யானைப்பலி

திருவிழாவில் யானை மிரள்வது என்பது கேரளத்தின் முக்கியமான கேளிக்கை நிகழ்ச்சி. எந்தத் திருவிழாவையும் யாரோ ஒருவர் ‘அய்யோ, ஆனை வெரெண்டே’ என்ற ஒற்றைவரிக் கூச்சலைக்கொண்டு கலக்கிவிடலாம். நானெல்லாம் சின்னவயதில் குறைந்தது நான்குமுறையாவது அப்படி குடல்பதறி ஓடிவந்ததுண்டு. ஒரேஒருமுறை உண்மையிலேயே யானை மிரண்டது.

மஞ்சாலுமூடு பகவதியம்மன் கோயிலில். முதுகில் சாமியுடன் சென்றுகொண்டிருந்த பாறசால கேசவன் சட்டென்று நின்றுவிட்டது. பாகன் என்ன செய்தாலும் நகரமாட்டான். பாகன் சட்டென்று துரட்டியை எடுத்து அதன் காதில் செருகி இழுத்தான். கேசவன் பாகனை துதிக்கையால் லேசாக தட்டியதுபோல் இருந்தது. பாகன் கயிறுகட்டி தூக்கி எடுத்தது போல காற்றில் எம்பி விழுந்தான். யானை தலையைக் குலுக்கி பிளிறியபடி திரும்பியது. யானை தலைகுலுக்குவதென்பது மிகமிக அபாயகரமான ஒரு சைகை.

மொத்தகூட்டமும் எதிர்ப்பக்கமாக ஓட, யானை வேகமாகப் பக்கவாட்டில் சென்று, ஒரு மண்சரிவில் உடல் குறுக்கி இறங்கியது. குடைபிடித்தவர் கீழே குதித்துவிட்டார். போற்றி மட்டும் பீதியில் பிதுங்கிய முகத்துடன் மேலேயே அசைந்தாடிக்கொண்டிருந்தார். ஒரு மரத்தை நோக்கி யானை போகும்போது மேலே இருந்த போற்றி கீழே உருண்டார். அடி ஏதுமில்லை. பதறியபடி அவர் ஓடுவதை யானை திரும்பிப்பார்த்து ஒரு காலடி எடுத்து வைத்தபின் சரி வேண்டாம் என்று மரத்தடியில் சென்று நின்றுகொண்டது

பாகன் கையில் கம்புடன் பின்னாலேயே சென்று யானையை அதட்டினார். வயதான பாகன். இளம்வயது உதவியாளன் கூட்டத்தில் மறைந்துவிட்டான். யானை பாகனை நோக்கித் தலை குலுக்கி முன்னால் வந்தது. பின் மீண்டும் மரத்தடிக்கே சென்றது. யானை திரும்பித் தன்னை நோக்கி வரும்போது பாகன் பின்னால் ஓடினால் யானை மசியாது. அந்தக் கணத்தில் அப்படியே நின்று கூர்ந்து நோக்கி திடமான குரலில் கட்டளைபோடுவதில்தான் பாகனின் வெற்றி இருக்கிறது.

அதற்கு வெறும் தைரியம் மட்டும் போதாது. கட்டளைத்திறன் வேண்டும். யானையை மிக நன்றாகத் தெரிந்திருக்கவேண்டும். அனைத்தையும் விட மேலாக யானைக்கும் தனக்குமான தூரம், அது திரும்பிவரும் வேகம், அந்த நிலஅமைப்பு அனைத்தைப்பற்றியும் கணக்குப் போடத் தெரிந்திருக்கவேண்டும். நிர்வாகவியலில் ஒரு முக்கியமான படிமமாகவே இதை வைக்கலாம்.

