முடிவுகள் பலவற்றை கால் நூற்றாண்டு மு8ன்பே இ எம் எஸ் தொட்டுவிட்டிருந்தார் என்றாலும். [குறிப்பாக கோசாம்பியில் ஒரு ‘வடக்கு முகம்’ காணப்படுகிறது என்பது என் கணிப்பு]

தேசிய, உபதேசிய வரலாறுகளை ஆக்குபவர்கள் ‘பக்த’ வரலாறுகளையே எழுதுவது வழக்கம் .குறைந்தபட்சம் அப்படித்தான் அது தொடங்கும். கேரள தேசிய கற்பனையின் முதல் சிந்தனையாளைர் இ எம் எஸ் எந்பதில் ஐயமில்லை ஆனால் அவரது அணுகுமுறை கேரள தேசியவாதிகளைச் சலிப்படைய வைக்குமளவுக்கு நிதானமான ஒன்று.   . வரலாறு என்ற புறவய அமைப்பு ஒன்று இல்லை என்றும் வற்கங்களின் ஆசைகள் மற்றும் நோக்கங்களுக்கு ஏற்பவே வரலாறு சமைக்கப்படுகின்றது என்றும் இ எம் எஸ் சொல்கிறார், பல பிற்கால வரலற்றாசிரியர்களும் இதை சொல்லியுள்ளனர் . கேரள வரலாறு மூன்று அதிகார கோணக்களில் இருந்து எழுதப்பட்டிருக்கிறது என்று இ எம் எஸ் வகுக்கிறார் . 1] கேரள நில உடைமையாளர்கள்[ஜன்மிகள்] அதாவது முக்கியமாக நம்பூதிரிகள் 2] வெள்ளைய ஆக்ரமிப்பாளர்கள் 3] பிராமணர் அல்லாத இந்துக்கள் மற்றும் ஹிந்துவல்லாதாரிலிருந்து உருவாகி வந்த நவமுதலாளிகள் . கேரளப்பழம,கேரள மகாத்மியம் முதலிய ஐதீக நூல்கள் ;  கொட்டாரத்தில் பாச்சு மூத்தது , பி சங்குண்ணிமேனன் ,வேலுப்பிள்ளை போன்றவர்கள் எழுதிய திருவிதாங்கூர் சரித்திரங்கள் போன்றவை முதல்வகைப்பட்டவை. பிரிட்டிஷ் வரலாய்வாளர்களுக்கு ஐதீக வரலாறுகளை ஏற்கமுடியாது. தங்களுக்கு அடித்தளைமாக இருந்த ஜன்மி வற்கத்தை நியாயபடுத்தவும் வேண்டும். ஆகவே அவர்கள் ஐதீகங்களுக்கு புதிய அறிவியல் விளக்கங்கள் அளித்தும் ஜன்மி வற்கத்தை நியாயப்படுத்தும் தகவல்களை சேர்த்தும் ஒரு வரலாற்றை உருவாக்கினார்கள் . இவ்விரு அதிகார மையங்களையும் எதிர்த்து உருவாகிவந்தது  மூன்றாவது அதிகார மையம். இளங்குளம் குஞ்ஞன் பிள்ளை போன்றவர்கள் ஆக்கிய வரலாறு இத்தகையது என்கிறார் இ எம் எஸ் .

இதில் முதல் மற்றும் மூன்றாம் தரப்புகளுக்கு இறந்தகாலப் பெருமை மிக முக்கியமானது .தங்களுக்கு இறந்தகாலம் ஆதிக்கத்துக்கான உரிமையை அளிக்கிறது என்று இவ்வரலாறுகள் மூலம் இவர்கள் நிரூபித்தாகவேண்டும். ஆக நான்காவது ஒரு வரலாற்று தரப்பு உருவாகி வந்தாக வேண்டும், பாட்டாளிகளின் வரலாறு. காலகாலமாக வரலாற்றுக்கு வெளியே நிறுத்தப்பட்ட மக்களின் , சுரண்டப்பட்ட மக்களின் வரலாறு அது. அதை உருவாக்குவதற்கான முன்வரைவை உருவாக்கவே இ எம் எஸ் முயல்கிறார் . கேரளம் இம்மக்களுக்கு உரியது என்ற அடிப்படையில் இவர்களுக்கு அவ்வரலாறு அமையவேண்டும் என்கிறார் [கேரளம் மலையாளிகளின் தாய்நாடு நான்காம் பதிப்பின் முன்னுரை, மற்றும் கேரளத்தின் தேசியப் பிரச்சினை [ஆங்கிலம்,1952] நூலின் முதல் அத்தியாயம்] ஆகவே பாட்டாளி வற்க வரலாற்றாசிரியர்கள் முதல் இரு வரலாற்றுத் தரப்புகளையும் புறவயமாக ஆராய்ந்து அவற்றில் ஏற்கத்தக்கவற்றைமட்டும் ஏற்று பிறவற்றை நிராகரித்துவிடவேண்டும் என்கிறார் .

