வளைகுடாவில்… 2

ஷார்ஜாவில் இரண்டாம் நாள் எட்டுமணிக்கெல்லாம் தயாராக இருந்தோம். பாலைவனத்தைக்காட்ட கூட்டிச்செல்வதாக சத்யா சொல்லியிருந்தார். சத்யா முந்தையநாள் நள்ளிரவில்தான் கிளம்பிச்சென்றிருந்தார். ஆனாலும் ஒன்பது மணிக்கு வந்துவிட்டார். நாங்கள் கிளம்பினோம்.

ஓமன் செல்லும் சாலை .கட்டிடங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சாதாரணமாக மாற ஆரம்பித்தன. ஒரு சாதாரண அரபு தேசம்போல. மணல்நிறமுள்ள சுவர்கள் கொண்ட இரண்டடுக்கு கட்டிடங்கள். கூசச்செய்யும் வெயிலின் விளைவான ஒரு வெறிச்சிடல். கார்களின் மேல்பக்கங்கள் கண்ணாடிப்பரப்புகளாக கண்களை வெட்டிவெட்டிச்சென்றன. பொதுவாக எந்த ஊர் என்ன இடம் என்பதைத் தெளிவாக மனதில் பதிவுசெய்யும் வழக்கம் எனக்கில்லை. இத்தகைய பயணங்களில் நம்மையறியாமலேயே நமக்குள் பதியும் பிம்பங்களே எழுத்தாளனாக எனக்கு முக்கியமானவை

இந்த சாலையில் நான் அதிகமான கறுப்பு அரபிகளைப்பார்த்தேன். அவர்கள் தலைக்குமேல் அந்தத் துணியை வித்தியாசமாக போட்டிருந்தனர். கார்களுக்குள் அனேகமாகப் பெண்களே இல்லை. வேலையாகச்செல்லும் ஆண்கள் மட்டுமே. துபாயில் நான் அரபுப்பெண்கள் கார் ஓட்டுவதைப் பார்த்த நினைவே இல்லை . வெள்ளைப்பெண்கள் கார் ஓட்டினார்கள். ஒரே ஒருமுறை ஐரோப்பியர் ஒருவர் கேளிக்கைவண்டி ஒன்றுக்குப்பின்னால் ஒரு களித்தோணியைக் கொண்டுசெல்வதைக் கண்டேன்.

ஷார்ஜாவில் மணற்புயலடிப்பதாக பூபதி சொன்னார். ‘அடடா…ஒரு அனுபவத்தைத் தவறவிட்டுவிட்டோமே’ என்று சொன்னேன். ’கொஞ்சநேரம் மணலா அடிக்கும் சார்’ என்று சத்யா ஆர்வமில்லாமல் சொன்னார். ஆனால் மெல்லமெல்ல மணல்புயல் எங்கள் பாதையில் வர ஆரம்பித்தது. மழைபெய்யப்போவதுபோல வானம் இருண்டு கறுத்தது. மூட்டம் என்பது இந்தியாவில் எப்போதுமே ஒருவிதமான உற்சாகத்தை அளிக்கக்கூடியது. பறவைக்குரல்கள் உரக்க ஒலிக்கும். காட்சிகள் நன்கு துலங்கும். வெயில் நிறம் மாறும். காற்றில் குளிரும் ஈரத்துளிகளும் ஏறிக்கொள்ளும். அந்த நினைவு இங்கும் உற்சாகத்தை அளித்தது.

மெல்லமெல்ல மணல் தரையில் தவழும் சிவந்த மேகம் போல பரவி வந்து காரைமூடியது. ஊட்டிபாதையில் குன்னூர்தாண்டியதும் வரும் பனிமூடல் போலத்தான். ஆனால் சிவப்பு வண்ணம். முன்னால் செல்லும் வண்டிகளின் பின்விளக்குகள் மங்கலாக, ஏதோ மஞ்சள்மலர்கள் போலத்தெரிந்தன. கண்ணுக்கு ஓரிரு அடி முன்னால் சாலை மேகத்துக்குள் இருந்து வந்துகொண்டே இருந்தது– மாந்த்ரீகன் வாயிலிருந்து வரும் நாடா போல.

