கீதை இடைச்செருகலா? மூலநூலா?- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள் மகாபாரதம் பற்றிய பதிலில் கீதை அதில் இடைச்செருகலாகச் சேர்க்கபப்ட்டது என்று சொல்லியிருக்கிறீர்கள். இது ராகுல சாங்கிருத்தியாயன், டி.டி.கோஸாம்பி முதலிய மார்க்ஸிஸ்டுகளால் சொல்லபப்ட்டு வரும் வாதம். பெரும்பாலான இந்துக்கள் இதை ஏற்க மாட்டார்கள்… நீங்கள் சொல்லும் பதில் என்ன?

நாராணஸ்வாமி

அன்புள்ள நாராயணஸ்வாமி அவர்களுக்கு,

நான் கிருஷ்ண பக்தனல்ல. தத்துவ மாணவன் மட்டுமே. இந்தக்கோணத்தில் என் பதிலை புரிந்துகொள்ள கோருகிறேன்

கீதை வியாச மகாபாரதத்தில் பீஷ்ம பர்வத்தில் வருகிறது. குருஷேத்ரப் போர் தொடங்கவிருக்கும் சந்தர்ப்பம். இரு படைகளும் அணிவகுத்து நிற்கின்றன. போர் முனையைப் பார்வையிடுவதற்கு விரும்பிய அர்ஜுனன் தன் சாரதியாகிய கிருஷ்ணனிடம் தேரை போர்முனைக்கு விடும்படி கூறுகிறான். அங்கே தனக்கெதிராக தன் பிரியத்திற்குரிய பிதாமகர்களும், ஆசிரியர்களும், சகோதரர்களும், விளையாட்டுத் தோழர்களும் அணிவகுத்து நிற்பதைக் கண்டு இவர்களை எப்படிக் கொல்வேன் என்று மனம் தளர்கிறான். அவனைத் தேற்றி கருமத்தின் அவசியத்தை வலியுறுத்தி போரில் ஈடுபடும்படி கூற கிருஷ்ணன் உபதேசித்ததே கீதை.

மகாபாரதத்தில் கீதை ஒர் இயல்பான உறுப்பா இல்லையா? இந்த வினாவுக்கு முடிவான பதில் கூறுவது மிகவும் சிரமமானது. எளிய வாசிப்பிலேயே மகாபாரதச் சந்தர்ப்பத்தில் கீதை சேர்க்கப்பட்டிருப்பது புரியும். மகாபாரதம் அதன் நாடகீய உரையாடல்களில் உள்ள கச்சிதத் தன்மைக்கும கவித்ததுவத்திற்கும் புகழ்பெற்றது. உதாரணம் வேண்டுமென்றால் பாரதி விரித்து எழுதிய ‘பாஞ்சாலி சபதம்’ சந்தர்ப்பத்தை வியாச பாரதத்தில் எடுத்துப் பார்க்கலாம். கொந்தளிப்பான ஒர் உச்சகட்டம் அது. ஒரு சொல் அதிகமில்லாமல் அதை அமைத்திருக்கிறார் வியாசர். அத்தகை காவியகர்த்தன் ஒரு போர் தொடங்கப் போகும் தருணத்தில் பல்லாயிரம் பேர் ஆயுதங்களுடன் போர் வெறியுடன் திரண்டிருக்கும் முனையில் நிதானமாக தத்துவ விவாதம் புரிவதாக எழுதுவானா என்ன?

மேலும் அந்தச் சந்தர்ப்பத்தில் கிருஷ்ணன் கூறும் அத்தனை விரிவான வேதாந்தக் கருத்துக்கள் அந்த நேரத்துத் தேவைக்குப் பொருத்தமாகவே இல்லை. போர் புரியமாட்டேன் என்பவனிடம் ஆத்மாவின் அழிவின்மை பற்றி பேசுவது சரிதான். பக்தி, யோகம், விபூதி பற்றிய நுண்ணிய விளக்கங்கள் எதற்கு? இன்றும் ஒரு விஷயமும் கவனிக்கத்தக்கது. மகாபாரதத்தில் இந்தத் தருணத்திற்குப் பிறகும் அர்ஜுனனின் குணச்சித்திரம் மாறவில்லை! இந்த கீதோபதேசமும் அதனை நிலைநாட்டும் விஸ்வரூப தரிசனமும் அவனுக்கு எவ்வகையிலும் உதவவில்லை. ஒரு தருணத்தில் அண்ணனைக் கொல்லப் பாய்கிறான். கிருஷ்ணனையே கசந்து கடிந்தும் கொள்கிறான். அபிமன்யூவின் மரணத்தில் உடைகிறான். போர் முடிந்த போது ஆழமாக வெறுமை உணர்வை அடைந்து தேசாந்தரம் போகிறான். அதாவது பகவத்கீதை அந்தத் தருணத்தில் நிகழாதது போலவே அர்ஜுனனின் கதாபாத்திரம் நீடிக்கிறது. ஆகவே ஐயத்திற்கு இடமின்றி அது இடைச்செருகலேயாகும்.