மூன்றுமுறை கொம்புகுலுக்கிய யானை பின் மெல்ல அமைதியாகியது. ஒவ்வொருமுறையும் பாகனின் அதட்டல் அதிகரித்துக்கொண்டே சென்றது. நான்காம் முறை அவர் யானைக்கு மிக அருகே சென்றார். அந்தக்கணம் மூவாயிரம் ஜோடிக் கண்கள் நிலைகுத்தி அந்த பாகன் மேல் பதிந்திருந்தன. மூச்சடக்கப்பட்ட அமைதி நிலவியது. அதுவும் ஒரு மாபெரும் நிர்வாகவியல் படிமம். அத்தனை பேர் தன்னைக் கவனிக்கு அதி உச்ச கணத்தில் கைநடுங்காமல் இருப்பதும் சரி மிகையாக எதையாவது செய்யாமலிருப்பதும் சரி அபாரமான மனக்கட்டுப்பாட்டால்தான் சாத்தியம்.

யானை மசிந்தது. பாகன் அதன் காலடியில் குனிந்து இழுபட்டு பொடிமண்ணில் மூழ்கி கிடந்த சங்கிலியை எடுத்து மறுகால் சங்கிலியுடன் தளைத்தார். மொத்த கூட்டமும் ஆராவாரம்செய்தது. காட்டில் காற்றுநுழைந்தது போல ஒரு இயல்பான வியப்பொலி.

இந்த அனுபவத்தை எல்லாம் நான் ஒரு கதையாக ஆக்கினேன். காட்டில் தன்னந்தனியாக யானையை அடக்கப்போகும் ஒரு பாகனின் கதை. யானை ஏன் அடங்கிப்போகிறது என்பது மிகப்பெரிய வினா. அந்த வினாவுக்கான என் பதில் அது.

ஆனால் சிலசமயம் பாகன் தோற்றுவிடுவதுண்டு. பெரும்பாலும் முதல்பலி பாகனேதான். யானைப்பாகனுக்கு கொம்பிலே யமன் என்று சொல்லாட்சி உண்டு. தலைமுறை தலைமுறையாகப் பாகன்கள் யானையால் பாகன்கள் கொல்லப்பட்டாலும் வாரிசுகள் மீண்டும் பாகன்களாக வந்தபடியேதான் இருப்பார்கள். ’என் சோறும் வாய்க்கரிசியும் இதுதான்’ என ஒரு பாகன் தன்னுடைய யானையைச் சுட்டிக்காட்டி சொன்னது நினைவிருக்கிறது.

தீராத குழந்தைத்தன்மையுடன் தன்னருகே செவியாட்டி நிற்கும் கரிய உருவம் காலரூபம் என்று தெரிந்தேதான் பாகன் அதைப் பராமரிக்கிறார். குளிப்பாட்டி உணவூட்டி கொஞ்சிக் குலவிக் கூட வாழ்கிறார். கட்டிலில் படுப்பதுபோல யானைமேல் படுத்து இரவுறங்கும் பாகனைப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொருநாளும் மரணத்தைக் குலவிக்கொண்டிருப்பதென்பது ஒரு பேறு. எல்லாமே புல்லுக்கு நிகராகிவிடுகிறது. பெரும்பாலான பாகன்கள் குடிகாரர்கள், பொறுப்பற்றவர்கள், எதையும் பொருட்படுத்தாதவர்கள்.

யானையைக் கோயிலில் அலங்கார மிருகமாக வளர்க்கக் கூடாது என்று கோரி அரசுக்கு மனுகொடுக்கவும், நீதிமன்றத் தடைபெறவும் போராடிவரும் சூழியல் குழுக்களுடன் நானும் சேர்ந்து செயல்படுகிறேன். அதேபோல யானையை சுமை இழுக்க, காடுகளில் மரம் வெட்டப் பயன்படுத்துவதை முழுமையாகவே கைவிடவேண்டும். இதற்குப் பெரும் மரவியாபாரிகளின் எதிர்ப்பு உள்ளது. முக்கியமாக இம்முயற்சிகளுக்கு இந்துத்துவ அரசியல்வாதிகளால் மதச்சாயம்பூசப்படுகிறது. அதைத் தீவிரமாக எதிர்த்து எழுதி வருகிறேன்.