கார்மீது மணல் கொட்டியது மழையடிப்பதுபோல ஒலித்தது. தார்ச்சாலையில் மெல்லிய செந்தூசி சுழன்று எழுந்து நடனமிட்டது – காபிகோப்பையில் காபிமேல் ஆவிப்படலம் போல. மணல் காற்றில் விதவிதமான வடிவங்களை வரைந்தது. சிலசமயம் கடல் மேல் மெல்லலை போல. சிலசமயம் வானில் விரிந்து நெளியும் பறவைக்கூட்டங்கள் போல. சிலசமயம் வீசியெறியப்பட்ட மாலைகள் போல.இருண்ட வானம் ஒரு காவிநிறமான ஷாமியானாபோல தலைக்குமேல் விரிந்திருந்தது. காற்றில் அது உப்பி நெளிவதுபோலக்கூட பிரமை எழுந்தது

மெல்ல மணல்புயல் அமைந்தபோது மலைகள் வர ஆரம்பித்தன. காற்றுபட்டு அரித்த மென்மணல்பாறைகள். அனேகமாக எப்போதோ அவை கடலுக்கடியில் இருந்திருக்கவேண்டும். காற்றின் பித்துப்பிடித்த உளியால் செதுக்கப்பட்டவை. விசித்திரவடிவங்கள். அந்த அவ்வடிவங்கள் எப்படியோ எண்ணங்களை குழப்பியடித்தன. சோர்வும் தனிமையும் நிறைந்த நினைவுகள். நெடுநாட்களுக்குப்பின் அம்மாவை அப்பாவை எண்ணிக்கொண்டேன், அவர்களின் மரணங்களை. பின்பு இதென்ன என நானே என்னை உலுக்கி விடுபட்டுக்கொண்டேன்

மதியம் சித்தநாத பூபதி வீட்டில் உணவு. அவர் அஜ்மான் என்ற ஊரில் இருந்தார். அங்கேசென்றுசேர இரண்டுமணியாகிவிட்டது. அவரது மனைவி சிறப்பான விருந்து ஏற்பாடு செய்திருந்தார். சிறிய பையன் உற்சாகமாக எங்களுக்கு அப்பளத்தை உடைத்துத் தந்து உபசரித்தான். சாப்பிட்டபின் சற்று தூங்கினேன். அரைமணி நேரம். அதன்பின் கிளம்பி ஷார்ஜா வந்தோம்

ஷார்ஜாவில் மாலை இலக்கியக்கூட்டம். அறுபதுபேர் வரை வந்திருந்தார்கள். எல்லாருமே இலக்கிய வாசகர்கள். அவர்கள் மட்டுமே வரும்படியாக விழாவை ஒழுங்குசெய்திருந்தார்கள். இரவுணவு உண்டு. அங்கே இரவுணவு இல்லாமல் வெறுமே அரங்கை அமைக்க முடியாது போல. கனடாவிலும் இலக்கியக்கூட்டங்களுக்கு இரவுணவு உண்டு, ஆனால் கட்டணமும் உண்டு. கட்டணமில்லாமல் எதையும் கொடுப்பது முதலாளித்துவ தர்மம் அல்ல என்று அ.முத்துலிங்கம் சொன்னார்

கூட்டத்திற்கு வந்த பல நண்பர்களை சந்தித்தேன். இணையத்தில் அறிமுகமான அய்யனார் விஸ்வநாத்தை சந்தித்தேன். அவரை இணையதளத்தில் வாசித்தபோது ஓரு சினிமாவிமர்சகராகவே தோன்றினார். எனக்கு சினிமா மீது பெரிய ஈடுபாடு கிடையாது. ஆனால் பவா அவரது சிறுகதைத்தொகுதியை அனுப்பித் தந்தார். அதில் ஓர் முக்கியமான எழுத்தாளனின் தொடக்கம் தெரிந்தது. அதை பவாவிடம் கூப்பிட்டுச்சொன்னேன். ‘அவன் உங்க மேலே கடுமையான விமர்சனம் வச்சிருக்கான் ஜெயன்’ என்றார். ’இருக்கட்டுமே’ என்றேன்