அதேசமயம் மொத்த மகாபாரதத்தில் கீதைத்தருணத்திற்கான தர்க்கம் பாலில் நெய்போல இழையோடியுள்ளது. கீதையை வைத்து மகாபாரதத்தை புரிந்து கொள்வது மிக எளிதும் பொருத்தமானதுமாகும். மகாபாரதம் முழுக்க கிருஷ்ணின் கதாபாத்திரம் தத்துவார்த்தமான ஒரு புதிர்த்தன்மையுடன்தான் உள்ளது. கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு சாரதியாக வந்ததும் அவர்கள் இடையேயான உறவும் கீதையை மகாபாரத்தில் இடைச் செருகலாக வைக்கும் நோக்கத்துடன் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டவை அல்ல. அதாவது எப்படி கீதை ஒரு இடைச்செருகலாகத் தெரிகிறதோ அதேபோல மகாபாரதத்தின் பிரிக்க முடியாத உறுப்பாகவும் இப்போது உள்ளது.

கீதையின் சாரம்தான் மகாபாரதம் முன் வைப்பதும் என்பதை ஒரு பொது வாசகன் எளிதில் உணரலாம். தத்துவார்த்த ரீதியாக கீதையை மகாபாரதத்தில் பற்பல இடங்களில் கச்சிதமாகப் பொருத்திக் காட்டலாம். மகாபாரதத்தில் வரும் பிற உபநிடதங்களான விதுரநீதி, பீஷ்ம கீதை, யட்சப் பிரஸ்னம் போன்றவை மட்டுமல்ல. ஸௌனக நீதி போன்ற உரையாடல் பகுதிகளும் கூட கீதையின் தளத்தைச் சேர்ந்தவையே.

ஆனால் கீதை மகாபாரதத்தின் இணைப்பு என்று கூறும் ஒரு சிலர் மகாபாரதமே அப்படி பற்பலரால் பல காலங்களிலாக உருவாக்கப்பட்ட இணைப்பு நூல்தான் என்கிறார்கள். மகாபாரதத்தில் உள்ள கதாபாத்திர பரிமாணத்தில் ஒருமை, கதைச் சந்தர்ப்பங்களின் ஒருமை ஆகியவற்றை ஓரளவேனும் கவனிக்கும் ஒரு வாசகன் அதை ஒரு தொகுப்பு என்று கூறமாட்டான். அதன் ஆக்கத்தில் ஒரு பெரும் படைப்புமனம் கண்டிப்பாக செயல்பட்டுள்ளது. மகாபாரதத்தில் அதில் முதலில் இல்லாத பற்பல பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன என்பது உண்மையே. விஷ்ணுசகஸ்ரநாமம் போன்றவை கண்டிப்பாக பிற்கால சேர்க்கைகள்தான். ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் மகாபாரதம் அதன் கலையொருமை காரணமாக ஒரு படைப்பிலக்கியமாக பெரும் முக்கியத்துவத்தை அடைந்த பிறகு அம்முக்கியத்துவத்தை பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு அப்பகுதிகள் சேர்க்கப்பட்டன என்றே கூறமுடியும். கீதை அப்படிச் சேர்க்கப்பட்டதுதான். ஆனால் அது மகாபாரத்திற்கு அன்னியமாக இல்லை.

இந்த விசித்திரச் சூழலை நான் இவ்வாறு விளங்கிக் கொள்கிறேன். காவியங்களின் உருவாக்கத்தில் பொதுவாகக் காணப்படும் ஒர் இயங்குமுறையில் இதற்கான தர்க்கம் உள்ளது. காவியங்கள் பொதுவாக தனிமனிதப் பிரக்ஞையிலிருந்து பிறப்பதில்லை. அவை அச்சமூகத்தின் கூட்டான கற்பனையில் உருவாகக் கூடியவை. பெரும்பாலும் உண்மையான வரலாற்று நிகழ்வுகளில் இருந்து முளைத்தெழுபவை. ஆகவே குலப்பாடல்களாக வாய்மொழி மரபில் தொடர்ந்து வாழ்ந்து வரும் தொன்மங்களே பெருங்காவியங்களுக்கான மூலப்பொருட்கள். காவிய கர்த்தன் அவற்றை மறு தொகுப்பும் மறு ஆக்கமும் செய்கிறான். அதாவது அவற்றுக்கு ‘காவியத்தன்மை’ யை அளிக்கிறான்.