இங்கே குறிப்பிடப்படவேண்டிய இன்னொரு விஷயமும் உண்டு. நம் நாட்டில் உழுவதற்கும் வண்டி இழுப்பதற்கும் காளைகளைப் பயன்படுத்துவது குறைந்தபோது படிப்படியாக நம்முடைய அற்புதமான காளை இனங்களே அழிந்து வருகின்றன. காங்கேயம் காளைகள் அடுத்த தலைமுறையில் இருக்குமா என்றே சிலர் சொல்கிறார்கள். யானையும் அப்படி அழிய விடக்கூடாது. யானையின் வாழ்விடமான காடு கடுமையான சட்டதிட்டங்களுடன் காக்கப்பட்டாகவேண்டும்.

யானைமீது கேரளத்தில் பெரிய பிரியம் உண்டு. கேரளத்தின் தனித்தன்மையே யானைதான் என்று நம்புகிறார்கள். பெரும்பாலான கோயில் விழாக்கள் உண்மையில் யானை விழாக்களே. யானையைக் கோயிலுக்குப் பயன்படுத்துவதை ஆதரிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் கோயில்களில் விழாநிர்வாகப்பொறுப்பில் இருப்பவர்கள். அவர்களுக்குக் காலத்தைப் பின்னால்கொண்டுசெல்லலாம் என எண்ணமிருக்கிறது. ஜல்லிக்கட்டைத் தடைசெய்வதற்கு எதிராகத் தமிழகத்தில் எழும் அதே பண்பாட்டுப் போர்க்குரல்தான்.

சமீபத்தில் கேரளத்தில் நடந்த பல நிகழ்வுகள் அந்த மதநம்பிக்கையாளர்களையும் யோசிக்கச்செய்திருக்கின்றன. தொடர்ச்சியாகத் திருவிழாக்களில் யானைகள் மிரண்டு உயிர்ப்பலி நிகழ்கிறது. இவ்வளவு அடிக்கடி இது முன்னால் நிகழ்ந்ததில்லை. பலிகளும் இவ்வளவு இல்லை. இது ஏன் நிகழ்கிறது என்பது சிக்கலான வினா. விழாவில் யானைகளைப் பயன்படுத்துவது சென்ற காலங்களில் சாதாரணமாக நடந்து வந்த விஷயம்தானே?

பழையகாலமே வேறு. கேரளத்தின் மிகப்பெரிய திருவிழாவான திரிச்சூர் பூரத்துக்கே இரண்டாயிரம் பேர் வந்தால் அதிகம் என்ற நிலை முப்பதுகள் வரை நிலவியது. போக்குவரத்து வசதிகள் குறைவு. பல சாதிகள் பயணம் பண்ணவே அனுமதிக்கப்பட்டதில்லை. இன்று ஒரு லட்சம்பேர் வரை வருகிறார்கள். அவர்களைக் கட்டுப்படுத்துவதே பெரும் சவாலாக உள்ளது. யானைமிரண்டால் வரும் கலவரம் எல்லா ஒழுங்குகளையும் சிதறடித்துப் பெரும் அழிவை உருவாக்குகிறது. வெறும் கொள்ளை நோக்குடன் கலவரத்தை உருவாக்குவதற்காகத் திட்டமிட்டு யானையை மிரளச்செய்யும் வழக்கமும் உள்ளது என்கிறார்கள்.

இரண்டாவதாக இன்று நாம் ஊரெங்கும் போட்டு வைத்திருக்கும் தார்ச்சாலைகள் சிமிண்ட் தளங்கள் யானைகளின் கால்களுக்கு மிகமிக அசௌகரியமானவை. சமீபத்தில் யானை மிரண்ட இடங்களில் எல்லாமே யானை கொதிக்கும் தார்ச்சாலையில் மிதித்ததே காரணம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். காட்டில் ஈரமான தரையில் புல்மேட்டிலும் சேற்றிலும் நடக்கும் நம்மூர் யானைகளால் மேமாத சாலையின் சூட்டைத் தாங்க முடிவதில்லை.

