பகடை-கடிதம்

அன்புள்ள ஜெ,

பெண் தன் சுயத்தை ஒளித்துக் கொண்டு பளிங்கறை பிம்பங்களாய்ப் பல்வேறு தோற்றங்களைக் காட்டி ஆணின் அகந்தையை அலைக்கழிப்பதை, தன்னை முடிவிலாத தோற்றங்களாகப் பெருக்கிக் கொண்டு சிவனை வெல்லும் மகாமாயையுடன் பொருத்தி விளக்கியதும் சட்டென்று “ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ்வுலகெங்குமாய் நின்றாள்” என்ற அபிராமி அந்தாதி வரிக்கு இந்த இடத்தில் வேறு அர்த்தம் தொனித்தது.

உமையும் சிவனும் ஆடும் பகடையாட்டம் என்னும் படிமம் எனக்கு சிறுவயதில் ஏற்பட்ட ஒரு அனுபவத்தின் வழியாக வேறு கோணத்தில் மனதில் பதிந்திருந்தது.

என் இளவயதில், சோழவந்தான் மாரியம்மன் கோயிலில் பத்து நாள் நடக்கும் வைகாசித் திருவிழா சினிமாவில் காட்டப்படும் ஒரு கிராமத் திருவிழாவின் சகல லட்சனங்களும் பொருந்தியதாக இருந்தது. வறண்டு நீண்ட மணல் வெளியாகக் காட்சியளிக்கும் வைகையில், சித்திரைத் திருவிழாவில் மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்குவதற்காகத் திறந்து விடப்பட்ட தண்ணீரின் ஈரம் மட்டும் அடியில் இருக்கும். நீரில்லாத வைகையில் தான் திருவிழாக் கடைகளும், மரணக் கிணறு, நாகக் கன்னி, குடை ராட்டினம், மாயக்கண்ணாடி, ப்ரொஃபசர் லாலின் இந்திரஜாலம், ஜயண்ட் வீல், வளையல் கடை, பீமபுஷ்டி அல்வா என்று அந்தப் பத்து நாள் மட்டும் தேவலோகம் கீழே வந்திறங்கும். மேலும் விதவிதமான சூதாட்டங்களும் கடைபரப்பி வைத்திருப்பார்கள். ரெண்டுங்கெட்டான் வயது பையன்களுக்குக் கண்ணெல்லாம் ‘குலுக்கு டப்பா’ க்காரர்கள் மீதே இருக்கும். அண்ணன்கள் தம்பிகளை வீட்டில் அழுது அடம்பிடித்து ‘திருலா’ பாக்க காசு வாங்கி வரவைத்து, ‘யார்கிட்டயும் போட்டுக்கொடுக்க மாட்டேன்’ என்று சத்தியம் வாங்கிக் கொண்டு குலுக்கு டப்பா விளையாடக் கூப்பிட்டு போவார்கள். ஒருநாள் நானும் அம்மனைத் தொழுது திருநீறு இட்டு ‘நிறையக் காசு அடிக்கனும்’ என்று பிரார்த்தித்துப் போயிருந்தேன். ‘விருட்டானெல்லாம் வெலகு…’ என்று விரட்டிக் கொண்டிருந்த குலுக்கு டப்பாக்காரன் கண்ணில் தெரிகிற மாதிரி ஐந்து ரூபாய் நோட்டை வைத்துக் கொண்டு நின்றேன். சாமியெல்லம் நன்றாகக் கும்பிட்டிருந்தேன், ‘ராஜால காசு வச்சா டபுள் அடிச்சிரும்’, இருந்தாலும் ஒரு பயம், விளையாட்டில் இறங்காமல் அண்ணன் உடலை ஒட்டி இருந்து பார்த்துக் கொண்டே நின்றேன்.

