கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள் பயணக்கட்டுரைகளை இன்று படித்துக்கொண்டிருந்தேன். வரலாறை பயணத்துடன் அழகாக இணைத்திருக்கிறீர்கள். கலிபோலி போன்ற தொலைதூர நாட்டில் நிகழ்ந்த போரில் இந்தியர்கள் பங்கு கொண்டதைப்பற்றி நீங்கள் எழுதியிருந்ததை படிக்க ஆச்சரியமாக இருந்தது. அதைப்பற்றிய எந்த தகவலும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை என்பதுதான் சோகம். எனக்கு 33 வயதாக இருக்கும்போது அமெரிக்கா வந்தேன். நம்முடைய வரலாற்றுணர்வு எவ்வளவு சிறியது என்பதற்கான ஆதாரம் இது. நீங்கள் உங்கள் தீவிரமான வாசகர்களை அந்த வரலாற்றுக்குள் இழுத்துச்செல்லும் விதமாக அழகாக எழுதியிருக்கிறீர்கள்.

ஆனால் ஒரு விஷயத்தையும் இங்கே சொல்லியாகவேண்டும். ஓட்டொமான் துருக்கியர்களே நவீன யுகத்தின் முதல் பெரும் மானுட இன அழிப்பை நிகழ்த்தியவர்கள். தங்களுக்கு எதிராக ரஷ்யர்களை ஆதரித்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் அவர்கள் ஆர்மீனியர்களை கொன்றே ஒழித்தார்கள். உங்களுக்கு நல்ல படங்களில் ஆர்வம் இருந்தால் ‘அராத்’ [Ararat] என்னும் சினிமாவை நீங்கள் பார்க்கலாம்.

ஓப்லா விஸ்வேஷ்
அன்புள்ள ஜெ

உங்கள் ஆஸ்திரேலியப் பயணக்கட்டுரைகளைக் கூர்ந்து வாசித்து வருகிறேன். மிகச்சிறப்பாக உள்ளன அவை. எனக்கு பயணக்கட்டுரைகளில் உள்ள முக்கியமான ஒரு விஷயம் இப்போதுதான் கவனத்துக்கு வந்தது. எந்தவகையான வடிவக்கோப்பும் இல்லாமல் நாம் எல்லாவற்றையும் பயணக்கட்டுரைகளில் எழுதலாம். நீங்கள் அரசியல் பொருளாதாரம் எல்லாவற்றைப்பற்றியும் எழுதுகிறீர்கள். கண்ணில் படும் ஒரு பொருளில் இருந்து அதைச்சார்ந்த விஷயங்களை நோக்கிச் சென்றுவிடலாம். இது மிகவும் சுவாரசியமான ஒரு விஷயம்.

நீங்கள் கொடுத்திருந்த இணைப்பில் துளசி என்பவர் அவர் வீடுகட்டிய அனுபவத்தை எழுதியிருந்தார். மிக முக்கியமான கட்டுரை அது. அதை அப்படியே ஒரு நூலாகக் கூட கொண்டுவரலாம். அதில் கொஞ்சம் அதிகப்படியான விளையாட்டுமொழி இருந்தது. அதைமட்டும் குறைத்தால் போதும். ஒரு மாடல் ஒரு வீடாக மாறக்கூடிய அற்புதத்தை அவர் எழுதியிருந்தார்

குமாரசாமி

[மொழியாக்கம்]

அன்புள்ள ஜெ,

நீங்கள் உங்கள் பயணக்கட்டுரைகளில் அளிக்கும் படங்களில் உங்கள் துணைவியைக் காணவே இல்லையே ஏன்?

ஜெம் ரமேஷ்

அன்புள்ள ஜெம்,

குழந்தைகள் மற்றும் பெண்களின் படங்களை இணையத்தில் போடவேண்டாம், அது பாதுகாப்பற்றது என நண்பர்கள் சொன்னார்க்ள். அதுதான் காரணம்.மற்றபடி அருண்மொழி புகைப்படத்துக்கு ஏற்ற பெண்தான்.

ஜெ

டியர் சார், நலம் நலமே விழைக, தம்மம்பட்டியிலிருந்து ராகவேந்திரன், வீட்டில் அனைவரையும் விசாரித்ததாக கூறவும், அனைவருக்கும் எனது பணிவான வணக்கங்கள்,
உங்களின் ஆஸ்திரேலிய பயணக் கட்டுரைகள் மிகவும் அருமையாகவும் தகவல் களஞ்சியமாகவும் உள்ளது. மிக்க மகிழ்ச்சி, எனது சிறு பிராயத்திலிருந்து ஆஸ்திரேலியா கண்டத்தின் மீது தீராதகாதல் , இப்போது உங்கள் கட்டுரைகளை படித்த பிறகு ஆஸ்திரேலியாவின் மீது அதிக பாசம் வந்து விட்டது. தொடரட்டும் உங்கள் பயணங்கள், கிடைக்கட்டும் எங்களுக்கு அருமையான பயணக் கட்டுரைகள்
அன்புடன்
ராகவேந்திரன், தம்மம்பட்டி
முந்தைய கட்டுரைபுல்வெளிதேசம் 10, காடும் வீடும்
அடுத்த கட்டுரைபுல்வெளிதேசம் 11, பிலம்