காவியத்தன்மை என்பது என்ன? ஒட்டுமொத்தமாக அப்படைப்பு கொள்ளும் தரிசனமே காவியத்தன்னையின் மையம். அத்தரிசனம் படைப்பின் எல்லா அணுவிலும் ஒளிர்வதே அதன் கவித்துவமாகும். தன் கற்பனைவீச்சு மூலம் ஒட்டு மொத்த வாழ்வையும் அள்ளும்படியாக அது விரிவடையும்போது காவியம் இதிகாசமாக மாறுகிறது.

இவ்வாறு காவியப்பண்புகள் ஏற்றப்பட்டு வளர்ச்சி பெறும் அந்த கருவானது மீண்டும் வாய்மொழி மரபுக்குத் திரும்பிச் செல்கிறது. அங்கிருந்த முந்தைய வடிவின் இடத்தில் தான் அமர்ந்து கொள்கிறது. வாய்மொழி – நாட்டார் மரபு வழியாக அது மீண்டும் மீண்டும் வளர்கிறது. இவ்வாறாக காவியத்தின் முன்னும் பின்னும் அதனுடன் நெருக்கமாகத் தொடர்பு கொண்ட வாய்மொழி – நாட்டார் மரபுகளைக் காணலாம். சிலப்பதிகாரம் இன்னொரு உதாரணம். கண்ணகியின் கதை ஏற்கனவே நம்நாட்டார் மரபில் இருந்து என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. ஆனால் சிவப்பதிகாரம் உருவானபிறகு இன்று நம் நாட்டார் மரபில் உள்ள கண்ணகியின் தொன்மவடிவம் சிலம்பிலிருந்து உருவாகி வளர்ச்சி அடைந்த ஒன்றாகும்.

இதையே தத்துவத்திலும் போட்டுப்பார்க்கலாம். ஒரு சமூகத்தில் நிகழும் வளமான தத்துவ விவாதத்தின் விளைச்சலே பெருங்காவியமாகும். தத்துவம் உருவாக்கும் தரிசனம் காவியத்தால் வாழ்வு நோக்கி விரிக்கப்படுகிறது. அதன்பின் அக்காவியம் தன்காலகட்டத்துத் தத்துவநோக்கில் ஆழமான பாதிப்பை செலுத்துகிறது. அதை வழிநடத்துகிறது. மாற்றியமைக்கிறது. அதன்பிறகு ஒட்டி நிகழும் தத்துவ விவாதங்கள் அனைத்துமே அக்காவியத்தின் குழந்தைகள். அவை அக்காவியத்தின் நுண்ணிய உறுப்புக்கள். உபநிடத காலகட்டத்து தத்துவ விவாதத்தின் விளைச்சல்தான் மகாபாரதம். மகாபாரதத்தின் விளைச்சல்தான் கீதை. ஆகவேதான் அவை ஒன்றுடன் ஒன்று பிரிக்கப்பட இயலாதவையாக உள்ளன.

கீதையை மகாபாரதத்தில் ‘தந்திரபூர்வமாக’ செருகப்பட்ட ஒரு தத்துவநூல் என்றும் ஆகவே ஒரு கருத்தியல் மோசடி என்றும் கூறும் கோஸாம்பி முதலிய ஆய்வாளர்கள் செய்யும் இரு தவறுகள் குறிப்பிடத்தக்கவை. ஒன்று நிகழ்காலத்தில் நின்றபடி அன்றைய நூல்களைத் தனித்தனியாக ஆராய்கிறார்கள். உபநிடதத்திற்கும் கீதைக்கும் மகாபாரதத்திற்கும் இடையே அவர்கள் காணும் இணைப்பு ஏதுமில்லை. அது அவர்களின் பார்வையின் எல்லை. ஒரே மாபெரும் தத்துவ உரையாடலின் பகுதிகளாக அவற்றைக் காண்பவன் அவற்றைத் தனித்தனியாகக் கூட காண வேண்டியதில்லை என்ற உண்மை அவர்கள் கண்ணில் படுவதில்லை. இரண்டாவதாக, நான் வாசித்தவரை இவ்வாறெல்லாம் ஆராய்பவர்களில் எம்.என்.ராய் முதல் கோஸாம்பி, தேபிபிரசாத் சட்டோபாத்யாக வரை எவருமே இலக்கிய ரசனை உடையவர்கள் அல்ல – கெ.தாமோதரன் மட்டுமே விதிவிலக்கு.