இந்த கோணத்தில் தமிழ் சம்ஸ்கிருதம் என்ற இரு வளமான மரபுகளின் வாரிசான  முதிர்ந்த சமூகம்தான் கேரளம் என்ற உரிமைகொண்டாடலை அவர் ஏற்கவில்லை. அவரது முன்னோடியான ஆய்வுநூல் ‘கேரளம் மலையாளிகளின் தாய்நாடு’ இது குறித்த ஆழமான ஐயங்களை எழுப்பியபடியேதான் தொடங்குகிறது . கேரள கலாச்சாரத்தை சம்ஸ்கிருதம் நோக்கிச் செலுத்துபவர்கள் ஜன்மிகள், தமிழ் பழைமை நோக்கி செலுத்துபவர்கள் நவ முதலாளிகள். தமிழகத்தில் உருவாகி வந்த திராவிட இனவாத வரலாற்று ஆய்வுநோக்குகளை  இ எம் எஸ் முற்றிலும் முதலாளித்துவ நோக்கம் கொண்டவை என்றும் அடிப்படையில் பாட்டாளிகளுக்கு எதிரானவை என்றும்தான் மதிப்பிடுகிறார். கேரள இடதுசாரி சிந்தனையாளைர்கள் ஏறத்தாழ அத்தனைபேருமே இங்குள்ள திராவிட இயக்க கலாச்சார அரசியலையும் வரலாற்றாய்வையும் நசிவுப்போக்கு கொண்ட நவ முதலாளித்துவநோக்கு என்றே அடையாளப்படுத்தியுள்ளனர். முக்கியமாக கெ தாமோதரன், சி அச்சுதமேனன் ஆகியோரை சொல்லவேண்டும். சி .அச்சுதமேனன் அவர்களின் இ வி ராமஸ்வாமி நாய்க்கர் [1971] என்ற விரிவான கட்டுரை இவ்வகையில் முக்கியமானது. ” திராவிட இயக்கத்தின் சாராம்சம் என்ன? இந்தியாவின் பெருமுதலாளிகளுக்கும் தமிழக பூர்ஷ¤வாக்களுக்கும் இடையேயான முரண்பாடுதான் அது. … ஆனால் இதற்கு மக்களைதரவு கிடைக்க காரணம் வடக்கிலிருந்து ஒரு ஹிந்தி கலாச்சாரம் தமிழகத்துக்கு மேல் சுமத்தப்பட்டு அதன் புராதனமான கலாச்சாரம் அழிக்கப்படுகிறது என்று மக்கள் ஐயமுற்றதும் அதற்கு வழிவகுத்த மைய அரசின் பொறுப்பற்ற நடவடிக்கைகளுமாகும் . இந்த ஹிந்தி கலாச்சாரத்தை ஆரிய கலாச்சாரம் என்று விளக்கி அதற்கு எதிராக ஏற்கனவே உருவாகியிருந்த இனவாத உணர்வை பயன்படுத்திக் கொண்டது  திராவிட இயக்கம் ” ஆகவே திராவிட இயக்கம் உருவாக்கிய தமிழ் பெருமிதங்களையும் அதை கேரள வரலாற்றில் அப்படியே போட்டுப்பார்த்த இளங்குளம் குஞ்ஞன் பிள்ளை போன்றவர்களின் ஆய்வுகளையும் இ எம் எஸ் நிராகரிக்கிறார் .
கேரள தேசிய உருவாக்கத்தில் இ எம் எஸ்ஸின் பங்களிப்பு
==============================================