இன்று வாகனப்போக்குவரத்தும் ஒலிப்பெருக்கிகளும் அதிகரித்து உருவாகியிருக்கும் ஓசைப்பெருக்கம் யானைக்கு தாங்கமுடிவதாக இல்லை. யானையின் காது மிகமிக நுட்பமானது. நம்மைப் போலப் பலமடங்கு அதிகமான ஒலிகளைக் கேட்கும் யானை திருவிழாக்கள் அல்லது நகரத்துச் சந்திப்புகளில் எழும் நம்மாலேயே தாங்கமுடியாத ஓசையை எப்படித் தாங்குகிறது என்பதே ஆச்சரியம். அதேபோல யானையின் நாசியும் மிக நுட்பமானது. நாம் இன்று சூழலில் அள்ளி வீசும் ரசாயனங்களின் வீச்சம் யானையை நிலைகுலையச் செய்கிறது.

கடைசியாக, இன்றைய நெரிசலான சாலையில் நிலைகுலைந்த யானை புகுவதென்பது மிக அபாயகரமானது. யானைக்கும் மக்களுக்கும். இன்றைய யானைகள் பெரும்பாலும் போதிய உணவு கொடுக்கப்படாதவை. தென்னையின் நாடான கேரளத்திலேயே யானைகளுக்குத் தேவையான பச்சையுணவு கிடைப்பதில்லை என்னும்போது தமிழகத்தில் வறண்ட சூழலில் கோயில் கல்மண்டபத்தில் வளர்க்கப்படும் யானையைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். ஒருமுறை ஒரு கோயில்யானைக்குப் பழைய தாள்களை உணவாகப் போட்டிருப்பதை, அது மென்று தின்றுகொண்டிருப்பதைப் பார்த்துக் கண்ணீர் விட்டிருக்கிறேன்.

காலம் மாறிவிட்டிருக்கிறது. எத்தனையோ ஆசாரங்களை நாம் கைவிட்டிருக்கிறோம். மாற்றியிருக்கிறோம். இந்து மதம் என்பது இந்தச் சடங்குகளைச் சார்ந்து செயல்பட்டாகவேண்டிய ஒன்றல்ல. அதன் சாராம்சம் ஆன்மீகமானது, தத்துவம் சார்ந்தது. இவையெல்லாம் வெளிப்பாடுகளே. இவற்றைப் பிடிவாதமாகத் தக்கவைத்துக்கொள்ள எண்ணுவதென்பது கண்மூடித்தனம். முன்பு உடன்கட்டை ஏறுதலையும் பொட்டுக்கட்டுதலையும் தீண்டாமையையும் எல்லாம் ஆதரித்த அதே மனநிலை.

இன்றைய சூழலில் அலங்காரமிருகமாக யானையை வளர்ப்பதை முழுமையாகத் தடைசெய்யவேண்டும். ஆலயங்களில் யானையை வளர்ப்பதும் ஊர்வலங்களுக்குக் கொண்டுசெல்வதும் நிறுத்தப்படவேண்டும். யானை தளைக்கப்பட்டு வளர்க்கப்படவேகூடாது. அதன் இயற்கையான சூழல்களில் மட்டுமே அது வாழவேண்டும். இன்றைய நாகரீகத்துக்கு நாம் யானைகளை பலிகொடுக்கக் கூடாது.

யானை என்ற இந்த மகத்தான உயிரினத்தை நாம் பிரம்மசொரூபமாகவே எண்ணி வந்திருக்கிறோம். உயிரின் பெருவல்லமை வெளிப்படும் ஊற்றுமுகம் அது, ஆலமரம் போல , கடலாமை போல. உயிராக வெளிப்படுவது பிரபஞ்ச சக்தியேதான். அவ்வாறு நாம் யானையை வழிபடுவது ஆத்மார்த்தமானது என்றால் வெற்றுச்சடங்குகளுக்காக யானையை அழிக்கலாகாது. அதன் கண்ணீர் மீது நம்முடைய ஆலய மணியோசை முழங்கலாகாது.