மகாபாரதத்தில் கிருஷ்ணன் என்ற கதாபாத்திரத்தின் குணச்சித்திர உருவாக்கம் கீதைக்கு உரிய முறையில் காப்பியம் முழுக்கவே இருப்பதை இலக்கிய நோக்கில் மட்டுமே விளக்க இயலும். அனைத்தையும் அறிந்து அனைத்திலிருந்தும் விலகி இருப்பவன். ஆற்றுபவன், ஈடுபடாதவன். கீதையின் உருவகத்தை மகாபாரதமெங்கும் பார்க்கலாம். கிருஷ்ணன் ஆன்மா, பார்த்தன் உடல். கிருஷ்ணன் ஞானம் அர்ஜுனன் உணர்வு. கிருஷ்ணன் ஞானசக்தி அர்ஜுனன் இச்சா சக்தி. இத்தகைய ‘முன்னேற்பாட்டை’ கீதை பிற்பாடு இடையே செருகப்படட்டும் என்பதற்காகவே வியாசன் போட்டு வைத்தானா என்ன?

ஆகவேதான் என் ஊகத்தை வலுப்படுத்திக் கொள்கிறேன். ஏறத்தாழ ஐந்து நூற்றாண்டு காலம் நீண்டு நின்ற ஒரு மாபெரும் தத்துவ விவாதக் காலகட்டத்தின் மாபெரும் சிருஷ்டிகளில் ஒன்றுதான் மகாபாரதம். வேதங்களில் ஞான காண்டமாக முன்வைக்கப்பட்ட தத்துவத் தேடல்கள் உபநிடதங்களால் பலநூறு கோணங்களில் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்ட காலம் இது. இன்றும் தொடரும் இந்து மெய் ஞான மரபின் அடித்தளம் போடப்பட்ட காலம்.

நான் மார்க்ஸிய முரணியக்க இயங்கியல் மீது நம்பிக்கை உடையவன். வரலாற்றுவாதத்தை உருவாக்கிக் கொள்வதற்கு இன்றுவரை நமக்குக் கிடைக்கும் மிகச்சிறந்த தத்துவக் கருவி அதுவே என்று எண்ணுபவன். ஆகவே இந்த வளர்ச்சியை நான் முரணியக்க அடிப்படையிலேயே விளங்கிக் கொள்கிறேன். அடிப்படையில் பல்வேறு தத்துவ சுயமுரண்களுடன் மாறுபட்டும், விவாதங்களில் தங்களுக்குள் விவாதித்தும் தன்னை முன்னால் செலுத்திக் கொண்டது இக்காலக்கட்டம்.

மகாபாரதத்தில் இக்காலகட்டக் குரல்கள் அனைத்துமே ஒலிக்கக் காண்கிறோம். ஆதிபர்வத்திலேயே ஸெளனகனின் நாத்திகக் குரல் ஒலிக்கிறது. பலநூறு இடங்களில் ஒன்றோடொன்று முரண்படும் தத்துவ நிலைபாடுகள் முழங்குகின்றன. கீதையின் பெருங்குரல் ஒலித்த அதே மகாபாரதத்தில்தான் அதன்பிறகு அந்தத் தத்துவங்களை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கும் சார்வாகனின் உலகியல்வாதம் ஓலிக்கிறது – தருமனின் முடிசூட்டுவிழாவில்! (இந்தத் தருணத்தை விரிவாக்கம் செய்து நான் ‘திசைகளின் நடுவே’ என்ற சிறுகதையை எழுதியுள்ளேன்.) உபநிடதகால விவாதங்கள் செய்யப்பட்ட பெரும் படைப்பு மகாபாரதம். மகாபாரதத்திற்கு பிறகு அந்த விவாதங்கள் மகாபாரதத்தின் பாதிப்புடனும் பங்களிப்புடனும் நீடித்திருக்கலாம். அவ்வாறு உருவான பிற்கால உபநிடதங்களில் ஒன்றுதான் கீதை.

அதாவது கீதை மகாபாரதத்தின் இடைச்செருகல் அல்ல, நீட்சியே. மகாபாரதத்தின் மீதான அத்து மீறல் அல்ல. அது மகாபாரதத்தின் கனி. உபநிடதங்களில் இருந்து கீதைக்கு மகாபாரதம் வழியாக துல்லியமாக ஒரு பாதை உள்ளதை வாசகர்கள் எளிதில் கண்டடைய இயலும். இதை நான் ஒர் ஊகமாகவே முன்வைக்கிற§ன். இந்த ஊகம் கீதையைப் புரிந்து கொள்ள மிக உதவிகரமானது என்பது என் எண்ணம்.

