என் திரைப்படங்கள்

அன்புள்ள ஜெ

நீங்கள் இதுவரை எந்தெந்தப் படங்களில் பணியாற்றியிருக்கிறீர்கள்? சிந்துசமவெளி நீங்கள் எழுதிய கதையா? இதுபற்றி ஒரு சர்ச்சை எங்கள் நண்பர்களுக்குள். அதனால்தான் கேட்கிறேன்

ஜெயராஜன்

அன்புள்ள ஜெயராஜன்,

நான் எழுதியமுதல் படம் கஸ்தூரிமான். அதில் வசனங்களை மொழியாக்கம் மட்டுமே செய்தேன். என் பங்களிப்பு என்பது என் நண்பர் லோகியுடன் கூடவே இருந்ததுதான்.

இரண்டாவது படம் நான்கடவுள். அதன் மையக்கரு பாலாவுடையது. ஏழாம் உலகைக் கலந்து அதை விரிவாக்கினேன். நான் எழுதியது முழுமையாகப் படமாகவில்லை. ஆனாலும் அதை நான் எழுதியமுதல்படம் எனலாம்.

அங்காடித்தெரு வசந்தபாலனின் படம். கதையும் இயக்கமும். நான் அதில் வசனகர்த்தாவாக காட்சிகளை விரிவாக்கித் துணைக்கதாபாத்திரங்கள் சேர்த்து எழுதினேன். என்னுடைய எழுத்து பெரும்பாலும் அப்படியே படமாகியது. என்னளவில் அதுவே நான் என் பஙக்ளிப்பு சார்ந்து நிறைவு கொள்ளும்படம்.

அதன்பின் நான் பணியாற்றியது ‘ரேணிகுண்டா’ நான் முதல்வடிவை எழுதினேன். ஆனால் இயக்குநர் உத்தேசித்தபடம் நான் நினைத்தது அல்ல. ஆகவே நான் விலகிக்கொண்டேன். என் எழுத்தின் சில பகுதிகள் அதில் இருந்தன.

சிந்துசமவெளி ஒரு தீவிரமான படமாக உத்தேசிக்கப்பட்டது. இவான் துர்கனேவின் ஒரு குறுநாவலை ஒட்டி தமிழ்வடிவம் ஒன்றை நான் எழுதினேன். ஆனால் அதைப் படமாக ஆக்க இயக்குநரால் முடியவில்லை. சினிமாவில் அத்தகைய கட்டாயங்கள் சாதாரணம். அவர் வணிக அம்சங்களுடன் முற்றிலும் வேறு கதை ஒன்றை எடுத்தார். நான் அதில் மேற்கொண்டு பங்காற்றவில்லை.

ஆனாலும் எனக்கு அளித்த ஊதியத்தை இயக்குநர் திரும்பக்கோரவில்லை. நான் எழுதிய முதல்வடிவத்துக்கான ஊதியமாக அதைக் கணக்குவைத்து ஒரு நன்றி அறிவிப்பு போட்டார். அது திரையுலகைப் பொறுத்தவரை ஒரு முக்கியமான பெருந்தன்மை. சிந்துசமவெளியின் கதை,திரைக்கதை, வசனம் மூன்றுமே சாமிதான். அதை நீங்கள் அப்படத்தின் பங்களிப்புப் பட்டியலில் காணலாம்.

நான் அடுத்து எழுதியபடம் பரத்பாலா இயக்குவதாக இருந்த பத்தொன்பதாவது படி. வால்ட் டிஸ்னி தயாரிப்பு. ஜப்பானிய நடிகர் அஸானோ கதாநாயகன். கமல் இன்னொரு நாயகன். படம் தயாரிப்பாளரால் மேலெடுக்கப்படவில்லை.

அடுத்து நான் எழுதியபடம் வி.இஸட்.துரை இயக்கிவரும் ’6’. கொஞ்சம் மெதுவாக இப்படம் வளர்ந்து வருகிறது. ஷாம் கதாநாயகனாக நடிக்கிறார்

அதன்பின்னர்தான் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன். அது கைவிடப்பட்டபின் இப்போது ’கடல்’. கடல் ஒரு பகுதி படப்பிடிப்பு மணப்பாடில் நடந்து முடிந்துவிட்டது. கௌதம், அர்ஜுன்,அரவிந்த் சாமி நடிக்கிறார்கள். அதில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு பாடலும் எழுதியிருக்கிறேன்

அதன்பின் உலோகம். அதை சுப்ரமணிய சிவா இயக்கி நடிக்கிறார். நாவலுக்கு நானே திரைக்கதை வசனமும் எழுதியிருக்கிறேன். எடுத்த பத்து நிமிடக் காட்சியை பார்த்தேன். உண்மையிலேயே வலுவான அதிர்வை நானே உணர்ந்தேன்.

சீனு ராமசாமியின் நீர்ப்பறவை நான் எழுதும் அடுத்தபடம். விஷ்ணு கதாநாயகன்.இது குமரிமாவட்டத்தில் சிலநாள் படப்பிடிப்பு நடந்தது, மீண்டும் இம்மாதம் படப்பிடிப்பு ஆரம்பிக்கிறது.

மலையாளத்தில் நான் எழுதும் ‘ஒழிமுறி’ . நானெழுதிய நான்கு அனுபவக்கட்டுரைகளின் திரைவடிவம் எனலாம். கடந்த ஒரு வாரமாக இது குமரிமாவட்டத்தில் படமாகிவருகிறது. லால் கதாநாயகன். ஆஸிப் அலி, பாவனா, மல்லிகா, ஸ்வேதாமேனன் நடிக்கிறார்கள். மதுபால் இயக்குகிறார்.

மேலும் சில படங்களுக்குப் பேசிக்கொண்டிருக்கிறேன். சில படங்களைத்தவிர்த்திருக்கிறேன்.

திரை எழுத்து என்பது ஒரு கூட்டு முயற்சி. அதில் ஒரு தொடக்கப்பங்களிப்பு மட்டுமே எழுத்தாளனுக்குரியது. திரைப்படம் முழுக்க முழுக்க இயக்குநரின் கலை. எழுத்தாளன் இயக்குநரின் வேண்டுகோளுக்கு இணங்க மட்டுமே பங்களிப்பாற்ற முடியும்

இன்றுவரை தமிழில் எழுத்தாளனின் இடம் அங்கீகரிக்கப்படவில்லை என்பதே உண்மை. மெல்லமெல்ல அதை சாத்தியமாக்க முடியுமா என்று பார்க்கிறேன். இப்போது எழுதிப் படமாகிக்கொண்டிருக்கும் எல்லா படங்களும் கலையம்சம் கூடிய நடுத்தர படங்களுக்கான முயற்சிகள். அவற்றில் சில என் இலக்கை அடையலாம். ஆனால் எப்போதும் இதில் நல்வாய்ப்பின் பங்கு ஒன்று உள்ளது.

ஜெ

முந்தைய கட்டுரைபளிங்கறை – கடிதங்கள்
அடுத்த கட்டுரைவளைகுடாவில்… 2