கீழே கொடுத்திருக்கும் இரு சுட்டிகளும் என்னை மிகவும் கொந்தளிக்கச்செய்தன. ஒன்று கேரள ஆலயமொன்றில் யானை மிரளும் காட்சி. அதில் உயிர்ப்பலி நிகழும் விதம், அந்தப் பாகனின் பரிதாபமான மரண அலறல். எனக்கு அந்தக்காட்சியிலும் யானைமீதே பரிதாபம் வந்தது. தன்னால் புரிந்துகொள்ளவே முடியாத நவீனநாகரீகம் என்ற பேய்க்கு எதிராகத்தான் அந்த வனஉயிர் கொந்தளித்து மூர்க்கமாக எதிர்வினையாற்றுகிறது.

http://www.youtube.com/watch?v=XWmToj9Xy6s&feature=related

இரண்டாவது சுட்டியில் சத்தீஸ்கர் மாநிலத்தில் வனக்காவலர்களால் காட்டுயானை அடித்தே கொல்லப்படுகிறது. காரணம் ஊருக்குள் வந்துவிட்டதாம். இப்படி அடித்துக்கொல்ல அரசாணையே துணை புரிகிறது. யானைகளைப் ‘பிடிக்க’ அரசு உத்தரவிடுகிறது. கல்லையும் கம்பையும் கொண்டு பிடிக்க முயல்கிறார்கள். கொல்கிறார்கள். பதினான்கு யானைகள் இப்படி ஒரேகாட்டில் ஒரே வருடம் அடித்துக்கொல்லப்பட்டன.

அதை இதழாளர் மைக் பாண்டே ஆவணப்படம் எடுத்து உலகமெங்கும் கொண்டு சென்று காட்டியபின் இந்திய அரசு ஒப்புக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்தது. ஆனால் யானைகள் இன்றும் காடுகளில் பலவழிகளில் கொல்லப்படுகின்றன.அந்த ஆவணப்படம் கிரீன் ஆஸ்கார் எனப்படும் பண்டா விருது பெற்றது.

அந்தக் காணொளியில் யானை சாவதற்குள் வெண்குருதி கொட்ட யானையின் கொம்பை வனக்காவலர்கள் வெட்டி எடுக்கும் காட்சியே குரூரத்தின் உச்சம். அது எந்தப் பிரமுகர் வீட்டு வரவேற்பறையை அலங்கரிக்கும் என்று சொல்லமுடியாது.

எப்படிக் கோயில்யானைகளை வதைப்பதை பக்தர்கள் ஆதரிக்கிறார்களோ அப்படிக் காட்டுயானைகளைக் கொல்வதை விவசாயிகள் ஆதரிக்கிறார்கள். தடியும் தீயுமாக யானையைக்கொல்ல உற்சாகமாகக் கிளம்பிச்செல்லும் அந்த மக்களைப் பாருங்கள். செத்த யானையைப் புதைக்கும்போது ஒரு மாலை குழியில் வீசப்படுகிறது – அது கணேசன் அல்லவா?

யானை கோயிலில் சிறையிருக்கவேண்டும், காடுகளில் கொன்றழிக்கப்படவேண்டும். இதைத்தான் நாம் எதிர்பார்க்கிறோமா? நாம் நாகரீக மக்கள்தானா?

http://www.youtube.com/watch?v=8bG103hHkUU&feature=related

பார்க்க

http://www.walkthroughindia.com/wildlife/killing-incidents-of-wild-animals-in-india/

முந்தைய கட்டுரைஎழுத்தாளர்களை எதுவரை ஆதரிப்பது?
அடுத்த கட்டுரைஇரு கடிதங்கள்