கீதையின் ஆசிரியர் யார்? கீதாசாரியன் கண்ணனே என்பது பக்தர்களின் நம்பிக்கை. அந்நம்பிக்கையுடன் மோத வேண்டியதில்லை என்பது என் எண்ணம். ஆனால் வரலாற்று ரீதியாகப் பார்க்கும்போது கிருஷ்ணன் என்ற கதாபாத்திரம் சார்ந்து மூன்று வகையான சித்தரிப்புகள் நம்மை வந்தடைகின்றன. ஒன்று, மகாபாரதம் முன்வைக்கும் கிருஷ்ணன். ராஜதந்திரியும் கவிஞனும் தத்துவ ஞானியுமானவன். இறையம்சம் கூடியவன். இரண்டு, பாகவதம் முன்வைக்கும் கண்ணன். வெண்ணை உண்ட குழந்தை. கோபிகைகளின் நடுவே லீலை செய்த கலைஞன், ராதையின் காதலன், பரம்பொருள். மூன்றாவது, கிருஷ்ணன் முழுமுதல் பரம்பொருளின் மானுட வடிவமில்லாமல் வேறு எதுவும் அல்லாதவன். உண்மையில் கிருஷ்ணன் என்ற ஓர் ஆளுமை இருந்திருக்கிறதா? அது வெறும் காவியப் புனைவுதானா?

காவியங்கள் வெட்டவெளியிலிருந்து எதையும் எடுத்துக் கொள்வதில்லை என்பதனாலேயே ராமனும் கிருஷ்ணனும் கண்ணகியும் வரலாற்று மாந்தர்தான் என்று நான் நம்புகிறேன். ஆனால் காவிய ஆக்கம் மூலம் அவர்கள் தொடர்ந்து மறு வடிவம் பெற்று வளர்ந்தபடியே இருக்கிறார்கள். அவர்களின் உண்மையான வரலாற்று ஆளுமையை கற்பனை செய்து அடையவது மிகவும் கஷ்டமானது. மீண்டும் இங்கு அதே முரணியக்க விதியை நான் போட்டுப்பார்ப்பேன். நாம் இன்று காணும் கிருஷ்ணனின் வடிவம் கிருஷ்ணன் என்ற வரலாற்று ஆளுமைக்கும் கிருஷ்ணன் என்ற காவியப்புனைவுக்கும் நடுவேயுள்ள பல நூற்றாண்டுக்கால முரணியக்கத்தின் விளைவாகும். கிருஷ்ணனை பின்நோக்கி பின்னோக்கிச் சென்று காவியப்பண்புகளை குறைத்தபடி வந்தால் இந்த வடிவை அடையலாம். ”யாதவகுலத்து மன்னன், கரிய நிறம் உடையவன், ராஜதந்திரியாகவும் தத்துவ ஞானியாகவும் இருந்தான்.” இதுவே என்மனதில் உள்ள ‘உண்மையான’ கிருஷ்ணன், வரலாற்றுக் கிருஷ்ணன்.

இன்று நம்மிடையே உள்ள கீதை அந்தக் கிருஷ்ணனால் கூறப்பட்டதுதானா- ‘இல்லை, இருக்க வாய்ப்பில்லை’ என்று கூறவே சராசரி தர்க்க மனம் முந்துகிறது. ஆனால் ஒரு வாய்ப்பு உள்ளது என்னும் எண்ணமும் கூடவே எழுகிறது. பண்டைய மதநூல்களில் புராதன காலத்தில் வாழ்ந்த தத்துவ ஞானிகளான மன்னர்களைப் பற்றிய குறிப்புகளைக் காணலாம். மிகச்சிறந்த உதாரணம் சாலமோன். இன்னொரு உதாரணம் அசோகன். கிருஷ்ணன் தன் காலகட்டத்து தத்துவ ஞானிகளில் ஒருவராக இருந்திருக்கலாம். திருவுடை மன்னரை திருமாலாகவே காணும் நம் மரபின்படி இறையவதாரமாகவே அவர் கருதப்பட்டிருக்கலாம். பிற்காலத்தில் வேதாந்தமாக விரிவு பெற்ற தரிசனமரபின் ஒரு முதன்மைச் சிந்தனையாளராக அவர் இருந்திருக்கலாம். கீதை அவரது நூலாகவே இருந்திருக்கலாம்.

