தெய்வத்தின் முகங்கள்

அன்புள்ள ஜெ,

நலமா ?

உங்கள் ‘திருமுகப்பில்’ கதையை ஒருமுறை படித்திருக்கிறேன். அப்போது, எனக்கு அது சரியாகப் புரியவில்லை.

என் நண்பன் ஜோசப், பல சமயங்களில் தன்னை, ‘மூன்றாம் உலகக் கிறித்தவன்’ என்று சொல்லிக்கொள்வான். அவனுடன், எட்டு வருடங்களுக்குமுன், தலைக்காவேரி அருகே உள்ள பைலாகூப்பேவிலுள்ள திபேத்திய மடாலயத்திற்கு சென்றிருந்தேன்.

சீன முகமுடைய புத்தரைப்பற்றி அவன் பேசியபோது, “புத்தருக்கு எப்படி சீன முகம் இருக்கலாம்? இந்திய முகந்தான் இருக்கணும்” என்று நான் சொல்ல, அவன் சிறிது நேரம் பார்த்துவிட்டு, ஒன்றும் சொல்லவில்லை.

சில மாதங்களுக்குமுன் ஜோசப்புடன் அங்கோர்வாட் சென்றிருந்தேன். கடைசிநாள், அங்குள்ள அருங்காட்சியகத்திற்குச் சென்றபோது, ஒரு கூடத்தில், கட்டைவிரலளவு முதல் ஆளுயர புத்தர்கள் என ஆயிரம் புத்தர் சிலைகள் இருந்தன.

கிரேக்கச் சாயல் கொண்ட காந்தார புத்தர், இடுங்கிய கண்களுடைய சீன புத்தர், தடித்த உதடுகளுடைய கம்போடிய புத்தர், பெரிய கண்களுடைய இந்திய புத்தர் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொருவகை.

அந்தச் சிலைகளை பார்த்துக்கொண்டிருந்த போது, ஏதோ ஒரு கணத்தில், சட்டென்று, உங்கள் ‘திருமுகப்பில்’ புரிந்தது. உங்கள் கதையையும், பைலாகூப்பேவையும் அவனுக்கு நினைவூட்டியபோது, ஆயிரம் புத்தர்களுடன் சேர்ந்து அவனும் புன்னகைத்தான்.

ஏசுபிரான் சிலைகளில் ஏன் மங்கோலிய ஏசுவோ, காப்பிரி ஏசுவோ இல்லை என்று நீண்டநேரம் பேசிக் கொண்டே வந்தோம்.

நீங்கள் கண்டிப்பாக கம்போடியா செல்லவேண்டும் சார். நிச்சயம் ரசிப்பீர்கள்.

நன்றி,

விசு.

[விஷ்ணுபுரம் விமர்சனம்]

அன்புள்ள விசு,

ஒரு தெய்வம் எப்படி முகம் மாறும் என்பதற்கு புத்தர்தான் உதாரணம். காந்தார புத்தர் கிரேக்க சாயல் கொண்டவர். தென்னக புத்தர் தெற்கத்திய முகம் கொண்டவர். திபெத்திய புத்தரின் கண் இடுங்கலானது. ஆனால் பர்மியபுத்தரின் கண் அப்படி இல்லை.

என் மகனின் கல்லூரி நண்பர்கள் பலர் வடகிழக்கைச் சேர்ந்தவர்கள். தங்களுக்குள் பேசிக்கொள்ளும்போது விரல்களால் கண்களை விரித்துக் கொட்டைவிழி போல ஆக்கிக் காட்டி நம்மைக் கிண்டலடிப்பார்களாம். அவர்களுக்குப் பெரிய கண் என்பது ராட்சதத்தன்மை கொண்டது. சிறிய இடுங்கிய கண் அழகானது, தெய்வீகமானது.

கடவுளைப் பெருமாள் என்பதுண்டு. விஷ்ணு, முருகன் எல்லாமே பெருமாள்கள். பெரும் ஆள். நாம் சிறிய ஆட்கள். குறையானவர்கள். நம்மைப்போன்ற, ஆனால் முழுமையான, வடிவம் கொண்டவரே நம் தெய்வம். நாம் தேடும் முழுமையின் சின்னம்.

இன்று நாம் காணும் ஏசு இத்தாலிய ஏசு. அவரது யூத முகம் வேறாக இருந்திருக்கலாம். அதுவும் அன்று அபிசீனியாவுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்த ஜுடாயாவின் யூதர்கள் இந்தியர்களைப்போல மாநிறமாக, பெரிய கண்களுடன் இருந்திருக்கவே வாய்ப்பு அதிகம்,

இந்தியாவிலேயே வட இந்தியர்களுக்குக் கன்னங்கருமையாக இருக்கும் நம்முடைய தெய்வங்கள் பீதியைத்தான் கிளப்புகின்றன. வெண்சலவைக்கல் சிலைகளே அவர்களுக்கு தெய்வ உருவமாகப் படுகின்றன. நமக்கு வெண்சிலைகள் ஏதோ பொம்மைகளாகத் தோன்றுகின்றன.

சமணப்பயணத்தில் ஒரு விஷயத்தை கவனித்தேன். பல ஊர்களில் புராதனமான சமண தீர்த்தங்கரர் சிலைகள் கரியவை. அவை ஓரமாக சிறு அறைகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டபின் கடந்த முந்நூறாண்டுகளில் வெண்சலவைக்கல் சிலைகள் கருவறையில் அமர்த்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, ராஜஸ்தானின் தில்வாராவில் சலவைக்கல் சிற்பங்கள் மண்டிய கோயிலில் பூட்டப்பட்ட பழைய கருவறை ஒன்றின் இருளுக்குள் இருந்த ஆறடி உயரமான கன்னங்கரிய தீர்த்தங்கரர் சிலை நம் ஆழ்மனத்தில் அமர்ந்திருப்பதாகவே தோன்றியது.

புத்தரின் உடம்பு தர்மகாயம் என்று சொல்லப்படுகிறது. பிரபஞ்சத்தை இயக்கும் மகாதர்மத்தை ஓர் உடம்பாகக் காண்பதே அது. ஏனென்றால் இப்பிரபஞ்சத்தின் ஒரு சரியான துளி நம் உடல். பிரபஞ்ச விசையே இதையும் இயக்குகிறது. ஆகவே இதுவும் தர்மத்தின் தோற்றமே.

அதையே விசுவரூபம் என்கிறோம். விசுவம் என்றால் பிரபஞ்சம். உடலின் பிரபஞ்சத்தோற்றம் மட்டுமல்ல பிரபஞ்சத்தின் உடல்தோற்றமும் முடிவற்றதே.

எல்லா இறையுருவங்களும் நம் உடம்பை நாமே காண்பதுதான்.

ஜெ

முந்தைய கட்டுரைமேலெழும் விசை
அடுத்த கட்டுரைகம்பராமாயணம் அரங்கம் – ஊட்டி – மே 25,26,27-2012