கேரள தேசியம் என்ற உருவகத்தின் பிதாமகர்களில் ஒருவராக இ எம் எஸ்ஸை சொல்வது மிகையல்ல. மலையாள இலக்கண ஆசிரியரான எ ஆர் ராஜராஜ வர்மா , மகாகவி வள்ளத்தோள் நாராயணமேனன் , வரலாற்றாசிரியர் இளங்குளம் குஞ்ஞன் பிள்ளை  போன்ற முன்னோடிகளின் வரிசையில் அவர் வைக்கப்பட வேண்டும். ” கேரளத்தின் சரித்திரத்தையும் கலாச்சாரத்தையும் பற்றி நான் ஆராய ஆரம்பித்தது 1930களிலாகும். அன்று வளர்ந்து வந்ந்துகொண்டிருந்த மலாபார் விவாசாயிகள் இயக்கத்திற்குறேற்பட்ட பிரச்சினைகளைப்பற்றிய ஆய்வின் நீட்சியாகவே இது நடைபெற்றது . ஜன்மி அமைப்பின் பிறப்பு தத்துவ கலாச்சார அடிப்படைகள் ஆகியவற்றைப்பற்றி ஆராயவேண்டிய அவசியம் ஏற்பட்டது” என்று இ எம் எஸ் குறிப்பிடுகிறார் [ இலக்கியத்திலும் சரித்திரத்திலும் மார்க்ஸிய கண்ணோட்டம் என்ற கட்டுரை 1970] இதையொட்டி 1939ல் மலபார் கூட்டுரு சொத்துரிமை சாட்டம் பற்றி ஆராய்ச்சி செய்ய மதறாஸ் மாகாண அரசு [சென்னை ராஜதானி] உருவாக்கிய குட்டிகிருஷ்ணமேனன் கமிட்டியில் உறுப்பினரானார். அதில் பெரும்பான்மையினராக இருந்த ஜன்மிகளின் கருத்துக்கு எதிராக விரிவான ஒரு மாற்றுக்கருத்தை இ எம் எஸ் பதிவு செய்தார்.  இது கேரளத்தின் அடிப்படையான உற்பத்தி அமைப்பு பற்றிய ஒரு சித்திரத்தை அவருக்கு அளித்தது. இதை தொடர்ந்து அன்று மூன்று பகுதிகளாக [ மலபார் ஆங்கில ஆட்சியில் இருந்தது. கொச்சி தனிநாடாகவும் திருவிதாங்கூர் தனிநாடாகவும் இருந்தது ] இருந்த கேரள நிலப்பரப்பை ஒரே ஆட்சிப்பரப்பாக ஆக்கி ஒரு ஒருங்கிணைந்த கேரளத்தைருருவாக்கவேண்டும் என்ற கோரிக்கையை தீர்மானமாக  இ எம் எஸ் முன்வைக்க கம்யூனிஸ்டு கட்சி அங்கீகரித்தது. உண்மையில் கேரளம் என்ற மைப்பை பற்றிய முதல் ‘அத்காரபூர்வமான  கனவு ‘ இதுதான். இது அன்று எந்த அளௌக்கு அபத்தமாக கருதப்பட்டது என இப்போது ஊகிப்பது கஷ்டம். அக்கருத்தை மக்களிடையே பரப்பும் பொறுப்பை ஏற்றுகொண்ட இ எம் எஸ் அதன் பகுதியாக எழுதிய துண்டுபிரசுரங்களின் மறுவடிவமே 1945 ல் வெளிவந்த ஒன்றேகால்கோடி மலையாளிகள் என்ற மிகப்பிரபலமான சிறு நூல். இதை நினைவுக்கூரும் இ எம் எஸ் இது பி சுந்தரய்யாவின் விசால ஆந்த்ரா என்ற நூலுக்கும் பவானி சென் எழுதிய நூதன் பங்காள் என்ற நூலுக்கும்மைளைத்தன்மை கொண்டது என்று சொல்கிறார்,[ அதேகட்டுரை] இதே விஷயத்தை தேசிய அளவில் விவாதிக்கும்பொருட்டு அவர் எழுதி£ய இரு ஆங்கில நூல்கள் வந்தன.  1952ல் வந்த National Question in Kerla  1966 ல் வெளிவந்த  Kerla Yesterday today and tomorrow ஆகியவை முக்கியமானவை

[தொடரும்]

முந்தைய கட்டுரைஆஸி கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅனல் காற்று, கடிதம்