மிகவும் பிற்பட்ட காலத்தில் அவர் ஒரு தொன்மமாகவும் இதிகாசக் கதாபாத்திரமாகவும் மாறியபிறகு அந்த நூல் அவரது கூற்றாக நாடகீயப்படுத்தப்பட்டு உரிய மாற்றங்களுடன் மகாபாரதத்தில் சேர்க்கப்பட்டிருக்கலாம். அது கிருஷ்ணனின் சொல் என்பது எப்போதுமே மறுக்கப்பட்டதில்லை என்பதையே இதற்குச் சான்றாக கூறுகிறேன். அல்லது குறைந்தபட்சம் கிருஷ்ணரின் கூற்றுக்களே பிற்காலத்தில் கீதை வடிவில் தொகுக்கப்பட்டிருக்கலாம் – ஏசுவின் உபதேசங்கள் சுவிசேஷங்கள் ஆனது போல. அல்லது கிருஷ்ணனில் தொடங்கிய ஒரு குருசீடப் பரம்பரையினரால் மறு தொகுப்பும் மறு ஆக்கமும் செய்யப்பட்டு மகாபாரதச் சந்தர்பத்தில் பொருத்தப்பட்டிருக்கலாம். ஏற்கனவே மகாபாரதக் கிருஷ்ணன் அவ்வரிகளை கூறுவதற்குச் சாத்தியமுள்ள கதாபாத்திரமாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறான்.

ஏதோ ஒரு வகையில் கிருஷ்ணனின் வார்த்தைகளாகவே கீதை இருக்கக்கூடும் என்ற ஊகம் வலுப்பெறுவதற்கு பொதுவாக வரலாற்றில் மூல குருநாதர்களின் சொற்கள் தொகுக்கப்படும்விதம் உதவியாக உள்ளது. ஏசுவின் சொற்கள் பலவிதமான விவாதங்களுக்கு பிறகு பலவிதமாகத் தொகுக்கப்பட்டமை இன்று அகழ்வாய்வுகள் மூலம் உறுதிப்படுகிறது. எகிப்தில் நாக் ஹமாதியில் கிடைத்த புனித தாமையரின் சுவிசேஷமானது மத்தேயு, மார்கு, லூக்கா, யோவான் ஆகியோரின் சுவிசேஷங்களில் இருந்து மாறுபட்டது, மேலும் நுண்ணிய பொருள் தருவது, மேலும் கவித்துவமானது.

அதாவது குருநாதர்களின் சொற்கள் அழிவதில்லை, அவை புரிந்துகொள்ளபப்டும் விதத்தில் சில மாறுதல்கள் இருந்தாலும் அவை எப்போதும் உள்ளன. அக்குருநாதர்கள் காலஓட்டத்தில் இறைவடிவங்களாக எண்ணபப்டும்போது அவர்களின் சொற்களும் சற்றே மாற்றபப்ட்டு இறைச்சொற்களாக முன்வைக்கபப்டுகின்றன. அவற்றுக்கு ஏற்ப கதைகள் உருவாகின்றன.

ஆகவே கிருஷ்ணனால் கூறப்பட்ட கீதையின் நூற்றாண்டுகளுக்குப் பிந்தைய வடிவம்தான் இன்றைய பகவத்கீதை என்று கூறுவது அறிவுக்குப் பொருத்தமாகவே உள்ளது. இதற்குச் சான்றாக ஒன்றைக்கூறலாம். கீதையின் அமைப்பில் ஒரு ‘அழுத்திச் செருகிய’ தன்மை உள்ளது. போர்க்களத்தில் கிருஷ்ணன் அர்ச்சுனனுக்கு உபதேசம் செய்த வடிவம் அந்நூலின் உள்ளடக்கத்திற்கு பொருத்தமாக இல்லை. இதை நூலை வாசித்துப்போகும்போது நாமே காணலாம். அதாவது ஒரு தத்துவ உபதேச நூல் பலவகையிலும் அழுத்தப்பட்டு அந்த நாடகச் சந்தர்ப்பத்திற்கு பொருத்தமானதாக மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ளது.

கீதை மகாபாரதத்தின் ஒரு பகுதி என்ற முறையில் அது வியாசன் என்ற கிருஷ்ணன் துவைபாயனனால் இயற்றப்பட்டது என்று கொள்ளுவது அறிவுலக வழக்கம். கிருஷ்ண துவைபாயனன் மகாபாரதத்திலேயே ஒரு முக்கியமான கதாபாத்திரமாக வருகிறார். அவர் பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் பிதாமகன். கிருஷ்ணனுக்கு மிகவும் வயதில் மூத்தவர். அவர் பாரதபோர் முடிந்த பிறகு மகாபாரதத்தை எழுதினார் என்பது ஒரு காவிய உருவகம். ஆனால் மகாபாரதம் அதன்பிறகும் பல தலைமுறைக்காலம் நீண்டு ஜனமேஜயன் காலகட்டம் வரை வருகிறது. அப்படியானால் கிருஷ்ண துவைபாயன வியாசன் எத்தனைகாலம் வாழ்ந்தார் – நம் புராணமரபின்படி அவர் மரணமற்றவர் சிரஞ்சீவி. அதை அப்படியே ஏற்பது ஒரு வழி. தர்க்கபூர்வமாக பார்த்தால் வேறுசில ஊகங்களுக்கு வரமுடியும்.