அய்யனார் விஸ்வநாத் அவரது கதை ஒன்று பிரெஞ்சு மொழியில் திரைப்படமாக எடுக்கப்பட்டு உலகப்படவிழாக்களில் திரையிடப்பட்டதாகச் சொன்னார். ஆச்சரியமாக இருந்தது. இது மலையாளத்தில் நிகழ்ந்திருந்தால் மையச்செய்தியாக இருந்திருக்கும். தமிழ்நாட்டில் கேன்ஸ் விருது பெற்றாலே பொருட்படுத்தமாட்டார்கள்.

ஆபிதீனை நான் பத்தாண்டுகளாக வாசிக்கிறேன். அவரது நல்ல கதைகள் சிலவற்றைப்பற்றி அவருக்கு எழுதியிருக்கிறேன். நேரில் அப்போதுதான் பார்க்கிறேன். உற்சாகமான மனிதர். நேராக வந்து தழுவிக்கொண்டு ‘ஆபிதீன்’ என்றார். சிலரது கண்கள் சிரிப்பதற்காகவே முதன்மையாகச் செயல்படுகின்றன, ஆபீதீனுடையது அப்படிப்பட்டது.வாசகநண்பர்கள் ஓமன் கதிரேசன், சென்ஷி, சுந்தர், கார்த்திக், சத்யா, சித்தநாதபூபதி என நிறைய நண்பர்கள்.

கூட்டத்தில் நான் பேசிய பேச்சின் எழுத்துவடிவம் பிரசுரமாகியிருக்கிறது. நாஞ்சில்நாடன் சிறப்பாகப் பேசினார். அவரது பேச்சின் வீச்சை நான் குறைத்துவிடக்கூடாதென்று பதினைந்து நிமிடம் மட்டுமே பேசினேன். பேச்சுக்குப்பின் கேள்விபதில் நிகழ்ச்சி. பலகோணங்களில் கேள்விகள் வந்தன. பயணங்கள் பற்றி, காடுநாவல் பற்றி, காந்தி பற்றி. உண்மையைச் சொல்லப்போனால் தமிழகத்தில் பெரும்பாலான கேள்விநேரங்களில் அபத்தமான கேள்விகளாகவே எழும். நானே அவற்றுக்கு தீவிரமான பதிலைச் சொல்லி நிகழ்ச்சியை கீழிறங்காமல் பார்த்துக்கொள்வேன். துபாயில் எல்லா வினாக்களுமே அர்த்தபூர்வமானவை. ஒரு வகை தேர்ந்தெடுத்தல் முன்னர் நடந்திருக்கக்கூடும்

இரவில் நாஞ்சில்நாடன் ஆசிபுடன் வீட்டுக்குச் சென்றார். நானும் விஷ்ணுபுரம் அமைப்பைச்சேர்ந்த நண்பர்களும் துபாய் கடல்முகம் வரை சென்று இரண்டுமணிநேரம் பேசிக்கொண்டிருந்தோம். துபாயில் நிகழ்ந்த உரையாடல்களிலேயே அதுதான் சிறந்தது என்று சொல்லவேண்டும். இரவு மூன்று மணிக்கு ஆசிப் வீட்டுக்கு திரும்பினோம். மூன்றுமணி நேரம் தூங்கிக் காலையில் விழித்து குவைத்துக்கு கிளம்பினோம்

https://plus.google.com/photos/111557504746543187475/albums/5731485220874868785

http://www.maalaimalar.com/2012/04/17150234/Ameeraga-Thamiz-Mandram-Ilakiy.html?utm_source=dlvr.it&utm_medium=twitter

முந்தைய கட்டுரைஎன் திரைப்படங்கள்
அடுத்த கட்டுரைகீதை-கடிதங்கள்