சற்று நேரத்தில் சாராய போதையில் தள்ளாடியபடி ஒருவன் வந்தான். நான்கு திசையையும் பார்த்து விரலை ஆட்டி, காதுகூசும் கடும் கெட்ட வார்த்தைகளால் திட்டினான். யாரையோ நோக்கி சவால் விட்டான், ‘ஓச்சுப்புருவேன்… எங்கிட்டயா? குடும்பத்தையே கொண்டுபுருவேன்..ஆள் தெரியாம ஆடுறீங்களாடீ..?’ , காறித் துப்பினான். எல்லாரும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். குலுக்கு டப்பாக்காரன் ஒரு கணம் பார்த்துவிட்டு இன்னும் சத்தமாக டப்பாவை உருட்டியபடி, காசு டபுள், ட்ரிபிள் அடிக்கப் போகும் யோகத்தைச் சொல்லி எல்லாரையும் அவன் பக்கம் இழுத்து விட்டான். குடிகாரனும் வந்து நூறு ரூபாயை வைத்தான். பணம் போயிற்று. ஒரு பெண் பெயரைச் சொல்லியபடி கெட்ட வார்த்தையால் வைதுவிட்டு மறுபடியும் பணம் வைத்தான், காசு அடித்தது, இன்னும் ஒரு கேவலமான கெட்ட வார்த்தையை அவள் பெயரைச் சொல்லித் திட்டி விட்டு மறுபடியும் இன்னும் அதிகமான பணம் வைத்தான். சட்டைப் பை, உள் பை, கை மடிப்பு, பச்சை பெல்ட் என்று விதவிதமான இடங்களில் நீட்டு வாக்கில் மடித்த, கசங்கிய ரூபாய் தாளை உருவி வைத்து ஆடிக் கொண்டே இருந்தான். பணம் வருவதும் போவதுமாகக் கொஞ்ச நேரம் போக்குக் காட்டியபடியே இருந்தது. எதற்கும் குலுக்கு டப்பாக்காரனின் முகத்தில் சலனம் இல்லை. கடைசியில் எல்லாப் பணமும் போனதும், அன்ட்ராயருக்குள் தேடி ஒரு கசங்கிய அம்பது ரூபாய் நோட்டை எடுத்துப் பார்த்துக் கொண்டே இருந்தான். ரெண்டாகக் கிழித்து ‘வந்தா வருது, போனா போது…. ராசாவுல அம்பது, ராணில அம்பது’ என்று இரண்டு துண்டுகளையும் வைத்தான். குலுக்கு டப்பாக்காரன் கொஞ்சம் கூடக் கண்டுகொள்ளாமல் அதைப் புறங்கியால் தள்ளிவிட்டு ‘ஃப்பூஊ…’ என குப்பையை ஊதித் தள்ளுவது போல ஊதினான். உடனே கெட்டவார்த்தைகளால் மறுபடியும் வையத் தொடங்கினான். குலுக்கு டப்பாக்காரன் அவன் இருப்பதையே அறியாதவன் போல டப்பாவை உருட்ட ஆரம்பித்தான். எல்லாரும் கட்டத்தில் காசுவைக்கத் திரும்பிவிட்டார்கள்.

குடிகாரன் கீழே விழுந்து கிடந்த கிழிந்த ஐம்பது ரூபாய் நோட்டுத் துண்டுகளைப் பொறுக்கி எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு எதுவோ புரிந்துவிட்டது போலக் கதறி அழுதான்.

எனக்கு அந்தக் காட்சி மனதில் அப்படியே பதிந்து போனது. அண்ணனுடன் அமைதியாக வீட்டுக்கு வந்துவிட்டேன்.

சிலசமயம் வாழ்க்கையை ரெண்டாகக் கிழித்து, ‘இது அல்லது அது’ என்று வைக்கும் போது, நம் கொதிப்பைக் கொஞ்சம்கூட மதிக்காமல், சம்பந்தமே இல்லாத ஒன்று நடக்கையில் தோன்றுவதுண்டு, சொக்கட்டான் உருட்டப்படுகையில் அடுத்து விழப்போவது எது என்பது அம்மையின் ஆசையும் இல்லை, அப்பனின் அதிகாரமும் இல்லை. எல்லாம் வெறும் சூதாட்டம் தான் போலும்.

நன்றி,
பிரகாஷ்.
www.jyeshtan.blogspot.com

முந்தைய கட்டுரைதுபாயில்-கடிதம்
அடுத்த கட்டுரைவளைகுடாவில்… 3