வேதங்களைத் தொகுத்தவரும் வியாசர் என்றே கூறப்படுகிறார். வியாசர் என்ற சொல்லுக்கே ‘கூறுபவர்’ என்றுதான் சமஸ்கிருதத்தில் பொருள். பிரம்மசூத்திரத்தை இயற்றியவரையும் வியாசர் என்று கூறுவதுண்டு. அவருக்கு பாதராயணர் என்றும் பெயர் உண்டு. பதரி அதாவது இலந்தைக்காட்டில் வாழ்பவர் என்று பொருள். ஆகவே கீதையின் ஆசிரியரும் பாதராயணரே என்று கூறும் சில ஆய்வாளர்கள் உள்ளனர். அது சரியாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் கீதையிலேயே பிரம்மசூத்திரம் பற்றிய குறிப்பு வருகிறது. ‘பிரம்ம சூத்திரம் போல தத்துவார்த்தமாகவும் கூறலாம், நான் கூறுவது போலவும் கூறலாம் என்று கிருஷ்ணனே குறிப்பிடுகிறார். ஆகவே பிரம்ம சூத்திரம் கீதை கடைசி வடிவத்தை எய்தி மகாபாரதத்தில் சேர்க்கபட்ட காலத்திற்கு முந்தையது என்று ஊகிக்கலாம்.

ஊகத்தை விரித்து இப்படி ஒரு சித்திரத்தை உருவாக்கிக் கொள்கிறேன். பல்வேறு மூலநூல்களில் இருந்து தொகுத்து அடிப்படை நூல்களை உருவாக்கும் ஆசிரியன் வியாசன் எனப்பட்டான். வியாசர்களின் ஒரு தொடர் அக்காலத்தில் இருந்துள்ளது. வேதவியாசன் முதல் பாதராயண வியாசன் புராணங்களைத் தொகுத்த வியாசன் வரை பல நூற்றாண்டுக்காலம் அந்த வியாச மரபு தொடர்ந்து வந்துள்ளது. கிருஷ்ண துவைபாயன வியாசன் அவர்களில் ஒருவன். மகாபாரதத்தை எழுதிய வியாசன் அதற்கும் மிகவும் பிந்தையவன். கீதையைத் தொகுத்த வியாசன் அதற்கும் வெகுகாலம் பிந்தையவன். இங்கு என் ஊகம் வலுப்பெறுகிறது. கீதை மகாபாரதம் உருவாவதற்கு முன்னரே இருந்திருக்கலாம். குருகுல முறைப்படி பயிலப்பட்டிருக்கலாம். வியாசன் அதை மறுபுனைவு செய்தான், மகாபாரதத்தில் இணைத்தான்.

கீதையின் காலம் என்ன? கீதையின் காலத்தை பாலகங்காதர திலகர் தன்னுடைய கீதா ரகஸியம் நூலில் மிகமிகப் பின்னுக்குத் தள்ளி கி.மு.3100ல் உருவாக்கப்பட்டது என்று கூறுகிறார். காலக்கணிப்புகள் பற்றிய ஒரு பொதுப்புரிதல் உருவாகாத கால கட்டத்து உருவகம் இது என்பதுடன், கீதையை ‘கல்தோன்றி மண்தோன்றா’ காலத்திற்கு கொண்டு செல்லும் வாஞ்சையும் இதில் தெரிகிறது. நேர்மாறாக மேலைநாட்டு ஆய்வாளர்கள் கீதையை கிருஷ்ணபக்தி என்பது ஒரு மதமாக வேரூன்றிய பிறகு உருவாக்கப்பட்டது என்று கூறுகிறார்கள்.

நடராஜ குரு அவரது நூலின் முன்னுரையில் ஜெ.என்.·பார்குஹார் (J.N.Farquhar) கூறிய வரிகளை இதற்கு மேற்கோள் காட்டுகிறார். ‘ஸ்வேதாஸ்வேதர உபநிடதத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் எழுதப்பட்ட ஒரு பழங்கால உபநிடதம் பிற்காலத்தில் கீதையாக உருமாற்றம் செய்யப்பட்டு கிருஷ்ண பக்தர்களால் மகாபாரதத்தில் நுழைக்கப்பட்டது. கிறிஸ்துவ யுகத்தின் தொடக்கத்தில் இது நடந்தது.’ இந்தியவியலாளரான ரிச்சர்ட் கார்பே கீதையின் காலகட்டம் கி.பி.2ம் நூற்றாண்டு என்று கூறுகிறார். நடராஜகுரு இதை தர்க்கப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதாகவே படுகிறது. டி.டி.கோசாம்பி முதலியோர் கி.பி.5ம் நூற்றாண்டில், அதாவது குப்தர் காலகட்டது இந்து எழுச்சியின்போது, கீதை உருவாகி மகாபாரதத்தில் நுழைக்கப்பட்டது என்று எண்ணுகிறார்கள்.

இரு எல்லைகளை நான் காண்கிறேன். கீதையின் தொன்மையை நிலைநாட்டுவதற்குத் துடிக்கும் ஒரு தரப்பு. கீதையின் தொன்மையை நிராகரித்து பிற்காலத்திற்குக் கொண்டு வருவதற்குத் துடிக்கும் எதிர்த்தரப்பு. திலகர் முதல்தரப்பு. கோசாம்பி இரண்டாம்தரப்பு. முதல் தரப்பினருக்கு அவர்கள் உருவகிக்கும் பண்டையப் பொற்காலத்தில் கீதையை நிலைநாட்ட வேண்டிய தேவை உள்ளது. இரண்டாம் தரப்பினருக்கு சமூக அமைப்பு உறுதிப்பட்டு, பேரரசுகள் உருவாகி, சுரண்டலும் மேலாதிக்கமும் பரவிவிட்ட ஒரு காலகட்டத்தில் கீதையை பொருத்திக் காட்ட வேண்டிய ஆசை உள்ளது.

என் நோக்கில் முக்கியமான இந்தியவியலாளர்களான லாக்கோம்ப், கார்பே போன்றவர்களே பெருமளவு நடுநிலையில் நின்று காலக்கணிப்புகளைச் செய்துள்ளார்கள். எப்போதும் கறாரான புறவயத் தருக்கத்திற்கு முக்கியத்துவம் தரும் அறிவியலாளரான நடராஜகுருவும் இவர்களையே ஏற்கிறார். கீதை தொகுக்கப்பட்ட, அல்லது இன்றைய உருவில் படைக்கப்பட்ட காலம் கி.மு. 2ம் நூற்றாண்டு. பெளத்தம் உருவாகி தீவிரமாக விவாதிக்கப்பட்ட காலம் இது. கீதை பெளத்தம் மீதான விவாதத்தின் விளைவும் கூட. ஆனால் கீதைக்கு மூலநூலாக இருந்த நூல், அல்லது கீதையின் பெரும்பகுதியை அளித்த வேதாந்த மூலநூல் மேலும் பல நூற்றாண்டுக்காலம் பழையது. அதன் காலம், மகாபாரதத்தின் முதல் வடிவம் வியாசரால் உரூவாக்கப்படுவதற்கும் முந்தையது. அதாவது கி.மு.5 அல்லது 6ம் நூற்றாண்டுகள்.
கீதை குறித்த என் வரலாற்று உருவத்தை இப்படி சுருக்கிக் கூறுகிறேன்.

1. தீவிரமான தத்துவ மோதல்கள் தொடங்கிய உபநிடத காலகட்டத்தின் தொடக்கத்தில் வேதாந்தத்தின் மூலகுருவாக விளங்கிய ஒருவரால் ஆக்கப்பட்டது கீதை.

2. அக்காலகட்டம் கி.மு. 5 அல்லது 6ம் நூற்றாண்டாக இருக்கலாம்.

3. கீதையின் மூல ஆசிரியர் யாதவ மன்னர் கிருஷ்ணனாகவே இருக்கலாம்.

4. மகாபாரதம் உருவாகி படிப்படியாக பெரும் புகழ் பெற்றபோது அந்த மூலகுரு இதிகாச கதாபாத்திரமாகவும் இறைவடிவினன் ஆகவும் மாறினான்.

5. குருகுலமுறைப்படி கற்கப்பட்ட கீதையின் ஒரு வடிவம் கி.மு. 2ம் நூற்றாண்டு வாக்கில் மறு ஆக்கம் செய்யப்பட்டு மகாபாரதத்தில் இணைக்கப்பட்டிருக்கலாம். இதுவே நாம் இன்று காணும் பகவத்கீதை.

பிற கட்டுரைகள்
கீதையை எப்படிப் படிப்பது? ஏன்?

கேள்வி பதில் – 49

தோமையர் எழுதிய சுவிசேஷம்

முந்தைய கட்டுரைவிவாதங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்? -கடிதம்
அடுத்த கட்டுரைதமிழினி இரண்டாமிதழ்